அரவிந்தன் நினைவஞ்சலி

படஉதவி: ஜவஹர் ஜி
‘தக்கலை இலக்கிய வட்டம்’ சார்பாக எழுத்தாளர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர் அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக, அவர் எழுதிய இரு நூல்கள் குறித்த ஆய்வரங்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நாகர்கோவில் ஆயர் இல்ல வளாக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் அரவிந்தனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற உரையாடல்களில் ஆய்வாளர் ஜான் கிறிஸ்டோபர், அரவிந்தனின் பன்முக ஆளுமையைச் சுருக்கமாக அறிமுகம் செய்துவைத்தார். ஊடகவியலாளர் சுவாமிநாதன், அரவிந்தனுடன் ஊடகத் துறையில் பணியாற்றிய காலங்களில் பெற்ற அனுபவங்களையும், அவரது தொழில்முறை நேர்மையையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
அரவிந்தனின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்த ஆய்வரங்கில் ஜவஹர் ஜி, மலர்வதி, சௌமியா சுதாகரன், விஜி பூரணசிங், ஃப்ரெடின் ஜேமி டி குரூஸ் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அவர்கள் ‘புதைமணல்’ சிறுகதைத் தொகுப்பில் வெளிப்படும் நவீன வாழ்வின் சிக்கல்களையும், ‘வெல்கம் டு மில்லெனியம்’ நூலில் முன்வைக்கப்பட்டுள்ள சமகாலப் பார்வைகளையும் பேசினார்கள்.
வள்ளியூர் வி. பெருமாள், காலச்சுவடு அலுவல கத்தில் அரவிந்தனுடன் இணைந்து பணியாற்றிய நாட்களை நினைவுகூர்ந்தார். அரவிந்தனின் மனிதாபிமானப் பண்புகளையும், சக ஊழியர்களிடம் காட்டிய கனிவையும் பதிவு செய்தார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் நட. சிவகுமார் தமது உரையில், அரவிந்தனின் மொழிபெயர்ப்புத் திறன், ‘பொன்னகரம்’, ‘பயணம்’ ஆகிய நாவல்களின் வழியே அவர் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். சுந்தர ராமசாமியின் படைப்புகளை அரவிந்தன் அணுகிய விதம், அவரது எழுத்தில் தென்படும் சு.ரா.வின் தாக்கம் குறித்தும் பேசினார்.
நிறைவாகப் பேசிய காலச்சுவடு ஆசிரியர் கண்ணன், அரவிந்தனுடன் தமக்கு இருந்த நீண்டகால நட்பு, அவரது தனிமனிதப் பண்புகள், அவரது வாழ்வுமுறை ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
அரவிந்தன் படைப்புகளில் வெளிப்படும் மன உலக பிம்பங்கள், ஆண்-பெண் உறவுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து ஒட்டுமொத்த உரையாடல்கள் இவ்வரங்கில் பதிவாகின.
இந்நிகழ்வில் நெய்தல் கிருஷ்ணன், கவிஞர் சுதே. கண்ணன், ஊடகவியலாளர் தாகூர், சிவ அய்யப்பன் உள்ளிட்ட இலக்கிய, ஊடகத் துறையைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மின்னஞ்சல்: nadasivakumarwritter@gmail.com
