இகவெளியும் பரவெளியும்
நீல பத்மநாபன் கவிதைகள்
(சம்பூர்ணம்)
வெளியீடு:
விருட்சம்
சீத்தா லட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்,
புதிய எண் 16, பழைய எண் 7, ராகவன் காலணி, மேற்கு மாம்பலம்
சென்னை - 600 033
பக். 472 ரூ. 600
நாவலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நீல. பத்மநாபன் ‘தலைமுறைகள்’, ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல்களின் களங்களிலிருந்தும் அவற்றின் எழுதுமுறையிலிருந்தும் வேறொரு களத்தில் இக்கவிதைகளை வாசிக்க வேண்டும். கதைகள் உருவாக்கிக் கொடுத்த நல்வாய்ப்புகள் அவருக்கு இன்னொரு சிறகினை அளித்திருக்கலாம். எழுத்தாளர் தளத்திலிருந்து தன்னை மேலுயர்த்திக்கொண்டு உள்மன ஞானங்களில் திளைத்துக்கொண்டிருப்பதாகக் கவிதைகள் அவரை அடையாளம் காட்டுகின்றன. ஆகவே எழுத்தாளரின் வாசகராயிருக்கும் நாமும் அதிலிருந்து வெளியேறிக் கவிதையின் வாசகராக மாறிக்கொள்கிறோம். பெரிய மாந்தோப்பில் கிடைக்கும் ஒரு நெல்லிக்கனியையும் சுவைக்கலாம்தானே?
நம் கவனத்தில் பதியாத ஒரு செய்தி, அவர் நாவல்கள், கதைகள் எழுதத் தொடங்கிய காலத்திலேயே, இன்னொரு பக்கமாய்க் கவிதைகளையும் எழுதிவந்திருக்கிறார். அவரைப் பற்றிய குறிப்புகள் இச்செய்தியை நமக்கு உணர்த்துகின்றன. அதனால் ஈருலகையும் சமன்படுத்தும் மனநிலையில் கவிதைகளை அவர் எழுதியிருக்கலாம்.
கவிதைகளின் ஓர்மை அவருடைய உள்மனக் காயங்களைச் சுற்றியிருக் கிறது. அவற்றுக்குக் களிம்பு பூசித் தன்னைத்தானே சிகிச்சை செய்துகொள்கிறார். இரண்டாவது கட்டமாக ஆன்மிக விசாரத்திற்குள் இறங்கிச் செல்லும் முனைப்பும் உண்டு. அவர் காணும் மனிதர்கள் கத்தியுடன் அலைகிறார்கள்; அவர்கள் உலவும் வெளி வஞ்சகமாய் விரிந்து கிடக்கிறது. வேறெந்தச் சூழலையும் மனிதர்கள் சந்தித்து வெற்றிகாணலாம். ஆனால் மனிதர்களே வஞ்சகம் செய்தால் என்ன செய்வது? ஓர் எழுத்தாளராக அதைச் சந்திக்க மிகவும் துயர்ப்படும் மனநிலைகளை அவருடைய பல கவிதைகள் பேசுகின்றன.
“பின்னின்று காலை வாரினாய் / முன்வந்து கழுத்தை வெட்டினாய் / இத்தனைக்குப் பிறகும் / சவத்தில் குத்தணுமா?”
கவிஞர் சந்திக்கும் மனிதர்கள் வஞ்சகம் செய்வதில் தாமதம் செய்வதில்லை. துரோகத்தின் வேகம் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும்போது அதற்கான கவிதை இப்படி வருகிறது:
“நிறைந்த சபையில் / அழைத்துவந்தனர் / மலர்மாலை அணிவித்தனர் / பூச்செண்டு அளித்தனர் / பாராட்டு வசனங்கள் / புகழாரங்கள் / இதயம் குளிர / முன்னால் கண் நட்டு / நிற்கையில் / பின்னின்று / குத்தி வீழ்த்தினர்.”
“நடைமுறை வாழ்வுடன் / உற்ற சொந்த பந்தங்களுடன் / ஒத்துப் போக இயலாத மானசீகச் சித்திரவதைகளும் /....”( 302 )
உடனடித் துரோகங்களின் பயங்கரத்திற்குள் சிக்காமல் வெளியேற விரும்பி நேரிய மனிதர்களைத் தேடும் முயற்சியும் நடக்கின்றது. இப்படியான ஓர் அலைச்சலில் இந்தக் கவிதைகள் அவருடைய வாழ்வின் பயிற்சிக் களங்களாக இருக்கின்றன. வாழும்வரை தொடரும் அனுபவங்களை அந்தக் கடைசி நிமிடங்களிலும் நாம் புறக்கணிக்க முடியாது. இதன் அடுத்த கட்டமாக, ஆன்மிகப் பூர்வமான ஒழுங்குகளுடன் வாழ யத்தனிக்கும் முயற்சியில் கவிஞர் ஈடுபடுகிறார். முதல் தலைமுறைக் கவிஞர்களான பீர்முகம்மது அப்பாவும், அய்யா வைகுண்டரும் நீல பத்மநாபனின் கவிதைகளில் ஆன்மிக உருக்கொண்டனர் என்று குமார செல்வா சொல்கிறார், அது உண்மை; என்றாலும் அத்தோடு நில்லாமல் அந்தக் கவிதைகள் வீரியம்கொள்ளும் சமயத்தில் அவருடைய ஆன்மிக விசாரமும் அல்லாடுவதைப் பார்க்க முடிகிறது. எதிலும் தன்னை நிலைநிறுத்தித் தன்னைத் தானே ஏமாற்றத் தயாராயில்லாத மனநிலைகூட நவீன உலகில் ஒரு வரம்தான். ஓர் அனுபவம் வாய்த்த பின் மற்றொரு அனுபவம். ஏனென்று கேளாமல் ஒரு பயணியாகச் செல்கிறார். முக்கியமான அம்சம், தன் முதுகில் ஒரு சுமை இருக்கக் கூடாதென்கிற நோக்கம்.
மனித சஞ்சாரம் அப்படியே வான்வெளியின் அலகாய் மட்டும் இருக்கவில்லை; அது நிலத்திலும் கால்பதித்துச் சக மனிதனோடு இசைந்து வருகிறது. இந்த இடத்தில்தான் கவிஞர் தன்னையும் விசாரணைக்கு உட்படுத்திக்கொள்கிறார், தான் விரும்பி ஏற்கிறவற்றையும் ஐயுறும் கவியும் விழியால் நோக்குகிறார்! அதுதான் கவிதையை இயக்க முனைகிறது.
அவருக்குத் தான் காணும் அனைத்திலும் வெளிப்படையான விமர்சனங்கள் இருக்கின்றன :
“நித்தம் நித்தம் / மணிக்கதவம் திறந்து / வாடிய மலர்கள் அகற்றி / புதுமலர்கள் சார்த்தி / தீபங்கள் கொளுத்தி / யந்திரமாய்ச் / செய்வது மட்டுமா / கண்டதே கண்டு / உண்டதே உண்டு / கொண்டதே கொண்டு / வாழ்ந்திடும் / இக வாழ்க்கையும்.”
“வாடா மலராயினும் / வாடிச் சருகாகாத / பூ பொருள் உயிர் பொழுதுண்டா / அவனியில் / அப்பொழுதில் ஒரு கணமாவது / நாதன் உனைச் சேவிக்கும் / மனம்படைத்தோர் எத்தனை?” (293)
மனிதர்களின் மையச் செயல்பாடுகளைத் திரட்டினால் அவர்களின் ஆன்மிக உலகமும் பொத்தலாய் விழுந்துவிடுகின்ற அந்தத் துயரங்கள் விரட்டிக்கொண்டு வருகின்றன.
ஆரம்ப காலக் கவிதைகள் பரவெளியில் துளைத்துச் சென்று அதன் சூட்சுமங்களை அறிய முயல்வதுபோல இருக்கின்றன. எழுதுகோல் அந்தரத்தில் மிதந்துகொண்டே செல்கின்றது. வாழ்க்கையைத் தேடுவதிலிருந்து விலகி ஆன்மிக உள்ளடுக்குகளில் இருப்புக்கொள்ள முனைவதுபோல இருந்தன. ஆனால் ஆன்மிக அனுபவங்கள் முற்ற முற்ற அங்கும் போலிமைகள் தலைவிரித்தாடுவதைப் பார்க்க முடிந்தது. தன்னை எதற்கும் ஒப்படைத்துவிடாமல், எல்லாமும் கேள்விக் கணைகளுக்கு உள்ளாவனதான் என்ற தீர்க்க உணர்வுகள் இருப்பதால் இந்தக் கவிதைகள் சுடர்விடுகின்றன. அரசியல் உணர்ச்சிகளில் சிக்காத கவிஞர்கள் என்றேனும் இருந்துள்ளனரா? தன்னை நேசிக்கிற அதே தன்மையில் மக்களையும் நேசிக்கிற கவிஞர்களாலானது இவ்வுலகம்:
“நாட்டில் நோய்நொடிகள் / பஞ்சமும் பசியுமென்று / பிரஜைகள் அழுது அரற்றிக்கொண்டு / ராஜாவிடம் வந்து முறையிட்டபோது / வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு / குய்யோ முறையோ என்று / ஓவென்று ஒப்பாரிவைத்து / அழுது புரளும் ராஜா.” (306)
தன் அரசியல் அதிகாரம் தவிர யாதொரு சமூகச் சிந்தனையுமற்ற அரசியல்வாதிகளைக்கொண்டு இன்றையச் சமூகம் பங்கப்பட்டுக் கிடக்கின்றது. அதனால்தான் மக்களின் பிரச்சினைகள் தன்னிடம் முறையீடாக வரும்போது அவற்றை எதிர்கொள்ளும் அரசியல் திடம் இல்லாத ஒருவர் ராஜாவாய் இருந்து அவரும் குய்யோ முறையோ என்று கதறி அழுதிருக்கிறார். கொள்கைப் பற்று கொண்டிருக்கும் ராஜாவால் எழத்தான் முடியுமே தவிர அழ முடியாது.
இவ்வாறு கவிஞராகத் தனக்குக் கிடைக்கிற, அலைபாய்கிற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் அவர் கேள்விக்கு உட்படுத்துவதை ஓர் அரிய வரமென்று சொல்லிவிடலாம். இவ்வகையில் வாசகருக்கான வாய்ப்புகள் விரிந்துகொண்டே செல்கின்றன. கவிதையின் ஆன்மா அது.
சென்ற இதழில் வெளியான ‘அந்தமில்லா நல்லறம்’ என்ற வெ. முருகனின் கட்டுரையில் நாடகத்தின் மூலப் பிரதி எழுதியவர் ஏனெஸ்ட் மைக்கன்ரயர், தமிழில் தழுவி உருவாக்கியவர் நவதர்ஷனி கருணாகரன், பாடல்கள், மொழிச் செம்மையாக்கம்: செல்லத்துரை சுதர்சன் ஆகிய தகவல்கள் விடுபட்டிருந்தன. விடுபடலுக்கு வருந்துகிறோம்.
- ஆசிரியர் குழு