சொல்லேர் உழவர்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் இயற்கை வேளாண்மை ஆர்வலருமான ஆர்.எஸ். நாராயணன் என்ற ஆர். சங்கர நாராயணன் செப்டம்பர் ஏழாம் தேதி திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறையில் காலமானார். மன்னார்குடியில் பிறந்தவர். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பொருளியலில் பட்டம்பெற்றவர். தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் பணியாற்றியவர். ஆரம்ப நாட்களில் இடதுசாரிச் சிந்தனையில் ஈடுபாடுகொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் டி.டி. கோசம்பியின் ‘The Culture and Civilization of Ancient India- A Historical Outline’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘பண்டைய இந்தியா, பண்பாடும் நாகரிகமும்’ என்ற இந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பு, இந்திய வரலாறு சார்ந்து இடதுசாரிப் பார்வைகொண்ட வரலாற்று நூல்களின் மொழிபெயர்ப்புகள் தமிழில் தொடர்ந்து வெளிவருவதற்குப் பாதை அமைத்துக்கொடுத்தது.
சோரான் ஜுர்ஃபெல்ட், ஸ்டஃபான் லிண்ட்பெர்க் இருவரின் ‘Behind Poverty, The Social formation in a Tamil Village’ என்ற ஆய்வு நூலையும் தமிழாக்கித் தந்துள்ளார் (தமிழ் தலைப்பு: வறுமையின் பின்னணி ஒரு தமிழ் கிராமத்தின் சமூக உருவாக்கம்) இதே காலகட்டத்தில் அவர் சுந்தர ராமசாமி ஆசிரியராக இருந்த காலச்சுவட்டில் எஸ்.ஆர்.என். சத்யா என்ற பெயரில் சில கட்டுரைகளும் எழுதினார்.
நாராயணனின் ஆர்வம் பின்னர் படிப்படியாக இந்தியச் சிந்தனை, வாழ்க்கை முறை, இயற்கை வேளாண்மை இவற்றை நோக்கித் திரும்பியது. அலுவலகரீதியாக அவர் மேற்கொண்ட களப் பயணங்கள் தமிழகத்தில் வேளாண்மையும் விவசாயிகளும் எதிர்கொண்டு வரும் சவால்கள், மண் வளக் குறைபாடு, வேதிப்பொருட்களின் மிகைப் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றை உணரச்செய்து. செயலார்வமும் இலட்சிய நோக்கும் கொண்ட அவரை இயற்கை வேளாண்மையில் ஈடுபாடு கொள்ளவைத்தது. இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் அவர் இந்த இலட்சியத்திற்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்டார். இயற்கை வேளாண்மை, உடல்நலம், வேளாண் பொருளாதாரம் சார்ந்த சிறு நூல்களை எழுதினார். தினமணி போன்ற இதழ்களில் கட்டுரைகளும் எழுதிவந்தார். இவரது இரு நூல்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றன. பரந்த வாசிப்பு கொண்ட ஆர்.எஸ். நாராயணன் சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பணி ஓய்விற்குப் பிறகு காந்திகிராமம் அருகிலுள்ள அம்பாத்துறையில் குடியேறி இயற்கை வேளாண்மை ஆலோசகராகவும் செயல்பாட்டாளராகவும் சேவையாற்றிவந்தார்.