நனவிலி பிம்பங்கள்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
இப்போதெல்லாம் எனக்கு வீட்டினுள் பலர் உலாவுவதாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. கடந்த வருடங்களில் இல்லாத எதுவோ ஒன்று பிடித்து ஆட்டுவிக்கத் தொடங்கியதன் அறிகுறியாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. மகளிடம் சொல்லலாம்தான். அவள் என்ன பதிலுரைப்பாள் என்பதையும் கூடவே ஊகிக்கத் தொடங்கிவிடுகிறது மனம். பதின்மங்களில் இருக்கும் மகளிடம் என்ன சொன்னாலும், அது தலைமுறை இடைவெளியால் கேலிக்கு ஆளாகுமென அறிந்ததுதானெனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்வதும் வழக்கமானதாகிப்போனது. வீட்டிலிருந்தே பணி செய்யும் உத்தரவு அலுவலகத்திலிருந்து வந்தது. சில வருடங்களாக வீட்டில் பணி செய்யும் நிலை வந்தது அனைவரையும்போல வரமென நினைத்திருந்தேன். வெளியே செல்லப் பயந்த நடுக்கத்தைத் தொலைக்காட்சித் திரை தீர்க்கப்பார்த்தது. மகிழ்ச்சிக்கான சிறிய குலாமை வீட்டினுள் அது உருவாக்கியதென