மே 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
மே 2026
    • அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
      அகலாத நினைவு சொல்லும் நன்றி
    • கட்டுரை
      அன்பான அரவிந்தன்
      இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன்
      சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர்
      ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்?
      அரவிந்தனுக்கு நன்றி
      என்னை ஆளாக்கிய ஆசிரியர்!
      புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன?
      அங்கும் இங்குமாய்...
    • கதை
      மூடிய சாளரம்
    • அஞ்சலி: அரவிந்தன் (1964&2026)
      இறுதிப் ‘பயணம்’
    • ஆவணப்படம்
      காணி நிலம் வேண்டும்
    • பதிவு
      அரவிந்தன் நினைவஞ்சலி
      மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம்
      நியூயார்க்கில் நவீனத் தமிழ்
      காதலரின் நாட்குறிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு
    • மதிப்புரை
      ரித்விக் கட்டக் எனும் மேதை
      மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல்
    • தலையங்கம்-2
      வெறும் இதழாளர் அல்லர்; படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர்
    • கவிதைகள்
      ஞா. தியாகராஜன் கவிதைகள்
    • சுந்தர ராமசாமி 95
      சுந்தர ராமசாமி 95
      ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம்
      ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி?
    • தலையங்கம்
      சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு
    • புதிய பத்தி இன்றும் என்றும் - 1
      நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2026 அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026) அகலாத நினைவு சொல்லும் நன்றி

அகலாத நினைவு சொல்லும் நன்றி

அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
ஜான் சுந்தர்

பாடகரும் நாடக நடிகருமான தீனநாத் மங்கேஷ்கர் என்கிற மராட்டியக் கொங்கணிக் கலைஞர் திடீரென இறந்துபோனபோது அவரது ஐந்து குழந்தைகளில் நான்கு பேர் பெண் மக்கள். ஒன்பது வயதில் தந்தையை இழந்த சிறுமியொருத்தி தனது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க அக்காளின் கையைப் பிடித்துக்கொண்டு வீதிக்கு வருகிறாள்.

அபலைக் குழந்தைகள் இரண்டையும் கட்டியணைத்தபடி அரூபத் தாய்போலக் கூடவே வருகிறது பாட்டு. சிறுமியின் குரலுக்குப் பெருங்கதவுகள் வழிவிடுகின்றன. நான்கைந்து வருடங்களில் என்ன நடந்ததோ, அக்காளின் எச்சரிக்கையையும் மீறிப் பதினாறாவது வயதில் கண்பத்ராவ் போஸ்லே என்கிற முப்பத்தொரு வயது ஆளை நம்பி, வீட்டை விட்டு வெளியேறி, அவரோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்று, அந்தக் குடிகாரக் கிழட்டுக் கணவனிடம் அடி உதை வாங்கி, முகத்தின் காயங்களை மறைக்கக் கறுப்புக் கண்ணாடி அணிந்து பதிவுக் கூடங்களுக்குப் போனால் அவளை வாரியணைத்துக் கொள்கிறது பாட்டு; எட்டுத் தசாப்தங்களுக்குக் கைவிடாமல் கட்டியணைத்துக்கொண்டது.

சுப்ரானோ என்னும் குரல் வரம்பில் மிளிர்ந்தார் ஆஷா. பக்திப் பாடல்கள், தாகூரின் கீதங்கள், மேற்கத்திய பாப்பிசைப் பாடல்கள், ஹிந்துஸ்தானிப் பாரம்பரிய சங்கீதம், கஸல், நாட்டார் பாடல்கள், கவ்வாலி, திரையிசை என எல்லா வகைமையிலும் தனது பன்முகத்தன்மையால் கொண்டாடப்பட்டார். ‘குறைந்த சன்மானம் அதிக வாய்ப்புகள்’ என்பது ஆஷா தேர்ந்துகொண்ட வழி. அது முன்னணிப் பாடகியரை விடவும் கணிசமான பாடல்களை ஆஷாவுக்குப் பெற்றுத் தந்தது. கதையின் நாயகிகளுக்கு மட்டுமே பாட விரும்பிய அவர்களுக்கிடையே ஆஷா மதுக்கூடங்களில் குறையாடையில் பாடியாடும் நடனக்காரிகளுக்கும் எதிர்நாயகிகளுக்கும் ரத்தக் காட்டேரிப் பேய்களுக்கும் கூடப் பாடினார்.

இதற்கிடையே ஒருவழியாக கண்பத் ராவ் போஸ்லேவிடமிருந்து விவாகரத்துப் பெற்று, தாய்வீடு திரும்பிய ஆஷா சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் ஏற்கெனவே திருமணமான ஓ.பி. நய்யாருடன் கொஞ்சக் காலம் ஒரே வீட்டில் வாழ்ந்து, கசந்து பின்பு அதிலிருந்தும் வெளியேறி, பாடல்களும் குழந்தைகளும் மட்டுமே போதுமென்றிருந்தார். நீண்ட காலத்துக்குப் பின்னர் வயதில் இளையவரான ஆர். டி. பர்மன் பொழிந்த அன்பிலும் அவரது காதல் பரிசுகளிலும் மயங்கி அவரைத் திருமணம்செய்து கொண்டார். காதலால் பாடல்களும் பாடல்களால் காதல்களும் இலவச இனிப்பாக ஆஷாவைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

கோயம்புத்தூர் சென்ட்ரல் திரையரங்கத்தில் படம் தொடங்கும் முன்பு ஒலிக்கவிடும் பாடல்களில் ஒன்றான ‘சுராலியா’வைக் கேட்கும்போதெல்லாம் ஆஷா போஸ்லே என்கிற பெயரும் அந்தக் குரலினிமையும் உற்பவிக்கும் மகிழ்வின்பத்தை பாதாம் பிஸ்தா பருப்புத் துருவல்கள் மிதக்கும் ரசமலாய் என்றால் சரியாக இருக்குமா? பூக்கடை வீதியை அடுத்த காமராஜபுரத்தில் திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவினரின் நிகழ்ச்சியில் கண்ணாகிருஷ்ணா என்கிற கண்ணம்மாக்கா நாக்கின் நுனியில் உச்சரித்த “வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே, வந்ததே முதல் காதல்” கேட்டபோதும் அதே பசுமஞ்சள் ருசி! தேனிசைத்தென்றல் இசையமைத்த ‘நேருக்கு நேர்’ படப்பாடலில் “எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே” என்கிற வரியை முடிக்காமல் சிகரெட் புகையை வளையங்களாக்கி விடுவதுபோலக் காற்றில் கோலமிடுவார் ஆஷா போஸ்லே. பண்பட்ட குரல்வளையால் மட்டுமே உருவாக்க முடிகிற ஒலி வளையங்கள் அவை. வித்யாசாகரின் “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்” பாட்டின் பல்லவி முடிவில் “அன்புத்தூறல் போடாதா” என்று நீட்டி முழக்கி ஒரு முடிப்பு வைப்பார். ஒவ்வொரு முடிப்பிலும் விதவிதமான மேம்பாடுகள். இளையராஜா இசையமைத்த ‘நான் சொன்னதே சட்டம்’ படத்தின் ஐந்து பாடல்களில் இளையராஜா பாடியதைத் தவிர மீதப்பாடல்கள் நான்கும் ஆஷா போஸ்லே, பாலசுப்ரமணியம் இருவர் மட்டுமே விளையாடியவை. அதிலும் “அதிகாலை நேரக் கனவில் உன்னை பார்த்தேன்” பாடலும் “ஒரு தேவதை வந்தது மனச்சிறைக் கூண்டைத் திறந்து சென்றது” பாடலும் நேயர் விருந்து.

ஆஷா போஸ்லேவை அறியாத காலத்தின் இடையிலொரு முறை “உன் பாதம் போஹும் பாத நானும் போஹ வந்தேனே” என்று பயணத்தினிடையே மிதந்து வந்த வரிகளைப் பிடித்துக் காதைக் குடைந்தால், ‘ஷென்பஹமே...ஷென்பஹமே தென்பொதிஹை சந்தனமே’ என்று தொடருகிறது பல்லவி. “அய்யோ! இந்த ஜானகியம்மா எதற்காக இப்படியெல்லாம் உச்சரிக்கிறார்” என்றெழுந்த கேள்விக்கு எதிராக “மொட்டைமுனி காரணமில்லாமல் சொல்லியிருக்குமா” என்று நினைத்தவுடனே வந்த வேகத்தில் அமுங்கிப் போனது.

“அட அது ஜானகியம்மா இல்லையாம்!”

“அப்புறம்?”

“ஆஷா போஸ்லே என்கிற இது வேறு யாரோ...”

“வேறு யாரோ அல்ல... நமக்கு உறவுதான்! ‘ஆராரோ’ பாடிய லதா மங்கேஷ்கரின் தங்கைதான்!”

“அட நம்ம புள்ள!”

ஜான் பென்னிகுயிக் நம்மாள் ஆன கதையறிவோமல்லவா? அதன் பின்பு அந்தக் குரலின் மழலையுச்சரிப்பு நமக்குப் பிடித்துப் போயிற்று. ‘புதுப்பாட்டு’ என்னும் திரைப்படத்தில் “எங்க ஊரு காதலைப் பத்தி என்ன நினைக்கிறே” என்றொரு பாடல். இந்தப் பாடல் முழுவதுமே ஆஷாவின் குதலையின்பம்தான் என்பது தனித்தகவல்.

“எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே

அது எங்க ஊரு காதல்போல ஆழம் இல்லையே ஆழமின்னா என்ன? ஓ ஆழமின்னா என்னா”

கேள்வி பதிலாகப் போகிற பாடலில் ஆஷா “ஆழமின்னா என்னா” என்று ராஜாவை வினவுகிறபோது நமது ழகரம் மீசையை முறுக்குவதை, அதன் கன்னம் சிவந்து மினுங்குவதைப் பார்க்கலாம். இளையராஜா அந்த இடத்தை மௌன இடைவெளியால் அடிக்கோடிட்டுக் காட்டுவார்.

போலவே ஆஷா போஸ்லே “தொ” என்பதை அழகுப்பிழையாக “து” என்பார். ‘நேருக்கு நேர்’ பாடல் வரிகளில்

“எங்கெங்கே எங்கெங்கே எங்கெங்கே எங்கே”

“இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே  ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம்”

“பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒருகாற்று தொடாதே நீ தொடாதே”

என்று கேட்டுக்கொள்ளும்போது “துடாதே நீ துடாதே” என்பார்.

இந்தப் பூதக்கண்ணாடியை அப்படியே எடுத்துக்கொண்டு ரஹ்மானின் ராசாங்கத்துள் நுழைந்து ஆராய்ந்தால் ‘அலைபாயுதே’ படப் பாடலில்,

“செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்துவிட்டோம், அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்”

என்கிற வரிகளை ஆஷா துலைத்துவிட்டிருப்பார். சரி, அவர்தான் அப்படியென்றால் தமிழரான சங்கர் மகாதேவனும்கூடச் சேர்வாரோடு சேர்ந்து துலைந்தே போயிருப்பார்.

ஹிந்திப் பாடல்களைக் கேட்போரின் கண்களுக்கு ‘மகர்’ என்றொரு வார்த்தை எழுத்தில் பழக்கமாகியிருக்கும். அதுவே மொழியுச்சரிப்பின் ஒலியில் அவர்களின் காதுகளுக்கு ‘மகழ்’ என்றாகும். இந்தப் பழக்கத்தோடு இங்கே வருகிறார் ஆஷா. இளையராஜா இசையில் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் “இப்ப சாத்து நடை சாத்து” என்றொரு மேற்கத்தியபாணிப் பாடல் அதன் இரண்டாவது சரணத்தின் தொடக்கத்தில்,

“நீ போடு காதல் விண்ணப்பம்
கிடைக்காது வேறே சந்தர்ப்பம்”

என்று பாட வேண்டிய வரிகளை ஆஷா போஸ்லே

“நீ போடு காதல் வின்னப்பம்
கிடைக்காது வேறே சந்தல்பம்”

என்றே கொஞ்சலாகப் பாடியிருப்பார். அது நமது சங்கல்பம்!

தமிழருக்கு மட்டும்தான் இப்படியொரு தன்மையுண்டு. மொழியின் பெயரால் ஒரு பக்கம் போராடுவோம்; மொழியைத் தவறாக உச்சரிக்கிறவர்களைக் கலையின் பெயரால் மன்னித்துவிடுவோம். மொழி, மருவுருக் கொள்வதைப் பார்க்கிற ரசனை மனம் அகண்ட காவிரியாகிவிடுகிறது. அதற்குத் திரை நட்சத்திரங்களில் ரங்காராவ் முதல் ரஜினிகாந்த் வரையில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. நம்பியார் ரெகஸியமா, பெஸ்ஸுக்குள்ள – என்றதையெல்லாம் இதுவரை நாம் பொருட்படுத்தியதே இல்லை. ட்யூப்லைட்டை, டீப்லைட்டாக்கும் வடிவேலு கிலோவை குலோ என்கிறார். இவையெல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்லவே என்றால் ஆமாம் தமிழ்த் திரையின் முன்னணிக் கலைஞர் பலருக்கும் ழகரமே கிடையாது என்பேன். இதையெல்லாம் ஏன் இங்கே சொல்ல வேண்டும் என்றால், இங்கிருந்து போகும் ஒரு குரலிசைக் கலைஞர் மற்ற மொழிகளைப் பிழைகளோடு பாடிவிட முடியாது. பிழைகளே இல்லாவிட்டாலும் அவர்கள் திறத்தை முதலாகக் கொண்டு அங்கே வாழ்ந்துவிட முடியாது. அண்டை மாநிலத்தவரை நாம் பயன்படுத்தும் அளவில் நமது கலைஞர்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில்லை. பி. சுசீலா, வாணி ஜெயராம், எஸ். ஜானகி உட்படத் தெற்கிலிருந்து போன யாரையும் வடக்கு நம்மைப் போல மனப்பூர்வமாக வரவேற்றதில்லை. கலையிலும் அரசியலிலும் தமிழர்களின் மனவிரிவு அளப்பரியது. உள்ளத்தனைய உயர்வுக்கு அங்கே எவரும் மலர் நீட்டுவதில்லை. சங்கீத உலகின் ராணிகள் தாதாக்கள் போலவும் இருந்தார்கள் என்பதே கசப்பான உண்மை. தொழில் போட்டியின் ஒரு கட்டத்தில் சொந்த சகோதரி லதா மங்கேஷ்கருக்கு எதிராக முஹம்மது ரஃபியோடு கை கோத்தார் ஆஷா போஸ்லே.

தயாரிப்பாளர்களின் பாடகியாக, இசையமைப்பாளர் களின் விருப்பக் கலைஞராகத் திறமையாலும் சாதுர்யத்தாலும் தேசிய திரைப்பட விருதுகள், மகாராஷ்டிர மாநில விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது, ஏராளமான ஃபிலிம்ஃபேர் விருதுகள், தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண், கின்னஸ் சாதனைப் புத்தகப் பதிவு, கிராமி விருதுக்கான பரிந்துரை முதலனாவற்றை எட்டிப் பிடித்த ஆஷா போஸ்லே அவர்களுடையது நிறைவாழ்வு. ஊர்ப்பக்கம் சொல்வதுபோலக் கல்யாணச் சாவு. அவரது சங்கீதக் கலையை நினைவுகளால் கொண்டாடுவோம்.

       மின்னஞ்சல்: ilayanilajohnsundar@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.