அரங்கின் சலனங்கள்
பாலேந்திராவின்
அரங்கக் கட்டுரைகள்
பாலேந்திரா
வெளியீடு:
குமரன் புத்தக இல்லம்
இல.14, அண்ணா 2ஆம் தெரு,
தேரோடும் வீதி, திருவேற்காடு,
சென்னை - 600 077
பக். 276 ரூ. 350
இலங்கையின் பிரதான நாடகக் கலைஞரும், தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் நிறுவனரும், இலங்கை யிலும் புலம்பெயர் நாடுகளிலும் 60க்கும் மேற்பட்ட தமிழ் நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் நவீன நாடக இயக்கத்துக்குப் புதிய பார்வை களையும் பரிமாணங்களையும் அளித்து வருபவருமான பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் நவீன நாடகச் செயல்பாடுகளின் பின்புலத்தில் அதன் உள்ளார்ந்த பிரச்சினைகள், சவால்கள் குறித்து ஆழ்ந்த கவனத்தை முன்னெடுக்கிறது. முக்கியமாக இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாம் உண்மையில் இயல்இசையின் சங்கமமான நாடகத்துக்குக் கொடுக்கும் இடம் என்ன என்றும், தமிழில் உலகத்தரமான நாடகங்கள் ஏன் உருவாக்கப்படவில்லை என்றும் காத்திரமான பல கேள்விகளை முன்வைக்கிறார் ஆசிரியர். இலங்கைச் சூழலை முன்வைத்து இக்கேள்விகளை எழுப்பினாலும் தமிழ்நாட்டுச் சூழலுக்கும் இக்கேள்விகள் மிகவும் பொருந்தமுடையவை.
ஆரோக்கியமான நாடகச்சூழல் உருவாக முதலில் நல்ல நாடகங்கள் உருவாக வேண்டும். அடுத்து அவை மேடையேற்றப்படுவதற்கான சூழல் உருவாகவேண்டும். நாடகக் கலை முறைமைகள், கலை நுட்பங்கள், நாடக வரலாறு, உலக நாடக வளம் ஆகியவை குறித்த அறிவும் பயிற்சியும் உள்ள குழுக்களின் தேவைகளுடன் புதிய நாடகரசனைப் பயிற்சியை அளிக்கக்கூடிய வலுவான மேடையேற்றங்களின் அவசியத்தையும் இத்தொகுப்பில் பல்வேறு இடங்களில் பாலேந்திரா வலியுறுத்துகிறார். அத்துடன் நாடகம் நிகழ்த்துவோரும் இடைவெளியின்றி பார்வையாளர்களை உடன் அழைத்துச்செல்லக்கூடிய மனநிலையைப் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும். இந்த நிகழ்த்திக் காட்டுதலென்பது சரியான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி அமைப்பதாக இருக்க வேண்டுமானால் வார்த்தைகளால் விளக்க முடியாத பல விஷயங்களை மேடையில் நடிகர்கள் நிகழ்த்துகிற படிமங்கள், கோலங்கள், சலனங்கள், செயல்பாடுகள் ஆகிய மேடை மொழி மூலம் சாத்தியப்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன.
முக்கியமாக வசனங்களை அள்ளித் தெளிப்பதைக் கைவிட்டுச் சொற்கள் காட்சிகளுடன் இணைந்து பாத்திரங்களின் உணர்ச்சிகள், பாவனைகள் மூலம் வெளிப்பட்டு இவை அனைத்தும் ஓர் இசை ஒழுங்கில் அமையும் கட்டுப்பாடான சூழலே நவீன நாடக அமைப்பு என வரையறுக்கப்படுகிறது. தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் ஆகிய ஒவ்வொரு வடிவமும் தனித்தன்மைகள் கொண்டிருப்பதை உணர்ந்து மேடை மொழியையும் சினிமா மொழியையும் வேறுபடுத்திப்பார்க்க வேண்டுகிறார். நல்ல நாடகங்களைத் திரும்பத் திரும்ப மேடையேற்றுவதற்கு உகந்ததாகப் போதிய நாடகப் பிரதிகளின் அவசியத்தை வலியுறுத்தி அதற்காக ஒரு தொடர்ச்சியான நாடக இயக்கமும் நாடகப் பயிற்சிக்கூடங்களின் தேவையும் அவசியம் என்கிறார். அதே சமயம் மொழிபெயர்ப்பு நாடகங்களின் அவசியத்தைக் குறைத்து மதிப்பிடுவது தவறானது, அயனெஸ்கோ, செகாவ், பிரெக்ட் போன்ற உலக நாடக மேதைகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்க வேண்டும். நம்முடைய மொழிக்கும் கலாச்சார வளர்ச்சிக்கும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார். தன்னுடைய நாடக நிகழ்வுகளில் அறிமுகப்படுத்திய இந்திய நாடகாசிரியர்களான மோகன் ராகேஷ், பாதல் சர்க்கார், கிரீஷ் கர்னாட், இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி ஆகியோரின் நாடகப் பங்களிப்புகளை நினைகூர்ந்து கெளரவிக்கிறார்.
தன்னுடைய நாடகக் குழுவான தமிழ் அவைக்காற்றுக் கழக அனுபவங்களின் பின்புலத்தில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் அரங்கச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்கிறார். அவைக்காற்றுக் கழகத்தின் நாடக நிகழ்வுகள் மூலம் உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த காத்திரமான நாடக அறிமுகத்தை நினைவுகூர்கிறார். முக்கியமாக லோர்க்காவின் ஸ்பானிய நாடகம் ‘பாலை வீடு’, பிரெக்டின் ‘யுகதர்மம்’, மோகன் ராகேஷின் ‘அரையும் குறையும்’, கிரீஷ் கர்னாடின் ‘துக்ளக்’, பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, அம்பையின் ‘ஆற்றைக் கடத்தல்’ ஆகிய நாடகங்கள் மூலம் அவைக்காற்றுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு நாடகச் சலனங்களை இத்தொகுப்பில் குறிப்பிட்டுச் செல்கிறார்.
உலக நாடக அரங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு நாடகச் சலனங்களை நாம் உள்வாங்கி உரிய வகையில் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை பாலேந்திராவின் இத்தொகுப்பு வலியுறுத்திச் செல்கிறது.
மின்னஞ்சல்: velirangarajan2003@yahoo.co.in