மௌனத்தின் மறுபக்கம்
‘கிஸ்ஸா: தி டேல் ஆஃப் லோன்லி ஹோஸ்ட்’ 2013 இல் இர்ஃபான் கான் நடித்து வெளியான திரைப்படம். இர்ஃபான் இதில் உம்பர் சிங் என்கிற சீக்கியராக நடித்திருக்கிறார். இர்ஃபானின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இர்ஃபான் ஒவ்வொரு படத்திலும் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார். இறுக்கமான முகத்தில் கடந்த காலத்தின் சுக துக்கங்களைச் சுமக்கிற பாவம் அவருக்கு மட்டுமே உரித்தானது.
கிஸ்ஸா என்பதற்குப் பஞ்சாபியில் தொன்மையான வாய்மொழிக் கதை என்று பொருள். அந்தக் கதை அன்பு, காதல், துரோகம், வலி, துயரம் என எதுவாகவும் இருக்கலாம். கிஸ்ஸாவுக்கு எழுத்து வடிவம் கிடையாது. கிஸ்ஸாவைப் பஞ்சாபியர்கள் காலங்காலமாகத் தங்கள் மூதாதையர்களிடமிருந்து சொல்லிக்கொண்டே வருகிறார்கள். கிஸ்ஸாவை அவர்கள் வெறும் கதையென நினைப்பதில்லை, அது அவர்களது இறை நம்பிக்கைக்கு இணையானதாகும்.
மேலோட்டமான பார்வைக்கு இப்படம் இந்திய ஆணாதிக்க மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகச் சொல்ல முடியும். ஆண் குழந்தைமீதான மோகத்தின் பைத்திய நிலை என்றும் விளக்கலாம். இத்திரைப்படத்தைப் பற்றி நிறைய மதிப்புரைகள் அவ்வாறே எழுதப்பட்டிருக