விருதுகள் விவாதங்கள்
சாகித்திய அகாதெமி என்ற இந்திய இலக்கியத்துக்கான நிறுவனம் அவ்வப்போது விவாதங்களில் அகப்பட்டுக்கொள்வது வழக்கம். அது அளிக்கும் விருதுகள் குறித்தும் பிற செயல்பாடுகள் குறித்தும் விவாதங்கள் எழுவதுண்டு. ஆனால் இந்த முறை அந்த அமைப்பே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் நிலையிருப்பே கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. அகாதெமி அங்கீகரித்திருக்கும் இருபத்து நான்கு இந்திய மொழிகளிலும் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. விவாதத்துக்கு இலக்கானாலும் இந்த விருதுகள் எல்லா மொழிகளிலும் மதிப்பு மிக்க ஒன்றாகவே வரவேற்கப்படுகின்றன. இந்த விருதளிப்பின் வாயிலாக அதைப் பெறும் மொழியின் படைப்பாளிக்குத் தேசிய அளவிலான அறிமுகமும் அறிந்தேற்பும் கிடைக்கின்றன. பிற இந்திய மொழியினர் ஒரு மொழியின் படைப்பை உணர்ந்துகொள்ளவும் அறிமுகம் கொள்ளவும் இந்த அங்கீகாரம் துணைபுரிகிறது. விருது என்பதை விடவும் இது இந்திய மொழிகளுக்கு இடையில் நிகழும் பரிமாற்றமாகவே கருதப்படுகிறது. உண்மையில் சாகித்திய அகாதெமியின் நோக்கங்களில் ஒன்றும் அதுவே. அரசின் ஆதரவில் இயங்கும் அமைப்பு என்ற போதும் தன்னாட்சி அமைப்பாக அகாதெமி விளங்குவது அரசமைப்பின் குறிக்கோள்களில் ஒன்றான ஜனநாயகத்தைப் பேணும் செயலாகவும் இருக்கிறது.
மேற்சொன்ன நல்லியல்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் அண்மையில் நிறைவேறிய செயல்களால் சாகித்திய அகாதெமி மதிப்பை இழந்திருக்கிறது.
சாகித்திய அகாதெமி 2025ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குப் படைப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட இருந்தன. அகாதமி அமைத்த நடுவர் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விருதாளர் பட்டியலும் இறுதி செய்யப்பட்டிருந்தது. விருதுகளை அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. செய்தியாளர்கள் அழைக்கப்பட்டனர். கடைசி வினாடியில் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. விருது அறிவிப்பு காரணம் கூறப்படாமல் நிறுத்தப்பட்டது. அகாதெமியின் எழுபத்தியொரு ஆண்டுக்கால வரலாற்றில் விருது அறிவிப்பு முதல்முறையாக நிறுத்தப்பட்டது. அகாதெமியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட எவரும் இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
2025 ஜூலையில் கலை, கலாச்சார அமைப்புகளுக்கு மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் சில நிபந்தனைகளை விதித்தது. தன்னாட்சி அமைப்புகளாகச் செயல்பட்டுவரும் சாகித்திய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி, லலித் கலா அகாதெமி, தேசிய நாடகப் பள்ளி ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகளை முன்வைத்தது. பண்பாட்டு அமைச்சகத்தின் முன் அனுமதியின்றி இந்த அமைப்புகள் விருதளிப்பு முதலான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவித்தது. அதன்படியே சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் பொருள் மேற்சொன்ன அமைப்புகள் இனி முதல் தன்னாட்சி கொண்டவை அல்ல; சுயாதீனமாக இயங்க அவற்றால் முடியாது. அரசின் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் இயங்குபவையாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதே. இந்த நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே பொது நோக்கர்களின் அச்சம். அரசின் நோக்கத்துக்கு உட்பட்டே கலை இலக்கியச் செயல்பாடுகள் நடத்தப்படும். அதிகாரத்திலிருப்பவர்கள் கடைக்கண் பார்வையை பொறுத்தே பண்பாட்டு நிகழ்வுகள் நடத்தப்படும். அரசின் அல்லது ஆட்சியிலிருக்கும் கட்சியின் துதிபாடிகளுக்கே விருதுகளும் அங்கீகாரங்களும் அளிக்கப்படும். இது அப்பட்டமான உரிமை மீறல். கலை இலக்கிய அமைப்புகள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துக்கே ஊறு விளைக்கும் காரியம்.
பாஜக அரசு அதிகாரமேற்ற நாள்முதலாகவே கடைப்பிடித்து வரும் கலாச்சார ஒடுக்குமுறையின் அப்பட்டமான உதாரணம் இது. வரலாற்றைத் திரிப்பது, பண்பாட்டு விழுமியங்களைச் சிதைப்பது, வரலாற்றுச் சின்னங்களையும் ஆளுமைகளையும் தனக்கு உவப்பான வகையில் முன்னிருத்துவது, ஒருமைப்பாட்டைக் குலைப்பது, ஜனநாயக மரபுகளை மறுப்பது முதலான ‘பாசிஸ’ நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே அரசு என்ற பொய்க் கனவைப் படிப்படியாகவும் அதிரடியாகவும் திணித்துவருகிறது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய அரசமைப்பின் உயிர் நாடியான கொள்கைக்கு விடப்பட்ட அறைகூவல். இது ஓர் அறிவார்ந்த சமூகம் உருவாகும் சூழலை அழிக்கிறது. இந்த ஆபத்தின் எளிய சான்றுதான் சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பில் நிகழ்ந்தேறியிருக்கிறது.
சாகித்திய அகாதெமியின் சில நிலைப்பாடுகளும் செய்கைகளும் விமர்சனத்துக்குரியவையாக இருந்தபோதும் இலக்கியப் பின்புலத்தில் மறுப்பதற்கு இயலாத ஒன்றாகவே நிலைபெற்றிருந்தது. குறிப்பாக விருதுகள் தொடர்பான நடைமுறையில். விருது அறிவிக்கப்படும் ஆண்டு உட்பட மூன்று ஆண்டுகளில் ஒரு மொழியில் வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நடுவர் குழு அமைக்கப்பட்டுத் தகுதியானவர்களின் பரிந்துரைகள் கோரப்படுகின்றன. இறுதியில் நடுவர் குழுவின் பெரும்பான்மை முடிவின்படி இறுதித் தேர்வு நடத்தப்பட்டு அந்த மொழியில் சிறந்த படைப்பும் அதன் படைப்பாளரும் விருதுக்குரியவராக அறிவிக்கப்படுகிறார்கள். சர்ச்சைகளுக்கும் பூசல்களுக்கும் இடமளித்தாலும் இந்தத் தேர்வு முறையில் குறைந்த அளவேனும் ஜனநாயக உணர்வு பேணப்பட்டது. இனி அப்படி இராது என்பதை அண்மை நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. இதுவரை அகாதெமியே நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசீலனைசெய்து விருது வழங்கி வந்தது. சில மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர்களை விருது பெற விண்ணப்பிக்குமாறு புதிய விதியைப் பிறப்பித்துள்ளது. இது கலை இலக்கியத்துறையில் செயல்பட்டுவருபவர்களை இரவலராக்கும் மாண்பற்ற முறை. அவர்களை இழிவுபடுத்தும் கீழ்மை. தவிர, ஆட்சியாளர்களுக்கு இணக்கமானவர்களுக்கும் தகுதியற்ற பின்பாட்டுக்காரர்களுக்கும் பொய்யான கௌரவத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.
அரசியல் அதிகாரத்தை மட்டுமன்றி கலாச்சார அதிகாரத்தையும் கைப்பற்றுவதில் இன்றைய அரசு முனைந்து செயல்பட்டுவருவது வெளிப்படை. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஏற்கெனவே கபளீகரம் செய்திருக்கிறது. பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தன்னுடைய கொடுங்கரங்களை நுழைத்திருக்கிறது. தன்னாட்சி நிறுவனமான திரைப்படக் கல்லூரியை முடமாக்கியதும் திரைப்பட விழாக்களைத் தனக்குத் தோதானதாக மாற்றியதும் திரைப்பட விருதுகளில் பக்கச் சார்பை ஏற்படுத்தியதும் எடுத்துக் காட்டுகள். இந்த அத்துமீறலின் இன்னொரு பக்கமே சாகித்திய அகாதெமி விவகாரம்.
2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் எல்லா மொழிகளிலும் நிறுத்தப்பட்டன. ஒரு படைப்புக்கு அல்லது படைப்பாளிக்குத் தேசிய அளவிலான கௌரவம் அறிவிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படாமல் போவது அந்தப் படைப்புக்கோ படைப்பாளிக்கோ இழைக்கப்படும் அவமதிப்பு மட்டுமல்ல. அந்த மொழிக்கே இழைக்கப்படும் அவமதிப்பு. எல்லா மொழிகளுக்கும் இணையான தகுதியுண்டு என்று அரசியலமைப்பு வரையறுத்திருக்கும் நன்னோக்கத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமதிப்பு. முன்னர் 2024ஆம் ஆண்டு விருதுக்கான பரிசீலனையிலிருந்து வங்காள மொழி விலக்கப்பட்டது. அந்த மொழியில் அந்த ஆண்டு சிறப்பான ஒரு படைப்புக் கூடவா உருவாகாமலிருந்திருக்கும்? அந்த மொழி தேர்விலிருந்து புறக்கணிக்கப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவே என்பது வெளிச்சம்.
ஒரு விருதால் எந்தப் படைப்பும் அதற்கு இல்லாத மகத்துவத்தைப் பெற்றுவிடாது. தகுதியில்லாத படைப்பு விருதால் எந்த மதிப்பையும் அடையாது. இந்த நிலையில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்பு அது உருவான மொழிக்குப் பெருமை சேர்ப்பதாகவும் பிறமொழிப் படைப்புகளுக்கு ஈடு நிற்கக் கூடிய தரத்திலும் இருக்க வேண்டும். விருதின் மூலமாக அந்தப் படைப்பு பரந்த வாசகத் தளத்தை அடையும். அதன் மூலம் ஓர் அறிவார்ந்த சூழலுக்கு ஆக்கம் கூடும். இதுவே விருதுகளின் பயன்.
சாகித்திய அகாதெமியின் விருதுகள் நிறுத்தப்பட்ட பின்னணியில் இலக்கிய உலகம் விருதுகளுக்காக எப்படிப் புரள்கிறது என்பதும் கவனத்துக்கு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சாகித்திய அகாதெமி விருக்குத் தமிழில் மவுசு அதிகரித்திருக்கிறது. அதற்கான காரணம் இலக்கிய ஈடுபாட்டை மீறியது. சாகித்திய அகாதெமி விருதுடன் அளிக்கப்படும் பணப்பரிசு வேறு சில தனியார் அமைப்புகள் வழங்கும் தொகையுடன் ஒப்பிட்டால் குறைவு. எனினும் இந்த விருதை ‘வாங்கு’வதற்காக, நடக்கும் கூத்துகள் கொஞ்சமல்ல. அண்மைக் காலமாக தேசிய அளவில் மதிக்கப்படுவதான அகாதெமி விருதைப் பெறுபவர்களுக்குத் தமிழ்நாடு அரசு இலவசமாக வீடுகளை அளிக்கிறது. இலக்கியப் பெறுமதி என்பதுடன் பொருளாதார முக்கியத்துவமும் இந்த விருதின் உடன் பயனாகியுள்ளது.
அகாதெமியின் நெறிபிறழ்வுக்குக் கொஞ்சமும் பிசகாத குறுக்கு வழிகளையும் தந்திரங்களையும் இலக்கிய உலகினர் கையாளுகின்றனர். சாகித்திய அகாதெமியின் ஓவ்வோர் ஆண்டு விருது அறிவிப்பு வேளையில் இது பற்றிய குறைகூறல்களைக் கேட்கலாம். குறிப்பிட்ட ஒரு சாரார் தொடர்ந்து அகாதெமியின் செயல்பாட்டுக் குழுக்களில் இடம்பெற்றுவருகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குப் பிறகும் தொடர்கிறார்கள். அதைப் பயன்படுத்தித் தமக்கும் தமது அணுக்கர்களுக்கும் அகாதெமியின் பலன்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். விருதுகளில் மட்டுமல்ல கருத்தரங்குகளிலும் நூலுருவாக்கத்திலும் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களில் சில பெயர்கள் தொடர்ந்து இடம் பெறுவதில் இந்தப் போக்கை வெளிப்படையாகக் காணலாம். இந்தச் செயல்கள் கேள்விக்குரியவை. இந்த ஆண்டு விருதுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நூல்களின் பட்டியலைப் பார்த்தாலே இது தெளிவாகும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் சில பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இரு எழுத்தாளர்களின் தலா இரண்டிரண்டு நூல்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஒரு சிலரது நூல்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் குறும்பட்டியலில் இடம்பெறுகின்றன இந்த வகையில் பரிசில் பெற்ற ஒருவர்கூட அகாதெமியின் விருது ரத்துப் பற்றிக் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்திய இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் பரிமாற்றத்துக்கும் உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் சாகித்திய அகாதெமி. இந்திய இலக்கியம் ஒன்றல்ல; பல மொழிகளில் எழுதப்படும் ஒன்று. இதை முன்னிருத்தித்தான் ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த மொழிகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தப் பல திசைப் பரிமாற்றமே இந்திய இலக்கியத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை ஆட்சியாளர்கள் நாசமாக்கியிருக்கிறார்கள். அந்த அடையாளத்தின் செயல்வடிவமாகத் திகழ்ந்த சாகித்திய அகாதெமி என்ற சுதந்திரமும் தன்னாட்சியும் கொண்ட அமைப்புக்கு உலைவைத்திருக்கிறார்கள். படைப்பின் மீதும் பண்பாட்டின் மீதும் சுதந்திரத்தின் மீதும் ஜனநாயக விழுமியங்கள் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் குடிமக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமானம்.
சாகித்திய அகாதெமி போன்ற தன்னாட்சி அமைப்புகள் இல்லாமற்போவது ஆரோக்கியமான பண்பாட்டுச் சூழலுக்குப் பெரும் இழப்பு. அந்த இழப்பைத் தவிர்க்க அக்கறையுள்ள அனைவரும் கண்டனத்தைத் தெரிவிப்பது அவசியம்.
சாகித்திய அகாதெமி விவாதத்தின் பின்புலத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஒரு மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அகாதெமிக்கு இணையான இலக்கிய நிறுவனமொன்றை தமிழ்நாடு அரசு அமைக்கும்; அதன் வழியே சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அமையப்பெறவிருக்கும் தமிழ்ப் பீடம் தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கும் விருதுகளையும் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயையும் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓர் அரசியல் பதிலடியாக இருந்தாலும் பண்பாட்டுத் தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சி என்பதால் வரவேற்புக்குரியது.
உருவாவிருக்கும் இலக்கிய அமைப்பு தகுதியானவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாகவும் இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழிகள் கறாராகப் பின்பற்றப்பட வேண்டும். சாகித்திய அகாதெமியைக் குறிப்பிட்ட சிலர் தமது புழக்கடையாகக் கையாண்டது போன்ற நிலை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். விருதுகள் தொடர்பாகப் பக்கச்சார்பு இல்லாத தேர்வுமுறை பின்பற்றப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வமைப்பு சுயாதீனமானதும் தன்னாட்சி கொண்டதாகவும் அமைய வேண்டும். அரசின் தலையீடும் அரசியல் தலையீடும் இல்லாமல் தமிழுக்கு ஒரு தனியமைப்பு உருவாவது வரவேற்புக்குரியது. அது சுதந்திரமாகவும் பக்கச்சார்பு இல்லாமலும் தொடர்ந்து இயங்குவதே மிக முக்கியமானது.
