நெகிழவைத்த அறுபது
படம்: ஜவஹர் ஜி.
எழுத்தாளரும் இதழாளரும் மொழி பெயர்ப்பாளருமான அரவிந்தனுக்கு 60 வயது நிறைவடைந்ததை யொட்டி ‘நெய்தல்’ இலக்கிய அமைப்பு ‘அரவிந்தன் 60’ நிகழ்ச்சியை நாகர்கோவிலில் கடந்த மார்ச் 22 அன்று மாலை நடத்தியது. 1989ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் நெய்தல் அமைப்பு 2006 இலிருந்து இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது, இளம் கவிஞர்களுக்கான ராஜமார்த்தாண்டன் விருது ஆகியவற்றை வழங்கிவருகிறது. தற்போது நாகர்கோவிலில் வசித்துவரும் அரவிந்தனின் எழுத்து, ஆளுமை ஆகியவற்றை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்ச்சியை நெய்தல் நடத்தியது.
அரவிந்தனின் சிறுகதை ஒன்றைச் சொற்சித்திர மாக்கி நிகழ்வைத் தொடங்கிவைத்தார் சீதா பாரதி. கதையை அவர் சொன்னவிதம் வாசிப்புக்கு இணையான அனுபவத்தைக் கொடுத்தது. முன்பே வாசித்தவர்களும்கூடக் கதையைக் கேட்டது புதிய அனுபவமாக இருந்ததாகச் சொன்னார்கள்.
தொடர்ந்து, ஓவியரும் எழுத்தாளருமான சந்தோஷ் நாராயணன் பேசினார். அரவிந்தனின் தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன், சக மனிதர்கள்மீதான அக்கறைபற்றிய பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். காலச்சுவடில் வடிவமைப்பாளராக வேலைக்குச் சேர்ந்த தனக்குள் இருந்த எழுத்துத் திறமையை அரவிந்தன் அடையாளம் கண்டு எழுத ஊக்குவித்ததை நினைவுகூர்ந்தார். அரவிந்தனின் உணவு ருசி, இசையார்வம் ஆகியவற்றையும் தன்னுடைய சுருக்கமான பேச்சில் தொட்டுக்காட்டினார் சந்தோஷ்.
காந்தியச் சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியம், இதழியல் சார்ந்து அரவிந்தனின் ஆசிரியத்துவம்பற்றிய வியப்புகளைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை அவர் வளர்த்தெடுக்கும் விதத்தைப் பற்றியும் பேசினார். அரவிந்தனுடனான தனிப்பட்ட நட்பின் தருணங்கள், உரையாடல்களில் வெளிப்படும் வீச்சு ஆகியவற்றையும் சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.
காலச்சுவடு இதழ் சார்ந்த பணிகள், பதிப்பகம் தொடர்பான நூலாக்கப் பணிகளில் அரவிந்தன் கூறும் நுணுக்கமான கருத்துகளும், சக ஊழியர்களிடம் வெளிப்படுத்தும் அக்கறையும் என எழுத்தாளர் களந்தை பீர் முகம்மது தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அறைத் தோழராக அவரின் அன்றாட வாழ்வியல் ஒழுக்கமும், தொடர் பயிற்சியும் எழுத்து வாழ்க்கையில் எவ்வளவு கடினம் என்பதையும் முன்வைத்தார்.
எழுத்தாளர் ஜே. பி. சாணக்யா, இலக்கிய ஈடுபாட்டிலும் சினிமாத் துறையிலும் தனது ஆரம்பக் காலம் தொட்டே எல்லாச் சூழ்நிலையிலும் அரவிந்தன் உடன் இருந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எழுத்தில் ஆர்வம் கொண்டு இயங்க முனையும் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு அரவிந்தன் போன்றவர்கள் தரும் ஆதரவும் ஊக்கமும் எவ்வளவு முக்கியமானவை என்பதை விவரித்தார். தனிப்பட்ட நட்பின் முக்கியமான தருணங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அரவிந்தனின் இலக்கியப் படைப்புகள், அதில் வெளிப்படும் நுட்பங்கள் குறித்தும் ஆழமாகப் பேசினார்.
கவிஞர் சுகுமாரன் தன்னுடைய சுருக்கமான உரையில், இலக்கியப் பங்களிப்புகள், இதழியல் பணிகள், மொழியாக்கம், பதிப்பகச் செயல்பாடுகள் என அரவிந்தனின் எழுத்து சார்ந்த தளங்களைத் தொட்டுப் பேசினார்.
மிகச் சுருக்கமாக அமைந்த அரவிந்தனின் ஏற்புரை நன்றியறிதலின் பதிவாக அமைந்தது. தயாளனும் சீதா பாரதியும் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்கள். நெய்தல் அமைப்பின் நிறுவனரான ‘நெய்தல்’ கிருஷ்ணனின் ஒருங்கிணைப்புத் திறன் நிகழ்ச்சி நடந்த விதத்தில் வெளிப்பட்டது. ஆய்வறிஞர் அ.கா. பெருமாள், மொழிபெயர்ப்பாளர் பெர்னார்ட் சந்திரா, எழுத்தாளர்கள் என்.டி. ராஜ்குமார், நட. சிவகுமார், மலர்வதி உட்படப் பலரும் கலந்துகொண்ட அன்றைய மாலை நேர நிகழ்வு சுவையான இரவு உணவுடன் நிறைவடைந்தது.
மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com