நுஃமானை விளங்கிக்கொள்ளுதல்
நண்பர் எம்.ஏ. நுஃமான் முக்கியமான தமிழ்க் கவிஞர், முன்மாதிரியான இலக்கிய விமர்சகர், ஆற்றல் மிக்க மொழியியலாளர், மெச்சத்தக்க மொழிபெயர்ப்பாளர், மதிப்புக்குரிய பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆய்வாளருங்கூட.
நுஃமானின் பல்வேறு பக்கங்களையும் ஒருவர் முழுமையாக அறிய வாய்ப்பில்லை. எனினும் நுஃமானை அறிய வேண்டின் அவருடைய கவிதைகளை வாசிப்பதைவிடச் சிறந்த வழி இல்லை. அவர் எழுதிய கவிதைகளில் ஒரு பகுதியே பதிப்பாளர் எம். பௌஸரின் முன்முயற்சியால் விளைந்த கவிதைகளின் தொகுப்பில் உள்ளன. அவற்றிற் கணிசமானவை முன்னர் கவிதை நூல்களாக வரவில்லை. இத்தொகுப்பிலுள்ள கவிதைளிற் பலதைப் பற்றிப் பேச முயல்வதிற் பயனில்லை. அவரை நல்ல கவிஞராக அடையாளங்காட்ட ஒரு சிலவே போதும். அவரின் சிந்தனைப் போக்கையும் அற விழுமியங்களையும் படைப்பாற்றலையும் அணுகுமுறையையும் விளங்க உதவும் கவிதைகள் ஐந்தைப் பற்றி மட்டும் இங்கு கூறுவேன்.
அதற்கு முன், நுஃமான் எப்போதுமே ஒரு நல்ல முஸ்லிம் என்பதைக் கூறத் தகும். அவருடைய தொடக்கக் காலக் கவிதைகளில் அவருடைய இஸ்லாமிய ஈடுபாடும் அவரை ஈர்த்த விழுமியங்களும் தெளிவாகப