கவிதைகள்
கவிதைகள்
க. மோகனரங்கன்
Courtesy: Warli painting
கடைவழி
கூட வந்தவர்களெல்லாம்
குனிந்த தலை நிமிராது
கோவிலுக்குள் போய்விட
நானோ
கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே
வெளியில் நின்றுவிட்டேன்
தக்கார்க்குக் கடவுள்
தகவிலார்க்குச் சிற்பம்
உண்ணீர்
பொருள்வயின் பிரிந்து
தண்ணென்றிருந்த
உன்நிழலைவிடுத்து
தனியே
வெகுதூரம்
வந்துவிட்டேன்
சுடுகிற
சூரியனுக்குக் கீழே
இன்னும் இன்னுமென்று
நீளுமிந்த நெடுஞ்சுரத்தில்
நெடுக நடந்த களைப்போடு
தேடிச் சேர்த்த
திரவியத்தின் வியர்த்தமும்
கூடி வருத்த
நா வறளத்
தேடி அயர்கிறேன்
இதோ
இங்கெங்கோ தானிருக்கிறது
நான்
வாய்மடுக்க வேண்டிய
ஊற்றின் முகம்
போதம்
தும்பறுத்துக்கொண்டு
துள்ளிக் குதித்தோடும்
கன்றின் கண்
எல்லையற்றது
எனக் காண்கிறது
வயல்வெளியை
அடித்தமுளைக்குப் பக்கத்தில்
அசைபோட்டபடி படுத்திருக்கும்
பசு அறியும்
மடிப் பாலுக்கு
பிடிப் புல்லே
அதிகம்.
மின்னஞ்சல்: mohankrangan@gmail.com