புதிய களன்; புதிய எழுத்து லாவண்யா சுந்தரராஜன் கதைகள்
‘
‘நீர்க்கோல வாழ்வை நச்சி’, ‘இரவைப் பருகும் பறவை’, ‘அறிதலின் தீ’ ஆகிய கவிதைத் தொகுப்புகளினூடாகக் கவனம் பெற்ற லாவண்யா சுந்தரராஜனிடமிருந்து, ‘புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை (2019)’, ‘முரட்டுப் பச்சை (2022)’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ‘காயாம்பூ’ என்ற நாவலும் இவரது புனைவுப் பங்களிப்புகளில் அடங்கும். கவிதைகள் செறிவான மொழியால் கட்டப்படுபவை. மொழியைச் செறிவாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் புனைவின் எந்த வடிவத்திலும் பயணிக்கலாம். மொழியைச் செறிவாகவும் காத்திரமாகவும் பயன்படுத்துவதற்கான பயிற்சியாகப் பலர் கவிதையைப் பயன்படுத்திக் கொள்கின