பாட்டும் பாராட்டும் வரலாற்றுத் தருணம்
பிராய்லர்ப் பண்ணைகளும் மதிப்பெண் தொழிற்சாலைகளும் பூமியைத் துளைக்கும் ரிக் சர்வீஸ்களும் நாமக்கல்லைச் செல்வத்தில் புரளவைத்திருக் கின்றன; கலைச்செல்வத்தைப் பொருட்படுத்து வதில்லை என்னும் அபவாதத்தை நீக்கும் விதமாக 23.08.2025 சனி அன்று ‘பாட்டும் பாராட்டும்’ விழா நாமக்கல் தங்கம் மருத்துவமனை உள்ளரங்கின் நடுங்கும் குளிர் நிறைந்த மாலையில் அரங்கேறியது.
சங்கீத கலாநிதி விருது பெற்ற டி.எம். கிருஷ்ணாவுக்கும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆ.இரா. வேங்கடாசலபதிக்கும் பாராட்டு விழா; தொடர்ந்து டி.எம். கிருஷ்ணா குழுவின் தமிழிசைக் கச்சேரி. நாமக்கல் தமிழ்ச் சங்கமும் கூடு அமைப்பும் ஒருங்கிணைத்தன.
தமிழ்ச் சங்கச் செயலர் கோ. நாராயணமூர்த்தி திருத்தமான தமிழில் வரவேற்றார். தமிழ்ச் சங்கத் தலைவரும் தங்கம் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் இரா. குழந்தைவேலு கத்தரித்ததுபோலத் தலைமையுரை வழங்கினார். உ.வே. சாமிநாதையரை முன்வைத்துப் பெருமாள்முருகன் எழுதிய பதிப்பியல் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட ‘உ.வே. சாமிநாதையரை ஒதுக்கலாமா?’ நூலைச் (காலச்சுவடு வெளியீடு) சலபதி வெளியிட மருத்துவர் பெற்றுக்கொண்டார். நூல் குறித்துக் கோ. நாராயணமூர்த்தி நல்ல அறிமுகவுரை ஆற்றினார். வேங்கடராமன் என்ற வைணவப் பெயரைச் சாமிநாதன் என்றும் சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரைச் சிவகுருநாதன் என்றும் சின்னச்சாமிப் படையாட்சி என்ற வேலைக்காரரை வீரப்பன் என்றும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாற்றிய அரசியலைப் பற்றிய கட்டுரையை விவரித்தார். நூற்றாண்டு கடந்து தமிழ்ப் பெருமையைக் காட்டும் புறநானூற்றைத் தந்த உ.வே.சா.வைப் பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கலாமா என்ற பெ.மு.வின் கேள்வியின் பின்னுள்ள நியாயத்தை விளக்கினார்.
இரு விருதாளர்களையும் ஒருங்கே பாராட்டிப் பேசிய பழ. அதியமான் ‘சங்கீத கலாநிதி விருது தரவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றார் ஒரு மகாவித்துவப் பெருந்தகை. ஆனால் அவ்விருதை வாங்கவே கூடாது என்பதற்காக எல்லாக் காரியங்களையும் செய்தவர் கிருஷ்ணா’ எனத் தொடங்கினார். அவரை இசை அறிஞர் என்பதற்காக மட்டும் பாராட்டவில்லை. மிருதங்கம் செய்யும் ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றிக் கவலைப்பட்ட ஒரே இசைக்கலைஞர் அவர். துன்பப்படுபவர்களுக்கு இளைப்பாறுதல் தருபவர். அக்கிரகாரத்தில் பிறந்த அதிசயப் பிறவி என்று வ.ரா.வை அறிஞர் அண்ணா அழைத்தார். அந்த வரிசையில் ஞாநியும் பின்னர் டி.எம். கிருஷ்ணாவும் வருகிறார்கள் என்று வ.ரா.வின் வரிசையில் வைத்துக் கிருஷ்ணாவைப் பழ. அதியமான் பாராட்டினார்.
‘கலைக் களஞ்சியத்தின் கதை’ என்ற சிறு நூலுக்காகப் பெரும் உழைப்பை நல்கியவர் ‘ஜலபதி’. இருபது ஆண்டுகளாகத் தொகுத்த குறிப்புகளைக் கொண்டு ஆறு மாதத்தில் திறமான மூன்று நூல்களை வெளியிட்டவர் என்று ஆ.இரா. வேங்கடாசலபதிக்குப் புகழ்மாலை சூட்டினார் பழ. அதியமான். காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலைப் பார்க்க நண்பர்கள் சென்றோம். அங்கு ஊரெல்லாம் கோயில். தெருவெல்லாம் கோயில். உடன் வந்த நண்பர் இந்த ஊரில் தடுக்கி விழுந்தால் கோயிலாக இருக்கிறதே என்றார். அப்போது சலபதி ‘தடுக்கறதே கோயில்தானே’ என்று சொன்னதையும் அதியமான் குறிப்பிட்டார்.
மயிலாப்பூர் மனோபாவம்
டி.எம். கிருஷ்ணா குறித்த அரவிந்தனின் உரை ஆழமான கட்டுரைச் சாயலில் இயல்பாக இருந்தது. தன்னை அவ்வுரை கண்கலங்கச் செய்ததாகப் பெருமாள்முருகன் கூறினார். மயிலாப்பூர் மனோபாவத்திற்கு எதிராகச் செயல்பட்ட கிருஷ்ணா, கலையுலகில் உள்ள சாதிய, பாலின வேறுபாடுகளைத் தம் நூலில் (A Southern music: The Karnatik Story) எழுதினார். ‘மியூசிக் அகாடமியில் தலித் ஒருவருக்கு என்று சங்கீத கலாநிதி விருது கிடைக்குமோ, அன்றுதான் நான் மகிழ்ச்சியடைவேன்’ என்ற கிருஷ்ணாவின் கருத்து தன்னைக் கவர்ந்தது என்றார் அரவிந்தன். பெண் கலைஞர்களுக்குப் புகழ்பெற்ற மிருதங்க வித்துவான்கள் வாசிப்பதில்லை என்ற தகவலையும் சொன்னார்.
கிருஷ்ணாவின் சிந்தனைகள் ஒருபுறம் இருக்கட்டும், அவரது கலைத்திறம் எப்படி என்பது குறித்துச் சலபதியோடு நிகழ்த்திய உரையாடலை அரவிந்தன் பகிர்ந்துகொண்டார். ‘கிருஷ்ணாவின் இசைத்திறனை மதிப்பிடும் அளவுக்கு எனக்கு இசை அறிவு கிடையாது. ஆனால் அவர் மிகச் சிறந்த கலைஞர் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் அவர் பேசுகிற பேச்சுக்கு மயிலாப்பூரிலிருந்து அவரை அடித்து விரட்டியிருப்பார்கள். முக்கியமான கலைஞர் என்பதால்தான் பேச்சைச் சகித்துக்கொண்டு பாட்டைக் கேட்கிறார்கள்’ என்று சலபதி சொன்னதாக அரவிந்தன் கூறியபோது கைத்தட்டல் எழுந்தது.
சாதிச்சங்கம்போல மயிலாப்பூர் இசை விழாச் சூழல் இருக்கிறது. இந்த வணிகக் கூட்டத்தில் பாட மாட்டேன் என்று மறுத்தவர் கிருஷ்ணா. ‘இப்படிப் பேசுவதால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, நஷ்டமும் இல்லை. அவர் சலுகை பெற்ற பிரிவைச் சேர்ந்தவர்’ என்று தன் நண்பர் ஒருவர் சொன்னதைக் கிருஷ்ணாவிடம் அரவிந்தன் பகிர்ந்துகொண்டபோது, ‘நான், ஆண். சாதியிலும் வர்க்கத்திலும் மேல்தட்டைச் சார்ந்தவன். வசதி படைத்தவன். எல்லா விதங்களிலும் சலுகை பெற்ற சூழலில்தான் இருக்கிறேன். ஆனால் அப்படி இருப்பதற்காக என் பேச்சுரிமையை மறுக்கக் கூடாது. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்’ என்று கிருஷ்ணா பதில் சொன்னதை அரவிந்தன் குறிப்பிட்டார்.
விமர்சனமும் அறிந்தேற்பும்
வாழ்நாளெல்லாம் மியூசிக் அகாடமியை எதிர்த்த கிருஷ்ணாவுக்கு அதுவே சங்கீத கலாநிதி விருதை அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்ததும் இசை உலகில் பூகம்பம் வெடித்தது. பெரியாரைப் பாடியவர்; எம்.எஸ்.ஸை அவமரியாதை செய்தவர் என்றெல்லாம் சொல்லிச் சங்கீத கலாநிதி விருது வழங்கக் கூடாது என்று இசை உலகின் பெரும்புள்ளிகள் பலரும் குரலெழுப்பினார்கள். கிருஷ்ணா இருக்கும் மேடையில் ஏற மாட்டேன் என்றார்கள். பல விதமான அவதூறுகளைச் சுமத்தினார்கள். சிலர் விருது வழங்குவதை எதிர்த்ததோடு வழக்கும் தொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இசை உலகைச் சேர்ந்த பலரும் அவரை வறுத்து எடுத்தார்கள். இவற்றையெல்லாம் விவரித்த அரவிந்தன் அதன் உச்சக்கட்டமான நிகழ்வையும் சுட்டிக்காட்டினார். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை ஒட்டி 2024 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று காலை 8 மணிக்கு மியூசிக் அகாடமி அரங்கில் அவர் கச்சேரி. அந்தக் காலை நேரத்தில் சபை நிறைந்து வாசலிலும் முற்றத்திலும் நின்ற பெருங்கூட்டம் கிருஷ்ணாவைக் கண்டதும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்துக் கலைஞனுக்கு ஆதரவு காட்டியது. ஆறு மாத காலமாக அந்தக் கலைஞனுக்கு இழைக்கப்பட்டிருந்து அநீதிக்கும் அவமானங்களுக்கும் ரசிகர்கள் தந்த மருந்தாக அது அமைந்தது. நியாயமற்ற விமர்சனங்களுக்கான பதிலாக அமைந்தது என்று சங்கீத கலாநிதி விருதை ஒட்டி நடந்த நிகழ்வுகளை நாடகம்போல அரவிந்தன் சித்தரித்தார். தான் விமர்சித்த அமைப்பே தனக்கு விருது கொடுக்கும் அளவுக்குக் கலையில் சிறந்து விளங்கும் கிருஷ்ணா, விருதுக்காக எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. அன்றும் கலர்கலரான சட்டையும் லுங்கியும்தான் அணிந்து வந்தார் என்பதையும் அரவிந்தன் குறிப்பிட்டார்.
தமிழும் வரலாறும்
ஆ.இரா. வேங்கடாசலபதியைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வாளர் செ. சதீஸ்குமார் (இஸ்க்ரா) பேசினார். சலபதிக்குத் தன்னைவிட இருபது வயது மூத்த ரசிகர்கள் இருப்பதைப் போல இருபது வயது குறைந்த ரசிகர்களும் உண்டு. புதுதில்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குச் சலபதி வேலைக்கு வரும்போது அவரது வழிகாட்டியான கே.எம். பணிக்கருக்கு வருத்தம்தான். ஏனென்றால், வரலாற்றில் தமிழகம் இருண்ட மாகாணமாகவே இருந்தது. ‘வியத்தகு இந்தியா’வில் ஏ.எல். பாஷம் பொருளடைவுக்கு ஒதுக்கிய பக்கங்களைவிடத் தமிழ்நாட்டுக்குக் குறைவான பக்கங்களையே ஒதுக்கினார். அப்படிப்பட்ட பகுதிக்குச் செல்கிறாரே என வருத்தம். ‘அங்கேதானே வேலைசெய்ய வேண்டும்’ என்று பதில் சொல்லிவிட்டு வந்தவர் சலபதி என்று அச்சம்பவத்தை சதீஸ்குமார் விவரித்தார்.
ம.இலெ. தங்கப்பாவின் சங்க மொழிபெயர்ப்பை மெருகேற்றி அச்சில் வெளியிட இருபது ஆண்டுகளாகச் சலபதி அலைந்தார். மொழிபெயர்ப்பைப் படித்த அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா, யார் இந்தத் தங்கப்பா? இத்தனை நாள் எங்கிருந்தார் என்று வியந்தார். உலகியல் தெரியாத தங்கப்பாவின் மக்கள் தொடர்பு அதிகாரியாகத் தன்னைச் சலபதி நியமித்துக்கொண்டவர் என்றும் சொன்னார் சதீஸ்.
அயல்நாட்டு அறிஞர்கள் சலபதியின் கட்டுரைகளை மேற்கோள் காட்டாமல் நூல் எழுதிவிட முடியாது. சலபதி என்ற சுங்கச் சாவடிக்குத் தீர்வை கட்டாமல் தமிழ்நாட்டுக்குள் மேலை அறிஞர்கள் நுழைந்துவிட முடியாது. தமிழ்நாடு குறித்து ஆங்கிலத்தில் தமிழர்கள் எழுதாததாலே தமிழ்நாட்டைத் தூங்குமூஞ்சி மாநிலம் என்று கருதினார்கள். தமிழுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதாலேயே ஆங்கிலத்தில் சலபதி எழுதுவதாகக் கூறினார் என்றார். அவனருளாலே அவன்தாள் வணங்கிய சிவனடியர்போலச் சலபதியால் தான் பலன் பெற்றதாகப் பாராட்டினார் சதீஸ்.
இசைக்கும் இலக்கியத்துக்கும் ‘போட்டி’
ஏற்புரை வழங்கிய ஆ.இரா. சலபதி, அவருக்கே உரிய பகடி மொழியில் ‘லாட்டரி அடித்ததுபோலச் சாகித்திய அகாதெமி விருது எனக்குக் கிடைத்தது. விருது வாங்காத சிறந்த எழுத்தாளர்கள் இன்னும் உள்ளனர்’ என்றார். அதிகச் சிறுமைக் குணங்கள் கொண்டவர்கள் எழுத்தாளர்களா, இசை வித்துவான்களா என்று எனக்கும் கிருஷ்ணாவுக்கும் விவாதம் நடக்கும். எழுத்தாளர்களிடம்தான் அதிகம் உண்டு என்பேன் நான். வித்துவான்களிடம்தான் அதிகம் உண்டு என்று கிருஷ்ணா சொல்வார். இப்போது கிருஷ்ணா வாதத்தில் வென்றுவிட்டார். சங்கீத கலாநிதி விருது அறிவித்த சென்ற ஆண்டு முழுவதும் அந்தக் கீழ்மையைப் பார்த்தோம். 2024 டிசம்பர் 25 அன்று நடந்தது வரலாற்றுத் தருணம். இசையுலகிலுள்ள கசடுகளை எல்லாம் தன் இசை வெள்ளத்தால் ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கிருஷ்ணா உயர்ந்து நின்றார் எனச் சலபதி குறிப்பிட்டார்.
தமிழிசைக் கச்சேரிக்கு மேடையைத் தயார்படுத்திக்கொண்டிருந்த இடைவெளியில் பெருமாள்முருகன் சுருக்கமாக உரை நிகழ்த்தினார். இதைப் போன்ற கச்சேரிகளை ஏன் நடத்த வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். ‘சென்ற ஆண்டு கச்சேரி முடிந்தவுடன் ஒருவர் வந்து ‘மனதுக்கு ஆறுதலாக இருந்தது’ என்றார். அவர் சொன்ன தொனியும் முறையும் என்னை என்னவோ செய்தது. ஆறுதல் தர மனிதர் போதாத உலகில் இதைப் போன்ற கச்சேரிகள் தேவையாக உள்ளன. கலையும் இலக்கியமும் ஆறுதல் தருபவையாக இருக்கின்றன. இத்தகைய சொற்களே ஊக்கப்படுத்துகின்றன. சிரமப்பட வேண்டாம் என்று எண்ணியபோதும் எல்லா வகையிலும் உதவி இந்தக் கச்சேரியை என் மாணவர்களே சாதித்தனர்’ என்றார்.
பாடுவதற்கு முன் கிருஷ்ணா சிற்றுரை ஆற்றினார். தியாகையர் கீர்த்தனைகளுக்கு அவரே அமைத்த மெட்டு நம் கைவசம் இருக்கிறது. அது அவருடைய படைப்பு. அதை மாற்றலாமா என்னும் கேள்வி இருக்கிறது. ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்களுக்கு அவர் அமைத்த மெட்டு இன்றைக்குக் கிடைக்கவில்லை. ராகம் தெரிந்திருந்தால் போதாது; ஒரே ராகத்தில் வெவ்வேறு விதமாக மெட்டமைக்கலாம். அவர் அமைத்த மெட்டு எதுவென்று தெரியவில்லை. பிற்காலத்தில் நிறையப் பேர் மெட்டுப் போட்டார்கள். நாட்டைக்குறிஞ்சி ராகம் என்று குறிப்பிடப்பட்ட ‘வழி மறைத்திருக்குதே’ பாடலுக்குத் தோடி ராகத்தில் மெட்டமைத்தார் பாபநாசம் சிவன். அதைத்தான் இன்று பாடிக்கொண்டிருக்கிறோம். அதன் மூலமெட்டு எதுவென்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டார்.
‘வழி மறைத்திருக்குதே’ பாடலுடன் கச்சேரியைத் தொடங்கினார். பாரதியாரின் ‘சுட்டும் விழிச் சுடர்தான்’ (ராகமாலிகை), பெருமாள்முருகனின் ‘முல்லை மலரே ஏன் பூத்தாயோ’ (முகாரி) என்னும் சங்க இலக்கியக் கீர்த்தனை என்று தொடர்ந்தார். நாமக்கல்லில் நடக்கும் தமிழிசைக் கச்சேரியில் ‘நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை’ பாடல் இல்லாமல் எப்படி? நாமக்கல் கவிஞர் எழுதிய வ.உ.சி. பற்றிய பாடலின் சில பகுதிகளைப் பாடினார். ‘சிதம்பரம் பிள்ளை என்று பெயர் சொன்னால்’ (காம்போஜி) என்று தொடங்கும் அப்பாடல் வ.உ.சி. ஆய்வாளரான சலபதியைப் பெருமைப்படுத்துவதாகவும் அமைந்தது.
தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன் மொழிபெயர்த்த தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றைப் பாடினார். தியாகராஜரின் பத்துக் கீர்த்தனைகளைத் தமிழில் பாரதிதாசன் மொழிபெயர்த்துள்ளார் என்னும் செய்தி தமிழுலகுக்கும் கர்நாடக இசையுலகுக்கும் புதிது. தெலுங்கிலுள்ள மூலப்பாடலின் மெட்டு சிறிதும் சிதையாதவாறு அப்படியே மொழிபெயர்த்திருப்பதைப் பற்றி வியப்புடன் விவரித்தார். தெலுங்கில் பாடிப் பழகியதால் அச்சொற்களே தமக்கு மனதில் வருகிறது எனவும் அதனால் தெலுங்கு, தமிழ் இரண்டையும் கலந்து பாடுவதாகவும் சொல்லி அவ்வாறே பாடினார். ‘சரஸ சாம தான பேத தண்ட’ (காபி நாராயணி) என்ற தியாகராஜரின் கீர்த்தனைப் பல்லவியை முதலிலும் பாரதிதாசனின் மொழிபெயர்ப்புப் பல்லவியைப் பின்னுமாகப் பாடினார். அடுத்து அனுபல்லவியையும் சரணத்தையும் முன்போல மாற்றிமாற்றிப் பிசிறின்றிப் பாடி வியப்பில் ஆழ்த்தினார் கிருஷ்ணா. இந்தப் பத்துப் பாடல்களைப் பேராசிரியர் ய. மணிகண்டன் என்னிடம் தமக்குத் தந்த செய்தியையும் கிருஷ்ணா குறிப்பிடத் தவறவில்லை. பாபவிநாச முதலியாரின் ‘நடமாடித் திரிந்த உமது இடதுகால்’ (காம்போஜி) எனத் தொடங்கும் அரிய பாடலை அடுத்துப் பாடினார்.
கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த பெரியசாமித் தூரனின் ‘முருகா முருகா என்றால்’ (சாவேரி) பாடலையும் பாடினார். சங்ககிரியைச் சேர்ந்த ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த உமர்கய்யாம் பாடலையும் பாடினார். ‘ஏதுமினிக் கவலையில்லை இதுவன்றோ பரமபதம்’ (தர்பாரி கானடா) என்று தொடங்கிய அதுவும் புதிது. இறுதியில் ரசிகர்களின் விருப்பத்திற்காக ‘நீ மட்டுமே என் நெஞ்சில் நிற்கிறாய்’ (காபி) என்னும் பெருமாள்முருகன் கீர்த்தனையைப் பாடிக் கச்சேரியை நிறைவு செய்தார்.
அக்கரை சொர்ணலதா வயலினையும் பிரவீன் ஸ்பர்ஷ் மிருதங்கத்தையும் குருபிரசாத் கடத்தையும் இசைத்தனர். கர்னாடக இசைக் கச்சேரிக்குப் பழக்கமில்லாத நாமக்கல் நகரில் ஆண்டுதோறும் டி.எம். கிருஷ்ணா வந்து பாடுகிறார். அனைத்தும் தமிழ்ப் பாடல்கள்.
விழாவில் காலச்சுவடு கண்ணன், இசை, ஷாஅ, கான், ஜி.எஸ். தயாளன், பெர்னார்ட் சந்திரா, நெய்தல் கிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். நாமக்கல், கரூர், திருச்சி முதலிய பகுதிகளிலிருந்து இசை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். விழா நிறைவுறும்போதில் ஆசிரியர் ஆ. சின்னதுரை கூட்டத்தைக் கலையாமல் இருக்கச் சொல்லி நன்றி கூறினார். விழாவைத் தொகுத்து வழங்கிய சாவித்ரிக்கு உட்கார நேரமில்லை. நிறைவும் களிப்பும் விழா முடிந்தும் நீடித்தன என்பதில் மகிழ்ச்சிதான்.
மின்னஞ்சல்: meenamariyappan@gmail.com