தடையை மீறிய சாதனை
புகழேந்தி, பதிப்பாளர், சிக்ஸ்த் சென்ஸ்
தடையை மீறிய சாதனை
பெருந்தொற்று காரணமாகப் பொது முடக்கம் அமலுக்கு வந்து ஓராண்டு முடியப்போகிறது. இதன் பாதிப்பு பலகோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. பல முக்கியமான முடிவுகளை எடுக்கவைத்திருக்கிறது.
பதிப்புத் துறையினரை இரு முக்கிய பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம்:
1. வேறு தொழில் தெரியாததால் இத்தொழிலில் இருப்பவர்கள். இவர்கள் ஏதாவது ஒரு பதிப்பகத்தில் பணிபுரிந்த அனுபவத்தால் பதிப்பாளர்களானவர்கள்.
2. பல தலைமுறைகளாக இத்தொழிலில் இருப்பவர்கள்.
இவர்களில் சிலர் பாடப் புத்தக வெளியீட்டாளர்கள். சிலர் வாசகர்களை நம்பியும் – புத்தகக் காட்சிகளில் நடைபெறும் விற்பனை, விற்பனையாளர்கள் வழியாக நடைபெறும் விற்பனை, தங்கள் சொந்த மின்வணிக இணையதளத்தின் வழி நடக்கும் விற்பனையுடன் பிற வணிக இணையதள வழி விற்பனையை நம்பியும் தொழிலில் இருப்பவர்கள். இவர்களோடு அரசு ஆணைகளை வாங்குவதற்கான நெளிவுசுளிவுகளில் கரை கண்டவர்கள். இவர்களின் எண்ணிக்கை அதிகம்.
பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ள காரணத்தால் பாடப்புத்தக விற்பனையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.
அதிக விற்பனை நடக்கக்கூடிய நெய்வேலி, கோவை, ஈரோடு, மதுரை புத்தகக் காட்சிகளும் 30 சின்னஞ்சிறு புத்தகக் காட்சிகளும் கைவிடப்பட்டதாலும் விற்பனையாளர்கள் செயல்படாததாலும் அவர்களை நம்பியிருக்கும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் நலிவடைந்திருக்கிறார்கள்.
தொழில்முறை நேர்த்தியுடன் செயல்படும் ஒரு பதிப்பாளரைப் பொறுத்தவரை அவருடைய ஆண்டு விற்று முதல் தோராயமாகக் கீழ்க்காணும் அளவில்தான் இருக்கும்.
புத்தகக் காட்சிகளில் – 60% ,
விற்பனையாளர்கள் வழியாக – 30% ,
சிலர் புத்தகக் காட்சிகளில் குறைவாகக் கலந்துகொண்டு விற்பனையாளர்களை அதிகம் சார்ந்திருக்கலாம். அப்போது புத்தகக் காட்சி விற்பனை 30%, விற்பனையாளர்கள் வழியாக நடக்கும் விற்பனை 60% என மாறலாம்.
நிறுவன மின் வணிக இணைய தளத்தில் பார்வையிட்டுப் புத்தகங்களை நேரடியாக வாங்குவது - வி.பி.பி முறையில் வாங்குவது போன்றவை – 5%.
மின் வணிக இணைய தளங்களின் வழி விற்பவர்கள் வாங்குவது 3%.
நேரடியாக விற்பனையகத்திலேயே வாங்குபவர்கள் – 2%.
புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு இயலாத சூழலில் நமது இணையதளம், பிற மின் வணிக இணையதளங்கள் வி.பி.பி வழி விற்பனையின் அளவு அதிகரித்திருக்கிறது.
புத்தகக் காட்சிகளின் 60% விற்பனை கீழ்க்காணுமாறு இருக்கும்.
சென்னைப் புத்தகக் காட்சி விற்பனை – 25%.
கோவை, மதுரை, ஈரோடு விற்பனை – 20%.
நெய்வேலி, திருப்பூர், பெரம்பலூர் விற்பனை – 0.5%.
மற்ற 20க்கும் மேற்பட்ட புத்தகக் காட்சிகளின் மொத்த விற்பனை – 10%
இந்தக் கணக்காண்டில் சென்னைப் புத்தகக் காட்சியைத் தவிர எந்தப் புத்தகக் காட்சியுமே நடைபெறவில்லை. அதன் விற்பனையும் 15%ஆகக் குறைந்துவிட்டது. அத்துடன் மின் வணிகதளங்கள், வி.பி.பி., நேரடியாக வந்து வாங்கியது, இரண்டுமூன்றுபேர் சேர்ந்து நடத்திய சின்னஞ்சிறு புத்தகக் காட்சிகளின் விற்பனை எல்லாமாகச் சேர்ந்து 10%. இந்தப் புத்தகக் காட்சிகளில் லாபம் இல்லாவிட்டாலும் நட்டம் ஏற்படவில்லை. புத்தகங்களை அடக்க விலைக்கு விற்றதாகத்தான் கொள்ள வேண்டும் என்றாலும் பணியாளர்களை வேலையைவிட்டு நிறுத்தாமல் இதில் ஈடுபடுத்தி நம்பிக்கை இழக்காமலும் சோர்வடையாமலும் பார்த்துக்கொண்டோம். வாடகை, சம்பளம், மின் கட்டணம் ஆகியவற்றைச் சமாளிக்க இது ஓரளவுக்கு உதவியது. ஜூன் மாதத்தில் ஓரளவுக்குப் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு விற்பனையாளர்கள் மூலம் நடந்த விற்பனை 15% எல்லாம் சேர்ந்து 40% விற்றுமுதலைத்தான் இந்த ஆண்டு எட்டியுள்ளோம். ஆக 60% விற்பனையை இழந்திருக்கிறோம்.
சென்னைப் புத்தகக் காட்சி 2021 ஜூனுக்குத் தள்ளிப் போகலாம் என்று அனுமானித்துச் சென்னை வர்த்தக மையத்திற்கு எதிரில் சென்னை வாசகர் வட்டத்தால் சிறிய அளவில் நடத்தப்பட்ட பொங்கல் புத்தகத் திருவிழா விற்பனை 2.5%ம் இதில் சேரும். அந்தப் புத்தகக்காட்சியால் பல உண்மைகள் தெளிவாயின.
சென்னையின் மையப் பகுதியிலிருந்து தள்ளியிருக்கிறது, போக்குவரத்து வசதிகள் இல்லை எனக் காரணங்களைக் கற்பித்துக்கொண்டு சென்னையையும் அதைச் சுற்றியும் புத்தகக் காட்சிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான பல வாய்ப்புகளை தவறவிடுகிறோம். சென்னை ஒரு வருடத்தில் மூன்று புத்தகக் காட்சிகளை வெவ்வேறு இடங்களில் வெற்றிகரமாக நடத்துவதற்கு சாத்தியங்களுள்ள ஒரு நகரம். ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் விளம்பரம் போன்ற செலவுகளைக் குறைக்கலாம். சிறிது கால இடைவெளி விட்டு வெவ்வேறு இடங்களிலும் நடத்தலாம். இதனால் மூன்று மடங்கு விற்பனை ஆகாவிட்டாலும் இரண்டு மடங்கு விற்பனை சாத்தியம்.
இந்தக் காலகட்டத்தில் வங்கிகளின் உதவிகளை மறக்க முடியாது. நாணயமான வாடிக்கையாளர்களுக்குத் தாமே முன்வந்து உதவி கைதூக்கிவிட்டன. நிலையைச் சமாளிக்க அவசரத் தேவைக்காகவும் முதலீட்டிற்காகவும் வங்கி அனுமதித்திருந்த மிகைப்பற்று(over draft)முழுவதையும் எடுத்துத்தான் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. இதனால் வட்டிச் சுமை ஏறும். பாதிப்பு அதிகமிருக்கும். நடப்பாண்டின் விற்றுமுதல் குறைந்ததற்கு வங்கிக்குப் பதில் சொல்ல வேண்டும்.
பொது முடக்க காலம் பதிப்பிக்க வேண்டிய புத்தகங்களின் உள்ளடக்கங்களைப் படித்துப் பார்த்துச் செப்பனிட்டு உடனடியாக அச்சுக்கு அனுப்புவதற்கு ஏற்றவகையில் தயார் நிலையில் வைக்கவும் பயன்பட்டது. ஓய்வேயில்லாது யோசிக்கவோ, சிந்திக்கவோ, திட்டங்கள் வகுக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ நேரமின்றிப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர்களுக்குப் பொதுமுடக்கம் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்கித் தந்தது.
இந்தக் காலகட்டத்தில் வாசகர்களிடமிருந்தும் தொழில்துறையினரிடமிருந்தும் கிடைத்த உள்ளீடுகள் ஆச்சரியமூட்டுபவையாகவும் அதிர்ச்சியளிப்பவையாகவும் உபயோகமானவையாகவும் புதிய வாய்ப்புகளுக்கு வழியமைப்பனாகவும் இருந்தன.
வாங்கிய புத்தகங்களை வாசிக்க அவகாசமில்லாததால் புதிதாகப் புத்தகங்களை வாங்க வாசகர்கள் தயங்கினர். விற்பனையில் அது தொய்வை ஏற்படுத்தியது. பொதுமுடக்கம் வாசிக்க அவர்களுக்கு நேரம் கொடுத்தது. புதிய புத்தகங்களை வாங்குவதற்கான உந்துதலை ஏற்படுத்தியது.
முன்னேறிய நாடுகளில்கூட அச்சுப் புத்தக வாசிப்புதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவிலும் அதே நிலைதான். பொதுமுடக்கத்துக்கு முன்வரை இங்குஅச்சுப் புத்தகம், மின்புத்தகம், ஒலிப்புத்தகம் இவை முறையே 90 : 5 : 5 என்கிற விகிதாச்சாரத்தில் இருந்தது. அது 85 : 7.5 : 7.5 என மாறியிருக்கிறது.
தமிழில் வெளிவந்துள்ள 10% புத்தகங்கள்தான் மின்வணிகப் புத்தக விற்பனைத் தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சிறுசிறு விற்பனையாளர்கள் தாமாக முன்வந்து பதிப்பாளர்களுக்குப் புத்தகங்களைப் பதிவேற்றம் செய்வதில் உதவி விற்றும் தருவதால்தான் இதுகூடச் சாத்தியமாகியிருக்கிறது. அமேசானில் குறைந்த அளவு தமிழ்ப் புத்தகங்களே விற்பனைக்குள்ளன. இணையதள விதிமுறைகளும் அவர்களது கட்டண முறையும் சாதாரணப் பதிப்பாளர்களுக்குப் புரியாதிருப்பதே இதற்குக் காரணம். பொதுமுடக்கத்திலிருந்து ஏராளமான வாசகர்கள் மின், ஒலிப் புத்தகங்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்திருப்பதால் அவற்றின் விற்பனை கூடியுள்ளது.
அதனால் அச்சுப் புத்தகங்களின் பயன்பாடு ஒரேயடியாகக் குறைந்துவிடாது; என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக அதன் இடத்தை மின்புத்தகங்களும் ஒலிப்புத்தகங்களும் நிரப்பத் தொடங்கியுள்ளதைப் புரிந்துகொண்டு பதிப்பாளர்கள் எல்லாத் தளங்களிலும் தங்கள் வெளியீடுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அரசு மானியத் தொகை ரூ.75,00,000 கிடைக்க வேண்டுமானால் சென்னைப் புத்தகக்காட்சியை உடனே நடத்த வேண்டியதாயிற்று. மானியத்தால் வாடகையில் 20% குறைக்கப்பட்டது. சென்னைப் புத்தகக்காட்சியில் 850 அரங்குகள் அமைக்கப்பட்டபோதும்கூட 100க்கும் மேற்பட்டபதிப்பாளர்களுக்கு அரங்கு ஒதுக்கமுடியாத நிலையிருந்தது. இவ்வாண்டு வாடகை குறைக்கப்பட்டும் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்தும் 650 அரங்குகளை நிறைவு செய்வதற்கே சிரமப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு... சென்னைப் புத்தகக்காட்சி பொங்கல் விடுமுறையையொட்டி நடப்பதற்குச் சாத்தியமில்லை, ஜூனில்தான் நடக்குமென்று பதிப்பாளர்கள் எண்ணியிருந்தனர். பத்து மாதங்களாக விற்பனை பாதிக்கப்பட்டதில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியாலும் பழைய நிலுவைத் தொகைகளைச் சீர்செய்ய முடியாததாலும் புதுப் புத்தகங்கள் அதிகமாக வெளியிடமுடியாமல் போனது. மக்கள் அதிக அளவில் வருவார்களா, புத்தகங்கள் வாங்குவார்களா என்ற சந்தேகமும் ஒரு காரணம்.
அத்துடன் பொங்கல் விடுமுறை (சனி, ஞாயிறு சேர்த்து 8 நாட்கள் வரும்) நாட்களில் வருமளவுக்குக் கூட்டம் வருமா? விடுமுறை நாட்கள் குறைவு. காட்சி நேரம் இரவு 8மணிவரைதான் என மாற்றப்பட்டது, கணிசமான அளவுக்குப் புத்தகங்கள் வாங்கக்கூடிய 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் 12 வயதுக்குட்பட்டவர்களும் வருவதற்குத் தடை இருந்தது. இவையும் தயக்கம் கொள்ளவைத்தன.
பதிப்பாளர்கள் இதைக் கூறியபோது, “புத்தகக் காட்சிக்கு எப்போதும் வருவதில் 60% கூட்டம் கட்டாயம் வரும். விற்பனையும் நிச்சயம் 60% நடைபெறும். ஆனால் மொத்த விற்பனையில் ஒற்றை, இரட்டை அரங்குகளின் விற்பனையின் அளவு குறைவாக (30%மட்டுமே) இருக்கும். 4 அரங்குகளின் விற்பனை அதிகமாக (70%) இருக்கும்,” என்றேன். கடந்த காலங்களில் மொத்த அரங்கு(800+களின் எண்ணிக்கையில் 4 அரங்குகள் (200+) 25% அளவிற்கு இருக்கும். ஆனால் மொத்த விற்பனையில் 4 அரங்குகளின் விற்பனையின் அளவு 60%ஆக இருக்கும். ஒற்றை, இரட்டை அரங்குகளின் மொத்த விற்பனை 40% என்ற அளவுக்குதான் இருக்கும். 44 வது புத்தகக் காட்சியிலும் 4 அரங்குகள்(176 அரங்குகள்) அதே சதவிகிதம் 25%தான் இருந்தன. ஆனால் 4 அரங்குகளின் ஒட்டுமொத்த விற்பனை 70% ஆக உயர்ந்திருக்கிறது. ஒற்றை, இரட்டை அரங்குகளின் விற்பனை 30% ஆகக் குறைந்திருக்கிறது. பல ஆண்டுகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டேவரும் இந்த இடைவெளி வருங்காலங்களில் இன்னும் அதிகமாகும்.
பல நிறுவனங்கள் இப்போது தங்கள் நிறுவனத்தைச் சந்தையில் முன்னிறுத்தத் தனிக் கவனம் எடுத்துக்கொள்கின்றன. இவர்கள் விற்பனை ஒன்றை மட்டுமே மனத்தில் கொண்டு செயல்படுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்துகொடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் 4 அல்லது 8 அல்லது அதற்கும் பெரிய அளவிலான அரங்குகளை அதிகப் பிரீமியமாக வாடகை கொடுத்து எடுக்கிறார்கள். அதற்கான பலனையும் அறுவடை செய்கிறார்கள். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் பெரிய அரங்குகள், சிறிய அரங்குகளை நசுக்குவதாகவும் வாசிப்புப் பழக்கம் குறைந்துகொண்டே வருவதாகவும் அச்சுப் புத்தங்களின் இடத்தை மின் புத்தகங்களும் ஒலிப் புத்தகங்களும் பிடித்துவிட்டதாகவும் அதனால்தான் தாங்கள் நட்டமடைவதாகவும் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்புகிறார்கள்.
பதிப்புத் தொழிலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீண்டுவரவும், இழப்புகளைச் சரிசெய்யவும் வேறு புதிய இடர்களேதும் ஏற்படாதிருந்து இயல்பு நிலை தொடர்ந்தாலே 2022 கடைசிவரை நாம் போராட வேண்டியிருக்கும். முடியவிருக்கும் கணக்காண்டில் 40% விற்று முதல் என்ற இலக்கை எட்டுவதே மிகவும் சவாலான காரியம். 44வது சென்னைப் புத்தகக் காட்சி நடந்ததால்தான் இதுகூடச் சாத்தியம்.
பொது முடக்கம் காரணமாகப் பதிப்புத் தொழில் மொத்தமுமே பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் தங்களது தொழில்முறை அணுகுமுறையாலும், இத்தொழிலில் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அனுகூலங்களைப் பயன்படுத்தியும், மாறிவரும் சூழலுக்கு – ரசனைக்கு – வாசிப்புப் பழக்கங்களுக்கு, முறைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டும் – எதிர்கால மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்தும் பதிப்புலகிலுள்ளோர் இனிமேலாவது சுதாரித்துக்கொண்டு தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம்.
வாசகர்கள் நம்மிடம் இன்னும் அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள். நாம்தான் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். இன்னும் கால்பதிக்காத பல துறைகள் இருக்கின்றன. அதற்கான தேவைகளும் நிறைய இருக்கின்றன.அந்த வாய்ப்புகளைக் கண்டறிந்து வெற்றி பெறுவோம்.
மின்னஞ்சல்: sixthsensepub@yahoo.com