எளியோர் வரலாற்றை எழுதியவர்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டையொட்டி சாகித்திய அகாதெமியும் மதுரை அருள் ஆனந்தர் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து 2025 செப்டம்பர் 03, 04 ஆம் தேதிகளில் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துகளைப் பற்றிய கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. கல்லூரி முதல்வர் ம.அன்பரசு, சே.ச., தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் இரா. தாமோதரன் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். ராஜம் கிருஷ்ணன் எழுத வந்த காலம், அவரது எழுத்துகளுக்கு இருந்த தேவை ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், ராஜம் கிருஷ்ணனின் எழுத்துகள்மீது விரிவான ஆய்வு நிகழ வேண்டும் என்றார். கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டது. சாகித்திய அகாதெமி நடத்திய கருத்தரங்க வரலாற்றில் அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுக் கருத்தரங்க நாளன்றே நூலாக வெளியிடப்படுவது இதுவே முதல்முறை என்று குறிப்பிட்டார். கல்லூரி அதிபர் சி. பேசில் சேவியர், சே.ச., செயலர் அ. அந்தோணிசாமி, சே.ச., ஆகியோர் வாழ்த்துரைத்தார்கள்.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எழுத்தாளர் வ. கீதா, ராஜம் கிருஷ்ணன் தனது இறுதிக் காலத்தில் எழுதிய ‘வனதேவியின் மைந்தர்கள்’, ‘உத்தரகாண்டம்’ ஆகிய நாவல்களை மையப்படுத்திப் பேசினார். ராமாயணப் பிரதிகள் மீதான ராஜம் கிருஷ்ணனின் மறுவாசிப்பை விவரித்த கீதா, அதன்வழி வெளிப்படும் ராஜம் கிருஷ்ணனின் தனித்துவத்தை எடுத்துரைத்தார்.
கருத்தரங்கின் ஆறு அமர்வுகளிலுமாக எஸ். தோதாத்ரி, ஸ்டாலின் ராஜாங்கம், கார்த்திக் புகழேந்தி, சமயவேல், கார்த்திகைப் பாண்டியன், அரங்க மல்லிகா, சு. கணேஷ், ந. இரத்தினக்குமார், கி. மாரியம்மாள், தி.கு. இரவிச்சந்திரன், சுப்பிரமணி இரமேஷ், சு. இளங்கோ, அ. மோகனா, எஸ்.செந்தில்குமார், ம. அன்பரசு, நட. சிவகுமார், லட்சுமிஹர் ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள்.
எஸ். தோதாத்ரி ராஜம் கிருஷ்ணனின் எழுத்து முறையியல் குறித்துப் பேசினார். தகவல்களைத் திரட்டுதல், பொருண்மை வாரியாகப் பிரித்தல், பாத்திரங்களை உருவாக்கித் தொகுத்து எழுதுதல் இவரது முறையியலாக இருந்தன. ராஜம் கிருஷ்ணன் பிறந்து வளர்ந்த சூழலை விட்டுவிலகி முற்றிலும் புதிதான உலகத்தை எழுதிப்பார்த்தார் என்றார். ஸ்டாலின் ராஜாங்கம் ‘டாக்டர் ரங்காச்சாரி’, ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’, ‘பாதையில் பதிந்த அடிகள்’ ஆகிய நூல்களில் உள்ள வரலாற்று அணுகுமுறைகளை விவரித்தார். வரலாற்றை ராஜம் கிருஷ்ணன் பார்த்த விதம் ஏனையோர் பார்வைகளிலிருந்து வேறுபட்டிருந்ததைக் குறிப்பிட்டார். கார்த்திக் புகழேந்தி தமது உரையில் ராஜம் கிருஷ்ணன், ‘பெண் முடக்கப்பட்ட சூழலில், அவளின் ஊற்றுக் கண் திறக்கப்பட வேண்டும் என்று விரும்பியவராகவும் சந்தையில் விலைபோகாதிருங்கள், தைரியமாகப் போராட முன்வாருங்கள், உங்களை நீங்களே அரசியல்படுத்துங்கள்’ என்று பெண்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்ததாகக் குறிப்பிட்டார்.
‘கரிப்பு மணிகள்’ நாவலின் உப்பு மனிதர்கள் குறித்துப் பேசிய சமயவேல், உப்பளங்களில் உழைக்கும் மகளிர் மீதான பாலியல் சுரண்டலின் ஆதி வடிவத்தையும் பொருளாதாரப் பாதுகாப்பில்லாமல் ஆரோக்கியமற்ற பணிச் சூழலில் அவர்கள் சிக்கியிருப்பதையும் கண்டு திகைத்து ராஜம் கிருஷ்ணன் கரிப்பு மணிகளை எழுதியிருப்பதாகச் சொன்னார். கார்த்திகைப் பாண்டியன் சமகால மனிதர்களையும் தன்மையையும் ராஜம் கிருஷ்ணனின் சிறுகதைகளில் பொருத்திக் காட்டினார். அரங்க மல்லிகா ‘வேருக்கு நீர்’, ‘ஓசைகள் அடங்கிய பிறகு’ நாவல்களைப் பெண், பெண்மை, பெண்ணிய அரசியல் என்னும் நிலைகளில் கோட்பாட்டை வைத்து விவரித்தார். பெண்ணியக் கோட்பாடு சார்ந்து ராஜம் கிருஷ்ணனை வாசித்துப் பார்ப்பதற்கான மாதிரியாக அவரது உரை அமைந்தது. ‘அலைவாய்க் கரையில்’ நாவலில் நெய்தல் நிலம் ஒரு கதாபாத்திரமாக இருப்பதையும் நிலத்துடனான மாந்தர் உறவை ராஜம் கிருஷ்ணன் புனைவாக்கியிருக்கும் படிநிலையையும் சு. கணேஷ் பேசினார். படுகரின் வாழ்வியலைப் பேசும் ‘குறிஞ்சித்தேன்’ நாவலை இனவரைவியல் நோக்கில் அணுகுவதாக ந. இரத்தினக்குமாரின் உரை அமைந்தது.
‘வீடு’ நாவலின் கதைப் போக்கை இந்தியப் பெண்களின் சமகாலச் சூழலைக் கொண்டு விளக்கினார் கி. மாரியம்மாள். ராஜம் கிருஷ்ணன் பிற்காலத்தில் பெண் விடுதலைக்கு ஆணின் பங்களிப்பும் அவசியம் என்னும் நிலைப்பாட்டுக்கு வந்தடைந்ததை கார்ல் யூங் (Carl Jung) கூறுகின்ற அனிமா- அனிமஸ் இணக்கத்தோடு பொருத்தி விளக்கினார் தி.கு. இரவிச்சந்திரன். வட்டார அளவிலான வரலாற்றியலில் கூடக் கவனம் பெறாத மணலூர் மணியம்மையின் வரலாற்றை ராஜம் கிருஷ்ணன் வெளிக்கொண்டுவருவதற்கு எடுத்துக்கொண்ட சிரத்தைகளையும் அவரின் சமகால அரசியல் இயக்கங்கள் மீது அவர் வைத்த விமர்சனங்களையும் விளக்கினார் சுப்பிரமணி இரமேஷ்.
சிக்மண்ட் ஃபிராய்டின் அணுகல்முறையை அடிப்படையாகக் கொண்டு பேசிய சு. இளங்கோ, ராஜம் கிருஷ்ணன் தம்முடைய எழுத்துகளின் வழி தன்னலமற்ற, பொதுநலம் கலந்த பிறருக்காகவே வாழுகின்ற வாழ்க்கையைக் கொண்ட மாந்தர்களை உருவாக்கி, பண்பாட்டு விழுமியங்களின் படைப்பு உலகினை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தேர்ந்தெடுத்த சில நாவல்களின் வழி உழைப்பு, நிலம், விடுதலை ஆகியவை குறித்த ராஜம் கிருஷ்ணனின் அபிப்பிராயங்களையும் தொழிலாளர்கள் சங்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அவசியத்தின் உணர்த்துதல்களையும் அ. மோகனா எடுத்துரைத்தார். எஸ். செந்தில்குமார் ‘பாரதி செல்லம்மா’ நூல் வழி ராஜம் கிருஷ்ணனின் வரலாற்று நோக்கையும் தரவுகளின் வழி எழுதப்படும் புனைவின் தனித்தன்மையையும் எடுத்துரைத்தார்.
ராஜம் கிருஷ்ணனின் நாவல்கள் பெற்ற கவனத்தின் அளவுக்கு அவரது கட்டுரைகள் கவனிக்கப்படவில்லை என்றும், அதேசமயம் அவர் கட்டுரைகளில் பேசிய விஷயங்களின் நுட்பமான அரசியலையும் அன்பரசு பேசினார். தஞ்சை வட்டார வயல்களில் பெரும் உழைப்பினைத் தந்துகொண்டிருக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல், நம்பிய மனிதர்களாலும் அரசியல் கட்சிகளாலும் இழைக்கப்படும் துரோகம் ஆகியவற்றை நட. சிவகுமார் ‘சேற்றில் மனிதர்கள்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு விவரித்தார். பெரும்பாலான உரைகள் நாவலை மையமிட்டு மட்டுமே அமைந்திருக்க, கார்த்திகைப் பாண்டியன், லட்சுமிஹர் ஆகியோர் சிறுகதைகள் குறித்துப் பேசினார்கள். ராஜம் கிருஷ்ணனின் கதைத் தன்மையையும் அவற்றின் சமகாலம் சார்ந்து வாசிக்க வேண்டிய அணுகுமுறைகளையும் விளக்குவதாக லட்சுமிஹரின் உரை அமைந்தது.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன், தம்முடைய உரையில் உள்ளூர் வரலாற்று ஆவணங்களின் முக்கியத்துவத்தையும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வரலாற்றின் சரித் தன்மையைச் சோதிப்பதில் அதனுடைய பங்களிப்பையும் சுட்டிக்காட்டியதோடு, ராஜம் கிருஷ்ணனின் நாவல்களில் அடங்கியிருக்கும் களத்தகவல் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதற்குத் துணையாக இருப்பதையும் குறிப்பிட்டார். கருத்தரங்கத்தைத் தமிழ்த்துறைத் தலைவர் ஞா. குருசாமி ஒருங்கிணைத்திருந்தார். அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, பத்துக்கும் மேற்பட்ட சுற்றுப்புறக் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மின்னஞ்சல்: jeyaseelanphd@yahoo.in