எங்கள் தொழில் சும்மா இருத்தல்
‘என்னவே, என்ன வேலை பார்க்கிறீர்?’ என்றார் ஒருவர். ‘சும்மாதான் இருக்கிறேன்’ என்று சடக்கெனச் சொன்னேன்.
‘சும்மா இருக்கிறாயா. ஏன் ஏதாவது வேலை பார்க்கப்படாது? வேலை கிடைக்கலியா, என்ன?’ என்று கேட்டார்.
‘வேலை கிடைக்காமல் என்ன! எனக்குப் பிடிக்கலே. என் தொழில் சும்மா இருத்தல்தான்’ என்று பதில் சொன்னதும் அவர் நீட்டினார். ‘என்ன பிள்ளைடே நீ; சும்மா இருக்கலாமா?’
‘பின்னே சுமந்துகிட்டா இருக்கணும்’ என்று பதில் எறிந்தேன். அதற்கு மேல் கம்பி நீட்டாமல் அங்கு நிற்க அவருக்கென்ன பைத்தியமா?
ஆம் ஐயா, நான் கேட்கிறேன். ‘சும்மா இருத்தல் என்ன லேசான காரியமா? அந்தக் காலத்தில் இருந்து யோகிகள், ஞானிகள், வேதாந்திகள் எல்லோரும் ‘சும்மா’ இருக்கப் பகீரத முயற்சிகள் செய்திருக்கிறார்களே.’
‘அரிது அரிது காண் சிந்தையடக்கிச் சும்மா இருத்தலே!’ என ஓலமிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல. ‘சும்மா இருந்தவனை’ப் போற்றி வந்திருக்கிறார்கள். ஒரு ஸ்தலத்தில் உள்ள கோயில் சுவரிலே ‘சும்மா இருப்பவனுக்கு ஒரு கட்டிச் சோறு’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். திருக்கோயிலின் திவ்யப் பிரசாதம் திருப்பரிசாகக் கிடைக்க வழி செய்வது எங்கள் தொழில் என்றால், அதன் மகிமை லேசுப்பட்டதா?
ஆனால் உலகத்தில் உள்ள பெருவாரியான பேருக்கு இத்தொழிலின் மகிமை தெரிவதில்லை. ‘அவன் சும்மா இருக்கிறான்; சும்மா இருக்கிறான்’ என்று குறை கூறத்தான் தெரிகிறது. சும்மா இருப்பது ஒரு பெருந்தொழில் என்பது அவர்களுக்குப் படவில்லை.
உதாரணமாக உபாத்தியாயரையும் போஸ்ட்மாஸ்டரையும் மற்ற எந்த வேலைக்காரரையும் இரண்டு நாள் சும்மா இருந்து பார்க்கச் சொல்லுங்களேன். அப்புறம் சொல்வார்கள். ஒரே பந்தாவில் சுழன்ற அவர்களுக்கு ஒருநாள் போவதே – பல மணிநேரம் சும்மா இருப்பது – பெரும் பாரமாகத் தோன்றும். குட்டி போட்ட பூனைபோல அங்குமிங்கும் அலைவார்கள். ‘சே.. பொழுதே போகலியே’ என நூறு தடவை சொல்வார்கள். தினம் சுற்றிச் சுற்றி அலையும் தபால் சேவகன் ஒரு மாதம் சும்மா இருக்கலாமே என்று லீவு எடுத்துவிட்டு, முடியாமல் போகவே மீண்டும் வேலைக்கே போய்விட்டான் என்று கேள்விப்படவில்லையா?
இது சிரமமான தொழில் என்று மற்றவர்கள் சொல்வார்கள். எங்களுக்கு இது உயிர்க் கலை. இத்தொழிலுக்கும் வேலை நேரங்கள் உண்டு. காலையில் எழுந்து குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது போன்ற வாழ்க்கைக் கடமைகளைச் செய்வது போக மீதி உள்ளவைதான் அவை.
காலை ஆகாரத்துக்குப் பிறகு உட்காருகிறோம். எங்கள் கண் எங்காவது திரியும். ஆனால் மனம் எதிலும் லயிக்காது. மத்தியானச் சாப்பாட்டின் பின்னரும் அப்படித்தான். துண்டை விரித்துப் படுத்துவிட்டால், ஆஹா ஹா, எங்கள் தொழிலின் உயர்வு தெரியும். இதனால்தான் மற்றத் தொழில் பெரியார்கள்கூட, ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு’ என்ற போர்வையில் எங்கள் தொழிலின் இனிமையை நுகர வருகிறார்கள். ஆனால் அவர்களால் கால்மணி நேரந்தான் அப்படி இருக்க முடியும். அப்புறம் கும்பகர்ணப் படலம் வாசிப்பார்கள்.
நாங்கள் அவ்விதமல்ல. அப்படிப் படுத்தபடியே தூங்காமல் தூங்கி – சும்மா – சுகம் பெறுவோம். எங்கள் பார்வை விட்டத்தில் கலந்திருக்கும். நாங்கள் தீவிர சிந்தனையில் இருப்பது போலப்படும். ஆனால் சிந்திப்பது என்பது எங்கள் தொழிலின் எல்லைக்கு அப்பாற்பட்டது. சிந்தித்துச் சிந்தித்து நாட் கழித்தால் நாங்கள் சும்மா இருப்பவர்கள் ஆவோமா? ‘சிந்தனையாளன்’ என்ற பெயர் வந்துவிடுமே.
பார்க்கப் போனால் எங்கள் தொழில் எல்லோரும் விரும்பக் கூடியது, மிருகங்கள்முதல் அவதார புருஷர்கள் வரை. இரண்டையும் பிணைத்து கம்பன் அற்புதம்கூடச் செய்திருக்கிறான் தன் அமர காவியத்தில்.
ராமனுக்கு நாளைக்குப் பட்டாபிஷேகம். சும்மா இருந்தவனைப் பிடித்து ராஜ்யபாரம் சுமக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றன. நல்லவேளை. கைகேயி குறுக்கிட்டாள். ‘காட்டுக்குப் போய் நீ சும்மா இரு, மகனே!’ என்றாள். அவன் கோபித்தானா, திட்டினானா, வருந்தினானா, இல்லை. மகிழ்வு கொண்டான். ‘அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது’ அவன் முகம். ஏன்? இந்த இடத்தில் அபார உவமையைப் போடுகிறான் கம்பன். பெருஞ்சுமை ஏற்றிய வண்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட மால்விடை ஒத்தான் ராமன் என்று. சுமைதாங்கும் தொழில் முடிந்து சும்மா இருக்கும் பேறுபெற்றோமே எனப் பூரிக்கும் காளைபோலவே களிப்புற்றான் ராமன். இதிலிருந்தே தெரியவில்லையா எங்கள் தொழிலின் பெருமை?
எங்கள் தொழிலில் போட்டி இல்லை; பொறாமை இல்லை. எல்லோருக்கும் – கற்றோருக்கும், கல்லாருக்கும், பணக்காரருக்கும், ஏழைக்கும், திறமை உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடம் கொடுக்கும் ‘அகண்ட ஸ்தானம்’ எங்கள் தொழில்தான். இதனால் யாருக்கும் தீங்கு கிடையாது. இந்தத் தலைக்கனம் பிடித்த சர்வாதிகாரிகள் மட்டும் எங்கள் தொழிலின் உபாசகர்களாக இருந்தால் இந்த யுத்தம் பிறந்திருக்கவே பிறந்திருக்காது.
இத்தொழிலின் தன்மையைக் கடவுள்கூட உணர்ந்திருக்கிறார். விவிலியத்தைப் படியுங்கள். தெரியும்.
‘வெளிச்சம் உண்டாவதாக’ என்றார் கர்த்தர். வெளிச்சம் பிறந்தது; ‘நீர் உண்டாவதாக’ என்றார். ஜலப்பிரவாகம் தோன்றியது. இப்படி ஒவ்வொரு நாளும் சிருஷ்டித் தொழில் நடத்திய கர்த்தர் ஏழாவது நாள் சும்மா இருந்தார். அதாவது எங்கள் தொழிலைச் செய்தார்.
இப்பொழுதாவது உங்களுக்கு விளங்கியதா? எங்கள் தொழில் புராதனமானது; புனிதம் நிறைந்தது. இறைவன் அருள் பெற்றது. எங்கள் தொழில் ஓங்குக.
கிராம ஊழியன் 16-07-1944