வரலாற்றில் ஒளிரும் சுடர்
மு. அருணாசலம் (1909-1992)
‘ஒரு பல்கலைக்கழகத்தில் பலதுறை அறிஞர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அறிஞர் ஒருவருக்குள்ளே ஒரு பல்கலைக்கழகமே இருந்தது உண்டா? அப்படி அறிஞர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படி இருந்தவர் தான் மு. அருணாசலம் என்பார் பேரா.தெ. ஞானசுந்தரம். இது மிகையான கூற்றில்லை. ஒரு பல்கலைக்கழகமாய், பன்முக ஆளுமையாய் தமிழியலின் பல்வேறு துறைகளில் இயங்கியவர் அறிஞர் மு. அருணாசலம். 1909ஆம் ஆண்டில் பிறந்து 1992 ஆம் ஆண்டு வரை நிறைவாழ்வு வாழ்ந்த இவர், ஏறக்குறைய 60 ஆண்டுகள் தமிழ்ப்பணிக்கென்றே தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். எந்தத் தமிழறிஞரும் எழுதிப் பார்க்கத் துணியாத, துணிந்தாலும் தொடர இயலாத நூற்றாண்டுவாரியான இலக்கிய வரலாற்று நூல்களைத் தனியொருவராக எழுதிச் சாதனை புரிந்தவர். வாய்மொழி இலக்கிய வரலாற்றிலும் முக்க