உயிரின் வாதை
கடலின் நீண்ட இதழ்
(நாவல்)
இசபெல் அயேந்தே
ஸ்பானிஸிலிருந்து தமிழில்: சுபஸ்ரீ பீமன்
காலச்சுவடு பதிப்பகம்,
669, கேபி சாலை, நாகர்கோவில்-1
பக். 392
ரூ. 500
நவீன இலக்கியம் குறித்துப் பேசுகிறபோது, ஐரோப்பிய மொழிகள் வரிசையில் ஸ்பானிய மொழியின் பங்களிப்பு பிரதானமானது. அதற்குப் பல காரணங்கள். ‘லார்கோ பெட்டயோ தே மேர்’ அல்லது ‘கடலின் நீண்ட இதழ்’ எனும் இந்த நாவல், புகழ்பெற்ற தென் அமெரிக்க எழுத்தாளர் இசபெல் அயந்தேவின் படைப்பு. நாவல்கள், சிறுகதைகள், சிறுவர்க்கான நூல்கள் எனப் படைத்துள்ள இசபெல் அயந்தே, ஏனைய தென் அமெரிக்க எழுத்தாளர்களைப் போலவே மாய யதார்த்தத்தையும் விட்டுவைத்தவரல்லர். நாவலை ஸ்பானிய மொழியிலிருந்து சுபஸ்ரீ பீமன் சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார்.
“இது ஒரு நாவல், ஆனால் மக்களும் வரலாற்று நிகழ்வுகளும் உண்மையானவை. கதாபாத்திரங்கள் கற்பனையானவை, எனக்குத் தெரிந்தவர்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு புத்தகத்திற்கும் நான் எப்போதும் செய்யும் முழுமையான ஆராய்ச்சியை இந்தப் புத்தகத்திற்குச் செய்தபோது எனக்கு நிறைய விஷயங்கள் கிடைத்ததால் கதைக்குத் தேவையான கற்பனை மிகக் குறைவாகவே தேவைப்பட்டது. இந்தப் புத்தகம் எனக்கு ஆணையிட்டதுபோலத் தன்னைத்தானே எழுதிக்கொண்டது.”
நாவலின் இறுதியில் ‘நன்றி’ என்கிற தலைப்பில் நூலாசிரியர் இசபெல் எழுதியுள்ள குறிப்பில் இடம்பெற்றுள்ள வரிகள் மேற்கண்டவை. இந்நாவலை மனமொன்றி நான் வாசிக்க நேர்ந்தற்குக் காரணம், இசபெல் அயந்தே என் கட்சிக்காரர்.
கலையும் இலக்கியமும் விமர்சனக் கருவிகள். படைப்பாளுமைகள் தங்கள் படைப்பின் ஊடாக அது தொழிற்படும் காலத்தின் மனிதர்களை, அவர்கள் அரசியல், சமூகப் பண்பாடுகளை, உற்ற சுகங்களை, பட்ட இன்னல்களை அவற்றை ஆழமாக அறிந்திராத, தெரிந்திராத பிற மனிதர்களுக்குப் பரிமாறுகிறார்கள்; விளங்கச் சொல்கிறார்கள். வாசிப்பவரும் இரசிகரும் அவரவர் இரசனைக்கேற்பப் புரிந்துகொள்ளட்டும் என்பது அவர்கள் நோக்கு.
ஒரு படைப்பை, அதனைப் படைத்த கலைஞரை முன் நிறுத்துவது படைப்பின் தனித்தன்மை, கதைசொல்லும் உத்தி, கதைமாந்தர்கள் ஊடாகப் படைப்பு தன்னை எழுதிக்கொள்ள அனுமதிக்கும் படைப்பாளியின் கலைநுட்பம் ஆகியவை. 1938-1994, ஸ்பெயின்-சிலி, பிரான்சிஸ் ஃபிராங்க்கோ- அகஸ்ட்டோ பினோஷெ, தீவிர இடதுசாரிகள்-தேசியவாத பாசிஸ்டுகள் என்கிற அரசியல், புவியியல் கூறுகள் ஆட்டுவிக்க, வினைப்பயனால் ஒன்றிணைந்த விக்டர் தல்மாவ்-ரோஸர் ப்ருகுவேரா என்கிற வினோதமான தம்பதியினரைப் பின் தொடரும் சரித்திரப் புனைவு, ‘கடலின் நீண்ட இதழ்.’
ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போருக்கு முன் முப்பதுகளில் ஊற்றெடுத்த தேசியவாத பாசிசம் ஸ்பெயின் நாட்டையும் பாதித்தது. விளைவாக, ஸ்பெயின் நாட்டில் 1936ஆம் ஆண்டு இடது சாரிகளின் மக்கள் முன்னணி அமைப்பின் குடியரசு ஆட்சி, இராணுவக் கிளர்ச்சிக்குப் பலியாகிறது, பின்புலத்தில் தேசியவாதிகள் என்ற பெயரில் பாசிஸ்டுகள். வழக்கம்போல பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக அண்டைநாடுகளில் தஞ்சம் அடைகின்றார்கள். பாசிசத்தை நேரடியாகவும் திரைமறைவிலும் எதிர்த்த மனிதர்களோ, இடதுசாரி அரசியல் கோலோச்சும் முன்னாள் ஸ்பெயின் காலனிகளாகவிருந்த தென்னமெரிக்க நாடுகளை நோக்கி பயணிக்கிறார்கள். அந்நாடுகளில் பரவலாக வழக்கிலிருந்த ஸ்பானிய மொழியும் பண்பாடும் தங்களைத் தாங்கும் என்ற அவர்களின் நம்பிக்கை கைகொடுத்ததா என்பதை அவர்களில் ஒருவராகப் பயணித்துக் கதை சொல்கிறார் இசபெல் அயந்தே.
கதையின் தொடக்கம் 1938. ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் மும்முரமாக நடந்த நேரம். வழக்கம்போல அதிகாரக் கைகளின் ஆயுதங்களுக்குப் பலியாவது அப்பாவி மக்கள். நாவல் வாசிப்பவர்களுக்குக் களத்தில் நிற்பதைப் போன்ற உணர்வு. கதைநாயகன் மருத்துவன், அவன் பணியூடாக யுத்தமென்கிற கொள்ளைநோயின் தாண்டவத்தை விவரிக்க வேண்டும். ஆசிரியரின் எழுத்தாளுமை தேவையற்ற வார்த்தை அலங்காரங்களின்றி அக்காட்சியைச் சித்தரிக்கிறது.
போரின் கடுமையான சூழலில் பரிமாறிக் கொள்ளப்படும் உரையாடல்களிலும் யுத்தம் முகம் காட்டுகிறது:
“இந்தப் போர் முடிவடைந்ததும் என்ன செய்யப்போகிறாய் ?”
“இன்னொரு போரைத் தேடிச்செல்வேன். உலகில் போருக்கா பஞ்சம்?”
யுத்தத்தின் விளைவுகளில் ஒன்று, சொந்த மண்ணைப் பிரிதல். சுயநலத்தின் பொருட்டுச் சொந்த நாட்டைப் பிரிதல் என்பது வேறு, அரசியல் நெருக்கடிகளால் பிரிதல் என்பது வேறு. இப்பிரச்சினையில் இரண்டாவது தரப்பினர் எதிர்கொள்ளும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. முடியாட்சிகளின் மோதலில் இதுபோன்ற சங்கடங்களைப் பாமர மக்கள் எதிர்கொண்டார்களா என்பதற்குப் போதிய சாட்சியங்கள் இல்லை, ஆனால் இன்று மக்களாட்சி என்ற பெயரில் நரிகளுக்கு நாட்டாமை என்கிறபோது பொய்யும் புரட்டும் நிகழ்த்தும் சகோதர யுத்தங்களினால் பாமரர்கள் படும் துன்பங்களை விவரிக்க வார்த்தைகள் போதாது.
ஏறக்குறைய நூறு பக்கங்கள் போரினால் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் படும் துன்பங்கள். இசபெல் அயந்தேவின் வரிகளில் அவ்வனுபவத்தை நாமும் பெறுகிறோம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை பங்காளிச் சண்டையில் பாதித்தபோது, புலம்பெயர வேண்டியிருந்த அனேகர் இத்தடத்தில் நடந்து சோர்ந்தவர்களே. இத்தகைய நெருக்கடியில், நாவலாசிரியரின் வார்த்தைகளின்படி, “ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் சிலி பின்தங்கிய நாடாக இருந்தாலும் தொலைதூர சொர்க்கமாகவும் அமைதிப் பூங்காவாகவும் அவர்களுக்குத் தோன்றியது.” எனவே கவிஞர் பாப்லோ நெருடாவின் இரக்கத்தினால், சிலி நாட்டிற்கு அகதிகளாகக் குடியேறும் விக்டர் தல்மாவ்-ரோஸர் தம்பதி பின்னர் அங்கேற்பட்ட அரசியல் மாற்றத்தினால், மீண்டும் பாசிசத்தின் பிடியில் சிக்குண்டு துன்பத்தில் உழல்கிறார்கள்.
புற வாழ்க்கைப் பாதை சீரானதாகவோ செப்பனிட்டதாகவோ அமையவில்லை என்கிறபோதும், அக வாழ்க்கையைத் தமது பாசாங்கற்ற பகுத்தறிவு காட்டிய பாதையில் நடந்து பழகியவன் கதைநாயகன் விக்டர் தல்மாவ். அவனது பண்பால் அவனோடு கைகோக்கும் மனிதர்களும், இப்புனைவுக்கு மெருகூட்டும் மேன்மக்களாக அமைந்துவிடுகிறார்கள். அந்த உன்னதத்தைத் தமது கற்பனைத் திறனால், எடுத்தாண்ட சொற்களால் கொண்டாடுகிறார் நூலாசிரியர்,
புயலுக்கு நடுவில்
ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்தப் படுகளக் காட்சிகளுக்குக் களிம்புபோல விக்டர் தல்மா – ரோஸர் இணையர் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. அவர்கள் கணவன் மனைவியாக அல்ல, நல்ல நண்பர்கள். சேர்ந்து வாழ்ந்தாலும், பிறர் பார்வையில் பிழைநேர்ந்தாலும் அவரவர் எல்லைக்குள் வலம்வர முயற்சிக்கிறார்கள். இதை எழுத்தில் வடிப்பது எளிதல்ல. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் எனபதைப் புரிந்துகொள்ள நாவலின் பக்கங்கள் 188, 189, 190 உதவுகின்றன. இந்நிலையில், “தெளிந்த கண்கள், வெண்கல நிறம், தாழ்வான ஆடை, பள்ளி மாணவிகள் அணியும் நெத்தியால் புடைக்கப்பட்ட தொப்பியிலிருந்து தப்பித்துக் காற்றில் பறந்த கூந்தல்” என வலம்வரும் ஒஃபேலியா என்கிற பெண்னை விக்டர் எப்படி அலட்சியப்படுத்த முடியும். சந்திப்பு அரிதென்கிறபோதும், சுவாரஸ்யமான கிளைக்கதை. எண்பது வயது விக்டரின் அந்திம வாழ்க்கை அழகு. முதுமையெனும் சருகுப் பருவம் காற்றில் அசைந்தாடும் கோலத்தையும் நாவல் தீட்டுகிறது.
மார்செல் லூயிஸ் தல்மாவ் - கார்மே, தெல்சொலார் இசிட்ரோ - தோன்யா லோரா குடும்பங்களும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் முக்கியக் கதை மாந்தர்கள். கூடுதலாக நாமறிந்த கவிஞர் பாப்லோ நெருடா. இவர்களைத் தவிர ஒஃபேலியா, ஃபெலிபே, எய்டர் இபார்ரா, எலிஸபெத் ஐடன்பென்ஸ், ஹுவானா என்கிற பணிப்பெண், வின்னிபெக் கப்பலெனப் பலரையும் மேடையேற்றிச் சிறப்புசெய்திருக்கிறார் நாவலாசிரியர்.
உலக இலக்கியங்களில் மிகமுக்கியமான படைப் பொன்றைத் தமிழுக்களித்துள்ள மொழிபெயர்ப்பாளர் சுபஸ்ரீ பீமனுக்கு நன்றி. மனநிறைவைத் தந்த வாசிப்பு இது.
மின்னஞ்சல்: nakrish2003@yahoo.fr