பலராக மாறிய ஒருவரின் பிரலாபம்
ஓவியங்கள்: மு. நடேஷ்
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
பலராக மாறிய ஒருவரின் பிரலாபம்
ஒருவர் இரண்டாக
உடைபடுவது
உளப்பிளவு பாதிப்பால் என்கிறார்கள்
ஒருவர் மூன்றாக
உடைபட்டாலும்
அவ்வகையில் வருமாம்
எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர்
பலராக உடைந்தார்
அவர் கவிதை எழுதினார்
கட்டுரை வரைந்தார்
கதையில் கைவைத்தார்
நடனமாடினார் நடித்தும் பார்த்தார்
அதீத நம்பிக்கையில்
ஒருநாள்
அவர் அறையில் கூடு கட்டியிருந்த
விஷச் சிலந்தியின்
உடைந்த கால் ஒன்றை
ஒட்டவைக்க முயன்றார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
படுக்கையில்
அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது:
இதை ஒழுங்காகச் செய்திருந்தால்
அந்தப் பாம்பு கழற்றிப்போட்டதை
மறுபடி அதற்கு அணிவித்திருக்கலாம்
அன்புக்குமுன்
உன் நாடகம் முடிந்துவிட்டது
இனி கிளம்பலாம்
அவனிடம் அப்படித்தான் சொன்னேன்
வெளியே சென்றான்
வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன்
நாடகம் முடிந்துவிட்டது
இறுதிக் காட்சி இல்லாமல்
முடிகின்ற நாடகம்
என்ன நாடகம்?
பதினெட்டுப் படிகளில் முதல்படி
அது அதை அதன் அதன் மொழியில்
சொல்லப் பழகும்
முதல் படியில்
நாம் ஒவ்வொருவருமே தொடங்க வேண்டும்
உதாரணமாக, புண்டை மயிர்
அப்போதுதான்
இந்த மண்ணில் உருவான
முதல் நெருப்பின்
முதல் கரியில் எரிந்த
முதல் பிணத்தின் அமைதியுடன்
ஒரு பாதை திறக்கும்
எதற்கும் உருவகமாக இல்லாத
போக்கிடமற்ற இடத்துக்கான
ஒரே பாதை
அதில்
கழுதைகளுடனும் குதிரைகளுடனும்
அது அதை அதன் அதன் மொழியில்
பேசிக்கொண்டும்
பேச்சை ஒட்டுக் கேட்கும்
கந்தர்வர்களை ஓரப்பார்வை
பார்த்துக்கொண்டும் நடப்போம்
கவிஞர்களின் ஒரே பாதை
கந்தர்வர்களுக்கும் போக்கிடமில்லை
வெகுகாலமாகத் தம்பதியாக வாழ்ந்துவரும் தம்பதி
முதியவனுக்கு 125 வயது, 135 ஆகவும் இருக்கலாம்
முதியவளுக்கு 140 வயது, 145 ஆகவும் இருக்கலாம்
இருவரும் தினமும்
தனித்தனியாக
வெவ்வேறு இரவுகளில்
மொட்டைமாடிக்குச் செல்கிறார்கள்
அவனுக்கு எண்ணெய் இல்லாத
அவளுக்குச் சர்க்கரை சேர்க்காத
இரவுணவுக்குப் பின்
இதுவரை கரையான் அரிக்காத
நிலவைக் காண
நிலவில் அவள் ’சந்திராயன் – ஒன்’னின்
கால்தடத்தைக் காண்கிறாள்
அது கண்டுபிடித்த
நீரைப் பார்த்து வியக்கிறாள்
நிலவில் அவன்
பி.பி. ஸ்ரீனிவாசைக் காண்கிறான்
அவர் நெருங்காதே என்று அதனிடம்
கூறியதற்கு விசனிக்கிறான்
இருவரும் கீழே இறங்குகிறார்கள்
தனித்தனியாக
அவரவர் படுக்கை அறைகளுக்கு
தூக்கத்தில்
இன்றாவது சாக மாட்டோமா என
தனித்தனியாக
அவர்கள் பெருமூச்சுவிடும் படுக்கைகளுக்கு
தனித்தனியாக
இரண்டு நிலவுகள்
அந்த வீட்டைக் கடக்கின்றன
தினமும்
வெவ்வேறு இரவுகளில்
பல சமயம் விடிந்த பிறகும்
சென்னை புத்தகச் சந்தை: 2022
வியாபாரத்தை ஒட்டி நடந்த
அரசாங்கக் கவிதை அரங்கத்தில்
சில கிளிகள்
சில நல்ல கவிஞர்கள்
புலிவால்களாகத் தோற்றமளித்த சில எலிவால்கள்
சில வயதுக்கு வராத மண்டையோடுகள்
உடைந்த மோட்டார் வாகன உதிரி பாகங்கள் சிலர்
கவிதைகளைப் பேசினார்கள்
என்னை அவர்கள் அழைக்கவில்லை
ஒருமுறை அழைப்பிதழில் இடம்பெறாதவர்கள்
எப்போதும் அழைப்பிதழ்களில் இடம்பெறுவதில்லை
திருமண அழைப்பிதழின் விஷயமே வேறு
அன்று
நான்
இல்லாத மனமுடைந்து
ஒரு பூச்சியரித்த வேப்பஞ்செடிக்கு
முன்னால் நின்று
என் கவிதைகளை உரக்க வாசித்தேன்
சென்னை மாநகரத்தில்
இன்னும் செடிகள் இருக்கின்றன
எனக்குக் காதுகொடுத்துக் கேட்ட செடி
கடைசிவரை கொட்டாவி விடவில்லை
ஒரு கவிதையின் ஒவ்வொரு வரியையும்
அதன் முன் நின்று ஒப்பிக்கும்போது
தலையாட்டாத மைக்கைப்போல
பூச்சியரித்த வேப்பஞ்செடிக்கு
இருக்கத் தெரியவில்லை
மின்னஞ்சல்: sperundevi@gmail.com