பிரபஞ்சம் வெய்யலோடிருந்தது.
கவிதைகள்
ந. பெரியசாமி
Courtesy: Warli painting
பிரபஞ்சம் வெய்யலோடிருந்தது.
கண்ணுக்குள்ளிருந்த வானத்தில்
மேகங்கள் திரண்டன
மழைக்கனி உதிர
சுவைக்கத் தொடங்கினாள்
உள்ளுக்குள் இருந்தவள்.
ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு
ஆடையைக் கழற்றினாள்.
மகிழ்வு நிர்வாணமாகியது
துளிகள் அருவியாகிட
ஒப்புக்கொடுத்தாள் முழுமையாக.
ஆனந்தித்திருந்த அருவியின் துளி
உடலை நனைத்துக்கொண்டிருந்தது.
பூங்கா கல்பலகையில் அமர்ந்திருக்கும் அவர்
எம் கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்
அருவியில் ஒருபோதும் நனையார்.
கூடிய காமம் பிரிந்தார்
தொட்டுக் கொண்டிருக்கிறது
உயிர் உடலுள்
விழக் காத்திருக்கும் இலையென.
நொடிகள் மணிகளாக நகர்வதில்
மர்மங்கள் ஏதுமில்லை
நாளை வருவேனெனச் சென்ற
நாள்தொட்டே இந்நிலை.
விரல்கள் தேய்ந்தன
நாட்களை எண்ணி
நொடி பிறழா நோக்குதலால் கண்களும்.
சூம்பிப்போன முருங்கைக்காயாக
மெலிவில் மேனியும்.
இன்றாவது வரக் கூடும்
கோபிப்பேன் கொல்லும் தீயாகி
அல்ல அல்ல
நெருப்பணைக்கும் நீராகித் தழுவுவேன்
இரண்டுமாகிப் பிணைந்தும் கிடப்பேன்
பிதற்றும் நினைவைச் சுமந்து
வான்பார்க்கும் நிலமானாள்.
மின்னஞ்சல்: na.periyasamy@gmail.com