கடந்த காலத்தில் கரைந்துபோகும் எதிர்காலம்
2023ஆம் ஆண்டு அனைத்துலக புக்கர் பரிசுக்கு ஜோர்ஜி காஸ்படினவ் (Georgi Gospodinov) எழுதிய காலக்காப்பிடம் (Time Shelter) எனும் பல்கேரிய நாவல் தேர்வு செய்யப் பட்டிருக்கிறது. பல்கேரிய மொழியில் அதன் தலைப்பு: Vremeubezhishte. ஏஞ்செலா ரோடெல் (Angela Rodel) அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். பல்கேரிய நாவல் ஒன்று புக்கர் பரிசுக்குத் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் தடவை.
நாவலின் தலைப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளுக்கு இடந்தரக்கூடியதாக இருக்கிறது. நியூயார்க்கின் கல்மான் (Cullman) மையத்தில் நடந்த ஒரு நேர்காணலின்போது ஆசிரியர் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் அதனை இரண்டு விதமாகப் பொருள்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, போரில் குண்டு மழை பொழியும்போது ஏதாவது ஒரு குகையில் பதுங்கிக்கொள்வதுபோல், எதிர்காலம் குறித்து அச்சம் வரும்போது பாதுகாப்புக்காகத் தங்கிக்கொள்ளும் இடம்; மற்றொன்று, கடந்தகால நினைவுகளைப் பாதுகாத்து வைக்கும் இடம்.
பல்கேரிய எழுத்தாளர் ஒருவர் எழுதியிருக்கும் இந்நாவல் அந்நாட்டின் வரலாறு அல்லது பண்பாடு எனும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல், ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் உள்ளடக்குகிறது. கடந்த காலமும் அது பற்றிய நினைவுகளும் மனிதனைப் பாதிக்கும் விதத்தை விவாதப் பொருளாகக் கொள்வதால், நாவலின் வீச்சு மனிதகுலம் அனைத்திற்கும் விரிவடைகிறது.
அல்சைமர் (Alzheimer)
ஐந்து பகுதிகள் கொண்ட இந்த நாவலின் முதல் பகுதியில் அல்சைமர் நோய் பற்றி் விவாதிக்கப்படுகிறது.
“இன்றைய உலகில் அல்சைமர் அல்லது மறதிக் கோளாறு மிக விரைவில் பரவிக்கொண்டிருக்கும் வியாதி. புள்ளியியல் விவரப்படி மூன்று விநாடிகளுக்கு ஒருவர் இதனால் பாதிக்கப் படுகிறார். முப்பது ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டுகிறது. அது விரைவில் மூன்று மடங்காகப் பெருகும் வாய்ப்பும் இருக்கிறது. தனிமனித ஆயுட்காலம் நீண்டு போவதால், அதனைத் தடுக்க இயலாது” (பாகம் 1, அத்.21).
நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் இந்நோய் ஒரு நாட்பட்ட நோயாகும். இதனால் நினைவுகள் அழிந்து போகும், அறிவாற்றல் குறையும். இதுபோன்ற பிரச்சினைகளில் சில அல்சைமர் நோய் இல்லாதவர்களுக்கும் ஏற்படலாம். வேறுபாட்டை நாவலின் முக்கிய கதாபாத்திரமான காஸ்டின் விளக்குகிறார்:
“கடந்த காலம் என்றால் கடந்த காலம்தான். அதனுள் நுழைந்து விட்டால், (நமக்கெல்லாம்) நிகழ்காலத்திற்குத் திரும்பும் வழி தெரியும். அது திறந்தே இருக்கும். ஆகவே, நாம் சுலபமாக வெளியில் வந்துவிடலாம். ஆனால், நினைவாற்றலை இழந்தவர்களுக்கு, மூடிய கதவு மூடியதாகவே இருக்கும். அவர்களுக்கு நிகழ்காலம் ஓர் அந்நிய தேசம். கடந்தகாலம்தான் அவர்களின் தாயகம்”(பகுதி 1, அத் 11).
அல்சைமர் மருத்துவமனை
அல்சைமர் நோயாளிகளுக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மருத்துவமனையை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது இந்த நாவல். அது சுவிட்சர்லாந்தின், சூரிக் நகரில் நிறுவப்படுகிறது. அந்த மருத்துவமனை அமைவதற்குக் காரணமாக இருந்தவர் காஸ்டின். அவர் பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர். இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக வருபவர் கதைசொல்லி, காஸ்படினவ். அவர் காஸ்டினுக்குத் துணை நிற்பவர். அவரும் பல்கேரிய நாட்டவர். அவர் தன் நாட்டை விட்டுவிட்டு சுவிட்சர்லாந்தைத் தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ஐரோப்பிய வரலாற்றில் அரங்கேறிய பயங்கர நிகழ்வுகள் சுவிட்சர்லாந்தை அதிகமாகச் சீண்டியதில்லை. மற்றொன்று, காஸ்டின் பெரிதும் வியந்து போற்றுகின்ற ஜெர்மன் எழுத்தாளர் தாமஸ் மான் (Thomas Mann) தன் மந்திர மலை (The Magic Mountain) என்னும் நாவலுக்கு அந்நாட்டையே கதைக் களமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
அந்த மருத்துவமனையில் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு அறையும், 20ஆம் நூற்றாண்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்காக ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டமும் பத்தாண்டுகள் அளவிலானது. அந்தந்தக் காலகட்டம் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் அங்குக் குவிக்கப்படுகின்றன.
“கடந்த 1965ஆம் ஆண்டு நினைவுகளென்றால், நீங்கள் அந்த ஆண்டு சம்பந்தப்பட்ட கதைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கதைகள் கிடைக்கவில்லையென்றால், அவற்றை நீங்கள் கற்பனையால் உருவாக்க வேண்டும். அந்த ஆண்டு மக்கள் எந்தவிதமாகத் தலைமுடி வைத்திருந்தார்கள், அவர்கள் செருப்புகளின் முனை எவ்வளவு கூர்மையாக இருந்தது, அந்த ஆண்டு பயன்படுத்தப் பட்ட சோப்பின் வாசனை எப்படி இருந்தது? - இதுபோன்ற விவரங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வருடம் வசந்தகாலத்தில் மழை பெய்ததா? அந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தட்ப வெப்ப நிலை எப்படி இருந்தது? அந்த வருடத்திய மிகவும் பிரபலமான பாடல் எது? – இது போன்ற தகவல்களையெல்லாம் சேகரித்துக்கொள்ள வேண்டும்” (பாகம் 1, அத். 12).
அவையெல்லாம் நோயாளிகள் மறந்துவிட்ட பொற்கால நினைவுகளுக்குப் புத்துயிரூட்டும். அவர்களுக்கு மன நிம்மதியைத் தந்து, தன்னம்பிக்கை அளிக்கும். அவர்களாலும் வாழ்க்கையில் ஒருவித நிம்மதி அடைய முடியும்.
சிகிச்சை நடைமுறை
எளிதான அந்தச் சிகிச்சை முறையையும் கதைசொல்லி விளக்குகிறார்:
“பாதி திறந்திருந்த கதவின் வழியே அறையொன்றைப் பார்த்தேன். அதில் வயதுமுதிர்ந்த ஒரு பெண்மணி முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் உள்ளே நுழைந்தார். அங்கிருந்த மரத்தினாலான ஒரு பழைய வானொலிப் பெட்டியைப் பார்த்ததும் அவள் முகத்தில் உயிர்ப்பு ஏற்பட்டது. பெட்டியின் முகப்பில் லண்டன், புடாபெஸ்ட், வார்சா, பிராக் … என்றெல்லாம் எழுதியிருப்பதைப் பார்த்ததும் ‘ஓ, சோஃபியா’ என்று கத்தினாள். அதுபோன்ற சமயத்தில் சாமர்த்தியமாக அவள் அருகில் சென்று அவளிடம் பேச்சுக் கொடுப்பதும், அவள் சொல்லப் போகும் கதையை ஊன்றிக் கேட்பதற்குத் தயார் நிலையில் இருப்பதும்தான் என்னுடைய வேலை...” (பாகம் 1. அத் 24)
காஸ்டினின் இந்த முயற்சி வெற்றிபெறுகிறது. ஒவ்வொரு தளத்திலுமுள்ள நோயாளிகள் தங்களுக்குப் பிடித்த காலகட்டத்தின் நினைவுகளில் ஒன்றி நிம்மதியடைகின்றனர்.
அல்சைமர் நோய் பாதிப்பில்லாதவர்கள்கூட அங்கு வந்து தற்காலிகமாகத் தங்கி மகிழ்ச்சியடைகிறார்கள்.
நாளடைவில் இதுபோன்ற மருத்துவமனைகள் ஐரோப்பிய நகரங்கள் பலவற்றிலும் உருவாக்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்
ஏஞ்செலா ரோடெல்
நாவலாசிரியர்
ஜோர்ஜி காஸ்படினவ்
தொற்று நோய்
நாவலின் பாகம் இரண்டு கடந்த காலத்தின் முக்கியப் பக்க விளைவு ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறது : நிகழ் காலமும் எதிர்காலமும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. கடந்த காலம் எல்லோர் மனதையும் ஆக்கிரமிக்கிறது. அது ஒரு தொற்று நோய்போல் பரவுகிறது.
“அல்சைமரைப் பேசும்போது, நாம் ஒரு முக்கிய விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் விடுகிறோம். நோயாளிகள் கடந்த கால நிகழ்வுகளை மறப்பதோடு அல்லாமல், எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் எதையும் உருவாக்க முடியாமலும் இருப்பார்கள். சொல்லப்போனால், எதிர்காலம் பற்றிய கோட்பாடோ கருத்துப் படிவமோ அவர்களிடம் இருப்பதில்லை.” (பாகம் 2, அட். 2).
அதுபோல் கடந்த காலத்தைப் போற்றும் அரசியல்வாதிகளும் செயல்பட முனைகின்றனர்.
“நமக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்று நிச்சயமாகத் தெரியும். ஆனால் நமக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கப்போகிறது என்று நிச்சயமாகத் தெரியாது... அதன் எதிர்காலம் என்னவென்று தெரியாததால், ஐரோப்பாவின் கடந்த காலத்தைத் தெரிவுசெய்துகொள்வோம்” (பாகம் 2, அத் 2) என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.
இதுபோன்ற மனப்பான்மை ஐரோப்பாவில் வளர ஆரம்பித்துவிட்டது.
எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில், கடந்த காலத்தில் பொற்காலம் என்று கருதப்பட்ட ஒரு காலகட்டத்தை ஒவ்வொரு நாடும் தேர்ந்தெடுத்து, அதனை மீண்டும் மலரச் செய்யும் திட்டம் உருவாகிறது. அக்காலகட்டத்தைத் தேர்வுசெய்துவிட்டால் தேசிய உணர்வு வலுப்படும் என்ற எண்ணமும் வெளிப்படுகிறது.
பொது வாக்கெடுப்பு
ஐரோப்பிய நாடுகள் அதற்கான செயலாக்கத்தில் ஈடுபடுகின்றன. முதலில் பல்கேரியா எந்தக் காலகட்டத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறது?
பல்கேரியா தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. பத்தொன்பதாவது நூற்றாண்டில் ஆட்டோமான் பேரரசிலிருந்து விடுதலையடைந்த அந்த நாடு, இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனிக்குச் சாதகமாக இருந்தது. பின்னர், சோவியத் யூனியனோடு நெருக்கமாக இருந்தது. சோவியத் யூனியன் சிதறியபின், ஐரோப்பிய யூனியனிலும், நாட்டோவிலும் சேர்ந்துகொண்டது. இவ்வாறிருக்கையில், அதன் பொற்காலத்தை முடிவுசெய்வது கடினமாகிறது. 19ஆம் நூற்றாண்டில் ஆட்டோமான் பேரரசுக்கு எதிராக 1876 ஏப்ரலில் கலவரம் நடந்த காலகட்டம், பின்னர் சோஷலிஸத்துடன் நட்பிலிருந்த 20ஆம் நூற்றாண்டுக் காலகட்டம் - இரண்டும் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. ஒருமித்த கருத்து உருவாகும் சூழல் உருவாகவில்லை.
இதுபோல் ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சினைகள் எழுகின்றன. இங்கிலாந்து பிரெக்ஸிட்கொள்கையின்படி ஐரோப்பிய யூனியனை விட்டு விலகிவிட்டது. ஆனாலும் அந்நாட்டில் அந்த முடிவை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள்.
பிரான்சில் 1945-1975 காலம் பெரும்பாலானோருக்குப் பிடிக்கும்; வேறு சிலருக்கு 1960கள் பொற்கால மாகத்தோன்றுகின்றன. ஆனால் எதுவானாலும் அதனை லெப்பென் என்னும் அரசியல்வாதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கப் போவதாக அறிவிக்கிறார்.
இதுபோல் ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன், செக் குடியரசு, ரொமானியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் விவாதங்கள் எழுந்து குழப்பத்தில் போய் முடியும் நிலை தென்படுகிறது.
இப்படியாகக் கடந்தகாலத்தையே தேடியலையும் போது, ஒருமித்த எதிர்காலத்தை நிர்ணயிப்பது கடினமாகிவிடுகிறது. இந்நாவலில், நம் நாட்டைப் பற்றிப் பேசப்பட வில்லை என்றாலும், அதற்கும் இது பொருந்தும். கடந்த காலத்தில் சில காலகட்டங்கள் பொற்காலமாகத் தோன்றினாலும், அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டு, எதிர்காலத்தைத் திட்டமிடவில்லையென்றால், நாமும் அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள்போல் ஆகிவிடுவோம்.
இதையே கடந்த காலம் ஏற்படுத்தும் முக்கியப் பிரச்சினையாக நாவல் உணர்த்தினாலும், நாவலாசிரியர் பின்நவீனத்துவப் பாணியில் முடிவை வாசகர்களின் பொறுப்புக்கே விட்டுவிடுகிறார்.
நகைச்சுவை உணர்வு
ஒரு தத்துவ விவாதத்தை முன்வைப்பதுபோல் தோன்றினாலும், இந்நாவலில் ஆங்காங்கே நகைச்சுவை கலந்து கதைசொல்லும் பாணி வாசகர்களுக்குச் சோர்வு ஏற்படுத்தாமல், அவர்களை மேலும் படிக்கத் தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த காலம் தொற்று நோய்போல் பரவுவதைக் கதைசொல்லி இவ்வாறு வர்ணிக்கிறார்:
“1918ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃபுளு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா… அது பயங்கரமானது. மக்கள் தெருவில் போய்க்கொண்டிருக்கும்போதே கீழே விழுந்து இறந்து போவார்கள். யாராவது ஒருவர் வாய் திறந்து உங்களுக்கு ‘ஹலோ’ என்று சொன்னால் போதும், அடுத்த நாள் மாலையில் இறந்து விடுவீர்கள்” (பாகம் 2, அத். 1).
கதைசொல்லியின் பல்கேரியப் பயணத்தையும் எடுத்துக் காட்டலாம்:
“இடித்துக்கொண்டு போவதும், பாஸ்போர்ட் சரிபார்க்கும் இடத்திற்கு முண்டியடித்துக்கொண்டு போவதும் அந்த ஊரின் வணிகக் குறி (trade-mark)... நீங்கள் டாக்சிக்காரனுக்கு வணக்கம் சொன்னால், அவன் திருப்பி உங்களுக்கு வணக்கம் சொல்ல மாட்டான். நீங்கள் கொடுத்த முகவரி ஊரின் அடுத்த பக்கம் இல்லையென்றால் கோபத்தோடு வண்டியைக் கிளப்புவான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைப்பான். ஏதோ ஒரு சத்தமான இசையை இயங்க வைப்பான்.”
உருவகக் கதை
இந்நாவலில் சிந்திக்க வைக்கும் உருவகங்களும் உண்டு.
கதைசொல்லி பல்கேரியா செல்லும் விமானத்தில் ஒரு நிகழ்ச்சி.
“திடீரென அந்த விமானத்தில் என் தலைக்கு மேல், அழைப்பு மணிக்கருகில், ஓர் ஈ வந்து அமர்கிறது. விமானத்தில் ஒரு ஈயா? எனக்கும் ஈக்கும் ஒரு சிறப்பான உறவு உண்டு... அங்கு நான் பார்த்த ஈ பல்கேரிய ஈயா ? அன்று காலை விமானம் சோஃபியா நகரத்திலிருந்துதான் வந்திருந்தது. ஆகவே, அது பல்கேரிய ஈயாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. அல்லது ஒரு சுவிட்சர்லாந்து ஈ ஏதோ ஒரு குழப்பத்தில் இங்கு வந்திருக்கலாம். ஈக்களுக்குத் தனித்தனி தேசங்கள் உண்டா? அப்படியானால் அவற்றினுடைய தேசியப் பண்புகள் யாவை?”
இதுபோன்ற கேள்விகள், ஐரோப்பாவில் முளைவிடும் குறுகிய தேசிய உணர்வு குறித்த சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றன.
மொத்தத்தில், இந்நாவல் வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அனைத்துலக புக்கர் பரிசில், மொழிபெயர்ப்பாளரும் நூலாசிரியருக்குச் சமமாகக் கௌரவிக்கப்படுகிறார். அந்த வகையில், இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஏஞ்செலா ரோடெலின் சாதனை மகத்தானது. “மொழிபெயர்ப்பாளர் இசை நிகழ்ச்சியில் இசைக் கலைஞருக்குப் பின்னால் நின்று ஒத்து ஊதுபவர் அல்ல. அவருடைய பங்கு எழுத்தாளரின் பங்கிற்குச் சமமானது. ஒரு ‘டூயட்’டில் இணைந்திருப்பதுபோல், எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் இணைந்திருக்க வேண்டும்” என்று அவர் ஒரு நேர்காணலில் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.
மின்னஞ்சல்: srakichena@gmail.com