மாயமுள்
கவிதைகள்
சக்திஜோதி
Courtesy: Warli painting
மாயமுள்
கபடமறியா
பால்யத்தில்
கள்ளிப்பழம் பறித்துண்ணும்
காலமொன்று அவளுக்கிருந்தது
கைஎட்டிப் பறிக்கையில்
காலில் முள்தைத்தது ஒருமுறை
அருகிருந்த சிநேகிதன்
எருக்கம்பால் இட்டு
மென் சதையில்
புதைந்திருந்த முள்ளை
பூப்போல் பார்த்து பார்த்து
பறித்தெடுத்தான்
வலியேதுமின்றி
ஆறு கரைபுரண்டோடிய வருடங்களில்
அயிரைமீன் விரும்பியுண்ணும்
பருவமொன்றும் அவளுக்கிருந்தது
தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளை
அகற்ற
குழைந்து வடித்த சோற்று உருண்டையைக்
கண்களில் நீர்
வழிய வழிய
விழுங்கவைத்தாள்
அம்மா
இப்போதும்கூட
கால்களிலும் கழுத்துள்ளேயும்
நெருடிக்கொண்டிருக்கும்
மாய முட்களைக் களைந்தகற்றிட
ஒருபிடி குழைந்த சோறும்
ஒரு சொட்டு எருக்கம்பாலும்
கொடுக்க எங்கிருந்தாகிலும்
நீளுமொரு மந்திரக்கரமெனக்
காத்திருக்கிறேனென்
கனவில்.
மின்னஞ்சல்: sakthijothipoet@gmail.com