நெடுவழி விளக்குகள்
அஞ்சலி
நெடுவழி விளக்குகள்
ஸ்டாலின் ராஜாங்கம்
வை. பாலசுந்தரம்
தலித் இயக்கங்கள் பல்வேறுவகையான பின்புலங்களிலிருந்து தோன்றியிருக்கின்றன. பிரச்சனைகளின் அடிப்படையில் தற்சார்பாக பிறந்த அமைப்புகள் ஒருபுறம். ஏற்கெனவே இயங்கிவந்த அமைப்புகளின் போதாமைகள், புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள் காரணமாக அவற்றிலிருந்து வெளியேறிப் புதிதாகச் செயல்பட்டவை மற்றொரு புறம். இந்த இரண்டாவது போக்கு பெரும்பாலும் தனி ஆளுமைகளைச் சார்ந்தே அமைந்ததென்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சனைகள் என்ற முறையில் தனிஆளுமை பலத்திலேயே அவை நீடித்துவிடுவதில்லை. சமூகப் பிரச்சனைகள் அவற்றின் அடித்தளமாக இருப்பது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. வை. பாலசுந்தரம் என்ற ஆளுமையைச் சார்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் உருவாகியிருந்தாலும் தலித் மக்கள் உரிமை என்ற அடித்தளத்திலிருந்து செயல்பட்ட அமைப்பாகவே அவ்வியக்கம் இயங்கியது. அந்த அமைப்பின் தலைவராக இருந்த வை.பா 2019 டிசம்பர் ஆறாம் நாள் சென்னையில் காலமானார்.
திமுகவின் ஆரம்பகால அடித்தளமாக சென்னையின் சேரிகள் இருந்தன. ஏற்கெனவே தங்கள் தலைவர்கள் மூலம் அரசியல் தொடர்பைப் பெற்றிருந்த அடித்தள மக்களிடையே திமுக எளிமையாக இடம்பிடிக்க முடிந்தது. அம்பேத்கர் தொடங்கிய அகில இந்திய ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் (AISCF) செயல்பாட்டாளராயிருந்த நாகையாவின் மகள் சத்தியவாணி முத்துவும் இளம்பரிதியும் சென்னையில் திமுக தளகர்த்தராயிருந்தார்கள். அந்த வரிசையில் எண்ணத்தக்கவர் வை.பா. பெரியாரின் கருத்துகள்பால் ஈர்ப்புகொண்ட வை.பா, சுண்ணாம்பு விற்பனையில் ஈடுபட்ட செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். விரைவிலேயே திமுகவின் சென்னை வட்டாரச் செயல்பாட்டாளரானார். அண்ணாவோடு நேரடித் தொடர்புகொண்டிருந்தார். திமுகவின் தலைமை நிலையச் செயலாளராகவும் விவசாய அணி நிர்வாகியாகவும் விளங்கினார். அண்ணாவின் மறைவுக்குப் பின் ஆட்சித்தலைமை நெடுஞ்செழியனுக்குச் செல்லாமல் கருணாநிதி பக்கம் வருவதற்காகப் பணியாற்றியவர்களுள் இவரும் ஒருவர். பின்னர் நகரிலும் கட்சியிலும் இவர் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாகச் சென்னை நகர மேயராக ஆக்கப்பட்டார். 1971ஆம் ஆண்டு அச்சரப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆய்வுக்குழுவின் சட்டமன்றக் குழுத்தலைவராகவும் செயற்பட்டார். அக்குழு சார்பாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய அவர் அப்போது சென்னையில் கட்டத் தொடங்கியிருந்த அண்ணா மேம்பாலத்திற்கான மாதிரியாக, வரைபடம் ஒன்றைப் பரிந்துரைத்தார். அதன்படி அண்ணா மேம்பாலத்தின் அமைப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. காவலர்களுக்கான கால்சட்டை பற்றிச் சட்டப்பேரவையில் இவர் எழுப்பிய கேள்வியின் பேரிலேயே முழுக்கால்சட்டையாக அது மாற்றப்பட்டது.
ஆரம்பகாலத் திமுகவில் தலைவர்கள் தலித் அடையாளத்தோடு செயல்படுவதற்கு ஓரளவு இடமிருந்தது. கட்சிக்கும் அது தேவைப்பட்டது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னால் அந்த இடம் சுருங்க ஆரம்பித்தது. சத்தியவாணி முத்து, வைபா ஆகியோரின் வெளியேற்றம் அவ்வாறுதான் நிகழ்ந்தது. வைபா திமுகவில் இருந்தபோதே தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டைச் சென்னை பெரியார் திடலில் நடத்தினார். அவருடைய எழுத்தாள நண்பர்களான சாண்டில்யன், தமிழ்வாணன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். முதல்வராயிருந்த கருணாநிதியும் கடைசி நேரத்தில் மாநாட்டில் கலந்துகொண்டார். திமுகவிலிருந்து வைபா விலகியதற்குக் குறிப்பான காரணம் கிடைக்கவில்லை. ஆனால் முதல்வராயிருந்த மு. கருணாநிதிக்கு சென்னை கடற்கரையில் நடந்த பவளவிழா கூட்டத்தில் மோதல் வெடித்தது. அக்கூட்டத்தில் தேர்தலில் திமுக தலித்துகளைப் புறக்கணிக்கிறது என்று வைபா குறிப்பிட்டார். ‘இதயத்தில் இடமுண்டு’ என்று கருணாநிதி பதிலளித்த புகழ்பெற்ற கூட்டம் அதுதான்.
1970களில் திமுகவிலிருந்து வெளியேறிய வைபா தாம் ஏற்கெனவே இயங்கிவந்த இந்திய குடியரசுக் கட்சியில் இடையில் சென்று இணைய முடியவில்லை. எனவே சென்னையில் இயங்கிவந்த அம்பேத்கர் மன்றங்களையும் இரவுப் பாடசாலைகளையும் இணைத்து அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14ஆம் நாள் ‘அம்பேத்கர் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை அவர் ஆரம்பித்தார். அன்றைய தமிழக ஆளுநராகயிருந்த பிரபுதாஸ் பட்வாரி தொடக்கிவைத்தார். திமுகவிலிருந்த தலித் நிர்வாகிகள் கணிசமான அளவில் வைபாவின் அமைப்பில் இணைந்தனர். முதல் பொதுச்செயலாளராயிருந்த ஜி.ஏ. அப்பன், இரண்டாவது பொதுச்செயலாளரான ஏ.கே. சாமி, கவிஞர் பழனிவேலு, சாத்தூர் சந்திரகுப்த மௌரியர் ஆகியோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். மைய நீரோட்டக் கட்சியிலிருந்து வந்தவரென்ற முறையில் புதிய வேலைத்திட்டங்கள் ஏதும் கட்சியில் இருக்கவில்லை. தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம், அரசுத் திட்டங்களின் நடைமுறை, சமூக வன்முறைக்கெதிரான போராட்டம் என்ற சட்டவாத அளவிலேயே கட்சிப்பணிகள் அமைந்தன. அவரின் சட்டமன்றப் பணிகளைவிட 1990களின் அமைப்புப் பணிகள் முக்கியமானவை. அம்பேத்கர் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பின்னால் வைபா நடத்திய பேரணிகள், மாநாடுகள் தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. 1980களில் நிறையப் போராட்டங்களில் அமைப்பு ஈடுபட்டது. குறிப்பாக அம்பேத்கரிய இயக்கங்கள் பெரும்பாலும் வடமாவட்டச் செல்வாக்கிலானதாக இருந்துவந்த நிலையில் வடக்கே தொடங்கப்பட்ட அமைப்பானது தென்மாவட்டங்களிலும் சற்றே விரிந்து செயல்பட்டதென்றால் அது அம்பேத்கர் மக்கள் இயக்கம்தான். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மதுரை வட்டாரத்தில் செல்வாக்குப் பெறும்வரையிலும் இந்த அமைப்பே அப்பகுதியில் இயங்கியது. 1950களில் வாடிப்பட்டி பொட்டுலுபட்டியில் காந்திஜி பள்ளியைத் தொடங்கிய பொன்னுத்தாய் அம்மாள் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகியாக விளங்கினார். 1980களில் சங்கனாங்குளம் ஊரில் தலித் பெண்கள்மீது வன்முறை ஏவப்பட்டது. திருமங்கலம் நாகராணி, வாடிப்பட்டி பஞ்சு கொல்லப்பட்டனர். இதற்கெதிரான போராட்டத்தை இந்த இயக்கமே நடத்தியது. வாடிப்பட்டி பஞ்சுவுக்காகப் போராட்டம் நடக்கவிருந்த நிலையில் மேடை கொளுத்தப்பட்டது. வைபா காரின் மேல் ஏறிநின்று கூட்டத்தில் பேசினார். 1980களில் தமிழகத்தில் முதன்முதலாகப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வைபா வழக்கு தொடர்ந்தார். அதே தருணத்தில் மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு ‘பஞ்சாயத்து ராஜ்நகர் பாலிகா’ என்ற மசோதாவைக் கொணர்ந்தது. அதுபற்றிய வழக்கில் நீதிமன்றம் வைபாவின் மனுவையும் கணக்கிலெடுக்கச் சொன்னது. எனவே அவர் வழக்கின் காரணத்தையும் சேர்த்துத்தான் உள்ளாட்சிகளிலும் இடஒதுக்கீட்டுக்கான தெளிவைப் பஞ்சாயத்து ராஜ்நகர் பாலிகா திருத்த மசோதாவில் இணைத்தனர்.
1980களில் வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டம் தொடங்கியது. அது வன்முறையாகவும் மாறியது. அதையொட்டிப் பல்வேறு தலித் அமைப்புகள் இணைய முடிவெடுத்தன. எல். இளையபெருமாள், எம். சுந்தர்ராஜன், டாக்டர் சேப்பன், ஆ. சக்திதாசன், ஜெயசீலன் ஆகியோர் இணைந்து ஷெட்யூல்டு மக்கள் விடுதலைக் கூட்டமைப்பு (SCAM) உருவாகியபோது அதன் தலைவராக வைபா நியமிக்கப்பட்டார். 1987க்குப் பிறகு SCAM உடைந்தது. வைபா தொடர்ந்து தனிக்கட்சியாகச் செயல்பட்டார். வைபா கட்சி ஆரம்பித்தபோது உடனிருந்தவர்கள் இறந்துகொண்டிருந்தார்கள். இறப்புக்குப் பின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் இல்லாமல் போனார்கள். எம்ஜிஆர் ஆட்சியிலிருந்தபோது அவர் அழைத்த தேர்தல் உடன்பாட்டிற்கு வைபா இணங்கவில்லை; தன் வங்கி முதலீட்டை உத்திரவாதமாகத் தந்து தலித் தொழில் முனையத்தை உருவாக்க உதவுவதாகச் சங்கரமடம் கூறி அழைத்தபோது வைபா சங்கராச்சாரியைச் சந்தித்தார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பின்னர் அவரின் அமைப்பு வளர்ச்சியற்றுப் போனது. எனினும் 1990களில் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைத் தடைசெய்வதென்ற திமுக அரசின் முடிவின்மீது மூத்த தலித் தலைவர்கள் அழுத்தத்தைத் தந்தனர். அதில் வைபாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. நீலத்துண்டு, நீலக்கொடி, அசோகச் சக்கரம் போன்றவற்றை விடாப்பிடியாகத் தாங்கியிருந்த தலைமுறையினர் மறைந்துவருகிறார்கள். புதிய தலைமுறை தலித் அமைப்புகளோடு இணங்க முடியவில்லை. அவர்களின் எதார்த்தம் வேறாக இருந்தது. தமிழகத்தில் பின்னாளில் போர்க்குணம் கொண்டவர்களாக வெளிப்பட்ட பூவை மூர்த்தி, ஜான் பாண்டியன் ஆகியோரின் ஆரம்பகாலம் இந்த அமைப்பிலிருந்தே தொடங்கியது.
1942ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் வைபா பிறந்தார். ஆனால் ஏப்ரல் 13ஆம் நாளையே பிறந்தநாளாக அனுசரித்து வந்தார். ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது பிறந்தநாள் அமைய வேண்டும் என்பதே அதற்கான காரணம். பதின்மூன்றாம் தேதி தன் பிறந்தநாளை முடித்து மறுநாள் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமென்பது அவர் விருப்பம். அம்பேத்கர் பிறந்தநாளில் பிறந்திருக்க வேண்டுமென்பதே அவரின் ஏக்கம். ஆனால் ஏப்ரல் மூன்றாம் நாளில் பிறந்தது இயற்கை. அவர் விருப்பத்தை அறிந்துகொண்டதைப்போல் இயற்கை அவரை அம்பேத்கர் இறந்த டிசம்பர் ஆறாம் நாளில் அழைத்துக்கொண்டது.
*
தலித் ஞானசேகரன்
தலித் ஞானசேகரன் என்ற பெயரை எழுதப் புகும்போது இரண்டு விசயங்களை முதலில் குறிப்பிட வேண்டும். ‘பூனா ஒப்பந்தம்: ஒரு சோகக் கதை’ என்றொரு சிறுநூலை தொ. பரமசிவன் 1990களில் எழுதினார். தலித் வட்டாரத்திற்கு வெளியிலிருந்த அறிவுவட்டத்தில் அச்சம்பவம் அறியப்பட அந்த நூல் ஓரளவு உதவியது. பூனா ஒப்பந்த நாளான செப்டம்பர் 24ஐ நினைவுகூர்ந்து மதுரையில் ‘தலித் உரிமைகளை காந்தி படுகொலை செய்த நாள்’ என்று தலித் அமைப்பு ஒட்டியிருந்த சுவரொட்டி ஒன்றின் உந்துதலினால் அந்நூலை எழுதியதாக முன்னுரையில் தொ. பரமசிவன் கூறியிருப்பார். தலித் அமைப்பு என்று அவரால் பொதுவாகச் சொல்லப்பட்ட அந்த அமைப்பின் பெயர் தலித் விடுதலை இயக்கம்.
அதேபோல 2008ஆம் ஆண்டு மதுரை மாவட்ட உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் பிரச்சனை எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பிரச்சனையை முன்னெடுத்ததோடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற துணைநிலை அமைப்பையும் உருவாக்கியது. இந்தப் பிரச்சனையின்போது தலித் அமைப்புகளின் தலையீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளவிற்கு அழுத்தம் பெறவில்லை; எனினும் உத்தபுரம் சுவர் கட்டப்பட்ட 1989ஆம் ஆண்டிலேயே அதற்கு எதிராகப் போராடிய அமைப்பாகத் தலித் விடுதலை இயக்கம்தான் இருந்தது. மதுரையில் நாற்பதுகி.மீ பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் அந்த இயக்கம் விண்ணப்பம் அளித்தது. அத்தகைய அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்து இப்போராட்டங்களை வழிநடத்தியவர் தலித் ஞானசேகரன். அவர் கடந்த டிசம்பர் 12ஆம் நாள் திருவண்ணாமலையில் காலமானார்.
பல்வேறு இயக்க, கருத்தியல் பின்புலங்களிலிருந்து தலித் இயக்கங்கள் தொடங்கப்பட்டதைப் போலவே கிறித்துவப் பின்புலத்திலிருந்து உருவான தலித் செயல்பாடுகளும் அமைப்புகளும் உண்டு. கத்தோலிக்கக் கல்லூரிகளிலிருந்த அய்கப் போன்ற மாணவர் அமைப்புகளிலிருந்து பலர் உருவாகியிருக்கின்றனர். மனித உரிமைகள், தலித் உரிமைகள் என்று செயல்பட முன்வந்து இன்று அறியப்பட்டவர்களாகவுள்ள ஹென்றி டிஃபேன், விழுப்புரம் நிக்கோலஸ், மதுரை அந்தோணி ராஜ், வேலூர் டி. டேவிட், எழுத்து வே. அலெக்ஸ் போன்றோரை இந்தவகையில் உடனடியாகக் கூறலாம். இதுபோன்றே கிறித்துவப் பின்புலத்திலிருந்து வந்து தலித் இயக்கமொன்றை ஆரம்பித்தவர் டேனியல் ஞானசேகரன்.
ஞானசேகரனின் சமூகப்பணி இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த என்.வி. ஜெயசீலனின் தொடர்பிலிருந்து உருவானது. பிறகு அகில இந்திய அம்பேத்கர் மக்கள் இயக்கத்திலும், 1987ல் உருவான ஷிசிகிவி என்ற ஷெட்யூல்டு விடுதலை இயக்கத்தில் இளைஞரணிப் பொறுப்பிலும் தொடர்ந்தது. அதன் தொடர்ச்சியில் மதுரையில் அவர் தமிழ்நாடு இறையியல் கல்லூரி உதவியுடன் 1990களின் தலித் பண்பாட்டுச் செயல்பாட்டில் முக்கியமான பங்குவகித்த தலித் ஆதார மையத்தை ஏற்படுத்துவதில் இணைந்து செயல்பட்டார். மதுரையை மையமாகக்கொண்டு செயல்பட்டுவந்த அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகியான அகஸ்தியான் என்பவரைத் தலைவராகக்கொண்டு 1989ஆம் ஆண்டு தலித் விடுதலை இயக்கத்தை ஆரம்பித்தார். எனினும் பொதுச்செயலாளராக விளங்கிய ஞானசேகரனே அதன் செயல்தலைவராக விளங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு செல்வாக்குப் பெறுவதற்கு முன்பு மதுரை வட்டாரத்தில் இயங்கிய போர்க்குணம்கொண்ட அமைப்பென்று இதைக் கூறலாம். இந்த அமைப்பு தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாகச் செயல்பட்டது.
தலித் என்ற அடையாளம் அறிமுகமான தொடக்க காலகட்டமான இத்தருணத்தில் அந்த அடையாளத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டியும், அந்த அடையாளத்தை மக்களிடையே கொண்டுசென்றும் இந்த அமைப்பு செயல்பட்டது. அதன்படியே டேனியல் ஞானசேகரன் என்றறியப்பட்ட இவர் தன்னையே தலித் ஞானசேகரன் என்றாக்கிக்கொண்டார். குறிப்பாக தலித் விடுதலை இயக்கம் அருந்ததியர், பறையர், தேவேந்திரர் போன்ற பட்டியல் சாதிகளிடையே விரிந்து செயல்பட்டது. கரூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் அருந்ததியர் மக்களிடையே இது இயங்கியது. 1989 விருதுநகர் அல்லாளபேரி கலவரம், 1992 விருதுநகர் இனாம்ரெட்டியபட்டி அம்பேத்கர் சிலை திறப்புக் கலவரம், 1990ஆம் ஆண்டு பெரியகுளம் அம்பேத்கர் சிலை திறப்புக் கலவரம், 1996 சாத்தூர் அம்பேத்கர் சிலை திறப்புக் கலவரம் ஆகியவற்றின்போது இந்த அமைப்பே தலையிட்டுப் போராடியது. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் (1932) உருவாக்கப்பட்டுக் கைவிடப்பட்ட இரட்டை வாக்குரிமைப் பிரச்சனையை மீண்டும் எழுப்பியதில் இவ்வமைப்புக்கு முக்கிய இடமுண்டு. 1992ஆம் ஆண்டு இந்தக் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் ஞானசேகரன் சிறை சென்றார்.
தேவேந்திரர் வகுப்பினரின் அரசியல் அடையாளமாக இன்றைக்கு மாறியுள்ள இம்மானுவேல் சேகரனை மறுநினைவுக்குக் கொணர்ந்ததில் ஞானசேகரனின் பங்கு முக்கியமானது. ஷெட்யூல்டு விடுதலை இயக்கம் 1987இல் ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தியபோது தென் தமிழகத்திலிருந்து இம்மானுவேல் சேகரன் நினைவுஜோதியைக் கொண்டு சென்றதில் இவரே பொறுப்பேற்றிருந்தார்.
1989இல் ராமநாதபுரத்தை இரண்டாகப் பிரித்துச் சிவகங்கையைத் தலைநகரமாகக் கொண்டு ஏற்படுத்திய மாவட்டத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட எதிர்ப்பு கிளம்பியது. அப்போராட்டத்தில் ஷிசிகிவி கலந்துகொண்டது. போராட்ட அமைப்புகளிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ‘தலித் விடுதலை இயக்கம்’ (DLM) என்ற இந்தத் தனி அமைப்பு உருவானது. இதே காலகட்டத்தில் இடதுசாரி அமைப்பிலிருந்து வந்த பூ. சந்திரபோஸ் தலைமையில் தியாகி இம்மானுவேல் பேரவையும் உருவானது. இதே ஆண்டில்தான் மதுரையில் மலைச்சாமி மறைய, இந்திய தலித் சிறுத்தைகள் அமைப்புக்குத் திருமாவளவன் தலைமையேற்றார். ஞானசேகரனுக்கு மலைச்சாமியோடும் செயல்பட்ட அனுபவமுண்டு. இம்மானுவேல் சேகரன் கல்லறையைக் கண்டுபிடித்து அவர் நினைவுநாளை அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக மாற்றியதில் தலித் விடுதலை இயக்கம் முக்கிய பங்குவகித்தது. 1989ஆம் ஆண்டு காரியாப்பட்டியில் இம்மானுவேல் சேகரனின் முதல் நினைவுக்கூட்டம் இந்த அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கம்பர் மாணிக்கம் போன்றோரின் துணையுடன் இம்மானுவேலின் முன்னோடியான பேரையூர் பெருமாள் பீட்டரின் வரலாறும் தொகுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியிலேயே எழுத்து வே. அலெக்ஸ் பெருமாள் பீட்டரைப் பற்றி நூல் எழுதினார். ஞானசேகரன் முன்னெடுத்த போராட்டங்களும் நடத்திய கூட்டங்களும் ஏராளம். அவை பற்றிய தரவுகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன.
சிறந்த பேச்சாளரான ஞானசேகரன் அடிப்படையில் திருச்சபை ஆயர். 1990களின் இறுதியில் அவர் அரசியல் பணிகளிலிருந்து விலகித் திருச்சபை அரசியல் பக்கமாகச் சென்றார். இறுதிவரை மீளவே முடியாமல் அவ்வரசியல் அவரை இழுத்துக்கொண்டது. திருச்சபை உதவியுடன் அமையும் அரசியல் பணிக்கிருக்கும் வரையறையால் அவரும் சமூகப்பணியில் அதிக காலம் நீடிக்க முடியவில்லை போலும். திருச்சபையின் அரசியலுக்கேற்ப இயங்கியவராக அவரும் மாறிப்போனதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் தலித் விடுதலை இயக்கம் மட்டும் அவரால் உருவாக்கப்பட்ட செயற்பாட்டாளர்களால் சன்னமாக நீடித்து வருகிறது. பஞ்சமி நிலமீட்பு போன்ற விசயங்களில் அது ஈடுபட்டு வருகிறது.
நண்பர்களாக நாங்கள் இயங்கிய தலித் செயற்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம் (ICDA) சார்பாக பூனா ஒப்பந்தம் குறித்தும் உத்தபுரம் போராட்டம் குறித்தும் கூட்டம் நடத்தியபோது ஞானசேகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரிடம் விரிவான நேர்காணல் நடத்த வேண்டுமென்பது என் திட்டமாக இருந்தது. சாவதற்கான ஆயுள் அவருக்கில்லையே என நிதானமாக இருந்துவிட்டேன்; ஆனால் காலம் நிதானமாக இல்லை. வெற்றிபெற்ற இயக்கங்கள் மட்டுமே வரலாறாக ஆவதில்லை. தொடர்ச்சியின்மையையும் விடுபடல்களையும் தோல்விகளையும் பற்றித் தெரிந்துகொள்வதும் வரலாற்றின் பகுதியே. தலித் அரசியல் இயக்க வரலாற்றில் தலித் ஞானசேகரனின் இடம் நினைவுகூரப்பட வேண்டியது.
மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com