கடிதங்கள்

தலையங்கம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்குத் தீர்வு காண வேண்டிய கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளது. இன்றைய நிலையில் ஒரே குழந்தை, கூட்டுக் குடும்பச் சூழலின்மை போன்ற பல காரணிகள் குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல், பாசம், அரவணைப்பு இன்றி, சமூகத்தில் தீய எண்ணமுடையோருக்குப் பலியாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குப் பாலியல் இன்பம் மறுக்கப்படும் அவலம் என்ற வாதம், அவலத்தைவிட மகாகேவலம் என்பதே சரியாகும்! சமூக விழிப்புணர்வும், பெற்றோர்களுக்கான கூடுதல் பொறுப்புணர்வும் அவலத்தைக் களையக்கூடிய காரணிகளாக அமையும்.
‘கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு’ 42 பக்கத்தில் 10 கல்வியாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பு, படிக்கப் படிக்கப் புதிய தகவல்களை அறிய முடிந்தது. மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி அயோத்திதாச பண்டிதரும் கர்னல் ஆல்காட்டும் என்ற செய்தி மிகச்சிறப்பு. எனது ஆசிரிய நண்பர்களுக்குக் காலச்சுவடின் - கல்வி சம்பந்தமான கட்டுரை விவரங்களைத் தெரிவித்தேன். இன்னும் சில ஆளுமைகளின் கருத்துக்களையும் அடக்கித் தனிப் புத்தகமாக வெளியிட்டால், ஆசிரியர்கள் உட்பட நண்பர்களுக்குப் பரிசளிக்க ஏதுவாக இருக்கும். ‘இலக்கிய தற்கொலை’ கட்டுரை பெருமாள்முருகன் மறுபிறப்பை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தியது.
சீனி மணி
பூந்தோட்டம்
தலையங்கம் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. சமூகத்தில் தன்னை ஒரு முற்போக்கு முகமாகக் காட்டிக்கொண்டு டிஜிட்டல் பாலியல் வன்முறை செய்யும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி அவரிடம் பரிவு காட்டுபவரும் சமூக விரோதிகளே, தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பது உண்மை. இதுபோலும் செயல்கள் நடவாதிருக்க ‘18 வயதுக்கு மேற்பட்டோர் சமூக ஊடகங்களில் தனிக் கணக்குத் தொடங்குவதைத் தடைசெய்ய வேண்டும். குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும், குழந்தைகள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றாமல் இருக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் சமூகம் பின்பற்ற வேண்டியவையாகும். இப்பிரச்சினையைக் குழந்தைகளின் தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதாது சமூகப் பிரச்சினையாகக் கருதிக் குழந்தைகளின் நிலையிலிருந்து அணுகும் மனநிலைதான் குழந்தைகளின் பாதுகாப்பாக அமையும் என முடியும், தலையங்கம் காலத்துக்கேற்றது, பாராட்டுக்குரியது.
களந்தை பீர்முகம்மதுவின் ‘செம்புலப் பெயல்நீர் ஆனோம்’ கட்டுரை, சமூகத்தின் சாதியப் பிரிவுகளையும் அவர்களின் வாழ்வியல் வேறுபாடுகளையும் பேசுகிறது. எச். பீர்முகம்மதுவின் ‘தன்வயப்படும் மதங்களும் அரசியலும்’ கட்டுரை ”கேரளத்தின் இந்து முஸ்லீம் உறவு ஆரோக்கியமானதாக இல்லை; கவலை அளிக்கிறது; மலையாளி என்ற ஒற்றை இன அடையாளத்தைத் தவிர மதத்தின் வய உணர்வு அதிகப்படுவது எதிர்காலக் கேரளாவின் இருப்பிறகே ஆபத்தானது” என்று கூறுவது அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைகிறது.
கண்ணனின் கட்டுரை, தமிழை உலகத்திற்குக் கொண்டுசெல்லும் அவரின் ஆர்வத்தைக் காட்டுகிறது. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களையும் தமிழ் படைப்புகளையும் உலகறிய எடுத்துச் சொல்லும் முயற்சி பாராட்டுக்குரியது.
சாதிய இணக்கம் பற்றிய இன்றைய நிலையை விளக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை யதார்த்தமானது.
‘தலித் பேந்தர்ஸ் உருவான வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அம்பேத்கரின் கடிதங்கள் முதலான எழுத்துகளை நூலாகச் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சி களையும் தெளிவாக வரலாற்றுப் பின்னணியோடு எடுத்துக் கூறிய ஜெகநாதனின் ‘25 ஆண்டுக் காத்திருப்பு’ கட்டுரையின் செய்திகள் பலரும் அறியாதது.
கு. முத்துசாமியின் ‘அன்றும் இன்றும்: பொறுப்பும் துறப்பும்’ கட்டுரை கற்றல், கற்பித்தலின் அன்றைய போக்கையும் இன்றைய போக்கையும் பல சான்றுகளோடு விளக்கி நிற்கிறது. கல்வி உயிர்ப்புடனும் பரந்து விரிந்து பயன் தரவும் ஆவணசெய்ய வேண்டிய கடமை அரசின் கல்வியாளர்கள் கையில்தான் உள்ளது என்று முடிக்கும்போது அவரது கவலை வெளிப்படுகிறது. அரசின் கல்வியாளர்கள் செய்வார்களா! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
‘மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி’ எனும் உமா மகேஸ்வரியின் கட்டுரை மகிழ்ச்சியான கற்றல் முறையின்றி, மாணவர்க்கு உளவியல் சிக்கலை உருவாக்கும் பாடத்திட்டம் பற்றியும் கூடுதல் சுமைகளை ஆசிரியர்கள்மீது அரசு திணிக்கும் போக்கையும் தமிழ்வழிக் கல்வியை விட்டு விலகி நிற்கும் இன்றைய கல்விச் சூழலையும் விளக்கி அரசுக்குச் சில ஆலோசனைகளையும் வழங்குவதாய் அமைவது சிறப்பு. அருணா ரத்னம், தி. பரமேசுவரி, ஜே.ஆர்.வி. எட்வர்ட், த. கண்ணன், பாலபாரதி, மு. இராமனாதன் ஆகியோரின் கட்டுரைகள் கல்விப் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற கவலையை வெளிப்படுத்துவதாக அமைந்தன.
சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘அம்மாக்களும் மகள்களும்’ கட்டுரை இருவரும் இந்திய, சீன எழுத்தாளர்களின் சுயசரிதை நூல்களை அறிமுகம் செய்யும் போக்கில் அமைகிறது.
கா. ஆபத்துக்காத்த பிள்ளை
கன்னியாகுமரி
சிறப்பு பகுதி ‘கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு?’ கற்றல், கற்பித்தல், சவால்கள்பற்றி 10 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு கட்டுரையும் கற்றல், கற்பித்தலில் இருக்கும் சவால்கள் இடர்ப்பாடுகள் என்னென்ன என்பதுபற்றி விளக்க மாக எழுதப்பட்டிருந்தன. ‘அன்றும் இன்றும்: பொறுப்பும் துறப்பும்’ கு. முத்துசாமியின் கட்டுரையில் கடந்த கால ஆசிரியர்கள் தங்களது பணியை விரும்பிச் செய்த விதம் பற்றியும் தற்கால ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றியும் மிக அழகாக எழுதியிருந்தார். அவருடைய பணிக்கால அனுபவங்களைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது பயனுள்ளதாக இருந்தது.
சு. உமா மகேஸ்வரியின் கட்டுரையில் அரசு பள்ளியின் கல்வித்தரம், பாடத்திட்டம், பாடநூல்கள் சுமை, ஆசிரியர் மாணவர் உறவு, ஆசிரியர்களுக்குக் கல்வி பணியைத் தவிரப் பிற பணிகள் ஒதுக்குவது, காலை உணவுத்திட்டம், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் என்று அரசுப் பள்ளிகளில் மகிழ்ச்சியான கற்றலுக்கு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்பற்றி விளக்கியிருந்த விதம் பாராட்டத்தக்கது.
‘தரையில் நடக்கும் தண்ணீரில் நீந்தும்’அருணா ரத்னத்தின்அனுபவங்கள், பண்டைய கல்வி முறை, நவீன கல்வி முறை, மாணவர் பெற்றோர் அனுபவங்கள் எனக் கல்வி வரலாறு உள்ளிட்ட அனைத்தும் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது சிறப்பு. ‘கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவோமா? ‘தி. பரமேசுவரியின் கட்டுரையில் கற்றல் சுதந்திரமாகவும் படைப்பாற்றலுடனும் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவும் இயற்கை யோடு இணைந்து நிகழ வேண்டும் என்பது பற்றிப் பல்வேறு புள்ளிவிவரங்களோடு விளக்கியிருந்தார்.
‘பிழையான முடிவு’ ஜே.ஆர்.வி. எட்வர்ட் 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்ன காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டது? இதனால் மாணவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது பற்றியும் எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் எவ்வாறு மற்றைய தேர்வுகளை எதிர்கொள்வார்கள் என அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘தொலைந்துபோகும் குழந்தைமை’ கட்டுரையில் இன்றைய கல்வி உலகம் எப்படி இருக்கிறது? குழந்தையின் இயல்புத்தன்மை எவ்வாறு மழுங்கடிக்கப்படுகிறது என்பதையெல்லாம் உளவியல் பூர்வமாகக் குழந்தைகளின் மனநலன் சார்ந்து மிக அழகாக விளக்கியிருந்தார் அகிலா.
த. கண்ணனின் ‘சாத்தியங்களும் சறுக்கல்களும்’ மாற்றுக் கல்விக்கான தேவை, மாற்றுப்பள்ளிகள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவைபற்றி விரிவாகத் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்.
‘பூப்பறிக்கக் கோடறியா?’ யெஸ். பாலபாரதி கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய கற்றல் செயல்பாடுகள் பற்றியும் தேர்வு அச்சத்தை மாணவர்கள் மனதில் விதைக்காமல் இருக்க வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்த விதம் சிறப்பு.
‘சுய கல்வியை நோக்கி... ‘சா. விஜயகுமாரின் கட்டுரையில் ஜப்பானியக் குழந்தை வளர்ப்பு முறை, குடிமைப் பண்பை வளர்ப்பதற்காக மேற்கொள்ளும் செயல்பாடுகள், சுயகற்றலைத் தூண்டும் ஆரம்பக் கல்வி, ஆசிரியர்களை உள்ளடக்கிய மதிய உணவுத் திட்டம் என ஜப்பானியக்கல்வி முறையில் இருக்கும் சிறப்பான அம்சங்களையில் குறிப்பிட்டு ஆச்சரியப்படச் செய்துவிட்டார்.
‘ஆசிரியர்களின் பொறுப்பு’ மு. இராமநாதன் மாணவர்களின் கல்வித் தரத்திற்கு ஆசிரியர்களே முழு பொறுப்பானவர்கள் எனவும் ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் பணியைத் தவிர, பிற பணிகள் எதுவாக இருந்தாலும் மாணவர்களின் கல்வித் தரத்தைப் பொருத்தவரை முழுக்க முழுக்க ஆசிரியர்கள்தான் உறுதிசெய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு?’ கற்றல் ,கற்பித்தல், சவால்கள் சிறப்புப் பகுதியில் வெளிவந்திருக்கும் பத்துக் கட்டுரைகளும் படித்துப் பாதுகாக்க வேண்டிய அற்புதமான கட்டுரைகள்.
கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி
‘கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு?’கட்டுரைகள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் போராட்டங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதோடு, அவர்களோடு இணைந்து தோள் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது. மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் ஒரு நாட்டில் எல்லா துறைகளிலும் போதுமான அளவிற்குத் தகுதியான ஆட்கள் இல்லையென்று புலம்புவதை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. தகுதியானவர்கள் குறைவா? இல்லை அவர்களுக்கு வழங்க ஊதியம் இல்லையா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
கட்டுரையாசிரியர்களால் பேசப் படாத ஒரு விசயம் அவர்களுக்கு வழங்கும் ஊதியம். பணி என்பது ஊதியத்தையும் உள்ளடக்கியதுதானே! 7ஆவது ஊதியக் குழுவின் நடைமுறைக்குப் பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இதை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களின் மனம் தயாராக இல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. இன்றும் தனியார் நிறுவனத்தில் பணியை ஆரம்பிக்கும் ஒரு மென்பொறியாளரின் ஆரம்ப ஊதியம் பத்தாயிரத்துக்கும் உட்பட்டே இருக்கிறது. பெருநகரங்களிலும்கூட இவ்வளவு குறைவான ஊதியம் பெறுபவர் குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமாக வேலைசெய்ய வேண்டியுள்ளது.
ஆனால் ஒரு கிராமத்தில் பணிபுரியும் ஆசிரியர் பெறும் ஊதியம் அவரின் தேவைக்கும் அதிகமாகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த உபரிப் பணமே மற்ற வேலைகளுக்கும் காரணமாக இருக்கலாம். தங்களின் தேவையைவிட அதிகமாக ஊதியம் பெறுபவர்கள் கற்றல் வேலைகளிலாவது அதிகப்படியான நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பது தவறென்று தோன்றவில்லை. கற்பித்தலைத் திறம்படச் செய்யாத ஒன்றிரண்டு ஆசிரியர்கள் (சேவையாகக் கருதாமல் ஊதியத்தை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படுபவர்கள்) வேறு துறைக்கு மாற்றப்படும் சூழ்நிலை இருக்குமானால் அவர்கள் இன்னும் திறம்படச் செயலாற்றுவார்கள் என்பது உறுதி.
இந்திய அஞ்சல் துறை பின்பற்று வதைப் போலக் கிராமங்களில் பணிபுரிய அந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் ஊதியம் வழங்கப்பட்டுக் கற்றல் தவிர்த்த மற்றப் பணிகளுக்குப் பணியாளர்களை நியமித்தால் ஆசிரியர்களின் கவனம் கற்பித்தலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். திறன் பேசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் ஆசிரியர்களும் அவற்றை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் குழந்தைகளோடு சேர்த்துப் பயன்படுத்தும் வகையில் பயிற்றுவிக்கப்பட வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
சி.சு. ஜெகன்நாதன்
பெங்களூரு.
