பெருமழை பெய்தபோதும்
மதுரையில் செப்டம்பர் 5 தொடங்கி 15வரை புத்தகக் காட்சி நடந்தது. பொதுவாக இவ்வாறு நடைபெறும் புத்தகக் காட்சிகளை ஒட்டிக் காலச்சுவடு பதிப்பகம் புதிய நூல்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்தப் புத்தகக் கண்காட்சியின்போது ஆறு நூல்களின் வெளியீட்டு விழாவினை 10.09.2025 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உரைகல் ஆய்வாளர் மன்றத்தோடு இணைந்து அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
உரைகல் ஆய்வாளர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜோ. பிரின்ஸ்ஸின் வரவேற்போடு தொடங்கிய இந்நிகழ்வில் காலச்சுவடு இதழில் வெளியாகி ஊ. முத்துப்பாண்டி தொகுத்த கறுப்பிலக்கியப் பதிவுகள் அடங்கிய முதல் தொகுப்பான ‘இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான்’ நூல் வெளியிடப்பட்டது. ம. செங்கோல் மேரி பெற்றுக்கொண்ட நூலை நவீனா அமரன் வெளியிட்டுப் பேசினார்.
கறுப்பின அரசியல் சமூகம் பற்றிய காலச்சுவடு பதிவுகளைக் கொண்ட தொகுப்பான ‘8 நிமிடங்கள், 46 விநாடிகள், 16 அலறல்கள்’ நூலை ஜோயல் பெற்றுக்கொள்ள கார்த்திக் ராமச்சந்திரன் வெளியிட்டுப் பேசினார். காலச்சுவடு ஒரு இதழாக கறுப்பிலக்கியம் சார்ந்து வெளியிட்டு வந்திருக்கும் அக்கறையை இத்தொகுப்புகள் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய இருவரும் இவற்றை ஒருசேரத் தொகுத்துப் பார்ப்பதிலுள்ள சாதக அம்சங்களைத் தமது உரைகளில் பகிர்ந்துகொண்டனர்.
அரவிந்தன் அண்மைச் சிறுகதைகளின் தொகுப்பான நூல் ‘புதைமணல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் ஞா. குருசாமி வெளியிட கவிஞர் அன்புவேந்தன் பெற்றுக்கொண்டார். அரவிந்தன் கதைகளின் சமகாலத் தன்மைகளைத் தொட்டுக்காட்டிய குருசாமியின் உரை அசோகமித்திரன் கதையுலகத்தோடு அரவிந்தன் கதைகள் கொண்டுள்ள தொடர்பினையும் சுட்டிக்காட்டியது.
சுபேந்திரா எழுதி இல. சுபத்ரா தமிழில் மொழி பெயர்த்துள்ள ‘ராணி வேலு நாச்சியார்: சிவகங்கையின் சாகச அரசி’ நூலை க. ரேவதி பெற்றுக்கொண்டார். வரலாறு சார்ந்து சமகாலத்தில் உருவாகியிருக்கும் முரண்பட்ட நிலைகளிலிருந்து விலகி, புனைவின் சாத்தியத்திற்குட்பட்டு வேலு நாச்சியாரின் வரலாற்றை இந்நூலாசிரியர் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார் நூலை வெளியிட்ட ச. தமிழ்ச்செல்வன்.
தமிழ் ஆளுமைகள் குறித்து ஜெ. சுடர்விழி எழுதிவந்த கட்டுரைகள் ‘இங்கிவரை நாம் பெறவே’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. முனைவர் அ. மோகனா வெளியிட்ட நூலை ஸ்டாலின் ராஜாங்கம் பெற்றுக்கொண்டார். ஆளுமைகள் பற்றிய தகவல்களைத் துலக்கமாக வெளிப்படுத்த சுடர்விழி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைத் தன் உரையில் விரிவாக எடுத்துரைத்தார் அ. மோகனா.
காலச்சுவடு பதிப்பகம் ‘அம்பேத்கர் கடிதங்கள்’ நூலை ஏற்கெனவே வெளியிட்டிருக்கும் நிலையில் அதன் இரண்டாம் தொகுதி ‘உரிமைப் போராட்டத்தின் சுவடுகள்: அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது (மொழிபெயர்ப்பு சிவசங்கர் எஸ்.ஜே., பதிப்பாசிரியர் அ. ஜெகநாதன்). நூலினை எவிடன்ஸ் கதிர் பெற்றுக்கொள்ள ஜெ. சுடர்விழி வெளியிட்டுப் பேசினார். எவிடன்ஸ் கதிர் தன் வாழ்வனுபவத்திலிருந்து இலக்கியத் தருணங்களைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டுப் பேசினார். அம்பேத்கர் கடிதங்களின் முதல் தொகுதியைத் தொட்டுக் காட்டிய சுடர்விழி இந்த இரண்டாவது தொகுப்பில் அவரின் இடைவிடாத அரசியல் போராட்ட அனுபவங்கள் பதிவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். பெருமழை பெய்தபோதும், மாணவர்களும் பார்வையாளர்களும் கணிசமான அளவில் நிறைந்திருந்த இந்தக் கூட்டம் புத்தக ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.