காணி நிலம் வேண்டும்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
2019இல், காந்தி நூற்றைம்பதாம் ஆண்டுச் சிறப்பு நேர்காணலுக்காக, பொதிகைத் தொலைக்காட்சிக் குழுவினராகச் செங்கல்பட்டு நோக்கிப் பயணமானோம். கிருஷ்ணம்மாள் அப்போது செங்கல்பட்டில் வசித்துவந்தார். முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல், வழியில் எதிர்ப்பட்ட இரண்டொரு வயதானவர்களிடம், கிருஷ்ணம்மாள் குறித்த விவரங்களைச் சொல்லி வழி கேட்டோம். அப்படி எவரையும் கேள்விப்பட்டதில்லை எனப் பதில் வந்தது. மனம் கனத்தது. எத்தனையோ போராட்டங்களை நடத்தி அதன் காரணமாக அடக்குமுறைகளையும் சிறைவாசத்தையும் எதிர்கொண்ட அவரைப் பற்றி உள்ளூரில் இருப்பவர்கள்கூட அறிந்திருக்கவில்லை என்பது வேதனையைத் தந்தது. உருண்டோடும் காலவெள்ளம் மண் அரிப்புப் போல நினைவுகளையும் நினைவுகூரல்களையும் அடித்துச் சென்றுவிடும் கருணையற்றது. ஆவணப்படுத்தலின் மூலமே அதன் சேதாரத்தைக் குறைக்க முடிய
