தெரு நாய்களும் கடல் ஆமைகளும்
பிரச்சினையை யாரும் தெருவிற்கு இழுத்து வரவில்லை. அது தெருவில்தான் இருந்தது; பெரிதாகவும் இருந்தது. அதனால் நாள்தோறும் பலர் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால் அதைக் குறித்துப் பொதுவெளியில் குறிப்பிடத்தக்க உரையாடல் ஏதும் நிகழவில்லை. இந்தப் பிரச்சினைக்கு மணி கட்டியது ஆகஸ்ட் 31ஆம் நாள் ஒளிபரப்பாகிய ‘நீயா நானா’ நிகழ்ச்சி எனலாம். அதில் நானும் தலை காட்டினேன். அதன் ஒளிப்பதிவின்போதும், ஒளிபரப்பின்போதும், அது இத்துணை வரவேற்பைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து என்னிடம் பேசிய நண்பர்கள் அனைவரிடமும் ஒரு நாய்க் கதை இருந்தது. அவர்களோ அவர்தம் நண்பர்களோ தெரு நாய்களால் துரத்தப்பட்டிருந்தார்கள்; சிலர் கடிபட்டுமிருந்தனர். 25 நபருக்கு ஒரு தெரு நாய் வசிக்கும் தேசத்தில் இதில் வியப்படைய ஒன்றுமில்லை. நாளதுவரை இது ஒரு வெகுமக்கள் பிரச்ச