பௌத்த மனசாட்சியை மீட்க முனைந்தவர்
நெதர்லாந்தின் ஹ்ரோனிகன் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்றுவதற்காக கணநாத் ஒபயசேகர வந்திருந்தார். 1989இன் தொடக்கக் காலம் என்று நினைவு. ஆய்வுச் சிறப்பும் அங்கதச் சுவையும் மிக்க செறிவான சொற்பொழிவை அவர் வழங்கினார். பிற்பாடு அவருடன் அறிமுகமாகிச் சில மணிநேரம் உரையாட முடிந்தது. என்னுடைய துறை சமூகவியலும் அரசியலும் என்று சொன்னேன். மானுடவியல் தொடர்பாக அப்போதுதான் ஆழமாக வாசிக்கத் தொடங்கியிருந்தேன். “என்ன துறையானாலும் சரி, ஆய்வில் புதுமையும் எழுத்தில் கவர்ச்சியும் இருந்தால் சரிதான்” என்று புன்னகையுடன் சொன்னார். அவருடைய அன்பையும் தோழமையையும் ஊக்குவிப்பையும் நான் என்றுமே மறக்க முடியாது.
1990, மார்ச் மாதம் கொழும்பு வந்து இனத்துவக் கற்கைகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் (International Centre for Ethnic Studies - ICES) ஆய்வாளராக இணைந்தேன். அக்காலகட்டம்தான் உலகச் சிறப்புமிக்க மானுடவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், புலமையாளர்களுடன் ஆழமான ஊடாட்டத்தையும் அறிவுத் தேடலையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா, ஜயதேவ உயங்கொட, வலன்டைன் டானியல், குமாரி ஜயவர்த்தன போன்ற சிறப்புமிக்கப் புலமையாளர்களோடு தொடர்ச்சியான ஆய்வு சார்ந்த உரையாடல்களில் ஈடுபடவும் கருத்தரங்குகளில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது. அக்காலப் பகுதியில் இலங்கையில், சமூக விஞ்ஞானத்தில் மிக ஆர்வமுடன் பணிபுரிந்த ஒரு தலைமுறை உருவாகியது. பிரதீப் ஜெகநாதன் (சிக்காக்கோ / மினசோட்டா பல்கலைக்கழகம்), மாலதி டீ அல்விஸ் (சிக்காக்கோ), காதிரி இஸ்மாயில் (மினசொட்டா), குமுது குஸும் குமார (யோர்க்), ஃபர்சானா ஹனிஃபா (கொலம்பியா) போன்றவர்கள் கொழும்பில் இருந்தார்கள். நாங்கள் இணைந்து சமூக விஞ்ஞானக் கலந்துரையாடல்கள், வாரம்தோறும் சந்திப்பு, விவாதங்கள் என இயங்கி வந்தோம். கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி தம்பையா, வலன்டைன் டானியல், எச்.எல். செனவிரத்தின ஆகியோர் கொழும்பு வரும்போதெல்லாம் அவர்களுடனான சந்திப்புகளும் கருத்தாடல்களும் தொடர்ந்து நிகழும். எம்மை வளர்த்ததில் இத்தகைய நிகழ்வுகளே முக்கியம் பெற்றன.
1992இல் கணநாத் ஒபயசேகரவின் ‘The Apotheosis of Captain Cook: European Mythmaking in the Pacific’ என்ற நூல் வெளியானது. பல தளங்களிலும் சிறப்பிடம் பெற்ற அந்நூல் பெரும் விவாதங்களையும் உருவாக்கியது. பழங்குடிகள் அறிவற்றுச் செயற்படுபவர்கள், பகுத்தறிவுக் குறைபாடுடையவர்கள் என்று மேலைத்தேய, காலனித்துவ ஆய்வாளர்கள் கட்டி எழுப்பிய விம்பங்களை இந்த நூலில் கணநாத் சாடுகிறார். குறிப்பாக, அறிவும் மாட்சியும் உணர்வும் ஐரோப்பியர்களிடம் உயர்ந்த தளத்தில் செயற்படுகிறது என்ற இனவாத, காலனித்துவக் கருத்தை மறுத்தார். இந்த நூல் வெளிவந்த பிற்பாடு கொழும்பில் அவர் நிகழ்த்திய உரைகள் மிகவும் சிறப்பானவை.
இலங்கைச் சூழலில் பௌத்தம் தொடர்பான அவரது ஆய்வுகளும் விமரிசனங்களும் இலங்கையின் சிங்கள - பௌத்த மேலோங்கிகளுக்கும், இலங்கை அரசுகளுக்கும் உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அறத்துடனும் பல்வகைமைப்பாட்டுடனும் செழித்திருந்த பௌத்தம் பிற்பாடு அதன் பௌத்த உள்ளுணர்வையும் மனசாட்சியையும் - தொலைத்துவிட்டது என்பது அவர் கருத்து. பல்வேறுபட்ட நாட்டார் மரபுகளிலும் கலைகளிலும் சடங்கு முறைகளிலும் அடித்தள மக்கள், விவசாயிகள் போன்றோரிடம் பரவிச் செழித்திருந்த பௌத்த இந்து, இவையிணைந்தும் ஊடாடியும் வளர்ந்த பன்முகப்பாடான நிலை இன்று அழிக்கப்பட்டுவிட்டது என்கிறார் கணநாத். பௌத்தத்தின் மானுட முகமும் மனிதப் பண்பியலும் சிதைந்துபோக இப்போது ஆட்சி பெற்றிருக்கும் அவலமுகத்தை அவர் புரட்டஸ்தாந்துப் பௌத்தம் என வரையறுக்கிறார். இது மேலைத் தேயங்கள் வடிவமைத்தவை. இத்தகைய மேலைத்தேய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு எழுந்த பௌத்தத்தையும் அதன் குறியீடுகளையும் இலங்கை அரசுகள் உள்வாங்கிச் சிங்கள பௌத்தம் என்பதை வன்முறையும் சகிப்பின்மையும் ஆக்கிரமிப்பும் நிறைந்த பௌத்தமாக மாற்றிவிட்டார்கள் என்பது அவருடைய துயரமான கருத்து. இத்தகைய பௌத்தத்துக்கு மாற்றான, அல்ல, எதிரான பௌத்தம் வேண்டும். அவற்றை நமது மக்கள் மரபு, சடங்குகள், பன்மைப்பாடுகளிலிருந்து தேட வேண்டும்.
கணநாத் ஒபயசேகர நெறிப்படுத்திய ஒரு திரைப்படம் கதிர்காமம் பற்றியது. இந்தப் படத்தில் நான் மேலே சுட்டிக்காட்டிய கருத்துக்களை நயமாகவும் நளினமாகவும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
கணநாத் ஒபயசேகரவின் படைப்புகள், ஆய்வுகள்பற்றிய விரிவான கட்டுரைகளும் நூல்களும் கந்தையா சண்முகலிங்கத்தின் வழி எங்களுக்குக் கிடைக்கின்றன.
கணநாத்தின் வாழ்க்கைத் துணைவர் ரஞ்சினி ஒபயசேகரவும் புகழ்மிக்க புலமையாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கணநாத் ஒபயசேகரவின் சகோதரர் வசந்த ஒபயசேகர அற்புதமான திரைக் கலைஞன். அவருடைய திரைப்படங்கள் உலகளவில் பேசப்படுபவை. சிங்கள சினிமாவின் பேரெழுச்சிக்குப் பங்களித்தவை. எனது இனிய நண்பர் காலமாகிவிட்டார். அவருடைய ‘தடயம்’ (வேட்டை) என்ற படம் நினைவை விட்டு அகல மறுக்கிறது.
மின்னஞ்சல்: cheran@uwindsor.ca