கனவுலகின் மாயப்பெருவெளி
கட்டுரை
கனவுலகின் மாயப்பெருவெளி
கிருஷ்ணபிரபு
இராமானுஜம்
தென்னிந்திய ஓவியர்களில் டி.கே. பத்மினியும் (1940-1969), கே. ராமானுஜமும் (1941-1973) முக்கிய அடையாளங்களாகத் திகழ்பவர்கள். சென்னை ஓவிய இயக்கம் வாயிலாக உருவான ஓவியர்களில் குறிப்பிடத்தக்கவர்களும்கூட. அதேசமயம் இளம் வயதிலேயே மரணத்தையும் தேடிக்கொண்டவர்கள். பத்மினிக்குச் செய்யப்பட்டிருக்கும் ‘பட்டம் பறத்துன்ன பெண்குட்டி’ என்ற ஆவணப்படமும் அவர் குறித்த சிற்றிதழ்களின் பதிவுகளும் அவருடைய நினைவைப்போற்றும்வகையிலான ‘டி.கே. பத்மினி விருது’ போன்ற முன்னெடுப்புகளும் ராமானுஜத்திற்கும் செய்யப்பட்டிருக்கலாம். அவர் சார்ந்த எந்தத் தரவுகளும் தமிழில் தொகுக்கப்படவில்லை. இதையெல்லாம் கலை மரபு சார்ந்த பண்பாட்டின் வீழ்ச்சி என்றேகூடச் சொல்லலாம்.
கல்லூரியில் படித்தபோதும் அதன்பின் சோழ மண்டலம் கலைக் கிராமத்தில் வசித்தபோதும் ராமானுஜம் ஏராளமான கோட்டோவியங்களையும் தைல, நீர் வண்ண ஓவியங்களையும் வரைந்திருக்கிறார். அதில் ஒருசில ஓவியங்கள் தனிநபரால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. பல படைப்புகள் அவற்றின் முக்கியத்துவம் உணரப்படாமலும் பாதுகாக்கப்படாமலும் காணாமல்போயுள்ளன.
தனி நபர் சேகரிப்பிலிருக்கும் ராமானுஜத்தின் கருப்பு-வெள்ளை வரைகோட்டுச் சித்திரங்களையும், நீர் வண்ண ஓவியங்களையும் உரிமையாளர்களிடமிருந்து கேட்டுப் பெற்றுச் சென்னையிலுள்ள அஷ்விதா கலைக்கூடத்தில் - நவம்பர் 2019 தொடங்கி ஜனவரி 2020 வரையிலும் - காட்சிக்குவைத்திருக்கிறார்கள்.
சிறுவயது முதலே கற்பனையில் திளைக்கும் மனமும் விசித்திரப் போக்கும் கொண்ட ராமானுஜம் இயல்பின் காரணமாகத் தான் வாழ்ந்த காலத்திலிருந்தும் சமகால ஓவியர்கள் வட்டத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறார். இந்த இயல்பே அவருக்கு முன்னோ அல்லது அவரது சமகால ஓவியர்களிடமிருந்தோ அவரைத் தனித்துக் காட்டுகிறது.
இளமையிலிருந்தே கற்றல் குறைபாடு இருந்ததால் இயல்பிலேயே ஓவியம் சார்ந்து அதீத ஈடுபாட்டுடன் ராமானுஜம் வளர்ந்திருக்கிறார். அதனைக் கவனித்த பெற்றோர், சிற்பி எஸ். தனபாலிடம் தனிப்பட்ட முறையில் அடிப்படையான பயிற்சிகளைப் பெற அனுப்பியுள்ளனர். அதன்பின்னர், சென்னை அரசினர் கவின் கலைக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயிலச் சேர்ந்திருக்கிறார். கல்லூரியில் படித்த காலத்திலேயே (1962-1964) தேசிய அளவிலான அரசின் நல்கையும் கிடைத்திருக்கிறது. பின்னர், ஆரம்ப எழுபதுகளில் சோழ மண்டலம் கலை கிராமமானது உலக ஓவியர்கள் சங்கமிக்கும் இடமாகப் பரிமாணம் அடைந்தபோது அங்கு வசித்தவாறு தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். கலை கிராமத்திற்குச் சென்ற ஓரிரு வருடங்களிலேயே தனது முடிவையும் தேடிக்கொண்டார்.
துக்கமும் இறுக்கமுமான வாழ்வின் நிர்பந்தம் ஒருபுறம், உயிர்களுக்குப் பொதுவான எதிர்பார்ப்பும் ஏக்கமும் இன்னொருபுறம் என அலைச்சலுடன் முட்டிமோதும் புள்ளியில் தனக்கான கலைவெளியை ராமானுஜம் கண்டிருக்கிறார். கனவின் மாயமும் யதார்த்தத்தின் நிர்க்கதியும் ஒன்றிணையும் தன்மை அவருடைய ஓவியங்களில் பெரிதும் வெளிப்படுகிறது. ஆழ் மனத்தில் பதிந்திருக்கும் மரபான கதையாடல்களின் அடையாள ரேகைகளும் சமகால வாழ்வின் யதார்த்தத் தெறிப்புகளுமாக அவருடைய படைப்புலகம் வானின் மேகங்களுக்கு இடையிலோ அல்லது நீர்ப் பரப்பிற்கு அடியிலோ இருக்கிறது. அதில் சிறகு முளைத்த தேவதைகள், படமெடுக்கும் நாகம், கஜமுக யானை, விசித்திரப் பறவை, வழிபடும் ஆயுதங்கள், பல்லக்கு, பூதங்களின் கோரவாய் என மரபான கதையாடலின் மாய உருக்கள் அதன் தன்மையில் மேற்பரப்பில் நிழலாடுகின்றன. அந்த மையப்போக்கின் இடையீடாகக் கடிகாரம், பழங்காலமாளிகைகள், கோபுரங்கள், தொப்பி, நவ நாகரிக உடை, அணிகலன்கள் என வேறொரு உலகம் உள்ளடுக்கில் ஊடுபாவுகிறது. இதற்கிடையில் தன்னுடைய எல்லா ஓவியத்திலும் ராமானுஜமும் இருக்கிறார்.
அவருடைய கற்பனை வெளியில் மாளிகைகளும் வீடுகளும் இருந்தாலும் அவர்சுற்றித் திரிவது கட்டற்ற வெளிகளில்தான். தனது இறுதிக்காலத்தில் இராமானுஜம் வரைந்த ஓவியம் ஒன்றில் கிடத்தப்பட்டிருக்கும் மேசையில் யாரோ ஒருவர் படுத்துக்கொண்டிருக்கிறார். இறக்கை முளைத்த தேவதைகள் சுற்றிலும் நின்றுகொண்டிருக்கிறார்கள். தனது வாழ்வின் இறுதிப் பயணத்தை ஒருவேளை அவர் கனவில் கண்டிருக்கக்கூடும்!
ராமானுஜத்துக்கு எனப் பெரிதான நட்பு வட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. கல்லூரி நாட்களில் ஓவியரும், திரைப்படக்கலை இயக்குநருமான என். ராகவனுக்குக் கிடைக்கப்பெற்ற நிகழ்வுகளைக் குறித்து அவருடன் உரையாட நேர்ந்தது. அவரது நினைவுகூரல் இது:
“ராமானுஜத்தை நினைத்தால் கல்லூரிக் கால நிகழ்வுகள்தான் நினைவில் அலைமோதுகின்றன. கல்லூரிக்கு உள்ளேயே இருந்த முதல்வரின் மாடிவீட்டிற்குச் செல்லும் படிகளுக்குக் கீழுள்ள இடத்தில்தான் அப்போது தங்கியிருந்தார். அவருடைய தோற்றமும் உடல்மொழியும் பிறவிக் கலைஞர்களுக்கே உரியது. அதுவே கிண்டலுக்கும் உள்ளானது.
“எங்கள் கல்லூரி நாட்களில், அவருடைய ஓவியங்கள் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள்வரை எல்லாராலுமே இன்றுவரையிலும் ரசிக்கப்படுகிறது. அவர் வரைவதை விரும்பிப் பார்ப்போம். அவரிடம் ஒரு வித்தியாசமான குணம் இருந்தது. தன் ஓவியத்தை யாரேனும் பிரதி எடுத்தாலோ அல்லது தன்னைப் போலவே யாரேனும் வரைய முற்பட்டாலோ அவர்களை விரட்டிவிரட்டி ஓடிச்சென்று அடிப்பார். கௌதம், அவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றே ஓவியத்தைப் பிரதியெடுப்பான். அதைப் பார்த்ததும் விரட்டிக்கொண்டு வருவார். மற்றபடி மிக அன்பானவர். யாருடனும் வலிய வந்து புழங்கமாட்டார். தனித்து அலைவார். சலிக்காமல் ஓவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்து தள்ளிக்கொண்டே இருப்பார். திடீரென ஒருநாளில் யாருக்கும் சொல்லாமல் சஞ்சாரிபோல எங்காவது ஓடிவிடுவார். எங்கு செல்வார், என்ன செய்வாரென்று யாரிடமும் சொல்லமாட்டார். சிலநாட்கள் கழித்து ஒன்றும் தெரியாததுபோல வந்து சேர்வார். பழையபடியே வரைந்து தள்ளுவார். எப்பொழுதாவது அரிதாகக் கொஞ்சம்போலக் காசுகளைக் கேட்டு அடம்பிடிப்பார். அதில் ஓர் உரிமை இருக்கும்.
“கல்லூரியின் Design Centre துறையில்தான் அவருக்கு வேலை கொடுத்திருந்தார்கள். அப்போதுதான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் பணியில் அவர்கள் சொல்லுவதைத்தான் வரைய வேண்டும். இவரோ, தனக்குத் தோன்றுவதைத்தான் வரைவார். பயன்படும் எனில் அவர் வரைந்த ஓவியத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தத் துறையில் இருந்தவர்களால் அவருக்கு இதுபோன்ற சில சலுகைகள் கிடைத்தன. பின்நாட்களில் சோழமண்டலத்தில் பணிக்கர்தான் அவரை வைத்துப் பார்த்துக்கொண்டார்.
“சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூரலாம். ராமானுஜம் qunk ink கொண்டு வரைந்த ஓவியத்தின் மீது சில இடங்களில் தண்ணீர்ச் சொட்டுகளை விட்டு அதனை மெருகேற்றுவார். அது அவருடைய பாணி. தேசியக் கலை அருங்காட்சியகத்திற்காக வரைந்த ஓவியமானது முடிவுறும் நிலையில் இருக்கும்பொழுது சக ஓவியர் ஒருவர், ராமானுஜத்தின் பின்னாலிருந்து தண்ணீரை எடுத்துவந்து வரைந்திருந்த ஓவியத்தின் மீது ஊற்றிவிட்டு, ‘எப்பிடியும் நீ கடைசியில அதன் மேல தண்ணி ஊத்தப் போற. அதுக்குதான் நானே ஊத்திட்டேன்,’ என்றார்.
“இந்தச் செயலை ராமானுஜத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்தக் கிறுக்குப் பிடித்த ஓவியரைச் சோழமண்டலம் முழுவதும் சுற்றிச்சுற்றி வெறியுடன் துரத்தியடித்தார். மறுநாள் காலையில், தேசியக் கலை அரங்கின் போட்டிக்காகச் சட்டமிடப்பட்ட ஓவியத்தை அனுப்பியாக வேண்டும். ஆகையால் அன்றிரவே, மீண்டும் ஓர் ஓவியத்தை வரைந்து ராமானுஜம் அனுப்பிவைத்தார். அந்த வருடத்தின் சிறந்த ஓவியமாக அது தேர்வு செய்யப்பட்டது. இன்றும் அங்கிருக்கும் அரங்கில் அது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
“ராமானுஜத்தின் பெருவாரியான ஓவியங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். ஓர் ஓவியரின் படைப்புகளை வரைதலின் நுட்பம் தெரிந்த சக ஓவியர்கள் சிலாகிப்பது கடினம். ஆனால் ராமானுஜத்தின் ஓவியங்களை எல்லாரும் விரும்பி ரசிப்பார்கள். கண் முன்னால் மாயாஜாலங்கள் நிகழ்த்திவிடுவார். நான் அறிந்தவரை முழுநேர ஓவியரென்றால் அது ராமானுஜம்தான். ஓவியம், சிகரெட், பசிக்கும் நேரத்தில் உணவு - இதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது.
“ஏதேனும் ஓவியங்கள் விற்றுப் பணம் கிடைத்தால் அதைக்கொண்டு பைநிறைய சிகரெட்டையும் காகிதங்களையும் வண்ணங்களையும் தூரிகைகளையும்தான் வாங்கிவருவார். அவர் வரைந்து தள்ளிய ஓவியங்களில் பலவும் என்னவாயினவென்று தெரியவில்லை. அதைப்பற்றியெல்லாம் அவருக்குக் கவலையும் இல்லை. சிப்பி, ஓடு, சுவர், கல், காகிதம் என எது கிடைத்தாலும் வரைந்துகொண்டே இருப்பார்.
“ராமானுஜத்துடன் இருந்தபோது அவருடைய மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. இன்றிருக்கும் தெளிவும் முதிர்ச்சியும் அன்று இல்லாமல்போனது துரதிர்ஷ்டம்தான். இன்று உயிருடன் இருந்திருப்பாரெனில் உலக அளவில் உச்சத்தைத் தொட்ட ஓவியராகவும் ஆகியிருக்கக்கூடும். இலக்கியப் புலத்தில் பாரதியைப் போல நுண்கலைப் புலத்தில் ராமானுஜத்தைத் தவறவிட்டது நம் கலைச் சூழலின் துரதிர்ஷ்டம்தான். அவரைப் பற்றிய துல்லியமான துலக்கமான ஆவணங்கள் எழுத்தாக்கப்பட வேண்டும். இதுபோன்ற அரியஆளுமைகளுக்கு மேலைநாடுகளைப்போல அருங்காட்சியகம் அமைப்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். ராமானுஜத்தின் முழு ஓவியப் பரிமாணத்தையும் இக்கண்காட்சியின் வாயிலாகப் புரிந்துகொள்ள முடியாது; என்றாலும் அவருடைய படைப்புவெளிக்குள் உள்நுழையும் வாய்ப்பை இதுபோன்ற முன்னெடுப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும்.”
ராகவன் பகிர்வதைப்போல இதுபோன்ற ஆளுமைகளுக்கு நிரந்தரக் கண்காட்சி அரங்கமோ, அருங்காட்சியகமோ அமைப்பதுதான் நியாயமாக இருக்கும். ராமானுஜம் மரணித்து ஏறக்குறைய ஐம்பது வருடங்கள்ஆகின்றன. இந்தநேரத்தில் அவருடைய கலைப்பங்களிப்புகள் குறித்து விரிவான பார்வைகளை முன்வைக்க வேண்டியது அவசியம். அதற்கு, இதுபோன்ற கண்காட்சிகளும் முன்னெடுப்புகளும் நம் சூழலுக்கு அவசியமானவை.
மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com