நீலகேசி
ஓவியம்: செல்வம்
என்றோ எழுப்பப்பட்டுக் கேட்பாரற்றுக் கிடந்த அக்கட்டு மானத்தின் வெளிப்புறத் திண்ணையை அமர்வதற்கேற்றாற்போல் மயிற்பீலியால் சுத்தப்படுத்திவிட்டு நீலகேசி நிமிரும் முன்னே அங்கு வெயில் வந்து அமர்ந்திருந்தது. சூரியன் சிறிதும் அச்சமின்றி அவளுடலில் புகுந்து சற்றுமுன் அவள் அருந்தியிருந்த ஓடை நீரை அருந்தி முடித்திருந்தது. அவள் சமணத் துறவிக்குரிய வெண்ணிற ஆடையை அணிந்திருந்தாள். வறண்ட முகத்தில் பொருத்தியது போன்றிருந்த அழகிய பெரிய கண்கள் எதிலோ சிக்கியிருந்தன. ஒட்டிய கன்னங்களுக்கு மத்தியில் நாசி நீண்டு நிமிர்ந்திருந்தது. உயரமான பருமனற்ற தேகம். அவளின் வெண்ணிறத் தோல் நடைபாதையில் பரவிக் கிடந்த முட்செடிகளின் உராய்தலில் கன்றிச் சிவந்திருந்தது. இங்கிருந்து காம்பிலிக்குக் கிளம்பும்போதும் இதேபோன்ற வெயிற்காலமெனினும் அதன் தாக்கம் இப்போது கூ