தமிழ் காமிக்ஸின் நாயகன்
எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியவை காமிக்ஸ் புத்தகங்களே. இன்றைக்கும் இரும்புக்கை மாயாவியை விரும்பிப் படிக்கிறேன். அதனை வெளியிட்டவர், நிறுவனர் சௌந்திர பாண்டியன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைப் பகிர்ந்துகொள்கிறேன்.
சௌந்திரபாண்டியனை மூன்று முறை சிவகாசியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவரை நேர்காணல் செய்து குங்குமம் இதழில் வெளியிட்டுமிருக்கிறேன். அவர் ‘இரும்புக்கை மாயாவி’யை முதன்முறையாக எங்கே படித்தார், எப்படி அதன் உரிமையை வாங்கினார், தமிழ் மொழிபெயர்ப்பின் சவால்கள் என்ன என்பது குறித்தும் உரையாடியிருக்கிறேன். அந்த நினைவுகள் மனதில் பசுமை மாறாமல் இருக்கின்றன.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஈஸ்ட் லான்சிங் வளாகத்தினுள் காமிக்ஸ் புத்தகங்களுக்கெனத் தனியான ஆவணக் காப்பகம் உள்ளது. நண்பரும் பேராசிரியருமான சொர்ணவேல் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
உலகின் தலைசிறந்த காமிக்ஸ் புத்தகங்களின் மூலப்பிரதிகள், ஒரிஜினல் சித்திரங்கள், பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள காமிக்ஸ் புத்தகங்களின் சிறப்புப் பதிப்புகளைச் சேகரித்துப் பாதுகாத்துவருகிறார்கள். காமிக்ஸ் குறித்து விரிவாக ஆய்வு செய்துவருகிறார்கள்.
அங்கே தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஏதாவது இருக்கிறதா எனத் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுடன் தொடர்புகொண்டு சிவகாசியிலிருந்து வெளியாகும் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ்பற்றிச் சொன்னதும் அடுத்த சில மாதங்களில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி ஆவணப்படுத்திவிட்டார்கள். அவர்களும் இரும்புக்கை மாயாவி காமிக்ஸை வியந்து பாராட்டினார்கள்.
1962இல் லண்டனில் ஃப்ளீட்வே (Fleetway) பதிப்பகத்தின் வழியே அறிமுகமாகிப் பிரபலம் அடைந்த ‘தி ஸ்டீல் க்ளா’ (‘The Steel Claw’) தான் இரும்புக்கை மாயாவியாகத் தமிழில் உருமாற்றம் பெற்றார். ப்ளீட்அவே பதிப்பகம் காமிக்ஸ் பதிப்புத் துறையில் முன்னோடி நிறுவனம். அவர்கள் சிறார்களுக்காக இதழ்கள், சித்திரக் கதைகள் வெளியிடுவதில் முன்னோடியானவர்கள்.
முத்து காமிக்ஸ் 1971ஆம் ஆண்டு அதன் முதல் காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டது. ‘இரும்புக்கை’ மாயாவி என்ற அந்தக் காமிக்ஸ் புத்தகம் 128 பக்கம் கொண்டது. விலை 90 பைசா. காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த முதல் பதிப்பின் மதிப்பு நன்றாகத் தெரியும்.
சென்ற மாதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆட்சியாளர் ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னெடுப்பில் காமிக்ஸ் நூலகம் தொடங்கப்பட்டது. அந்த விழாவிற்குச் சென்றபோது சௌந்திரபாண்டியன் உடல்நலமற்று இருப்பதாக அறிந்தேன். அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக சிவகாசி செல்ல இயலவில்லை.
காமிக்ஸ் நூலக விழா மேடையில் உரையாற்றும்போது சௌந்திரபாண்டியன் தமிழ் காமிக்ஸ் உலகிற்குச் செய்த பங்களிப்புகளையும் சிறப்புகளையும் எடுத்துப் பேசினேன். அரங்கமே அவரை வாழ்த்திக் கரவொலி செய்தது.
சௌந்திரபாண்டியன் மிகவும் தன்னடக்கமானவர். எதிலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாதவர். அவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம். அமெரிக்கக் காமிக்ஸ் புத்தக எழுத்தாளர் ஸ்டான் லீ மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டுப் புகழ்பெற்றவர். அவரைக் காமிக்ஸ் உலகின் தலைமகனாகக் கொண்டாடுகிறார்கள். அதற்கு இணையானவர் சௌந்திரபாண்டியன். அவரது தொடர் செயல்பாடுகளே தமிழ் காமிக்ஸ் புத்தகங்களுக்குத் தனித்த வாசக உலகை உருவாக்கியது.
முத்துக் காமிக்ஸ் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்களை எளிய தமிழில் சுவாரஸ்யமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இரும்புக்கை மாயாவியை அழிக்க நினைக்கும் அமைப்பின் பெயர் FEAR. அதைத் தமிழில் திறம்பட அகொதீக (அழிவு கொள்ளை தீமைக் கழகம்) என்று மாற்றியது சுவாரஸ்யமானது.
இன்று நாம் கொண்டாடும் ஜேம்ஸ்பாண்ட்டின் சாகசங்கள் அத்தனையும் இரும்புக்கை மாயாவியிடமிருந்து பெற்ற உந்துதல்களே.
தமிழ் காமிக்ஸின் தலைநகரம் சிவகாசி. இன்று நமக்குக் கிடைத்துள்ள இணைய வசதியோ, தொழில்நுட்ப சாத்தியங்களோ இல்லாத காலத்தில் காமிக்ஸ் வெளியிடும் வெளிநாட்டுப் பதிப்பகங்களைத் தபால் மூலமாகவே தொடர்புகொண்டு, பல மாதங்கள் காத்திருந்து அதற்கான உரிமையை உரிய பணம் கொடுத்துப் பெற்று காமிக்ஸின் மூலச்சித்திரங்களை வரவழைத்து அதே நேர்த்தியுடன் அச்சிட்டு, குறைவான விலையில் விற்பனை செய்தது சௌந்திரபாண்டியனின் தனிப்பெரும் சாதனை. தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் மனதில் அவரது நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும்.
மின்னஞ்சல்: writerramki@gmail.com