பிப்ரவரி 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
பிப்ரவரி 2026
    • கட்டுரை
      புதியமுறைப் பாடத்திட்டமும் இசட் தலைமுறையும்
      இளையபெருமாளும் தென் தமிழகமும்
      கலங்கடித்த கல்லூரி ஆசிரியர் தேர்வு
    • கதை
      மஞ்சள் என்பது நிறமல்ல
      கடவுளாக விரும்பிய பேருந்து ஓட்டுநரின் கதை
      காடிப்பீ
      மால்னேயனில் ஓர் இரவு
    • அஞ்சலி: மாதவ் காட்கில் (1942-2026)
      கானகத்திலிருந்து ஒரு கூக்குரல்
    • 6 கவிஞர்கள் 20 கவிதைகள்
      வெளி எனும் தெய்வம்
      நாங்கள் புதுவீட்டிற்கு எல்லாவற்றையும் பழைய வீட்டிலிருந்து
      நத்தைப் பாதை
      வி. சங்கர் கவிதைகள்
      சுஜய் ரகு கவிதைகள்
      இருப்பு
    • கற்றனைத்தூறும் -14
      குணம் நாடுக! குற்றமும் கூறுக!
    • பதிவு
      2026 சென்னை புத்தகக் காட்சிகள்
      பெருமாள்முருகன் 60 அவர்கள் வாசித்தபோது...
      அகந்தை அறுக்கும் கவிதையும் சூஃபி நெறிப் பயணமும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      ஆன்ம வணிகன்
    • மதிப்புரை
      எளிமையின் ரசவாதம்
    • தலையங்கம்
      விருதுகள் விவாதங்கள்
    • அஞ்சலி: தேவதத்தா (1937-2026)
      தனித்தவர் ஆகாத தனியர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2026 பதிவு பெருமாள்முருகன் 60 அவர்கள் வாசித்தபோது...

பெருமாள்முருகன் 60 அவர்கள் வாசித்தபோது...

பதிவு
இரா. மோகனவசந்தன்

சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ், ஆங்கிலத்துறையினர் இணைந்து எழுத்தாளர் பெருமாள்முருகனின் அகவை 60ஐச் சிறப்பிக்கும் வகையில் 19.01.2026 அன்று ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கையும் அவருடைய படைப்புகளைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் 60 பெண் ஆளுமைகளால் எழுதப்பெற்ற 60 கட்டுரைகளைக் கொண்ட ‘நனவிலியின் நிலம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவையும் ஒருங்கிணைத்து நடத்தியது. இந்நூலைக் ‘காலச்சுவடு’ கண்ணன் வெளியிட, பேராசிரியர் பி. எழிலரசியும் எழுத்தாளர் அ. மங்கையும் அமெரிக்கத் தமிழறிஞரான தாமஸ் புரூய்க்ஸ்மாவும் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். கருத்தரங்கமானது தொடக்க விழா, நிறைவு விழாவோடு நான்கு அமர்வுகளாகவும் அவற்றிற்கு நான்கு வெவ்வேறு துறை சார்ந்தவர்களைத் தலைமையாகவும் (பேராசிரியர் வில்லியம் ஜான் போஸ்கோ - ஆங்கிலத்துறைத் தலைவர், முனைவர் பூ. சீனிவாசன் - தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் பெ. முத்துக்குமார் - அரசியல் அறிவியல் துறைத்தலைவர், முனைவர் கோ. ரகுபதி - வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்), பத்து உரையாளர்க ளைக்கொண்டும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. ஓர் எழுத்தாளரைப் பற்றி மூன்று வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், வழக்கறிஞர் என வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்களால் கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

வரவேற்புரையாற்றிய பேராசிரியர் இரகு, ‘‘இந்திய மொழிகளில் தமிழுக்கும் ஒரு நோபல் விருதைப் பெற்றுத்தரும் ஆற்றலும் வல்லமையும் பெ.மு.வுக்கு உண்டு’’ என்றார். அறிமுகவுரையாற்றிய கல்லூரி முதல்வரும் மேற்குறிப்பிட்ட நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவருமான பேராசிரியர் இராமன், இப்படியான ஒரு தொகுப்பிற்கு ஏன் பெண் ஆளுமைகளிடமிருந்து மட்டும் கட்டுரைகளைப் பெற்று உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது குறித்து முக்கியமான ஒரு கருத்தை எடுத்துரைத்தார். ‘மாதொருபாகன்’ நூல் மீதான அவதூறுகளில் முதன்மையானதாக, ‘‘இந்நூல் பெண்களை இழிவுபடுத்துகிறது’’ என்கிற எடுத்துரைப்பு பொதுவெளியில் நிகழ்த்தப்பட்டது. இந்த எடுத்துரைப்பையே பழமைவாதக் காவலர்கள் பலரும் கும்பல் வாசிப்பாகக் குமைந்து தள்ளினர். அதற்குப் பதிலளிக்கும் வகையில், மெய்நடப்பில் பெ.மு.வின் எழுத்துகளைப் பற்றிப் பெண்கள் எப்படியான கருத்துநிலையில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்திலேயே இந்த நூல் இவ்வாறு உருப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். வாழ்த்துரை வழங்கிய காலச்சுவடு கண்ணன், பெ.மு.வைக் காலச்சுவடில் எழுதவைத்த தொடக்கக் காலந்தொட்டுப் பழைய நினைவுகளை இரைமீட்டிப் பேசினார். ஐஸ்லாந்து போன்ற சிறிய நாடுகள் முதல் ஃபிரான்சு போன்ற பெரிய நாடுகள்வரை அங்குள்ள புகழ்பெற்ற பதிப்பகங்கள் பலவும் பெ.மு.வின் எழுத்துகளை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு ஆர்வமாக உள்ளதைச் சுட்டிக்காட்டி, அவற்றுள் ஒவ்வொரு நாட்டின் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற படைப்புகளை ஃபிரெஞ்சு மொழி வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதை நோக்கமாகக்கொண்ட, புகழ்பெற்ற கல்லிமார் (Gallimard) பதிப்பகத்தின் உலக இலக்கியத் தொகுப்பு (“Du monde entier”) தொடரில் ஃபால்க்னர், காஃப்கா, தாகூர், அருந்ததி ராய், அல்கா சரயோகி போன்றோரின் வரிசையில் பெ.மு.வும் இடம்பெற்றுள்ளதைப் பெருமையுடன் எடுத்துரைத்தார்.

தொடக்கவிழாச் சிறப்புரையில் ஃபிரான்ஸ் எழுத்தாளர் லெத்திசியா இஃபான்ஸ் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பேசினார்! 2025ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மட்டும் பெ.மு.வின் படைப்புகள் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டு, இதனால் பெ.மு. தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதியாகவும் இந்திய இலக்கியங்களின் தூதுவராகவும் விளங்குவதைச் சுட்டிக்காட்டினார்.

வாழ்த்துரை வழங்கிய அமெரிக்கத் தமிழறிஞர், திருக்குறள் அவ்வையார் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தாமஸ் புரூய்க்ஸ்மா, உலக மொழிகள் பலவற்றிலும் பெ.மு.வின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வருவதைப் பற்றியும் அவற்றின் இலக்கிய முக்கியத்துவம் பற்றியும் அவர் தற்போது மொழிபெயர்த்துவரும் பெ.மு.வின் ‘வான்குருவியின் கூடு - தனிப்பாடல் அனுபவங்கள்’ நூலைப் பற்றியும் உரையாற்றினார்.

முதல் அமர்வின் முதல் உரையாக எழுத்தாளர் அ. மங்கை, ‘எல்லைகள் கடக்கும் படைப்புலகம்’ என்கிற பொருண்மையில் உரை நிகழ்த்தினார். இதில் சாதி, பாலினம் ஆகிய இரண்டு கருத்துநிலைகளும் ‘கங்கணம்’ புதினத்தில் எவ்வாறு ஆக்கம் பெற்றுள்ளன என்பதை முன்வைத்தார். குறிப்பாக, அகமணமுறையைத் தூக்கிப்பிடிக்கும் சாதியம், இனப்பெருக்கம், சொத்துரிமை இடையிலான ஊடாட்டம், அதன் காரணமாகப் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பழக்கம், அது பெண் குழந்தைகளைச் செலவினமாகக் கருதி அவிழ்த்துவிட்ட பெண்சிசுக் கொலை, அதன் விளைவாகத் தலைகீழாகிப்போன ஆண் - பெண் விழுக்காடு, அதனால் பெண் கிடைக்காமல் உழலும் மாரிமுத்துவின் தவிப்பு எனத் தப்பிக்கவே முடியாத வலைப்பின்னலாகச் சாதியமும் பாலுறவு சார்ந்த முரண்பாடுகளின் மூட்டையாகவும் உள்ள சமூகம் நாளாந்தர நடைமுறைகள் மூலம் கண்முன் விரிவதையும் சாதியத்தின் இறுக்கமான பிடிப்பை இதைவிடத் துல்லியமாகச் சித்திரிக்க முடியுமா என்பது ஐயத்திற்கு உரியது என்பதையும் எடுத்துக்கூறினார்.

இரண்டாவது உரையாக வழக்கறிஞர் சுதா காந்தி, ‘கருத்துரிமை: தீ பரவட்டும்’ என்கிற பொருண்மையில் பெ.மு.வின் ‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’ நூலை முன்வைத்துப் பேசினார். கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில் முன்வைக்கப்பட்ட சமூக விடுதலைக் கருத்துகள் பலவும் எப்படி எதிர்கொள்ளப்பட்டன, அவற்றின் மீதான கருத்துச் சுதந்திரம் குறித்த முன்மொழிபுகள் எப்படியாக முன்வைக்கப்பட்டன, இவற்றில் பெ.மு. எப்படியான ஜனநாயகக் கருத்துநிலைகள் பலவற்றிற்கும் முகங்கொடுக்கிறார் என்பதை அடியொற்றி இந்த உரை அமைந்தது.

இரண்டாவது அமர்வில் மூன்றாவது உரையாகப் பேராசிரியர் பி. எழிலரசி, 90களின் தொடக்கத்தில் திராவிட இயக்கப் பின்னணியில் வந்த தன்னை மாற்றுச் சிந்தனைக்காகவே  முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர்த்த பேராசிரியர் வீ. அரசு, ஆய்வு சிறப்பாக வர, அது சார்ந்த அறிவுப் போதாமைகளைக் களையத் தன்னை வாசிப்பில் ஈடுபடுத்த முனைந்ததைப் பற்றி எடுத்துரைத்தார். அதேபோலத் திருமணமானதிலிருந்து இப்போதுவரை தன்னை எப்படியாவது வாசிப்பிலும் எழுத்திலும் கொண்டுசெலுத்திடப் பல்வேறு மெனக்கெடல்களைச் செய்து அதற்காகக் காத்திருக்கும் கலையிலும் வல்லவராகத் திகழும் பெ.மு.வைப் பற்றி விரிவாக விவரித்தார். ‘‘இன்னும் கொஞ்சம் யோசியேன்’’ என்று சொல்லும் பெ.மு.வின் வார்த்தைகள் அவரது துணைவியாரின் உள்ளக்கிடங்கிலிருந்து உணர்வுப்பூர்வமாக வெளிப் பட்டதைக் கண்டுணர முடிந்தது. மேலும், தனக்குள் இருந்த சில கட்டுப்பெட்டித்தனங்களைப் போக்கவும் அவருடைய விருப்பத்திற்கு மாறான மணமுடிப்பாக அமைந்தபோதும் தன்னை அரவணைப்பவராகவும் திகழ்ந்த பெ.மு.வின் தாயாரைப் பற்றி, அவரிடம் நிலவிய சமநிலைத்தன்மை பற்றி, அவருக்குள் இருந்த கதைசொல்லி பற்றியெல்லாம் நினைவுகூர்ந்தார். பெ.மு.வின் எழுத்தும் செயலும் ஒன்றுக்கொன்று கொண்டு கொடுக்கும் ஒருபடித்தானவையே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தக்கூடிய அளவில் இந்த உரை அமைந்தது.  

நான்காவதாக, எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியத்தின் உரை, பெ.மு.வைப் பற்றி அவருடைய மாணவர்கள் எழுதிய தொகுப்பு நூலான ‘எங்கள் ஐயா’ நூலை அடியொற்றி ‘மகத்தான ஆசிரியர்’ என்கிற பொருண்மையில் அமைந்தது. ‘‘இன்றும் பெ.மு. ஒரு மாணவருக்குத் தந்திருக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் பலரும் ஆசிரியர்களாக மாறி ஒரு மாணவருக்கு அளித்துக் கொண்டிருக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் பெ.மு.வின் செயல்பாடுகளே காரணம்’’ என்று குறிப்பிட்டு, அங்கிருந்துதான் அவர் வெற்றி பெறுவதாகவும் மேலும் மகத்தான ஓர் ஆசிரியராக மிளிர்வதாகவும் விதந்துரைத்தார்.

பிற்பகல் தொடங்கிய மூன்றாவது அமர்வு முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்தது, ஒரு தமிழ் எழுத்தாளருக்குத் தமிழ்நாட்டிலேயே அதுவும் கல்விப்புலத்திற்குள் இப்படியான ஒரு கருத்தரங்கம் இரு மொழிகளிலும் அமைந்தது ஒரு புதிய முயற்சியாகப் பேசப்பட்டது. இந்த அமர்வில் ஐந்தாவது உரையாக, பெ.மு.வின் ‘பூக்குழி’ புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான, ‘Pyre’ புதினத்தை முன்வைத்து ஆய்வாளர் ஆழியரசி, ‘Punitive Regularisation of Caste Performances’ என்கிற பொருண்மையில் கட்டுரை வழங்கினார். இதில், பாரம்பரிய மரபுகளிலிருந்து தனது அதிகாரத்தைத் தேடும் ஒரு வகையான சமூக அதிகாரமாகச் சாதி அதிகாரத்தை வகைப்படுத்தலாம்; அது பல்வேறு தண்டனை, தந்திரோபாயங்கள் மூலம் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஓர் ஒழுங்கமைவைச் சமூகத்தில் நிலைபேறாக்கம் செய்துள்ளது என்பதைப் ‘பூக்குழி’ புதினத்தை முன்வைத்து விளக்கியுரைத்தார்.

ஆறாவது உரையாக, எழுத்தாளர் லூனாவின், ‘LITERATURE, FREEDOM AND I: From Textbook to Translation’ என்கிற பொருண்மையில் ‘மாதொருபாகன்’ புதினம் தொட்டு, ‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’ நூலை முன்வைத்து அமைந்தது. இந்த உரை சிற்சில இடங்களில் பார்வையாளர்களிடம் உரையாடும் வகையில் அமைந்ததால் மிகுந்த கவனம்பெற்றது.

அடுத்ததாக அமைந்த ஏழாவது உரையைப் பேராசிரியர் அனுபமா, ‘The Domestic Spectrum’ என்கிற பொருண்மையில், அவர் பணியாற்றும் மகளிர் கிறித்துவக் கல்லூரிக்குப் பெ.மு. வந்திருந்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து, அவருடைய சிறுகதைகளை விளக்கி வித்தியாசமான முறையில் உரையை அமைத்தது மிகுந்த கவனத்தைப் பெற்றது.

நான்காவது அமர்வில் எட்டாவது உரையாகப் பேராசிரியர் நிர்மலா, ‘மாதொருபாகன்’ புதினத்தை முன்வைத்து, புதினம் + தொன்மம் = சமத்துவ அசமத்துவப் பெண்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். மாதொருபாகன் தொன்மத்தை முன்வைத்து அதற்குள் புதைவடிவிலிருக்கும் இருமை அசமத்துவத்தை விவரித்துப் பெண் குறித்த சமூகப் புனைவுகளை உடைத்துப் பரந்தவெளிக்கு நகர வேண்டிய புதிய தேவையை வலியுறுத்திப் பேசினார்.

ஒன்பதாவதாக, பெ.மு.வின் ‘ஏறுவெயில்’ (Rising heat), ‘ஆளண்டாப் பட்சி’ (Fire bird) ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜனனி கண்ணனின் ‘எழுதியிரா விதி’ உரை அமைந்தது. ‘ஆளண்டாப் பட்சி’ நாவலில் பெண் கதைப்பாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், பெண் சமூகத்தின் பாடுகளை உற்றுக் கவனிக்கும் பெ.மு.வின் பார்வைக்கோணம் என்கிற நோக்கில் விளக்கினார். அமர்வுகளின் கடைசி உரையாக, வழக்கறிஞர் அ. அருள்மொழியின் ‘சுயமரியாதைப் பெண்’ என்கிற உரை அமைந்தது. “தந்தை பெரியார் நடத்திய மொழி விடுதலைப் போராட்டக் களத்தில் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளோடு சிறைப்புகுந்த சிறப்புமிக்க வரலாற்றுத்தீரத்தைத் தம் சொற்களால் சிறப்பாக அ. அருள்மொழி நிகழ்த்திக் காட்டினார். பெ.மு.வின் புனைவுகளில் வரும் பெண்களிடம் அந்த உணர்வு நேரடியாக வெளிப்படாவிட்டாலும் அதன் அதிர்வலைகளை உய்த்துணர முடிகிறது” என்று குறிப்பிட்டு, “அவர்களும் சுயமரியாதை உணர்வுள்ளவர்களாகவே திகழ்கிறார்கள்” என்பதைக் கதைப்பாத்திரங்களின் கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி எடுத்துரைத்தார். குறிப்பாக, ‘‘பெண்கள் அனைவருமே சொந்தமாக உழைப்பவர்களாகவும் சுயசிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்’’ என்றார்.

இதன் தொடர்ச்சியாக, நிறைவு விழாவில் தொகுப்பாசிரியர் உரையாற்றிய எழுத்தாளர் கல்யாணராமன், ‘‘பெ.மு.வின் படைப்புகளில் பெண்களால்தான் மூலதனமே உற்பத்தி செய்யப்படுகிறது; அவர்கள்தான் பெ.மு.வின் எல்லாப் படைப்புகளிலும் மையநரம்புகளாகப் பிணைக்கப்பட்டுள்ளனர்’’ என்று குறிப்பிட்டதோடு, ‘‘நனவிலி மனம் என்பது, நாம் உணராதபோதும் நம்மை முழுமையாக இயக்கும் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் கொண்ட ஓர் ஆழமான மனப்பகுதியாகும். அதேபோல நனவிலி நிலம் என்பது, பல நூற்றாண்டுத் தொடர்ச்சிகொண்ட மானுடப் பண்பாட்டின் அடிப்படையான நினைவோட்டங்களை நிலம்வழி உட்செரித்துக்கொள்வதாகும். இப்படித்தான் கொங்கு நிலத்தின் ஆன்மா பெருமாள்முருகனின் படைப்புகளில் ரத்தமும் சதையுமாக இறங்கியிருக்கிறது. அவரின் எழுத்து ஒரு தனி எழுத்தாளரின் குரல் மட்டும் இல்லை; ஒரு பூர்வகுடிப் பண்பாட்டு நனவிலி நிலத்தின் ஆதியும் அந்தமுமற்ற மானுடக் குரல். எனவேதான் நூல் தொகுப்பிற்கு ‘நனவிலியின் நிலம்’ என்று பெயர் வைத்தோம்’’ என்று உளவியல் நோக்குடன் விரித்துரைத்தார்.

நிறைவு விழாத் தலைமையுரையாற்றிய, தமிழ்நாடு அரசின் நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரன் இ.ஆ.ப., தம் உரையை ஒரு தேர்ந்த இலக்கிய உரையாகவும் பெ.மு.வோடு பயணித்த பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று அனுபவப் பதிவாகவும் நிதானமான மொழியில் பகிர்ந்துகொண்டார். தன்னுடைய இளம்வயதில் பெ.மு.வோடு பழகியது, குடிமைப்பணித் தேர்விற்குத் தயாரானபோது பெ.மு. உதவியது, பெ.மு. சர்ச்சையில் சிக்கவைக்கப்பட்டபோது அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தது என்கிற அனுபவப் பகிர்வோடு, பெ.மு.வின் ‘மாதொருபாகன்’, ‘நிழல்முற்றம்’, ‘தோன்றாத்துணை’ என அவருடைய இலக்கியப் படைப்புகளை மேற்கோள் காட்டியே பேசினார். தன்னைப் போன்றவர்கள் பணிச்சுமையில் சோர்ந்திருக்கும்போது இளைப்பாறும் நிழல்போலப் பெ.மு.வின் இலக்கியங்கள் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டதோடு, கொங்குப் பகுதியின் பொருளாதாரம் இன்றைக்குத் தொழில்துறை முன்னேற்றத்தால் மாறியிருக்கலாம், ஆனால் அது பெண்களின் கைகளில்தான் இருந்தது, அதுவே பெ.மு.வின் ஆக்கங்களில் வெளிப்படுகிறது என்றுகூறித் தான் பணியாற்றிய பகுதிகளோடு ஒப்பிட்டுரைத்தார். பெ.மு.வின் ஆக்கங்களில் ‘நிழல்முற்ற’மே தனக்கு மிகவும் பிடித்தது என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார். அதே நேரத்தில், பெ.மு.வின் உ.வே.சா குறித்த நிலைப் பாடுகளில் தனக்கு மாற்றுக்கருத்து இருப்பதையும் குறிப்பிடடார். பெ.மு. போன்றவர்கள் தங்களின் அடுத்த தலைமுறை இலக்கிய வாரிசுகளை உருவாக்க முனைய வேண்டும் என்பதையும் முன்வைத்தார்.

விரிவான ஏற்புரையாற்றிய பெ.மு. இந்தக் கருத்தரங்கம் உருவான விதம் பற்றியும் மாதொருபாகன் சர்ச்சைக்குப் பிறகு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மாநிலக் கல்லூரிக்குப் பணியாற்ற வந்தபோது, தன்னைக் குறித்துப் பேராசிரியர்களிடையே பரப்பப்பட்ட அவதூறுகள் பற்றியும் அதனால் தனக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றியும் அவற்றை எதிர்கொண்டவிதம் பற்றியும் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். தன்னுடைய இலக்கிய ஆக்கங்களில் பெண்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதற்கான சமூகப் பொருளாதாரப் பின்புலத்தையும் விளக்கியுரைத்தார். ‘மாதொருபாகன்’ புதினம், ‘‘பெண்களை இழிவுபடுத்துகிறது’’ என்று புனைந்துரைத்தவர்கள் அனைவரும் ஆண்களே என்பதையும் அதை முழுவதும் படித்தவர்கள் தங்கள் நிலையுணர்ந்து வருந்தியதையும் சுட்டிக்காட்டினார்.

நிறைவாகப் பெ.மு.வின் வாசகனாகவும் மாணவனாகவும் தன்னைப் புலப்படுத்திக்கொண்ட பேராசிரியர் ந. பழநியப்பன், அமெரிக்கத் தமிழறிஞர் தாமஸ், பிரான்சின் லெத்திசியா ஆகிய இருவருமே முழுநாள் கருத்தரங்கின் அனைத்து உரைகளையும் உற்றுச் செவிமடுத்த பாங்கையும் மாதொருபாகனின் கொங்குப் பகுதிச் சேவைத்தொழிலாளிகளைப் பிரெஞ்சுப் பண்பாட்டுத் தன்மைக்கேற்ப லெத்திசியா எழுதியுள்ளதையும் எடுத்துக்காட்டித் தன்னுடைய நன்றியுரையைக் கச்சிதமாக வழங்கினார்.

ஆண்களைவிடப் பெண்களிடையே பெ.மு.வின் இலக்கிய ஆக்கங்கள் பெருமளவில் வாசிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க முடிந்தது. பெண்களிடையே ‘மாதொருபாகன்’ புதினம் குறிப்பிடத்தக்க வகையில் பரவலான கவனத்தையும் ஏற்பையும் பெற்றுள்ளது. ஏனெனில், உரையாற்றிய அனைவருமே மாதொருபாகன் சர்ச்சை தொடர்பில் கலாச்சாரக் காவலர்களின் பண்பாட்டுத் தணிக்கைக்கு எதிரான மனநிலையில் பேசியதை ஒருவாறு உணரமுடிந்தது.

எழுத்தாளருக்கு (எழுத்துக்கு) என்றைக்கும் இறப்பே கிடையாது என்பதே இயங்கியல் இயம்பும் பாடம். அந்த இயங்கியல் பாடமே எழுத்தாளர் பெருமாள்முருகனையும் இயங்கவைத்திருக்கிறது.

இரா. மோகனவசந்தன், முனைவர் பட்ட ஆய்வாளர், மாநிலக் கல்லூரி.   

             மின்னஞ்சல்: murugutcd@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.