இஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26
புத்தகப் பகுதி
இஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26
தெல்ஃபின் மினூய்
காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் தெல்ஃபின் மினூயியின் ‘சிரியாவில் தலைமுறைவு நூலகம்’ (தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி) நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி.
எனக்கு அடிக்கடி ஓர் இனிமையான, விசித்திரமான, கனவு வருவதுண்டு. அது கதைசொல்லும் நேரம். நானும் சமாராவும் இஸ்தான்புலின் தளவரிசை போடப்பட்ட சிறுசிறு வீதிகளில் துள்ளிக்குதித்துச் சென்றுகொண்டிருக்கிறோம். தக்ஸிம் சதுக்கத்தில் சென்றுகொண்டிருப்போரும், அங்கு ‘சிமிட்ஸ்’ விற்றுக்கொண்டிருப்பவரும் எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தலைக்குமேல் கடற்பறவைகள் கோடைக்காலத்தை நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன. இஸ்திக்லால் நிழற்சாலையின் முனையிலிருக்கும், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் பிரதானக் கதவு இனிமேல் திறந்திருக்காது. கட்டடத்துக்குள் நுழையவேண்டுமானால் அருகிலிருந்த வேறொரு வீதி வழியே ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கடந்து செல்ல வேண்டும். மையத்தோட்டத்தின் கடைசியிலிருந்த ஊடகநிலைய வாயில் எப்போதும்போல் இருந்தது. புத்தகக் கிடங்குக்குப் போகும் வழியில் யாரோ ஒருவர் சில வண்ண ஓவியங்களை ஒட்டி, ‘நம்பிக்கை’ எனும் வார்த்தையையும் எழுதியிருந்தார்.
கீழே கதைசொல்லி ழுய்லி ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தாள். ‘ஆச்சரியம்,’ என்று கத்தினாள். நாங்கள் உள்ளே நுழைந்தோம். சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பலகைக்கு எதிரே மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். உடனே அவர்கள் அஹ்மத், ஷாதி, ஹுஸ்ஸாம் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். சிறுவர்களைப் பார்த்து “நாங்கள் ஓர் இரகசிய நூலகத்தைப் பற்றிய கதையைச் சொல்லப் போகிறோம்,” என்று மெதுவாகச் சொன்னார்கள். சிறுவர்-சிறுமியர் கேட்பதற்கு ஆர்வமாக இருந்தனர். கதை முடிந்தபின், கேட்டுக்கொண்டிருந்த சிறுவர்-சிறுமியர்களுக்கு, புத்தகங்கள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டன. அவற்றில் பல பக்கங்கள் ஒன்றும் எழுதப்படாமலிருந்தன. அதில் அவர்கள் தராயாவைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அதையே எழுதலாம் -அல்லது சித்திரமாக வரையலாம்.
என் கனவில், சிரிய நண்பர்களின் முகஅமைப்புகள் மிகத் தெளிவாகத் தோன்றின. கடந்த சில ஆண்டுகளில், அவர்களோடு நடத்திய மாயத்தோற்றமான உரையாடல்கள் ஏராளம். அவர்களுடைய தோலின் நயம், முகக் கூறுபாடுகளின் மென்மை, கண்களின் நிறம் முதலியவை அப்போதெல்லாம் இருந்ததைவிட இப்போது மிகத்தெளிவாகத் தோன்றின. குரல், சைகை, சேஷ்டைகளின் வடிவம் ஆகிய அனைத்தையுமே அதில் காணமுடிந்தது.
ஏனென்றால், என்னுடைய கனவு, தூரத்தில், குண்டு வெடிப்புகளுக் கிடையே திருட்டுத்தனமாகப் பரிமாறிக்கொண்டிருந்த உரையாடல்களினால் உந்தப்பட்டதன்று. அது நிஜத்தின் நீட்சி. துருக்கி மண்ணில் எதிர்பாராமல் நாங்கள் சந்தித்ததன் விளைவு. சமீபத்திய நேர்காணலின்போது ஏற்பட்ட வலுவான நட்புமேடை.
அவசரஅவசரமாக அவர்கள் தராயாவைவிட்டு வெளியேறி ஓராண்டு கடந்துவிட்டது. அவர்கள் அனுபவித்த அபத்தநிலையை வெகுதூரத்தில் வைத்துப் பார்க்க முடியும். ஸ்மார்ட்ஃபோன் வழியாக உலகத்தையும் வாழ்க்கையையும் பார்ப்பதைத் தவிர்த்து நேரடியாக அவர்களைப் பார்க்க இயலும். பயணங்கள் மேற்கொள்ளவும் முடியும். ஒருவர் பின்னால் ஒருவராக, அவர்களில் சிலர் அவர்கள் கூட்டை உடைத்துக்கொண்டு, சிரிய எல்லைகளுக்கு அப்பால் செல்ல வாய்ப்பிருந்தது.
அப்படிச் சென்றவர்களில் முதல் ஆள் ஷாதிதான். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவன் ரெயான்லிக்கு வந்தான். அது துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில் ஹதே மாகாணத்தில் இருக்கிறது. அப்போது அங்காரா அதிகாரிகள், இருபத்தைந்து லட்சம் சிரிய அகதிகளை வரவேற்றிருந்தனர். கையில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும்பொருட்டு ஷாதிக்கு அனுமதியளித்தனர். முதல்ஆலோசனைக்குப் பின் அவன் என்னை ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான். அது அகதிகள் கூடுமிடமாகப் பயன்பட்ட சிறுநகர் ஒன்றிலிருந்தது. அங்கு வந்தவுடன், இடதுகையில் கட்டியிருந்த கட்டைக்கொண்டு அவன் ஷாதிதான் என்று உடனேயே கண்டுபிடித்துவிட்டேன். தோல்ஜாக்கெட் போட்டிருந்தான். தலைமுடியைக் குட்டையாக வெட்டி இலேசாக எண்ணெய் தடவியிருந்தான். முந்தைய நாளில்தான் பார்த்ததுபோன்ற உணர்வு இருந்தாலும், அவனை ‘உண்மை’யாகப் பார்க்கும்போது ஓர் இனம்புரியாத உணர்ச்சி ஏற்பட்டது. உணவுபரிமாறுபவர் அலெப் சிரியர். அவர் எங்களை ஒரு சின்னமேசைக்கு அழைத்துப்போய் அமரச்செய்தார். மேசைமீது இரண்டு கோப்பைத் தேநீர் இருந்தது. பின்னர், அவன் தன் ஒழுங்காகச் செயல்பட்ட வலதுகையால் தோளில் மாட்டியிருந்த பையைத் திறந்தான். தராயாவிலிருந்து அபூர்வமாகக் கொண்டுவந்த ஆஸ்தியில் அதுவும் ஒன்று. அதிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து மேசையில் வைத்தான். அது வேறொன்றுமில்லை, அவனுடைய புகைப்படக்கருவிதான். அவனைக் காப்பாற்றிய கருவி. நான் ஒன்றும் சொல்லவில்லை. அவன் பொறுமையாக அந்தப் பெட்டியில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்த தூசியைத்தட்டினான்.
“எப்படி இருக்கிறாய்-?”
என் கேள்வி அவன் காதில் விழவில்லை போலும்.
“தராயா, ஒரு குறியீடாகும். இக்கருவி அதற்குச் சாட்சி. துரதிர்ஷ்டவச மாக உலகம் எங்களைக் கைவிட்டுவிட்டது ...” என்றான்.
காஃபி எதிரே இருக்கும்போதும்கூட, அவன் நகரத்தின் வலியைச் சுமந்துகொண்டுதான் இருந்தான். அவனுடைய சோர்வு அவன் முகத்தில் தெரிந்தது. அவனிடம் பஷார் அல்-அசாத்தின் காணொலி க்ளிப் ஒன்று இருக்கிறதா என்று கேட்டேன்.
“எவ்வளவு ஆரவாரம்!” என்று கோபமாகச் சொன்னான்.
மீண்டும் பைமீது சாய்ந்தான். அதில் நிறைய வட்டத்தகடுகள். அத்தனையும் நான்காண்டு முற்றுகையின்போது சேகரித்துவைத்த நிழற்படங்கள், காணொலிகள்.
“தராயாவைப் பொறுத்தவரையில், இந்தப் படங்களைத்தான் என் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். “ஒருங்கிணைந்த, ஒற்றுமையான குழு ஒன்று. அதன் பொதுவான விருப்பம் எதிர்காலத்தை நிர்ணயிப்பதும், புதிய கருத்துகளை நிலைநாட்டுவதுமாகும். அதில் நாங்கள் ஒன்றுபட்டிருந்தோம். எங்களிடம் தோழமையும் ஒற்றுமையும் நிலவின. மற்ற நகரங்களுக்கும் பயன்படும் ஒரு மாதிரிப் படம். தராயா ஒரு ஊர் மட்டுமன்று. ஒரு மெய்ப்பொருள்.”
ஷாதி தன் நினைவுகளில் மூழ்கியிருந்தான். அவன் பார்வையில் தன் ஊரைப் பற்றிய சோகத்தின் நிழல் படிந்திருந்தது. தராயாவை ஒரு சாதனைப் பயணமாக நினைத்தான். “அதனை மீண்டும் தொடரவேண்டியிருந்தால், நான் தயங்கமாட்டேன்,” என்று தொடர்ந்து சொன்னான்.
“இன்று பஷார் அல்-ஆசாத் நாங்கள் தோற்றவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார். ஆனால், ஈவுஇரக்கமில்லாத நான்கு ஆண்டு முற்றுகையைத் தாக்குப் பிடித்ததே ஒரு வெற்றியாகத் தோன்றுகிறது எனக்கு.”
எங்களுக்குப் பின்னால் ஒரு வாடிக்கையாளர் சிற்றுண்டிச்சாலையின் கதவைத் திறந்துகொண்டு வருகிறார். அங்கு ரொட்டி முதலானவையும் விற்றார்கள். அப்பெண்மணி கைநிறைய அன்பளிப்புப்பொருட்கள் வைத்திருந்தாள். அவள் உரத்த குரலில் பேசியதைப் பார்த்தால், அவளுடைய பெண்ணின் பிறந்தநாளுக்கு ‘சிண்ட்ரெல்லா’ கேக் வாங்குவதா அல்லது ‘பனி ராணி’ கேக் வாங்குவதா என்று திண்டாடிக் கொண்டிருந்தாள்போலும். ஷாதி முகத்தில் ஒரு புன்னகை.
மீண்டும் அவன் பேசும்போது சொன்னான்: “நடந்துமுடிந்தவற்றிற்குப் பின்னால் வருவதுதான் எதிர்கொள்வதற்குக் கடுமையானது. இயல்பாக வாழவும், விமானங்களைப் பார்த்துப் பதற்றமடையாமலிருக்கவும், அமைதியாக உறங்கவும் மீண்டும் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. திடீரென எல்லாம் நிலையானதாக - -நித்தியமாகத் தோன்றுகிறது. காலம், இடம் ஆகிய பரிமாணங்கள் மாறிவிட்டன. வாழ்க்கை ஒழுங்குடன் கூடியதாகத் தோன்றுகிறது. எளிமை திக்குமுக்காடச் செய்கிறது.”
சில வாரங்கள் கழித்து, ஷாதியை அழைத்து நலம் விசாரித்தேன். அறுவைச் சிகிச்சை நல்ல விதமாக முடிந்தது. அவன் விரல்கள் மீண்டும் பழைய அசைவுத்தன்மைக்கு மாறத்தொடங்கிவிட்டன. மருத்துவர் அவனுக்கு சில உடலியக்கப் பயிற்சிகளைப் பரிந்துரைத்திருந்தார். சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுக்கும்பொருட்டு, தற்காலிகமாக இஸ்தான்புலுக்குக் குடிபெயர்ந்திருந்தான். அவனுடைய பெற்றோர்கள் சில ஆண்டுகளுக்கு முன் அங்குதான் குடியேறியிருந்தனர். அவனுடைய தாயார் அவனுக்கு நிறைய மீன்கறி சமைத்துக்கொடுத்தார். அவனுடைய தந்தை அவனைச் சிரியாவுக்குப் போகாமல் தடுத்தும், அவன் தன்னுடைய இடம் சிரியாதான் என்பதில் பிடிவாதமாக இருந்தான். தற்காலிகமாக, துருக்கிய மொழி கற்றுக்கொண்டு, படிப்பைத் தொடரவிருந்தான். மாதம் ஒருமுறை நாங்கள் ஒரு தேநீர் விடுதியில் தராயா நினைவாக ‘ஷெல்லி’யில் ஈடுபடுவோம்.
கடைசியில், உஸ்தேஸும் அறிமுகமானான். முற்றுகையின்போது பலதடவை நாங்கள் ஊடகங்கள் வாயிலாகவே உரையாடி இருக்கிறோம். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் இஸ்தான்புலில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். துருக்கியில் சற்று ஓய்வெடுக்க வந்திருந்தான். தக்சிம் சதுக்கத்தில், அந்தச் சிற்றுண்டிச்சாலையில், அவன் அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது, அவனை நான் எப்படிக் கற்பனை செய்துவைத்திருந்தேனோ அப்படியே இருந்தான். அமைதி, பொறுமை, பேச்சிலும் - காலத்தைச் செலவிடுதலிலும் பெருந்தன்மை ஆகிய பண்புகள் அவனிடம் இருந்தன. தராயாவில் குடிமக்கள் எழுச்சியின் மூலத்தைப்பற்றி மேலும் மூன்று மணிநேரம் பேசினான். 90களில் தொடங்கிய அந்தத் தனித்தன்மை வாய்ந்த புரட்சி அனுபவத்திற்கு அவனும் ஒரு வகையில் உந்துதலாக இருந்திருக்கிறான். அவனுக்குப் பிடித்தமான புத்தகங்கள் குறித்தும், மஹ்மூத் தார்விச் கவிதைகள் குறித்தும், அவன் விரும்பிப் படித்த சுயஉதவிப் புத்தகங்கள் குறித்தும் பேசினான். அவன் பேசுவதைக் கேட்டதும், தராயா இளைஞர்கள்மீது அவன் ஏற்படுத்திய ஆரோக்கியமான தாக்கத்தையும் என்னால் இன்னும் சிறப்பாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அவனிடம் அவர்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னபோது, அவன் முகம் நாணத்தால் சிவந்தது.
“ஓ, அவர்களிடமிருந்து நான்தான் எவ்வளவோ கற்றிருக்கிறேன். நான் எப்போதும் கறாராக இருப்பேன். அவர்களிடம் ஒரு குறும்புத்தனம் உண்டு. அவர்களிடம் இருக்கும்போது எனக்குக் கவலைகளெல்லாம் மறந்துபோகும்.”
முற்றுகையினால் எற்பட்ட மனக்காயங்களை இப்போது வேறு பிரச்சினைகள் துரத்திக்கொண்டிருந்தன. இயல்புக்கு மாறாக அவற்றைச் சமாளிப்பது இன்னும் கடினமாக இருந்தது. எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிடுவது? சிரியாவைச் சின்னாபின்னமாக்கும் பிரிவினைகளை எவ்வாறு தடுத்துநிறுத்துவது? 2011 புரட்சியாளர்களின் கதி மேலும் மேலும் அவர்களைவிட்டுக் கைநழுவும்போது, தோல்வி மனப்பான்மையில் மூழ்கிவிடாமல் இருப்பது எப்படி? இதுபோன்ற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன.
“முற்றுகையினால் துன்பம் ஏற்பட்டபோதும், ஏதோ ஒரு நல்லது நடக்கும் என்ற பிடிவாதமான நம்பிக்கையில் வாழ்ந்துவந்தோம். திடீரென வேறொரு புதிய யதார்த்தம், ஐயம் நிறைந்த யதார்த்தம் வந்து சூழ்ந்துகொண்டது.”
பின்னர் உஸ்தேஸ் ஒன்று சொன்னார். அதை என்னால் என்றுமே மறக்க முடியாது.
“முற்றுகை, தன் இயல்புக்குமாறாக, எங்களை அனைத்துவிதத் தீவிரவாத முயற்சிகளிலிருந்தும் காத்துநின்றது. தராயாவின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்க உதவியது. நான்கு ஆண்டுகள் நாங்கள் எங்களுக்குள் தனித்து வாழ்ந்தோம். அது எப்போதும் சுலபமானதன்று. ஆனால், எங்களுக்குள்ளிருந்த பிரச்சினைகளை எப்போதும் பேசித் தீர்த்துக் கொள்வோம். புறத்தலையீடுகள் இல்லை. சூழ்ச்சிகள் செய்யும் முயற்சிகள் இல்லை. அந்நிய ஊடுருவல் இல்லை. அதுவொரு சிறப்பான அனுபவம்.
சிரியாவின் மற்ற பகுதிகளில் அப்படி இல்லை. அங்கெல்லாம், அந்நிய - பிறமாநில - சக்திகள் தங்கள் பிரிவிற்காகவும் நலனுக்காகவும் நிலங்களுக்காகவும் போரிட்டுவந்தன. அவர்கள் கூட்டமைப்பின் பரிமாணங்களைப் பொறுத்துக் குழுக்கள் உருவாகின; அல்லது உருமாறின; அல்லது கலைந்து சென்றன; அல்லது அடிப்படைவாதத்தில் இறங்கின. இன்று நாடு துண்டாடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. டாட்ச் தன் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி மாகாணங்களை ஒவ்வொன்றாக இழந்துகொண்டு வருகிறது. சிறுபான்மை கூர்த் இனத்தவர் தங்கள் பிடியிலிருந்த இடங்களைத் தெய்வ வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், பஷார் அல்-ஆசாத், ரஷ்ய - ஈரானிய நேசப்படைகளின் உதவியோடு, மீதமிருந்த கிளர்ச்சிப்பிரதேசங்களை ஒவ்வொன்றாக மீட்டெடுப்பதில் பிடிவாதம் காட்டுகிறார். தராயாவுக்குப் பின், கிழக்கு அலேப், அதன்பின் அல்வாயெர், அதன்பின் பார்சே இப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. இத்லீப் பிரதேசத்தில் மற்ற பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரமாயிரம் குடிமக்களுக்கும், சரணடையச் செய்யப்பட்ட சுதந்திர சிரியப் படைவீரர்களுக்கும், ஆசாத் எதிர்ப்பாளர்களின் கடைசிப் புகலிடமாக இருந்துவந்தது. அங்கு இன்று அல்-நொஸ்ரா ஜிகாடிஸ்களின் கை ஓங்கும் அபாயம் இருக்கிறது.”
நிச்சயமற்ற தன்மை தன் நாட்டில் நிலவியபோது, உஸ்தேஸ் 2017ஆம் ஆண்டு வசந்தத்தின்போது சிரியாவின் வடக்குப்பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். மே மாதம் இத்லீப் திரும்பியபோது, அவருக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது. 2016ஆம் ஆண்டு, தராயாவின் கடைசிச் சாலை மூடப்பட்டதிலிருந்து டமாஸ்கஸில் தஞ்சம் புகுந்திருந்த அவர் மனைவியும் பிள்ளைகளும் இத்லீப் பிரதேசத்தில் அவரிடம் வந்துசேர்ந்தார்கள். முற்றுகையின்போது பிறந்த தன்னுடைய மூன்றாவது குழந்தையை முதல் தடவையாக முத்தமிட்டார்.
எல்லாம் நன்மைக்கே என்றிருக்கும் ஹுஸ்ஸாம் நலமாக இருந்தான். 2016ஆம் ஆண்டு இறுதியில், ஓர் இடைத்தரகர் மூலம் இரகசியமாக எல்லை தாண்டிவந்து துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில், கஸியெந்தேப் என்ற இடத்திற்கு வந்து குடியேறினான். அங்கு வந்தவுடனேயே அவன் புனைப்பெயரை விட்டுவிட்டு ஜிஹாத் எனும் பழைய பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். கீழைப் பிரதேசங்களில், அந்தப் பெயர் அன்றாட வழக்கிலுள்ள பெயர். குறிப்பிட்ட மதஅடையாளம் எதுவுமற்ற ஒன்று. 2017ஆம் ஆண்டு ஜனவரியில் அவன் என்னை இஸ்தான்புலில் தொடர்புகொண்டான். அன்றைக்கு முதல்நாள்தான் செய்னாவையும், அவனுடைய வருங்கால மாமனார் மாமியாரையும் பார்க்கவந்திருந்தான். பிரெஞ்சு நிறுவன அலுவலகம் இருந்த பிரபல இஸ்திக்லால் நிழற்சாலையில் - அங்குக் கால்நடையாகத்தான் செல்ல வேண்டும் - ஒரு சிறு விடுதியில் தங்கியிருந்தான். அவனை ஒரு தேநீர்விடுதியில் சந்தித்தேன். அவ்விடுதி முந்தைய ஆண்டு கமிகாஸ் ஒன்றினால் தாக்கப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் இருந்தது. நான் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய ஆர்வத்தைக் குலைக்க எனக்கு விருப்பமில்லை. அவனுக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. வரிசையாக அணிவகுத்து நின்ற கட்டடங்கள், போக்குவரத்து வசதிகள், தடையின்றிக் கிடைத்துக்கொண்டிருந்த மின்சாரம் ... - இப்படி எல்லாமே அவனுக்கு வியப்பைத்தந்தன. ஒரே நாளில் அவன் மிக முக்கிய இடங்களின் முகவரிகளைக் கண்டுபிடித்துவிட்டான். ‘எதாலி பிட்சா’ சப்பிட்டான். பழைய புத்தகங்கள் விற்கும் இடங்களைச் சுற்றிப் பார்த்தான். சுமார் பத்து புத்தகங்கள் வாங்கிப் பணத்தைச் செலவழித்தான். 19ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் மணவாழ்க்கை எப்படி அமைந்தது என்பதைச் சொல்லும் பிரைட் அண்ட் பிரஜுடீஸ் என்னும் ஜேன் ஆஸ்டின் நாவலைக்கூட வாங்கினான். முற்றுகையின்போது அவனைப் புதிதாக ஆட்கொண்ட புத்தகப்பித்து துருக்கியில் பழமைவாய்ந்த பெயாஸித் நூலகம்வரை கொண்டுபோய்விட்டது. அந்நூலகம் அண்மையில்தான் புதுப்பிக்கப்பட்டிருந்தது. பேஜஸ் நூலகத்திற்குக்கூடச் செல்ல அவனுக்கு நேரம் கிடைத்தது. இஸ்தான்புலின் ‘சின்ன டமாஸ்கஸ்’ என்றழைக்கப்பட்ட ஃபெயித் பகுதியிலிருந்த அந்த நூலகத்தில்தான் சிரியாவின் இளம்அறிவுஜீவிகளும் கலைஞர்களும் கூடுவது வழக்கம். அந்தத் தேநீர் விடுதியில் அதிகத் திடம்கொண்ட இரண்டு எக்ஸ்ப்ரெஸ்ஸோ காபி சாப்பிட்டபின், ஜிஹாத் எழுந்தான். சில ‘நிர்வாக’ பிரச்சினைகளை அவன் தீர்க்கவேண்டியிருந்தது. சில நேர்காணல்கள், சட்டத்துக்குப் புறம்பான சில செயல்கள், இரகசியமாகச் சில கரன்சி நோட்டுகள் கைமாற்று போன்றவற்றால் தராயாவின் அசாத்தியத் துணிவு மிக்க, அதே சமயம் எதையும் சமாளித்துக்கொள்ளும் தராயா நகர் ‘ஹுஸ்ஸாம்’ என் கண்முன் தோன்றினான். சில மணி நேரங்களில், அவனுடைய விசா நீட்டிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் தங்குவதற்கான அனுமதி அட்டையும் உறுதிசெய்யப்பட்டது. பின்பு, ஒரு வாடகைக் கார் எடுத்துக்கொண்டு சிரியாவின் உதவித் தூதரகத்துக்குச் சென்றோம். அது இஸ்தான்புலின் மிகவும் சொகுசான பகுதியில் இருந்தது. அங்குதான் அவன் தன் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டும். ஜிஹாதுக்குக் பதற்றம் இருந்தது. சிரிய அரசு தன்னைப் பழிவாங்கிவிடுமோ என்ற பயம் அவனைப் பற்றியிருந்தது. டமாஸ்கஸில் வசிக்கும் உறவினனொருவன் அவனிடம் அலுவலர் ஒருவரின் பெயரைத் தூதரக அதிகாரியிடம் காதும் காதும் வைத்தாற்போல் சொல்லச் சொல்லியிருந்தான். ஆனால், ஜிஹாத் அலுவலகத்தின் வாசற்படியைக் கடந்ததுமே அவனை ஒருவர் வந்து அன்புடன் வரவேற்று, இன்னும் ஒரு வாரத்துக்குள் அவனுக்குத் தேவையான ஆவணங்கள் கிடைக்கச்செய்வதாக உறுதியளித்தார். பயங்கரமான எதிரிகளிடமும் ‘வாஸ்தா’வின், அதாவது, கீழைநாட்டுக் கையூட்டலின் திருவிளையாடல் வேலைசெய்கிறது.
அதன்பிறகு, வெளியில் வந்த ஜிஹாத் விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: “நாங்கள் அனுபவித்த வேதனைக்குப் பின், எதுவும் எங்களுக்கு வியப்பாகவோ பயமாகவோ இல்லை.”
அன்று மாலையே, இரவு பஸ் எடுத்து கஸியாந்தேப் கிளம்பிவிட்டான். அங்கு மறுநாள் காலை, அரசு சாரா அமைப்பொன்றில் வேலை கிடைக்கும் என்று நம்பி, தேர்வுகள் எழுதப் புறப்பட்டான். அவனுடைய தளராத மனதுக்குப் பலன் கிடைத்தது. பிரயாணச்சோர்வு இருந்தபோதும், குறைந்த நேரத்திலேயே அவன் படித்துமுடிக்க ஏராளமான செய்திகள் இருந்தபோதும், தேர்வுகள் பிரச்சினை இல்லாமல் நடந்தேறின. அவனால் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியும். ஆனால் செய்னா இல்லாமல்! சில வாரங்களில், காதும்காதும் வைத்தாற்போல் அவன் திருமண உறுதிப்பாட்டை உடைத்துவிட்டான். குடும்ப வாழ்க்கையைத் தொடங்குமுன் அவன் தன் நிலைமையைச் சரிசெய்துகொள்ள விரும்பினான் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. எவ்வளவு முயன்றாலும், நான்கு வருட முற்றுகை அனுபவத்தைச் சில மாதங்களில் ஜீரணிக்க முடியாது.
இபன் கல்தூன் என்றழைக்கப்பட்ட ஒமாரின் நினைவு ஒருபோதும் மனதை விட்டகலவில்லை. அவனைப் பற்றிய நினைப்பினால் -உரையாடல்களில் அவன் பெயர் அடிபட்டதால் அவன் நண்பர்கள் வைத்திருந்த காணொலிகள், புகைப்படங்கள் முதலியவற்றால் அவன் அனைவர் நினைவிலும் வாழ்ந்துகொண்டிருந்தான். 2016ஆம் ஆண்டு இறுதியில், ஊரிலுள்ளோர்கள் வெளியேறியபின், பேச்சுவார்த்தைக் குழு சுதந்திர சிரிய இராணுவத்திற்கும், அரசின் நான்காவது படைப் பிரிவுக்குமிடையே ‘பிரேதப் பரிமாற்றம்’ ஒன்றிற்கு ஏற்பாடுசெய்து அவனுடைய சமாதியை மீட்டெடுத்தது. ஒருவாறாக, அவன் உடல் தராயா உயிர்த்தியாகிகள் கல்லறையில், அவன் உறவினர்கள் அருகிலேயே அடக்கம்செய்யப்பட்டது: தூசுகளுக்குள் ஒரு துளை. அதன்மேல் அவன் பெயர் பொறித்த ஒரு நினைவுக்கல். அவனுக்குக் கடைசி அஞ்சலி
செலுத்தும் பொருட்டு கொஞ்சம் மலர்கள். இதுதான் ஒமாருக்குச் செய்த மரியாதை. டமாஸ்கஸ் நுழைவாயிலில் இருந்த ஓர் எதிர்ப்புக் கோட்டையில் அந்த மண்ணுக்காகப் போராடியவன், சிரிய நாட்டுப் ‘பள்ளத்தாக்கில் உறங்குபவனாக’ நிரந்தர நித்திரையில் ஆழ்ந்துவிட்டான். சூரியனின் கதிர்கள் அவன்மீது வீச, மார்பில் கை வைத்துக்கொண்டு, பாதங்கள் செடிகளில் படிய, இடிபாடுகள் சவத்துணியாக அவனை மூட அவன் உறங்கிக்கொண்டிருந்தான்.
நூலக ஒருங்கிணைப்பாளனாகவிருந்த அபூ எல்-எஸ்ஸுடனும், குழுவின் ‘பான்ச்கி’ யாகவிருந்த அபு மலெக்குடனும், அஹ்மத் இத்லீபிலேயே இருந்துவிடத் தீர்மானித்துவிட்டான். இனிமேல் வேறுவழியில்லாததால், அதுதான் அவன் வீடாகிவிட்டது. முற்றுகையின்போது அவனுடன் இருந்த நண்பர்களோடு, துருக்கி எல்லையிலிருந்த ஒரு கிராமத்தில் வீடெடுத்துத் தங்கியிருக்கிறான். நிறைய படிக்கிறான். இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறான். புத்துணர்ச்சி பெறும் பொருட்டு ஆலிவ் தோப்புக்குள் அமெலி புலேன் இசையைக் கேட்டுக்கொண்டு உலவுகிறான். ஆனால் அது அவனுக்கு ஓர் அமைதியான புகலிடமன்று. 2016 இறுதியில், திரும்பத்திரும்பவரும் ஒரு கெட்ட கனவுபோல், அஹ்மத் எதிர்ப்புக்கோட்டையாக இருந்த கிழக்கு அலெப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் ஓடிவரும் சோகத்தை அவனும் அனுபவிக்கிறான். அவர்களும் குண்டுமழைக்குப் பலியானவர்கள். அவன் கனவுகள் நொறுங்கின. கண்கள் பனித்தன. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இத்லீப் மாகாணத்தில் கான் ஷெய்க்கூம் என்ற இடம் இரசாயனக் குண்டினால் தாக்கப்பட்டது அவனுடைய தராயா காயங்களை மீண்டும் இரணப்படுத்தியது.
அஹ்மத் சொன்னான்: “செய்தி கேட்ட எனக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. ‘திரும்பவும் இயங்கச் செய்’ என்ற பட்டனைத் தொட்டதுபோல் உணர்ந்தேன். நாங்கள் 2013இல் அனுபவித்ததை மீண்டும் அனுபவிப்பதுபோல் இருந்தது.”
சில நாட்களுக்குப் பின்,அமெரிக்கக் குடியரசுத்தலைவர் டானல்ட் ட்ரம்ப் சிரிய அரசின் இராணுவநிலைகள்மீது பதிலடி கொடுத்தார். அன்றிலிருந்து, ‘அஸ்தானா’ பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கி ரஷ்ய-சிரிய குண்டுவெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. 2017 மே மாதம் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி மாஸ்கோ, டெஹ்ரான், அங்காரா ஆகியவை இத்லீபையும் சேர்த்து நான்கு பிரதேசங்களில் சண்டையை நிறுத்தி ஆசாத் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்குமிடையே ஓர் சமரசம் செய்வதாக உறுதியெடுத்துக்கொண்டன.
சமரசம் போன்ற ஒன்று ஏற்பட்டது நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த தென்னவோ உண்மைதான். ஆனால், இனிமேல் எதிர்காலத்தைப் பற்றிய கவலை கவ்விக்கொண்டது. முதலில் வெற்றிவீரர்களாக வரவேற்கப்பட்ட தராயா போராளிகள் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர்.
“அரசுக்கும், டாட்ச்சுக்கும் மாற்றாக ஒரு மூன்றாவது வழியை முன்னிறுத்த முனைந்தோம்.”
ஆனால், வடமேற்குப் பிரதேசத்தில் சூழ்நிலை வேறுமாதிரியாகவும் நிலைமை குழப்பமாகவும் இருந்தது.
“தராயாவில் அரசுத்தரப்பினரும் போராளிகளும் விவாதித்தனர். ஆனால், இங்கோ, இராணுவத்தரப்பினர் குடிமக்களின் புதிய முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டையாக நின்றனர்.”
ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு விழிப்புடனும் மிதமாகவும் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், அடிப்படைவாதக் குழுவினர் - முந்தைய அல்-நொஸ்ரா முன்னணியைச் சேர்ந்த ஜிகாடிஸ்ட்கள் போன்றவர்கள். அவர்கள் தங்கள் சட்டத்தைத் திணித்துக்கொண்டிருந்தனர். எதிர்க்கட்சிக் கொடிகள் கிழித்தெறியப்பட்டன. சுவர்களிலெல்லாம் மதசம்பந்தமான வாசகங்கள் எழுதப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டன. வானொலிகளில் பெண்களின் குரல் தடை செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு மத்தியில், இத்லீபில் முப்பது இடங்கள் கைப்பற்றப்பட்டன. இத்லீப் என்றே பெயர் கொண்ட அப்பிரதேசத்தின் முக்கிய நகரமும் அதில் அடங்கும்.
இதுபோன்ற அழுத்தங்கள் அஹ்மதை மதத்திலிருந்து விலகச் செய்தன. தாடியை மழித்துவிட்டான். சிரியப் பெண்கள் முகத்திரை போட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தான். அடிப்படை வாதிகளின் வேடத்தைக் கண்டித்தான்.
“அடிப்படைவாதிகளெல்லாம் இஸ்லாத்தின் பிரதிநிதிகள் அல்லர். அல்-நொஸ்ராவிடம் நெருக்கமான ஒருவன் அவனுடைய கைப்பேசியைப் பழுதுபார்க்கச் சொன்னான். திரையில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட வாசகங்கள் இருந்தன. ஆனால், உள்ளே வெறும் ஆபாசப் படங்கள் ...”
உண்மையில், இத்லீப் பிரதேசம் ஒரு பெரிய ‘கர்காபேத்’, குப்பை கூளம் நிறைந்த பிரதேசம், என்பதை அவன் ஒப்புக்கொண்டான். அதற்குத் திட்டமிட்ட குறிக்கோள் இல்லை, வரையறுத்த தொலைநோக்குப் பார்வை இல்லை. சுமார் பத்து பிரிவினர்கள் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளனர். அச்சமயம் பார்த்து அல்-நொஸ்ரா தன் பிடியை இறுக்கி வருகிறது. மேலும், அச்சம் எங்கும் குடிகொண்டிருந்தது. அரசு, அங்கு வந்து இன்னுமொரு முறை எல்லோரையும் அள்ளிக்கொண்டு போய்விடும் என்று எல்லோரும் பயந்தனர். மீதமிருந்த கிளர்ச்சிக்கோட்டை போராளிகளைத் துடைத்தெறியும் காட்சிக்குட்படுத்தப்படுமோ என்ற ஐயம் பரவியிருந்தது.
ஆனால், அஹ்மத் நம்பிக்கையைக் கைவிடவில்லை. சிரிய மக்களின் நீண்ட இரவுக்குப் பின் ஒரு மறுமலர்ச்சி காலத்தைப் பார்க்கத்தான் போகின்றார்கள் என்று திட்டவட்டமாக நம்பினான். எந்த வடிவத்தில்? அதுபற்றி அவனுக்குத் தெரியவில்லை. அதற்காகக் காத்திருக்கும்போது, ஏராளமான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தான். புத்தகம்மீது கொண்ட ஆர்வத்தில், இத்லீப் குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் ஒரு நடமாடும் நூலகம் திறந்தான். ஐயமும் அவநம்பிக்கையும் அவனை ஆட்கொள்ளும்போது, தராயாவின் சிறப்புஅனுபவத்தை நினைத்துக் கொள்வான்.
சில நாட்களுக்குமுன், அஹ்மத் தன் ஸ்மார்ட்ஃபோன் ஆவணக்கிடங்கில் ஒரு காணொலியைக் கண்டுபிடித்தான். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27. முற்றுகையிடப்பட்ட பகுதியை விட்டுக் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், அவன் தனியாக நடந்துசென்று “ஏராளமான வீடுகள்” (தராயா) கட்டுமானப் பணி நடக்கும் இடம்போல் சிதிலமடைந்திருப்பதைப் படம் பிடித்திருக்கிறான். அந்தப் படம் நூலகச் சுவரில் வீழ்ந்த கீறல்களைக் காட்டுவதோடு முடிகிறது.
தராயாவைப் பார்க்கும்போது, அந்தப் படம்தான் என் நினைவில் வேரூன்றிக்கிடக்கிறது. என் மனத்தில், அது கறுப்பு - வெள்ளைப் படமாக விரிகிறது. பின்னணி இசையாக மஹ்மூத் தார்விசின் குரல் ‘முற்றுகை நிலை’ பகுதியைப் படிப்பது ஒலிக்கிறது.
அழிக்க முடியாத படம். அதுதான் நம்ப முடியாத காகிதக்கனவின் நினைவு.