‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்
புத்தகப் பகுதி
‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்
காலச்சுவடு வெளியீடாக வரவுள்ள பெருந்தேவியின் ‘உடல் பால் பொருள்’ நூலில் இடம்பெறும் கட்டுரை.
சுந்தர ராமசாமியின் (1966 - 2008) ‘திரைகள் ஆயிரம்’ குறுநாவல் பாலியல் வன்முறையின் சொல்லாடல் களத்தில் பெண்ணொருத்தியின் சித்திரத்தைத் தரும் பிரதி. தலைப்பே முழுக்கத் தெரிந்துகொண்டுவிட முடியாத உண்மையை எடுத்துரைப்பது. ‘உண்மை’ ஒரு இளம்பெண் எதிர்கொண்டதாக ஊர் முழுக்கப் பேசப்பட்ட, ஒரு பத்திரிகையில் வெளிவந்த தொடர் வல்லுறவைப் பற்றியது. குறுநாவலின் முதல் சில பக்கங்களிலேயே ‘உண்மையைக்’ கறுப்பாகவோ வெள்ளையாகவோ தெரிந்துகொண்டுவிட முடியாது என்பது ஒரு சுவர்க்கோல வருணனையில் காட்டப்பட்டுவிடுகிறது.
ஏழைப் பெண் மரியம்மை உள்ளூர் ‘சர்வதேச நட்புறவு சங்க’த்தில் இருபத்தொரு நாள் சிறைவாசத்தில் அகப்பட்டுக் ‘குதறப்பட்டதை’ திருவிதாங்கூர் நேசன் பத்திரிகையில் வந்த செய்தியைக் கதைசொல்லி படிக்கிறான். ‘மரியம்மையின் முகம் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாகக் காட்சி தந்துகொண்டிருந்தது,’ என்று சொல்லப்பட்டவுடன் அவன் சிறுதூக்கம் போட்டுவிட்டுக் கண்விழித்தவுடன் காணும் காட்சி, “எதிர் சுவரில் சப்போட்டா மரத்தின் கொத்து இலைகளில் நிழலும் ஒளியுமான கோலம்.”1 “காற்றில் மரம் லேசாக அசைய நிழலும் ஒளியும் இழைத்த சுவர்க்கோலம் படபடவென்று விறைத்த கணப்பொழுதில் நூறாயிரம் தினுசுகளில் உருமாறித் தோன்றும் காட்சி” என விவரணை தொடர்கிறது. “மனசுக்குள் வகைப்படுத்த முடியாதபடி நிமிஷத்திற்கு நிமிஷம் அழகு அழகாக உருமாறும்” அந்தக் காட்சியின் “சஞ்சலப் புத்தி”யும் அதனாலேயே அதற்கு உண்டான “கவர்ச்சி”யும் கூறப்படுகின்றன.2
சுவர்க் காட்சி இன்றியமையாத தொடக்க உருவகமாகக் குறுநாவலின் கதையாடல் திசையை இறுதிவரை தீர்மானிக்கிறது. கதையாடலில் உருமாறும் காட்சிகள் மரியம்மை துன்புறுத்தப்பட்டாளா, சம்மதித்தாளா, தொடர் வல்லுறவுக்காகப் போடப்பட்ட வழக்கு நீதிக்காகவா, பண வசூலுக்கா, மரியம்மை வெகுளியா, பாலியலை முன்வைத்துப் பேரம் பேசியவளா எனப் பற்பல சந்தேகங்களைக் கதைசொல்லிக்குத் தருகின்றன. மட்டுமல்லாமல் அவனோடு அடையாளம் காணக்கூடிய வகையில் வாசகரிடத்திலும் ஏற்படுத்துகின்றன. இவை ஒருபுறம் இருக்க மரியம்மை நல்லவளா கெட்டவளா என்பதைக் குறித்த கதாபாத்திரங்களின் சஞ்சலம் மரியம்மையின் ‘கவர்ச்சி’யோடும் அலங்காரத்தோடும் தொடர்புகொண்டதாக உள்ளது.
மரியம்மை ‘வசீகரமான’வளாக ‘மதமதவென்று’ இருக்கிறாள், ‘பெண்மையின் வடிவத்திற்கு இலக்கண’மெனச் சொல்லத்தக்கதைப் போல.3 பத்திரிகையில் வந்த புகைப்படத்துக்கும் அவளது நிஜ உருவுக்கும் சம்பந்தமேயில்லாமல். கதைசொல்லி அதைப் பற்றி விசாரிக்கும்போது புகைப்படம் எடுத்த அன்று தான் ‘டிரஸ்’ பண்ணிக்கொள்ளவில்லை, தலை வாரவில்லை, பொட்டிடவில்லை, சேலை மாற்றிக்கொள்ளவில்லை, வக்கீல் திடீரென்று வெயிலில் போய் நில் என்றவுடன் தான் போய் நின்றுவிட்டதால் புகைப்படம் “இருட்டாட்டு எடுத்துப் போட்டான்” என வருத்தப்படுகிறாள்.4 பத்திரிகையில் வந்த புகைப்படத்தில் அவள் ‘பறட்டைத் தலையுடன்,’ ‘சாதுத்தனத்தோடு,’ ‘பரிதாபமாகக்’ காட்சியளிக்கிறாள்.5 அதாவது குதறலுக்கு ஆளாகக்கூடிய அபலைக் கோலத்தில். ஆனால் நேரிலோ நேர் எதிரான தோற்றம். ஒரு பக்கம் அவள் சந்தித்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அவளோ அந்த வழக்குக்குத் தோதாக இருக்கக்கூடிய பலியான தோற்றத்தை, அபலைத் தோற்றத்தைக் கைக்கொள்ள மறுக்கிறாள். ‘அழகான ஸாரி’ கட்டிக்கொண்டு, தலைமுடியை ‘நேர்த்தியாய்ப் பின்னி,’ ‘சிரத்தையுடன்’அலங்காரம் செய்துகொள்ளும் அவளைக் கண்டு கதைசொல்லியின் மனைவி ஊர் பேசுமே என அச்சப்படுகிறாள்: “சொல்லணும் அவகிட்டே. என்னா இப்பொ அவ இந்த மாதிரி பண்ணிண்டா பலவிதமான பேச்சுக் கிளம்பிடும். ஒண்ணும் தெரியமாட்டேன் என்கிறது அதுக்கு.”6 மரியம்மையைப் பாராட்டி கூட தங்கவைத்துக்கொண்ட பொன்னம்மையே பிறகு மரியம்மையை அவள் ‘நடத்தைக்காகத்’ தூற்றுகிறாள். அதிலும் அந்தப் பெண்ணின் அலங்காரம் விமர்சிக்கப்படுகிறது. பவுடர் டப்பாவை அவள் அங்கே இங்கே போட்டுக்கொண்டு காலியாக்குவதும் டிரங்குப் பெட்டியில் அவள் அடுக்கி வைத்திருக்கும் ‘சிலுக்குச் சேலை’களும் சுட்டிக் காட்டப்படுகின்றன.7
இங்கே ஒன்றைக் கூற வேண்டும். நம் சமூகத்தில் பாலியல் வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் அந்த அனுபவம் தரும் சித்ரவதையை, கொடும் நினைவை மாத்திரம் சுமப்பதில்லை. அவர்களிடம் வேறொரு உழைப்பு கோரப்படுகிறது. பாலியல் வன்முறையைச் சந்தித்ததன் அடையாளத்தை வெளிப்படையாகச் சுமக்க அவர்கள் கோரப்படுகிறார்கள். மோசமான அனுபவத்தின் விளைவாக அவர்கள் தோற்றத்தில் அதற்கான அடையாளம் ‘உருவாகலாம்’ என்ற சாத்தியத்திலிருந்து அந்த அடையாளம் அவர்களிடம் ‘இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனைக்கு நகரும் உழைப்புக் கோரல் அது. அலங்கரித்துக்கொள்ள அவகாசம் தராமல் ‘பறட்டைத் தலையோடு’ மரியம்மை புகைப்படம் எடுக்கப்படுவதன் பின்னணியில், கதைசொல்லியின் மனைவி அவள் அலங்காரத்தைப் பற்றி வரக்கூடிய ஊர் அலர் குறித்து யோசிப்பதன் பின்னணியில் பொன்னம்மை அவளது அலங்காரத்தைக் குறை கூறுவதன் பின்னணியில் சமூகத்தின் இந்த உழைப்புக் கோரல் வெளிப்படுகிறது.
தோற்ற அலங்காரம் என்றில்லை, பொதுவாகவே பாலியல் தாக்குதலுக்கு, துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் அவர்களுக்குப் பழகிய ‘இயல்பு’ வாழ்க்கையில் இருந்தபடி அதைப் பற்றிப் புகார் தரும்போது, அதைக் கேட்பவர்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை குறைவதைப் பார்க்கிறோம். பழகிய ‘இயல்பு’ வாழ்க்கை என நான் குறிப்பிடுவது பாலியல் புகாரைக் கூறும்வரை பாதிக்கப்பட்டவர் தன்னைத் துன்புறுத்தியவரோடு ‘இயல்பாக’ப் பணி, கல்வி, தொழில் இடங்களில் இருக்க நேர்வது, அவரோடு பொதுவெளி நாகரிகத்தைப் பேணுவது ஆகியவற்றையும் சேர்த்துத்தான். இவ்விடத்தில் ‘National Public Radio’ எனும் அமெரிக்க ஊடகத்தின் தலைமை வர்த்தக எடிட்டர் பல்லவி கோகாய், முன்னாள் பத்திரிகையாளர் தூஷிதா படேல் ஆகியோர் பத்திரிகைத் துறையில் தங்களுக்கு மேல்நிலையில் பணியாற்றிய எம்.ஜே. அக்பர் மீது வைத்த வல்லுறவு புகார் தொடர்பான ஒரு விஷயம் இணைத்துப் பார்க்கத் தக்கது. அந்தப் புகார் சார்ந்து அக்பரை ஆதரித்துப் பேசிய அவரது மனைவி மல்லிகா ஜோசப் ‘பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களைப் போல பேயறைந்த தோற்றத்தில்’ அப்பெண்கள் காணப்படவில்லை என வாதிட்டார்.8 மேலும் அந்தப் பெண்கள் தங்களின் வீட்டுக்கு வந்து உண்டனர், குடித்தனர் என்றும் கூறினார். பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், பழகிய ‘இயல்பு’ வாழ்க்கையை வாழ முனையமாட்டார்கள் என்ற பண்பாட்டு எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இது. போலவே திரைப் பாடகர் சின்மயி பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் வைத்தபோது சின்மயி ஏன் தனது திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்தார், மேடையில் அவர் காலில் ஏன் விழுந்தார் என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் முன்வைத்த புகார் விசாரிக்கப்படுவதற்கு முன்பே அதன் நம்பகத்தன்மையைக் குலைக்கப் பலரும் பாடுபட்டனர்.9 தனது திருமணத்துக்கு பி.ஆர்.ஓக்கள் மூலமாகப் பத்திரிகை தர வேண்டியிருந்தது, திரைப்படத் துறையில் முதன்மையான பாடலாசிரியர் வைரமுத்து என்பதால் தந்தேன், மேடையில் பலர் காலில் விழுந்ததைப் போலத்தான் அவர் காலிலும் விழுந்தேன் என்றெல்லாம் சின்மயி விளக்கம் தரவேண்டியிருந்தது. ஒருவேளை சின்மயியே வைரமுத்துவைத் தன் திருமணத்துக்கு அழைத்திருந்தாலும் அவரது பாலியல் புகார் விசாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அது குறைத்துவிடாது, அந்தப் புகாரைத் தள்ளிவிட எந்த விதத்திலும் அது முகாந்திரமாகிவிடாது.10
‘திரைகள் ஆயிர’த்தில் மரியம்மை தன் இயல்பில் இருக்கிறாள். அவளைப் பார்க்க ஆண்கள் பலர் வருகிறார்கள் என்று பொன்னம்மை கதைசொல்லியின் மனைவியிடம் குறைபட்டுக்கொள்கிறாள். கேட்டால் அண்ணன், தம்பி, மாமா என உறவுமுறை சொல்கிறாள், சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள் எனக் குற்றஞ்சாட்டுகிறாள்.11 மரியம்மை நல்லவள் இல்லை என்று பொன்னம்மை கூறுவதை கதைசொல்லியின் மனைவி நம்பத் தொடங்குகிறாள்.12
உண்மையில் மரியம்மை சரியானவளா, சரியில்லாதவளா? இங்கும் அங்கும் ஊசலாடும் ‘திரைகள் ஆயிர’த்தின் கதையாடலின் முள் கடைசியில் ஒரு பக்கத்தில் வந்துநிற்பதுபோலத் தெரிகிறது. கதையாடலின் இறுதிப் பகுதியில் மரியம்மையின் வழக்கு பற்றிய தகவல்களைக் கதைசொல்லி தேடுகிறான். ‘திருவிதாங்கூர் நேசன்’ வழக்கின் தகவல்களைத் தருவதை நிறுத்திவிட்டிருக்கிறது. பத்திரிகை அலுவலகத்துக்கே நேரே சென்றாலும் பலனில்லை. மரியம்மை விவகாரத்தைப் பற்றி எழுதிய பத்திரிகையாளன் இசக்கியும் ஊருக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது. கதைசொல்லிக்கு எல்லாம் ஒரே மர்மமாக இருக்கிறது.13 ஆனால் அதன் பின்னர், மரியம்மையை ஆரம்பத்தில் ‘சர்வ தேச நட்புறவு சங்க’த்துக்கு அழைத்துச் சென்ற குஞ்சுபிள்ளையை அவன் சந்திக்கிறான். வழக்கு முடிந்துவிட்டதை, பத்திரிகையின் வாய் அடைக்கப்பட்டதைத் தெரிந்துகொள்கிறான்.
கதையாடலின் முடிவில் மரியம்மை விரும்பித்தான் இணங்கினாள் என்றுதான் ஒரு வாசகருக்கு எண்ணத் தோன்றும். ஏனெனில் குஞ்சுபிள்ளை கதைசொல்லியிடம் கூறும் மரியம்மை வழக்கின் கதை, வழக்கு சீக்கிரம் முடிந்துவிட்டதென்றும் மரியம்மைக்குப் பணம் தரப்பட்டதென்றும் கூறும் கதை வாசகருக்கும் சொல்லப்படுவதாக இருக்கிறது. அதை நம்பும் கதைசொல்லியைப் போல மரியம்மை பாலியல் தொழில் செய்தாள் என்ற முடிவுக்குத்தான் நாமும் வர முடியும். ஒரு பெண் பழிபோடும்போது நம்பாமல் இருக்கமுடிவதில்லை, ஆனால் குஞ்சுபிள்ளை கூறும் கதையைப் போல பின்னால் இருப்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? திரைகள் ஆயிரத்தில் குஞ்சுபிள்ளை விலக்கும் இப்படியான திரை ஒன்று.
பிறர் வாயிலாக வல்லுறவுக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் வேறு ஏதோ நடந்திருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது, அதை நம்பிவிட்டதைப் பற்றி ஒரு உறுத்தல் உண்டாகிறது. கதைசொல்லியின் மனைவி, பொன்னம்மையின் வாயிலிருந்து மரியம்மையின் நடத்தை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவள் பெயரையே எடுப்பதில்லை. அவள் மனத்தில் மரியம்மையின் விஷயம் ஊமைக் காயமாக நீலம் பாரித்துவிட்டிருக்கிறது.14 அதே நேரத்தில் கதைசொல்லியும் ஒரு அடியை உணர்கிறான். அவன் நண்பரான நாவலாசிரியர், மரியம்மையோடு அவன் ஒருநாள் தங்கியிருந்திருந்தால் அவள் விஷயம் அவனை இத்தனை அலட்டியிருக்காது எனக் கூறும்போது அவனுக்கே தன்னைக் குறித்துச் சந்தேகம் ஏற்படுகிறது.15
கதாபாத்திரங்களின் மனத்தில் மரியம்மையைச் ‘சரியில்லாதவளாக’ எது நினைக்க வைத்தது? அபலை அடையாளத்தோடு பொருந்தாமல் மரியம்மை இருப்பதால் பொன்னம்மை கூறுவதை உண்மை என நம்புகிறாள் கதைசொல்லியின் மனைவி. கதைசொல்லியோ தான் மகா அயோக்கியன் ஆனால் மற்றவர்கள் தன்னை யோக்கியன் என்று சொல்ல வேண்டும் என்ற ஆசை சற்றும் கிடையாது என்று குஞ்சுபிள்ளை கூறியவுடன் அவனை நம்பத் தொடங்கிவிடுகிறான்.16 இத்தனை வெளிப்படையாக இருப்பவனிடமிருந்து “அரிய உண்மைகள்” கிடைக்கும் என்று கதைசொல்லிக்கு உடனே தோன்றிவிடுகிறது. ஒரே ஒரு கூற்றில் தன்னை அயோக்கியன் என்று அழைத்துக்கொள்ளும் இடைத் தரகனான ஆண் மரியம்மையைப் பற்றிய மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பவனாக மாறிவிடுகிறான்.
ஆனால் குஞ்சுபிள்ளை தரும் ‘உண்மைகள்’ உண்மைகள் தானா அல்லது இன்னொரு திரையைக் கட்டுகிறதா கதையாடல்? உண்மையில் மரியம்மை சரியானவளா, சரியில்லாதவளா? இரண்டாவது முறையாக இக்கேள்வியை நாம் கேட்கும்போது கதையாடலின் முள் தடக்கென்று எதிர்த்திசைக்குப் போய்விடுகிறது; கதையாடலில் ஒரு இடம் வருகிறது, மரியம்மை தான் பலவந்தப்படுத்தப்பட்டதைப் பற்றி விவரிக்கும்போது தன் ‘தாடையில் ஒரு அங்குலத்திற்கு’ப் பொருக்காடியிருந்த காயத்தைக் கதைசொல்லியிடம் காட்டும் இடம். தன்னைப் பிடித்துத் தள்ளியதால் கட்டில் காலில் பட்டு ரத்தம் வந்ததாகக் கூறுகிறாள்.17 ஆனால், அதன் பின் அவளின் காயத்தைப் பற்றிக் கதையாடல் ஒன்றுமே சொல்வதில்லை. ஒரு அறிகுறியாக இந்தக் காயம் கதையாடலில் தனித்து இருக்கிறது. ஓரிடத்தில் மட்டுமே வந்துபோகும் மரியம்மையின் காயம். அது நாம் புரிந்துகொண்டிருக்கும் கதையாடலின் போக்கை, அதன் ஓர்மையைப் பாதிப்பதாக உள்ளது. சொல்லப்போனால் மரியம்மையின் பொருக்காடிய காயத்தின் வாயிலாகக் கதையாடல் தன்னைச் சற்றே திறந்து தன் ரத்தத்தையும் சதையையும் காட்டுகிறது எனலாம். திரைகள் ஆயிரத்தில் மிக முக்கியமான ஒரு திரை விலகும் இடம் இது.
ஒரே ஒரு தரம் காட்டப்பட்டுக் கதையாடலே மறந்துவிடும் மரியம்மையின் காயம். அந்தக் கணத்தில் மாத்திரம் பேசப்பட்டு, சமூகக் கூட்டு மறதிக்குத் தரப்பட்டுவிடும் பாலியல் வன்முறையின் அறிகுறியும்தானே அது. உண்மையில் மரியம்மைக்கு என்ன நடந்திருக்கலாம்? நடைமுறையில் நம் ஊரில் பாலியல் வன்முறை வழக்கு விசாரணைகளில் நடப்பதைப் போல மரியம்மையிடம் சமரசம் பேசப்பட்டிருக்கலாம்.18 அவள் பிறழ்சாட்சியாக மாறியிருக்கலாம். மிரட்டப்பட்டிருக்கலாம். வழக்கின் மூலம் அவள் கேட்ட தொகையைவிடக் குறைவாகப் பேரம்பேசி வல்லுறவாளர்கள் அவளைத் துரத்திவிட்டிருக்கலாம். கதையாடலில் அனாதரவாக விடப்படும் மரியம்மையின் காயம் ஒரு தடயம் போல நம் கண்களிலிருந்து கதையாடல் திரைபோட்டு மறைத்திருக்கக்கூடிய பல காட்சிகளை யூகிக்கக் கேட்கிறது. சாதாரணத் தகவலைப் போல ஓரிரு வரிகளில் வந்துவிட்டுப் போகும் அவள் காயத்தைக் குறித்து யோசித்துப் பார்க்கும்போது கதையாடலின் ஓட்டத்துக்குள் எதிரோட்டம் ஒன்றை உணர முடிகிறது. உண்மையில் மரியம்மைக்கு என்ன நடந்தது? எதுவும் நடந்திருக்கலாம்.
குறிப்புகள்
1. சுந்தர ராமசாமி 2008, 12.
2. சுந்தர ராமசாமி, 12.
3. சுந்தர ராமசாமி, 20-21.
4. சுந்தர ராமசாமி, 23.
5. சுந்தர ராமசாமி, 10-12.
6. சுந்தர ராமசாமி, 47.
7. சுந்தர ராமசாமி, 51.
8. “Was consensual: MJ Akbar rejects rape charge, wife comes out in his support,” India Today, November 02, 2018. https://www.indiatoday.in/india/story/mj-akbar-raped-me-pallavi-gogoi-1380846-2018-11-02
9. ஆ. சாந்தி கணேஷ், “‘வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்!’-விளக்கிய சின்மயி,” விகடன், அக்டோபர் 12, 2018. https://www.vikatan.com/news/cinema/139556-this-is-the-reason-why-i-have-invited-vairamuthu-to-my-marriage-explains-chinmayi
10. மேலும் தமிழ்த் திரைப்படத் துறையில் சின்மயி, வைரமுத்து ஆகியோரின் இடங்கள் அதிகாரத்தில் சமமானவை அல்ல. அவர் முன்வைத்த புகாரால் தமிழ்நாடு பீuதீதீவீஸீரீ கலைஞர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் பல பணி வாய்ப்புகளை அவர் இழந்ததாகக் கூறியிருக்கிறார். பார்க்க Abira Dhar and Pankhuri Shukla, “A Year Later, Here’s How #MeToo Has Affected These Four Women,” The Quint, November 18, 2019. https://www.thequint.com/voices/women/me-too-affect-on-sona-mohapatra-chinmayi-sripaada-vinta-nanada-rituparna-chatterjee
தவிர, #MeToo இயக்கத்தின் இரண்டாம் அலை தொடங்கி ஒரு வருடமாகியும் இந்நாள் வரை தமிழ்த் திரைத்துறையில் பாலியல் புகாரை விசாரிக்க மிசிசி அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்க Meryl Sebastian, “Chinmayi Sripaada: No ICC Or Changes A Year After #MeToo Hit Tamil Film Industry,” Huffington Post, October 04, 2019. https://www.huffingtonpost.in/entry/chinmayi-sripada-metoo-tamil-film-industryinterview_in_5d9720a5e4b0f5bf7972d0bd
11. சுந்தர ராமசாமி, 48-49.
12. சுந்தர ராமசாமி, 48, 51-52.
13. சுந்தர ராமசாமி, 53.
14. சுந்தர ராமசாமி, 57-58.
15. சுந்தர ராமசாமி, 58.
16. சுந்தர ராமசாமி, 54.
17. சுந்தர ராமசாமி, 26.
18. வல்லுறவு வழக்கு விசாரணைகளின்போது குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்டவர்களும் புகாரளித்தவர்களும் சாட்சியம் தருகையில் அதை மாற்றித்தர அவர்களுக்கு அழுத்தம் தரும் வகையில் சமரசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது நடைமுறையில் சகஜம். பார்க்க ஙிணீஜ்வீ 2010, 210
உதவிய ஆய்வுக் கட்டுரை, புனைவாக்கம்
Baxi, Pratiksha. “Justice is a Secret: Compromise in Rape Trials.” Contributions to Indian Sociology 44.3 (2010): 207 - 233.
சுந்தர ராமசாமி. 1966. ‘திரைகள் ஆயிரம்’. நாகர்கோவில்: காலச்சுவடு, 2008.