பாரதியும் சங்க இலக்கிய மதிப்புரைகளும்
உ.வே. சாமிநாதையர் பதிப்பித்த பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகியவற்றின் இரண்டாம் பதிப்புகள் 1920ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தன. இவற்றுக்குச் சுதேசமித்திரனில் உடனடியாக விரிவான மதிப்புரைகள் 9.12.1920இல் வெளிவந்தன. அக்காலத்தில் சுதேசமித்திரனில் விரிவான நூல் மதிப்புரைகள் இடம்பெறுவது வழக்கமில்லை. பழந்தமிழ் இலக்கியங்கள் என்னும் அடிப்படையிலும் உ.வே.சா. பதிப்பு என்னும் அடிப்படையிலும் இந்த மதிப்புரைகள் வெளிவந்தன என்றே கொள்ளவேண்டியுள்ளது. இவை வெளிவந்தபோது பாரதி மீண்டும் சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தப் பணியில் பாரதி மீண்டும் 1920 சூலை அல்லது ஆகஸ்டு வாக்கில் சேர்ந்திருக்க வேண்டும் என்பது பாரதியின் தம்பி சி. விசுவநாத ஐயரின் கருத்தாகும் (கவி பிறந்த கதை, ப. 32). 1920 நவம்பர் இறுதியில் ‘சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும்’ என்னும் கட்டுரையில் தான் சுதேசமித்திரனில் பணியில் சேர்ந்தது தொடர்பாகப் பாரதியே கருத்துரைத்திருக்கின்றார்.
புறநானூற்றை எடுத்தாண்டு நான்கு எழுத்தோவியங்களைப் பாரதி தனது சென்