அக்டோபர் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
அக்டோபர் 2025
    • கட்டுரை
      தெரு நாய்களும் கடல் ஆமைகளும்
      சூத்திரங்கள் மாறலாம் விழுமியங்கள் மாறாது
      விலங்குப் பண்ணை: 80 ஆண்டுகள் விலங்குகள் சொல்லும் அரசியல் பாடம்
    • கதை
      நீலகேசி
      நனவிலி பிம்பங்கள்
    • பாரதியியல்
      முத்துலட்சுமியை எழுதச்சொன்ன பாரதி
    • அறிமுகமும் மொழிபெயர்ப்பும்
      வான்கா: ஒப்பற்ற கலைஞனின் உண்மையான வாழ்க்கை
    • நாவல் சிறப்புப் பகுதி தொடர்ச்சி
      சிற்றுடுக்கையின் பேரொலி
    • பதிவு
      எளியோர் வரலாற்றை எழுதியவர்
      பெருமழை பெய்தபோதும்
      பாட்டும் பாராட்டும் வரலாற்றுத் தருணம்
    • அஞ்சலி: ஆர்.எஸ். நாராயணன் (1938--2025)
      சொல்லேர் உழவர்
    • கடிதம்
      கடிதங்கள்
    • திரை
      மௌனத்தின் மறுபக்கம்
    • கற்றனைத்தூறும்-11
      அறப்பணிக்கு டெட் தேர்வா?
    • கடிதங்கள்
      ‘அன்புள்ள வசந்தகுமார்’ சு.ரா. கடிதங்கள்
    • மதிப்புரை
      தற்புகழ்ச்சியற்ற எழுத்து
      உயிரின் வாதை
    • அஞ்சலி: பி.வி. கரியமால் (1929 - 2025)
      தீராத் தியாகம்
    • தலையங்கம்-2
      பிணை மறுப்பு: நீதியின் வன்முறை
    • கவிதைகள்
      பெருமாள்முருகன் கவிதைகள்
    • தலையங்கம்
      அடிப்படைவாதத்துக்கு உரம்சேர்க்கும் மௌனம்
    • அறிமுகம்
      என்னை அழிக்க யாருண்டு எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2025 அஞ்சலி: பி.வி. கரியமால் (1929 - 2025) தீராத் தியாகம்

தீராத் தியாகம்

அஞ்சலி: பி.வி. கரியமால் (1929 - 2025)
ஸ்டாலின் ராஜாங்கம்

பாசாகேப் அம்பேத்கர் அரசியல் கட்சி என்ற முறையில் முதலில் தோற்றுவித்தது ‘சுதந்திரா தொழிலாளர் கட்சி’யைத் (1936) தான். ஆனால் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தியதென்றால் அவர் அடுத்ததாக 1942ஆம் ஆண்டு தோற்றுவித்த அகில இந்திய பட்டியலினக் கூட்டமைப்பு (AISCF) தான். இந்த அமைப்பை பெடரேஷன் என்றுதான் குறிப்பிடுவார்கள். அம்பேத்கர் ஆரம்பிக்கவிருந்த இந்தியக் குடியரசுக் கட்சியை அவரின் மரணத்திற்குப் பிறகு அவர் வழிவந்தோர் உருவாக்கியபோது AISCFஇல் செயற்பட்டவர்கள் அப்படியே இக்கட்சியிலும் தொடர்ந்தார்கள். இவ்விரண்டு கட்சிகளிலும் தமிழகத்திலிருந்து பலர் செயற்பட்டார்கள். அம்பேத்கர், கெய்க்வாட், கோபர்கடே, என். சிவராஜ் போன்ற மெத்தப் படித்தவர்கள் இந்தக் கட்சிகளை நடத்தியிருந்தாலும் ஓரளவு படித்தவர் தொடங்கி, படிக்காதவர்வரையிலான எளிய மக்களே இக்கட்சிகளில் அதிகம் இணைந்தார்கள். கிராமப் புறங்களிலும் இக்கட்சிகளுக்கு வரவேற்பு இருந்தது. இந்திய அளவிலான நவீன அரசியல் சட்ட வாய்ப்புகள்பற்றி இக்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டாலும் கள அளவில் உள்ளூர்ப் பிரச்சினைகளே அதிகம் கவனப்படுத்தப்பட்டன. குறிப்பாகத் தலித்துகள்மீது பண்பாட்டுரீதியாகச் சுமத்தப்பட்ட இழிதொழில் மறுப்புப் போராட்டங்கள் கிராம அளவில் பரவலாக நடத்தப்பட்டன. எளிய மக்கள் அந்தந்தத் ஊர்களில், அந்தந்த தருணங்களில் நடத்திய போராட்டங்கள் என்பதால் அவற்றிற்குக் குறிப்பிடும்படியான ஆவணங்கள் இல்லை. ஆனால் நிறைய வாய்மொழித் தகவல்களும் பாடல்களும் உண்டு. இப்படியான போராட்டங்களில் கலந்துகொண்ட நெடிய அனுபவங்களையும், நினைவுகளையும் கொண்ட பி. வி. கரியமால் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி  அரூரில் காலமானார். இவரை என் தந்தை மூலமாகவும், எங்கள் வட்டாரக் குடியரசுக் கட்சி அழைப்பிதழ்கள் வழியாகவும் சிறு வயதிலிருந்தே அறிந்திருந்தேன். 2017ஆம் ஆண்டு நேரிலும் சந்தித்திதேன். AISCFஇல் பயணத்தை ஆரம்பித்து இந்தியக் குடியரசுக் கட்சியிலும் செயற்பட்ட அனுபவத்தைக் கொண்ட கடைசி மனிதராக அவர் இருந்தார். அவர் காலமானபோது வயது 95.

பி. வி. கரியமால் தர்மபுரி பாப்பிசெட்டிபட்டி அருகேயுள்ள பெத்தூரில் 1929ஆம் ஆண்டு பிறந்தார். வடிவம்மாள், வெங்கட்ராமன் அவரது பெற்றோர். அவர் அரசியலின் தொடக்கமே அம்பேத்கரிய அரசியலாகத்தான் இருந்திருக்கிறது. 1950களின் தொடக்கத்திலேயே பெடரேஷனில் சேர்ந்துவிட்டிருந்தார். சேர்ந்த சில வருடங்களிலேயே பெடரேஷன் இந்தியக் குடியரசுக் கட்சியாக மாறியது. SCF இன் பணிகள் எவையாக இருந்தனவோ அவை குடியரசுக் கட்சியிலும் தொடர்ந்தன. இழிதொழில் மறுப்புப் போராட்டங்கள், சிவில் உரிமைக்கான  போராட்டங்கள் போன்றவையே இக்கட்சிகளின் பிரதான தலையீடுகள். அந்தவகையில் இப்பிரச்சினைகளை எடுத்துப் போராடிய பெரும் தளகர்த்தர் கரியமால். ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன் தீர்த்தத்தில் நிலவிய இரட்டைக் குவளை முறைக்கு எதிராகப் பெரிய போராட்டம் நடத்தியதன் மூலம் அப்போது தலைவர்களாக இருந்த என். சிவராஜ், பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமி ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.

போக்குவரத்து வசதியும் அரசியல் விழிப்புணர்வும் குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் மக்களைத் திரட்டுவதும், கிராமங்களில் நுழைந்து ‘பராம்பரியத்தை’ எதிர்த்துப் போராடுவதும் பெரும் சவாலாக இருந்த நிலையிலும் நிறையப் போராட்டங்களை நடத்தியவர் கரியமால். ஒன்று பட்டும், பின்னர் பல்வேறு பிரிவுகளாகவும் இயங்கிய இந்தியக் குடியரசுக் கட்சிகளில் பல்வேறு தலைவர்களுக்கும் வரலாறு உண்டு. அதனால்தான் அவர்களுடைய வரலாற்றைத் தேடும்போது ஒரே மாதிரித் தகவல்களே இருக்கிறது. ஒரே விதமான போராட்டம் வெவ்வேறு ஊர்களில் தினம் தினம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 1959ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுக் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைவராக ஆன கரியமால் இத்தளத்தில் கிருஷ்ணசாமி, ஆரிய சங்காரன், மு. சுந்தரராஜன் ஆகியோரோடு இணைந்து கட்சியை வளர்த்தார். இந்தியக் குடியரசுக் கட்சிக்குச் சென்னைக்கு வெளியே வட ஆற்காடு மாவட்டமும், தர்மபுரியும்தான் முக்கிய இடங்களாக அமைந்தன. தர்மபுரி பகுதியின் இந்த இருப்புக்குக் காரணம் பி.வி. கரியமால். அவர் மாவட்டத் தலைவராக ஆன 1959ஆம் ஆண்டிலேயே பெத்தூரில் குடிநீர் எடுப்பதற்கான போராட்டத்தையும் பெருமாள் கோயில் நுழைவுப் போராட்டத்தையும், பெரும் எதிர்ப்பிற்கிடையே முன்னெடுத்தார். இப்போராட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஊத்தங்கரை மூங்கிலேரி கிராமத்திலும் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார். ஊர் ஊராக இழிதொழில் மறுப்புப் பிரச்சாரங்களைச் செய்ததோடு பல கிராமங்களில் நடந்த இழிதொழில்  மறுப்புப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பின்னாட்களில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகவும், பிளவுபட்ட போது ஒரு பிரிவின் தலைவராகவும் ஆனார். இவர் தலைவராக இருந்தபோது பொதுச்செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன் இருந்தார். அப்போது சேலத்தில் கட்சியின் அகில இந்திய மாநாட்டை நடத்திக் காட்டினார் கரியமால். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு இணையாகக் கூட்டத்தைத் திரட்டிக் காட்டிய அம்மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் கட்சியின் 600 பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். பின்னர் கட்சிகள் இணைந்து மீண்டும் பிரிந்தபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. மூர்த்தியைப் பொதுச்செயலாளராகக் கொண்ட பாரதிய குடியரசுக் கட்சியின் தலைவராக ஆனார். அப்போது பாரதிய குடியரசுக் கட்சியின் தேசியத் தலைவராக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் இருந்தார். பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மாநாடுகள், பேரணிகள் போன்றவற்றை நடத்தியவர் கரியமால். ஏக்கர் கணக்கில் நிலங்களை விற்று இம்மாநாடுகளுக்குச் செலவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்பில் அம்பேத்கர் மகன் யஷ்வந்த் ராவ், என். சிவராஜ் ஆகியோர் அரூருக்கும் பிரகாஷ் அம்பேத்கர் தருமபுரிக்கும் வந்து கூட்டங்களில் கலந்துகொண்டார்கள்.

1964 ஆம் ஆண்டு பொதுச் சுடுகாடு போன்ற பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி 15 நாட்கள் வேலூர் சிறையில் இருந்தார். அம்பேத்கர் படத்தைச் சட்டமன்றத்தில் திறக்க வேண்டுமென்று போராடி 15 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருந்தார். அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்துப் போராடி 1993ஆம் ஆண்டு சிறைப்படுத்தப்பட்டார். பஞ்சமி நில மீட்புக்காகப் போராடிய ஜான் தாமஸ், ஏழுமலை ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராகப் போராடி சிறையில் இருந்தார். 1982ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று பெரிய சைக்கிள் பேரணியை நடத்தினார். அப்போராட்டத்தின் போது மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரால் தாக்கப்பட்டு ஒரு காது கேட்கும் திறனை இழந்தார். இவ்வாறு அவர் நடத்திய போராட்டங்களைத் தகவல் என்ற அளவில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டாலும் இப்போராட்டங்கள் ஒவ்வொன்றின் அனுபவமும் விரிவானவை, சவாலானவை. தொடர்புடைய கிராமங்களில் இப்போராட்டங்கள் பற்றி விதவிதமான கதைகளை இப்போதும் கேட்க முடியும்.

வன்னியர் சங்கப் போராட்டத்திற்குப் பிறகு தேர்தல் அரசியலில் நுழைந்த ராமதாஸ் தலித்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்தார். வட மாவட்டங்களில் எல். இளையபெருமாளோடும், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர்களோடும்  சந்திப்புகளை மேற்கொண்டார். அவரோடு இணக்கம் கண்டவர்களில் இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜி.  மூர்த்தியும் பி. வி.  கரியமாலும் முக்கியமானவர்கள். இதன் தொடர்ச்சியாய் ‘எஸ்சி-பிசி ஒற்றுமை மாநாடு’ என்ற  தலைப்பில்  வன்னியர்-ஆதிதிராவிடர் ஒற்றுமை  மாநாடுகள் அரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் நடைபெற்றன. 1989-1991 ஆண்டு வாக்கில் நடந்த மாநில அளவிலான மாநாட்டுச் சுவரொட்டிகளில் ராமதாஸ், கரியமால் படங்கள் சம அளவில் இடம்பெற்றிருக்கும். சில மாநாடுகளில் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கெடுத்துக்கொண்டார். அந்த அளவிற்குச் சக்தி வாய்ந்த தலைவராக பி.வி. கரியமால் விளங்கினார். 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் (பாமக-பாரதீய குடியரசுக் கட்சி) கூட்டணியமைத்துப் போட்டியிட்டன.ராஜீவ் காந்தி மரணத்தின் அலையால் இந்தக் கூட்டணியின் வாக்குகளை உற்றறிய முடியவில்லை.  1996ஆம் ஆண்டு அரூர் தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மூன்றாமிடத்தைப் பெற்றார் கரியமால். பாமகவின் உறவு தலித் அமைப்புகளுக்குச் சாதகமான விளைவுகளைத் தரவில்லை. இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வருகை புதிய தலைமுறையினரின் ஈர்ப்பைப் பெற்றது. அப்போது செல்வாக்குப் பெற்றுவந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது நாட்டம் செலுத்தியது பாமக. தருமபுரி வன்முறைகளுக்குப் பின்னால் அதுவும் முடிவுக்கு வந்தது.

அம்பேத்கரியத் தாக்கத்தோடு செயல்படவந்த முதல் தலைமுறையினருக்கு லட்சிய உந்துதல் இருந்தது. அவர்களின் புரிதல் எதுவாக இருந்ததோ அதற்கு உண்மையாய் இருந்து  போராடினார்கள். அம்பேத்கரிய லட்சியத்திலிருந்து சிறிது மாறுவதையும் அவர்கள் விரும்பியதில்லை. தங்கள் உழைப்பு பற்றிய உரிமை கோரலும் பிடிவாதமும்தான் அடுத்த தலைமுறைத் தலைவர்களை ஏற்பதில்  இம்முன்னோடிகளிடையே தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்தத் தலைமுறை அரசியலாளர்களும் தலித் முன்னோடிகளிடமிருந்த சாதகமான அனுபவங்களைத் திரட்டிக்கொள்வதில் எந்த ஆர்வத்தையும் செலுத்தவில்லை. இதெல்லாம் நடந்தாலும்கூடத் தீராத சமூகப் பிடிப்புத்தான் எதனை இழந்தாலும் கடைசிவரை இவர்களை இயங்கச் செய்தது.

வட்டார அலுவலங்களில் ஏதேனும் விண்ணப்பங்களோடு நடமாடிக்கொண்டிருப்பதுதான் கடைசிக் காலங்களில் அவர் அடையாளமாக இருந்தது. வரலாற்றில் புகழோடு நிலைக்க வேண்டுமென்பதற்காகத்  திட்டமிட்டுக் காரியங்கள் தீட்டப்படும் காலமிது. அத்தகைய புகழுக்குக்கூடத் திட்டமிடத் தெரியாதவர் கரியமால். அதனால்தான் இவ்வளவு பணியாற்றியும்கூடச் சாதாரண சாவாக அவர் மாறிப்போனார்.

                  மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.