சம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
சம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்
ம. பாலகைலாசநாத சர்மா, சு. நவநீதகிருஷ்ணன்
மானிட வரலாற்றில் சிந்தனை முதிர்ச்சியின் விளைவால் ஏற்பட்ட கருத்துப்பரிமாற்றமே மொழிகளின் தோற்றுவாயாகக் கருதப்படுகிறது. மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்த மொழி வெறும் பரிமாற்று ஊடகமாக மட்டுமன்றி வேறு பல பண்பாட்டு விழுமியங்களையும் காலக்கண்ணாடியாகக் காட்டவல்ல மனித வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக மாறி வந்துள்ளமையை வரலாறு எமக்கு உணர்த்துகிறது. இம் மொழிமரபில் தொன்றுதொட்டு இன்றுவரை அழியாத ஜீவசக்தி கொண்ட உலகின் புராதன மொழிகளுள் ஒன்றாக சம்ஸ்கிருதம் விளங்குகிறது. மனிதகுல வரலாற்றுக்கு முற்பட்ட தெய்வீகத் தோற்றுவாயும் சுமார் நாலாயிரம் ஆண்டுக்கால இலக்கிய வளமும் மிக்க இம்மொழி இந்தோ - ஜரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுக