இரு பெரும் பரிமாணங்கள்
மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்
மு, இக்பால் முகமது
வெளியீடு:
பரிசல் புத்தக நிலையம்
47, BI பிளாட், தாமோதர் பிளாட்
ஐஸ்வர்யா அப்பார்ட்மெண்ட் முதல் தளம், ஓம் பராசக்தி தெரு, வ.உ.சி. நகர், பம்மல்,
சென்னை - 600 075
பக். 276 ரூ. 350
சென்னையில் திரைப்படத் தொழில் தொடங்கி அறுபது ஆண்டுகளாகி, ஆண்டுக்கு இருநூறு படங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கென்று கூட்டாக முதலாளிகளிடம் பேச ஓர் அமைப்பு இருக்கவில்லை. அவர்களுக்கு எந்தவிதப் பணிப்பாதுகாப்பும் கிடையாது. இந்தப் பின்புலத்தில்தான் மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன் (எம்.பி.எஸ். 1925-1988) தோன்றுகிறார். தொழிற் சங்கங்கள் உருவாவதை ஸ்டுடியோ முதலாளிகள் தங்களால் முடிந்தவரை தடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், சீனிவாசன் ஊழியர்களை ஒன்றிணைக்கத் தொடங்குகிறார். தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. 1960இல் தொடங்கிய இந்த முயற்சியில் இவருக்கு உறுதுணையாக இருந்தவர், ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ். இவர்கள் இருவரையும் இணைத்தது இடதுசாரிக் கருத்தியல். சிறுவயது முதலே கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சீனிவாசன், தனது சித்தாந்தத்திலிருந்து விலகாமல், தனது வாழ்க்கைப் பணியைத் தொடர்ந்தார். இன்று இருபத்தைந்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தென்னிந்தியத் திரையுலகில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
அவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூல் ‘மக்களிசை மேதை எம்.பி. சீனிவாசன்.’
இசைத்துறையிலும், அதிலிருந்து திரைத்துறையிலும் இவர் ஆற்றிய பணி இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சிறப்பாகச் குறிப்பிட வேண்டியது, பலர் சேர்ந்து பாடும் சேர்ந்திசையை இவர் Madras Youth Choir என்ற அமைப்பின் மூலம் வளர்த்தது. “மனிதக் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இசைக்கருவிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவர் உருவாக்கியதுதான் சேர்ந்திசை வடிவம். இசைக்கருவிகளுக்கு இங்கு, முக்கியத்துவம் இல்லை. எங்களது சேர்ந்திசையில் இருக்கும் இசைக்கருவிகள் எனில் ஆர்மோனியம். தபேலா, கிதார், அவ்வளவுதான்” என்கிறார் சீனிவாசனுடன் இணைந்து பணியாற்றிய டி. ராமசந்திரன்.
சீனிவாசன் தன் வாழ்நாளில் பெற்ற விருதுகளையும் அங்கீகாரங்களையும் விவரித்து நூலாசிரியர் தரும் பட்டியல் நம்மைப் பிரமிக்கவைக்கிறது. இத்தகைய ஓர் ஆளுமை, இந்திய சினிமா உலகிலும் மற்ற வகையிலும் ஏன் அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. தொழிற்சங்க வளர்ச்சியை ஆதரித்ததும் தனது அரசியல் கருத்தாக்கமான இடதுசாரி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுமே காரணம் . பணம் திரட்ட வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்படும் திரைப்படங் களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டதும் காரணமாக இருக்கலாம். செல்வம், புகழைப் பற்றிச் சீனிவாசன் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை
சினிமாவின் சாத்தியக்கூறுகளையும் இயல்புகளையும் நன்கு உணர்ந்திருந்த சீனிவாசன் அதேபோன்ற நோக்குடைய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர் இசையமைத்துக் கொடுத்தது, ஜான் ஆபிரகாமிற்கு மட்டுமல்ல; அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய பெருவாரியான படங்களுக்கும் சீனிவாசன்தான் இசை அமைத்தார். சினிமாவில் இசையின் இடத்தை, அதன் பங்களிப்பை நன்கு உணர்ந்திருந்தவர் சீனிவாசன். பின்னணி இசை ஒரு திரைப்படத்தில் வரும் பிம்பங்களை எவ்வாறு செறிவுள்ளதாக்க முடியும் என்பதை அடூரின் ‘எலிப்பத்தாய’த்தில் (1982) செய்து காட்டியிருப்பார்.
சீனிவாசன் இசையமைத்த படங்களில், இசை கதையின் மையக்கருவோடு ஒன்றிணைந்திருந்தது. சேர்ந்திசையை இவர் சில படங்களிலும் அறிமுகப்படுத்தினார். தமிழில் அவர் இசையமைத்த முதல் படமான ‘பாதை தெரியுது பார்’ (1960) பட த்தில் இதை அவதானிக்கலாம். ‘தாகம்’ (1972) பட த்தில் ‘வானம் நமது தந்தை’ போன்ற பாடல்கள் இந்தப் பாணி இசைக்கு நல்ல எடுத்துக்காட்டு. யதார்த்த பாணி சினிமாவிற்கு இவர் கொடுத்த ஆதரவின் அடையாளம் ஜான் ஆபிரகாம் இயக்கிய ‘அக்கிரஹாரத்தில் கழுதை’ (1977) படத்தில் கதாநாயகனாக நடித்தது.
‘Indian Performing Rights Society’யின் தலைவராகப் பல ஆண்டுகள் சீனிவாசன் பணியாற்றினார். பாரம்பரிய இசை விற்பன்னர்கள் பலர் இவரது பங்களிப்பைப் போற்றினர்; இதன் விளைவாக 1986ஆம் ஆண்டு இவருக்குச் சங்கீத நாடக அகாதமியின் விருது வழங்கப்பட்ட து.
ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும்போது, நூலின் குவிமையம் அந்த ஆளுமைமேல் இருக்க வேண்டும். சேகரித்த தகவலை எல்லாம் இந்நூலினுள் அடக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம், இந்தக் குவிமையத்தைக் குலைக்கிறது. பாடகர் யேசுதாசைப் பற்றி இவ்வளவு விவரங்கள் இங்கு தேவையில்லை என்றே நினைக்கிறேன். சீனிவாசன் எழுதிய சில கட்டுரைகள் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை வரலாற்று நூலில் இவை தேவையில்லை. அதேபோல அஞ்சலிக் குறிப்புகளும் தேவைக்கு மிகுதியானவை. ஒரு நூலில் எதைச் சேர்க்க வேண்டும் என்று தீர்மானிப்பது போலவே, எதைச் சேர்க்கக் கூடாது என்பதையும் நூலாசிரியர் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நூலின் குவியம் கலையாமல் இருக்கும். அதுமட்டுமல்ல. இந்த நூலில் சேர்க்கப்பட்ட கட்டுரைகள் எந்தத் தருணத்தில், எப்போது எழுதப்பட்டன என்ற விவரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ‘திரைப்படப் பாடல்களும் சமுதாய மாற்றமும்’ என்ற கட்டுரை ஆங்கிலத்தில் ஒரு கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட து என்று கூறி சீனிவாசன் அதன் தட்டச்சுப் பிரதி ஒன்றை 1975இல் என்னிடம் கொடுத்தது நினைவிலிருக்கிறது.
இந்த நூலில் சில தகவல் பிழைகள் உள்ளன. 1897இல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இந்தியாவின் முதல் சலனப் படக்காட்சி திரையிடப்பட்டது என்கிறது நூல் (ப.82). 1896இல் ஜூலை மாதம் பம்பாயில் வாட்சன் ஹோட்டலில்தான் முதல் சலனப் படக்காட்சி திரையிடப்பட்டது.
சீனிவாசன் இசையமைத்த படங்களின் முழுப்பட்டியல் கொடுக்கப்படவில்லை. அடூரின் ‘அனந்தரம்’ (1987) போன்ற பல முக்கியமான படங்கள் விட்டுப்போயிருக்கின்றன. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அவரோடு தொடர்புடைய முக்கியக் காலக்குறிப்புகளைச் சொல்ல வேண்டும் . சீனிவாசன் எந்த ஆண்டு பிறந்தார் என்ற விவரம்கூட இந்த நூலில் இல்லை. வேறு ஒரு தரவிலிருந்துதான் எடுக்க வேண்டியிருந்தது.
இந்த நூல் செப்பனிடப்படவில்லை. சந்திப் பிழைகள் மலிந்துள்ளன. இதிலுள்ள ஒளிப்படங்கள் முக்கியமானவை. ஆனால் தெளிவாக அச்சிடப்படவில்லை. .
வருங்கால ஆய்வாளர்களுக்குப் பயனுள்ள தரவுகளின் பட்டியலை நூலாசிரியர் தந்துள்ளார். ஆனால் சொல்லடைவு (index) இல்லாதது ஒரு குறை. பொருளடக்கம் போன்று சொல்லடைவும் நூலின் இன்றியமையாத அங்கம். இது நூலின் பயனைக் கூட்டும். தமிழ் வெளியீட்டுச் சூழலில் இதற்கு ஏனோ முக்கியத்துவம் தருவதில்லை,
இந்த நூலை எழுதியுள்ள இக்பால் அகமது ஆழ்ந்த ஆய்வுக்குப் பின், சீனிவாசனின் தொழிற்சங்க இயக்கத்தின் சினிமா இசையின் பங்களிப்பைப் பதிவு செய்கிறார். அவரது உறவினர்களுடனும் நண்பர்களுடனுமான நேர்காணல்கள், அவர் எழுதிய கட்டுரைகள், உரைகள் என பலவிதத் தரவுகளை ஆய்வுக்கு நூலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். அவரது இரு பரிமாணங்களையும் ஏராளமான விவரங்களையும் கொண்ட இந்த நூல் இந்திய சினிமா வரலாற்றிற்கு ஒரு சீரிய பங்களிப்பு,
மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com