அகந்தை அறுக்கும் கவிதையும் சூஃபி நெறிப் பயணமும்

நிர்மால்யா, பெருமாள்முருகன், பிருந்தாதேவி, ஷாஅ, ஜெயந்தி
படங்கள்: ஆதித் கான்
ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை அன்று, சேலம் சிவராஜ் இன் ஹோட்டலில் ‘காலச்சுவடு’ம் ‘சொற்க’ளும் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜெ. ஜெயந்தி தொகுத்த ‘குவளைக்கண்ணன் கவிதைகள்’ அ. முனவர்கான் எழுதிய ‘காபி ஆறுவதற்கு முன்’ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்வின் தொடக்கமாக ஜெ. ஜெயந்தி வரவேற்புரை ஆற்ற, பெருமாள்முருகன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. பிருந்தா தேவி நூல்களை வெளியிட்டு ஆற்றிய சிறப்புரையில், “நான் இந்த விழாவில் கலந்துகொள்ள முக்கியக் காரணம், குழந்தைகள் நலக்குழுத் தலைவராகப் பணியாற்றிய ஜெ. ஜெயந்தியின் அன்பிற்காகத்தான். அவர் தலைவராகப் பணியாற்றிய காலங்களில் குழந்தைகளுக்காகப் பல பணிகளை முன்னெடுத்துச் செய்தவர். குறிப்பாகக் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடங்கி நடத்தியது, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாவட்ட அளவில் கலைத் திருவிழா நடத்தியது, புத்தகத் திருவிழாவில் முக்கியப் பங்காற்றியது என அவரின் அனைத்துப் பணிகளும் பாராட்டிற்குரியவை. அவர் தொகுத்த இந்தக் கவிதை நூலை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார்.
தலைமையுரை ஆற்றிய பெருமாள்முருகன் மட்டுமே அரங்கில் பேசுவதாக நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்ததால், இரண்டு நூல்கள் குறித்தும் ஒரு மணிநேரத்திற்கு மேல் பேசினார். உரையின் தொடக்கத்தில், “பொதுவாக மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் நிர்வாகப் பணிகளுக்கு இடையே தீவிர வாசகர்களாக இருப்பதும், இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதும் மிக அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்ற ஒரு பிம்பத்தை நாம் ஏதோ ஒரு விதத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறோம்; அதன் காரணமாக அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த வட்டத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கு விதிவிலக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் விளங்குகிறார்கள். அவர்கள் இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்லாது, இலக்கிய நிகழ்வுகளில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் இருப்பது பாராட்டுக் குரியது.
“முனவர் கானைத் தனக்கு முப்பது ஆண்டு களுக்கும் மேலாகத் தெரியும் என்றும், அவர் மிக அமைதியானவர், அதேசமயம் தீவிரமான வாசகர் என்றும் பெருமாள்முருகன் பாராட்டினார். இலக்கிய உலகில் வாசகர்களின் நிலை குறித்து எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூறிய, “இன்று கவிதை எழுதுபவர்கள் பெருகிவிட்டார்கள், ஆனால் கவிதையை ரசிப்பதற்கான வாசகர்கள் கிடைப்பதுதான் அரிதாக உள்ளது,” என்ற கருத்தைச் சுட்டிக்காட்டினார். பலர் கவிஞர்களாகவோ எழுத்தாளர்களாகவோ அறியப்படவே விரும்பும் சூழலில், ஒரு சிறந்த வாசகராக மட்டுமே முப்பதாண்டுகளுக்கும் மேலிருப்பது சாதாரண விஷயம் அல்ல.
“சமீபகாலமாக எழுதப்படுபவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட பாணியிலேயே இருக்கின்றன. விமர்சனம் என்று வரும்போது அதை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளும் சூழல் இப்போது இல்லை. இது நான் மட்டும் சொல்வதல்ல, தமிழ் இலக்கியச் சூழலில் பலரும் சொல்லக்கூடிய ஒன்றுதான். இன்று சமூக ஊடகங்களில் யாருடைய நூலைப் பற்றியாவது விமர்சனம் எழுதினால், உடனே பாய்ந்து வந்து பதில் பேசவும் திட்டுவதற்கும் என்றே சில குழுக்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்குத்தான் அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள் என்றில்லை, இலக்கியத்திலும் அத்தகைய ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்வதும், பதில் சொல்வதும் நமக்குத் தேவையில்லாத வேலை என்பதால்தான் நான் விமர்சனங்கள் எழுதுவதில்லை. மிகவும் பிடித்த படைப்புகளைப் பற்றி மட்டும் பாராட்டி எழுதுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
“இப்படியான சூழலில் மிகவும் மென்மையான மனோபாவம் கொண்டவரும், யாரையும் ஒரு கடுஞ்சொல்கூடச் சொல்லாத மனப்பாங்கு உள்ளவரு மான முனவர் கான், தான் வாசித்த நூல்கள்பற்றி அறிமுகக் கட்டுரைகள் எழுதியிருப்பது ஏற்பிற்குரியதே. கான் போன்ற சிறந்த வாசகர், தான் வாசித்த பதினைந்து நூல்களைப் பற்றிய அறிமுகத்தை இந்தத் தொகுப்பில் கட்டுரைகளாகப் பகிர்ந்துள்ளது புதிய வாசகர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக அமையும். இதில் மூன்று தமிழ்ப் புத்தகங்கள், மற்றவை ஆங்கில நூல்கள். தமிழ்ப் புத்தகங்களில் ஆர். சிவகுமாரின் ‘கற்றதால்’ நாவல் குறித்தும், சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் பற்றியும், குவளைக்கண்ணன் கவிதைகளைப் பற்றிய கட்டுரையும் எழுதியிருக்கிறார். மற்ற கட்டுரைகளில் ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவாபட்டாவின் ‘ஆயிரம் கொக்குகள்’ என்ற நாவலையும் ‘தூங்கும் அழகிகளின் இல்லம்’ பற்றியும் எழுதியுள்ளார்.
“உருது, பாரசீக இலக்கியங்கள் குறித்து ஆறேழு கட்டுரைகள் எழுதியுள்ளார். இதில் ‘இதயத்தின் கண்ணாடி’ என்ற கட்டுரையில் சூஃபி ஞானிகளைப் பற்றியும் சூஃபி கவிதைகளைக் குறித்தும் எழுதியுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள சூஃபி கவிதைகள் அனைத்துமே மொழிபெயர்ப்புதான் என்றாலும், அவை மிக அருமையாக இருக்கின்றன. அதில் ரபிக் என்பவர் எழுதிய ஒரு கவிதையை வாசிக்கிறேன்: “இன்றிரவு நான் துக்கத்திலிருந்தும் பயத்திலிருந்தும் விடுபட்டேன். என் அன்பின் அருகில் அமர்ந்து ஆர்வத்துடன் சொல்கிறேன், என் காதல் இன்றிரவு இங்கே இருக்கிறது. கடவுளிடம் வேண்டுகிறேன், கடவுளே காலைக்கான திறவுகோலை மறையச் செய்திடு. இந்த இரவு அப்படியே நீடிக்கட்டும்”. இதில் காலைக்கான திறவுகோலை மறையச் சொல்லும் அந்த வரிகளை மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார்.
“இந்தக் கவிதையை வாசித்தபோது எனக்குச் சங்க இலக்கியம்தான் நினைவுக்கு வந்தது. சங்க இலக்கியத்தில் தலைவனுடன் இருக்கும் தலைவி, இரவு விடியக் கூடாது என்று நினைப்பதாகப் பல பாடல்கள் உண்டு. குறுந்தொகையில் ஒரு பாடல் இருக்கிறது: ‘குக்கூ என்றது கோழி... பிரிக்கும் வார்போல் வைகரை வந்தன்றால்’ என்று தலைவி சொல்கிறாள். கோழி கூவும் சத்தம் கேட்டதும் அவளுக்கு நெஞ்சு திடுக்கிடுகிறது, விடியப்போகிறதே என்று. தங்களுக்கு இடையே இருக்கும் காதலை அறுக்கக்கூடிய வாள்போல விடியற்காலம் வருவதாகத் தலைவி வருந்துகிறாள். அதே போன்றதொரு உணர்வை சூஃபி கவிஞர் ரபிக்கின் கவிதையிலும், அதன் மொழிபெயர்ப்பிலும் காண முடிகிறது.
“இந்தக் கட்டுரையைப் போன்ற பாணியிலேயே இன்னும் சில கட்டுரைகளை எழுதினால் சிறப்பாக இருக்கும். இந்த நூலை வாசித்தபோது எனக்குத் தோன்றியது என்னவென்றால், அவர் அடுத்த கட்டமாக மொழிபெயர்ப்பில் ஈடுபடலாம் என்பதுதான். இதில் பல கவிதைகளை மிகச் சிறப்பாக, ஒரு கவிஞரே செய்தது போன்ற அத்தனை அழகுடன் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய உரைநடை மிக நன்றாக இருப்பதால், அவர் மொழிபெயர்ப்பு செய்யலாம் என்பது என்னுடைய பரிந்துரை.”

தொடர்ந்து குவளைக்கண்ணன் உடனான தனது முப்பத்தைந்து ஆண்டுக் கால நட்பைப் பகிர்ந்துகொண்ட அவர், 1994இல் தனது ‘நிழல் முற்றம்’ நாவல் குறித்து குமுதம் ஸ்பெஷல் இதழில் கட்டுரை வந்தபோது, குவளைக்கண்ணன் தன்னைத் தேடி வந்து பாராட்டியதை நினைவுகூர்ந்தார். ஆனந்த்துடன் குவளைக்கண்ணனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததையும், தனது மனைவி எழிலரசியின் ‘மிதக்கும் மகரந்தம்’ கவிதைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதியதையும் குறிப்பிட்டார். “குவளைக்கண்ணன் தீவிரமான இலக்கிய ஈடுபாடும் ஆளுமையும் கொண்டவர். அவர் தனது நண்பர்களுடன் இணக்கமாகவும், அதே சமயம் கடுமையான முரண்பாடுகளுடனும் பழகக்கூடிய விசித்திரமான இயல்பைக் கொண்டிருந்தார். யாரிடம் சண்டையிட்டாலும் அடுத்த நிமிடம் அதை மறந்து நட்புடன் பழகும் குழந்தைத்தனம் அவரிடம் இருந்தது. ஒரு எழுத்தாளராக இருந்தாலும், அவர் ஒரு சராசரி மனிதனைப் போலவே திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழப் பெரிதும் ஆசைப்பட்டார். அந்த வாழ்க்கை அமையாததும், அதன் விளைவான தனிமையுமே அவரது அகால மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பது வருத்தத்திற்குரியது.
“நவீன கவிதையுலகில் மொழியைச் சுருக்கங்கள் இன்றி, மிகவும் தெளிவாகக் கையாண்ட கவிஞர்களில் அவர் முக்கியமானவர். அவரது கவிதைகள் பாடுபொருளில் பன்முகத்தன்மை கொண்டவை. குறிப்பாகப் பெண்களைத் தெய்வமாகவும், சக்தியின் வடிவமாகவும் அவர் போற்றினார். குழந்தைகளுடனான விளையாட்டை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல், அதன்மூலம் உலகைப் புதிதாகத் தரிசிக்கும் ஒரு தத்துவமாக அவர் அணுகினார். அவரது கவிதைகளில் ‘தலை’ என்ற உறுப்பு அதிகாரத்தின் குறியீடாகவும், அகந்தையின் அடையாளமாகவும் மீண்டும் மீண்டும் வருகிறது. அந்த அகந்தையை அழித்துத் தூய்மையாவதையே அவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன. ஒரு படைப்பாளியின் மறைவிற்குப் பின் அவரது படைப்புகள் தொலைந்து போகாமல், அவற்றை முறையாகத் தொகுத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதே அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும். அதைச் செய்த ஜெ. ஜெயந்திக்கு என் வாழ்த்துகள்” என்றார்.
விழாவில் ‘குவளைக்கண்ணன் கவிதைகள்’ நூலின் முதல் பிரதியைக் கவிஞர் ஷாஅவும், ‘காபி ஆறுவதற்கு முன்’ நூலின் முதல் பிரதியை மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா மணியும் பெற்றுக்கொண்டார்கள். க. மோகனரங்கன், மொழிபெயர்ப்பாளர் எத்திராஜ் அகிலன், சாகிப்கிரான், பாலம் சகஸ்ரநாமம், வி. அனந்த கிருஷ்ணன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். விழாவின் இறுதியில் நூலாசிரியர் அ. முனவர்கான் நன்றியுரை ஆற்றினார். சொற்கள் பதிப்பகத்தின் பதிப்பாளரும் கவிஞருமான செந்தில் குமார் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
மின்னஞ்சல்: sivaprasath29@gmail.com
