கேள் மகளே...
கவிதை
அதீதன் சுரேன்
Courtesy: Warli Painting
கேள் மகளே...
எப்படித் தொடங்குவது என
யோசித்துக் கொண்டிருந்தவளின் தோளில்
ஆதுரமாய்க் கைவைத்த தகப்பன்
மகளே! புலரிகளைக் கண்டுணர்ந்தவர்கள்
அறிவார்கள் ஆரம்பமென்பது யாதென்பதை
மேலும் கேள்
ஆதியின் தோற்றுவாய்க்கு முன்னர்
நிறைந்திருந்த சூன்யத்தைக் கண்டிருக்கிறாயா?
யாரும் அறிந்திராக் காலத்திலிருந்து வெளியேவா
சற்றே நிமிர்ந்த மகள்
அப்பா
தினமும் பறவைகளைப் பார்க்கிறேன்
அவைகளைப் பின்தொடரும் பேராவல் எனக்குண்டு
நீங்கள் எனக்குச் சிறகுகள் வாங்கித் தாருங்களேன்
நான் கண்டம் கடக்க வேண்டும்.
பெண்ணே
சிறகுகள் பறவைகளுக்கானவை
உனக்கொரு சிறகு தந்தால்
அதைத் தலையில் சூடிக்கொள்
சிறகுள்ள மூளைக்கு எல்லையேது
எனில் ஒரு செதிலேனும் வேண்டும்
மீன்களோடு நீந்திக் கடல்கொள்ள விருப்பம்
மகவே
மச்சங்கள் நீருக்கானவை
அவை உன் கண்களுக்கொப்பில்லை
நீ கடக்கும் சமுத்திரங்களெல்லாம் ஆர்ப்பரிக்கட்டும்
கடல்கொள்ளத் துணிவுபோதும்
அக்குதிரைகளைப் பாருங்கள்
அவற்றின் குளம்புகளேனும் வேண்டும்
வேகமெடுத்து ஓடி நிலம் வெல்வேன்
குழவியே
குதிரைகள் நின்றுகொண்டே தூங்குபவை
உன் சிந்தையால் மண் செழிக்கட்டும்
இச்சகம் வெல்லத் தெளிவுகொள்வாய்
சரி சொல்லுங்கள்
எப்படி நான் தொடங்குவது
அப்படிக் கேள் கண்ணே
இதோ என் தோள்கள்
ஏறிக்கொள்
கடலையும் வானையும் நிலத்தையும்
உனதாக்கிக் கொள்..