சினிமாவில் கடவுள்கள்
14-12-46 அன்று திருச்சி ரேடியோவில் வல்லிக்கண்ணன் ஆற்றிய உரை
‘அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தம் பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது?’ என்று கேட்டார் தாயுமானவர். இன்றைய தாயுமாகாத, தந்தையுமாகாத சிறுவர் சிறுமிகள்கூட இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்வார்கள் ‘சினிமாவில் கடவுள்கள்’ என்று.
தமிழ் சினிமாப் படங்களைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் எனக்கு இரணியனின் நினைவும் கூடவே எழுவது உண்டு. இந்தக் கடவுள் என்கிற சாமி – அல்லது ஆசாமி – எங்கே, எங்கே என்று அலறிக்கொண்டிருந்தவர்களில் அவனும் ஒருவன் என்று கேள்வி. இந்தக் காலத்திலே இரணியன் இருந்திருந்தால், அப்பாவிக் கடவுள்களைப் பற்றி அவ்வளவு தூரம் அலட்டிக்கொண்டிருக்க மாட்டான்! அவசியமும் இராது; அபிநவ பிரகலாதன் எவனும் கூட, அட்டை முடியும் கண்ணாடி முத்துவடமும் அணிந்து அசையாத மேகங்களூடே ஆடாமல் நீந்தி, படத்துக்குப் படம் தவறாமல் வந்து வந்து அருள்புரிகிற கடவுள்களைத் தரிசித்து விட்டானென்றால், ஏழேழு ஜன்மத்துக்கும் அவர்கள் தயவை நாடமாட்டான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
நமது தமிழ் சினிமாப் பிரம்மாக்கள் கலையின் பெயரால் கடவுளர்களையும் அவர்களது கதைகளையும் கொலை செய்கிறார்கள். ஒரேயடியாகக் கொன்று ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டாலும் அலுப்புவிட்டது என்று இருக்கலாம். அதுதானில்லை! கூடுவிட்டுக் கூடுபாயும் கலையை வலுக்காட்டாயமாகக் கையாளச் செய்கிறார்கள் கடவுள்களை!
ஏறக்குறைய ஐந்நூறு படங்கள் பிறந்துவிட்டன. பதினைந்து பதினாறு வருஷமாகத்தான் கச்சாபிலிம்மைக் கரியாக்கி வருகிறார்கள் நம் தமிழ்ப் படக்கலை நிபுணர்கள். நிலை என்ன?
ஆரம்ப காலத்திலே நமது கவிஞர் பாரதிதாசன் கூறிய பொன்மொழிகள் இன்றுகூடச் சொக்கத் தங்க உண்மையாகத்தான் தெரிகின்றன.
என் தமிழர் படமெடுக்க
ஆரம்பஞ் செய்தார்
எடுத்தார்கள் ஒன்றிரண்டு
பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்
நடையுடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்க வில்லை
உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை
உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம்
அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர்
வாய்ந்ததுவாயில்லை
ஒன்றேனும் வீழ்ந்தவரை
எழுப்புவதாயில்லை.
ஆனால் எப்படியிருக்கிறது என்று கேட்டாலோ...
பரமசிவன் அருள் புரிய
வந்து வந்து போவார்
பதிவிரதைக் கின்னல் வரும்
பழையபடி தீரும்!
சிரமமொடு தாள மெண்ணிப்
போட்டியிலே பாட்டு
சில பாடி மிருதங்கம்
ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே
துன்பம் வரும், போகும்!
ஐயா, அது பாட்டுக்கு வரட்டும் போகட்டும்! ஆனால் தமிழ் சினிமாவிலே கடவுளர்கள் வந்து வந்து போகிறார்களே, அது எல்லோரது பொறுமையையும் சோதிக்கிறது. ஆத்திரமாகச் சொல்ல வேண்டுமானால் ‘அன்ஸகிக்கபிள்’ என்று பாஷையைத்தான் கொலை பண்ண வேண்டியிருக்கிறது. அப்படிச் சொன்னால்கூட, அது பெரிய பாபமாகிவிடாது! எந்தப் பாபமும் நமது பட முதலாளிகள் கடவுள்களைப் படுத்துகிற செயலருகில் புண்ணியமாகவே தோன்றும்.
பதினைந்து வருஷ காலமாகப் பல நூறு படங்களிலே வந்து வந்து போகும் கடவுளர்கள் எப்படிக் காட்சியளிக்கிறார்கள்? அவர்கள் கடவுள்களாகவாவது தோன்றுகிறார்களா? தெய்வீகக் களை கொஞ்சமாவது இருக்கிறதா? ஒன்றுமில்லை! குழுவன் குழுவச்சிகளைப் போலவும் டொம்பக் குறவர், பூச்சாண்டி போலவும் தோன்றுகிறார்கள். கோமாளிகளைப் போலவும் குடிவெறியர்களாகவும் காட்சி தருகிறார்கள். ‘உண்மையில் கடவுள்கள் இப்படித்தான் இருக்கிறார்களென்றால், நான் கடவுள்களை விட அழகன்! அவர்களை விட அற்புதமானவன்’ என்கிறார் நையாண்டி பாரதி.
சினிமாக் கடவுள்களின் அழகு கிடக்கட்டும், எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரியாகவாவது தோன்றுகிறார்களா? கிடையாது, தமிழ் சினிமாக்களைப் பார்க்கும்போது, அல்லது அவை சம்பந்தமான விளம்பரப் படங்களைக் காணும்போது எனக்கு எவ்வளவோ சந்தேகங்கள் எழுவது உண்டு. சிவன் மீசை வைத்தவரா? மீசை இல்லாதவரா? மீசை உடையவரெனில் அது எத்தகைய மீசை? செம்மறியாட்டுக் கொம்பு மீசையா? முறுக்கிவிட்ட கறுக்கரிவாள் மீசையா? எல்லாம் அறியவல்ல சிவனார் துணிப்புரிகளுக்கும் பாம்புகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கைகளிலும் கழுத்திலும் கட்டிக்கொண்டு திரிவது ஏன்? நாரதர் தாடி வைத்தவரா? மீசை மட்டுமே உள்ளவரா? அல்லது ‘க்ளீன் ஷேவ்டு’ முக அழகர்தானா? அவர் ஆணா, பெண்ணா? நீண்ட ஜிப்பா நாகரிகம் நாரதருக்குக்கூட கை வந்த கலைதானா? இப்படி எத்தனை எத்தனையோ!
இவைபோன்ற கேள்விகளுக்கெல்லாம் ‘நானறியேன் பராபரமே!’ என்பதுதான் எனது அந்தராத்மா சொல்லும் பதில்.
ஒரு படத்தில் தளதளவென்று தக்காளிப் பழம்போல் தோன்றும் சிவனார் சில படங்களில் என்னைப் போலாகிவிடுகிறார் – புல் தடுக்கி பயில்வான் மாதிரி! ஒரு படத்தில் பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் காட்சி தருகிறவர் வேறு சில படங்களில் பூசணிப்பழம்போல் பெருத்துவிடுகிறார். சிவனாரின் சித்து விளையாடல்களில் இதுவும் ஒன்று என்று எந்தப் புராணமும் சொல்லியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பட முதலாளிகளின் ஞானதிருஷ்டியிலே காட்சி தந்திருக்கலாம். நல்லவேளையாக, சிவன் பாக்யசாலிதான்! எந்தப் பொண்ணும் சிவனாராக வந்ததில்லை தமிழ் சினிமாவில். ஆனால் விஷ்ணு பெருமானுக்கும் நாரத முனிக்கும் அனுதாபங்கள் உள்ளன.
வெள்ளித் திரையில் டால் வீசும் ஸ்ரீமதி நட்சத்திரங்களை கிருஷ்ணர்களாக ஆக்கியே தீர்ப்பது என்பது பட உலக பிரம்மாக்களின் சித்தாந்தம். அதனால் ரசிகர்கள் கண்களையறுக்கும் கோரங்கள் கலைகனவான இனிய கண்ணன் தன்மையைப் பழிக்கின்றன; சித்திரவதை புரிகின்றன! இந்த லட்சணத்திலே நாட்டியம் என்னும் பெயரால் காலையும் கையையும் ஆட்டிக்கொண்டு இடுப்பை நெளித்து, ராதை என்று பாவிக்கப்பட வேண்டிய மற்றொரு கோரத்துடன் கொஞ்சத் துணியும்போது, ‘உள்ளே போ!’ என்று கூவாமல் தரை மகாஜனம் அமைதியாக இருக்கிறாரே, அதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
அப்படிக் கூச்சலிட கணம் தரைமகாஜனம் பகுத்தறிவு அற்றவரா என்று கேட்கலாம். பட முதலாளிகள் அப்படித்தான் எண்ணி வருகிறார்கள் இன்னும். ஒருசில வேளைகளில் ஸ்ரீமான் நாலரையணா, ஆறரையணா டிக்கட்டாளர்களும் அது உண்மை என்று நிரூபித்துவிடுகிறார்கள்! ‘ஒன்ஸ்மோர்’களையும் ‘தொலைந்து போ’க்களையும் நான் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன் சினிமா தியேட்டர்களில். இவை மட்டும் தானா? தரை மகாஜனங்களுக்கே உரிய தனி ரசனைக் கலைச் சொற்களையும் உவமை நயங்களையும் கேட்டிருக்கிறேன்.
என்றாலும், ‘படம் ஆடுது, பாடுது, பேசுதுடோய்!’ என்ற காலத்தில் – அதாவது பதினைந்து வருஷங்களுக்கு முன்பு – இருந்ததை விட ரசிகரின் பருவநிலை அபிவிருத்தி அடைந்திருக்கிறது. திரைப்படம் என்பது புதிதாக ஒளிர்ந்த நாட்களில் கிருஷ்ணர்களையும், ஸ்ரீனிவாசப் பெருமாள்களையும், ராம சீதாக்களையும் கண்டதும் பக்திப் பரவசராகி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவர்கள் எத்தனை பேர்? கன்னத்தில் அடித்துக் கொண்டவர்களுக்குத்தான் குறைவா? திடீரென்று மனித உரு ஓங்கி வளர்ந்து ஆதியாய், அநாதியாய், அட்டைப் பெருங் கடவுளாய் அடிமுடியற்றுப் பெருத்தபோது பக்த சிகாமணிகளின் பரபரப்பை எப்படி வர்ணிக்க முடியும்?
அது ‘அந்தக் காலம்!’ ஆனால் சினிமா முதலாளிகள் அதை உணரவில்லை. அவர்கள் இன்னும் ‘ரிப்வான் விங்கிள்’ தாத்தாக்களாகவே வாழ்கிறார்கள்! புராணப் படங்களுக்கு வரும் பண வசூல் அவர்கள் தூக்கத்தை ஊக்குவிக்கும் போதைச் சரக்காக விளங்குகிறது. அங்குமிங்குமாகச் சில விமர்சகர்கள் காரமான பாஷையைச் சொடுக்கிவிட்டாலும், கும்பகர்ணன் காதருகில் கொசுவின் சிறு ரீங்காரமாகவே ஒலிக்கின்றன அவை. சினிமாப் பத்திரிகைகள் ‘ஆகா, அபாரம், அற்புதம்’ என்று பாடிவிடுகின்றன. இல்லாவிடில் விளம்பரப் பணம் கிடைக்காதே! ஆகவே படங்களில் கடவுள்களை ஆட்டுவிக்கும் மகாசக்தி பணம்தான் என்றாகிறது.
தமிழ் சினிமாக்கலை நிபுணர்கள் தரைமகாஜனத்தையே சினிமாக் கலையின் தன்மையை அளக்கும் தர்மாமீட்டர்களாகக் கருதிவிடுகிறார்கள். தவிர, கலைநயத்தைப் பற்றியோ கற்றவர்கள், கலையபிமானிகள், உயரிய ரசிகர்கள் முதலியவர்களைப் பற்றியோ அவர்களுக்குக் கவலையில்லை. ‘பணம் வருகிறதா? எந்தக் குப்பையையாவது பிடித்துத் தள்ளு!’ என்பதே சினிமா உலக தர்மம். அதனால்தான் கிருஷ்ண லீலைகளும் முருகன்களும் வள்ளிகளும் திரும்பத் திரும்ப வருகின்றன. முன்பு ஒரிஜினல் வள்ளி வருவாள். கூடவே நவீன வள்ளியும் தலைகாட்டுவாள். இப்போ ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ வடிவேல், ஸ்ரீ முருகன், ஸ்ரீ ஷண்முகா, குமரகுரு, நந்தலீலா என்று சொல் ஜாலம் நடைபெறுகிறது. பழைய கள்ளேதான். காடித் தண்ணி என்று வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மொந்தை புதிய மொந்தை! இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டது தமிழ்ப் படம்! அப்புறம் அது எப்படி உருப்படும்?
புராணப் படங்களில் கடவுள்கள் வருவதையும் போவதையுமாவது ‘இது சகஜம்’ என மன்னித்துவிடலாம். ஆனால் சமூகப் படம் என்றும் சரித்திரப் படம் என்றும் லேபிள் ஒட்டிவிட்டு, அவற்றிலும் கடவுள்களைக் கொண்டுவந்து திணிக்கிறார்களே அதற்கு என்ன செய்வது? கவிஞரின் வாழ்க்கை, டில்லி பாதுஷா காலத்துக் கதை என்று நம்ப வேண்டும் என்கிறார்கள். அங்கே சட்டென்று சிவனார் முளைக்கிறார், மொட்டுப்போலே! எப்படி? அபலைப் பெண் ஒருத்தியைக் கைப்பற்றி இழுக்கும் காமுகன் உருவிலே. பின் பத்தினி தன் இன்னல் போக்க வந்த பிறை சூடிப் பித்தன் எனப் புரியவைக்கிறார். அதைப் பார்க்கும் நமக்கு ‘என்ன ஆச்சரியம்!’ என்று வியக்கத்தான் தோன்றுகிறது.
மாமியினாலோ – அல்லது புருஷனாலோ – துன்புறுத்தப்படும் குலவிளக்கு கண்ணீருடன் சிமிட்டுச் சிலையையோ, பண்ருட்டி பொம்மையையோ, அட்டை நாரதரையோ கட்டி ‘கிளிஸ்ரைன்’ கண்ணீரை முத்து முத்தாக, பவுடர் கன்னத்தில் ஓடவிட்டுக் கொண்டிருப்பாள். அற்புதம் நிகழும், சிலை கடவுளாக வந்து கைதூக்கி, அம்மாளுக்கு அருள் புரிவதன் மூலம்! இல்லாவிடில் படமுடிவில் அந்தரத்தில் தோன்றிக் கையசைத்தாவது பழிவாங்கிவிடுவார் பரமசிவம் பார்ட்டியார்!
இத்தகைய கடவுளர்கள் யாருக்கும் எவ்வித நன்மையையும் செய்யவில்லை. ஆனால் தங்களுக்கே இன்னல் விளைவித்துக்கொள்கிறார்கள்! தெளிவாகச் சொல்லப் போனால், சினிமா கடவுள்கள் புராணக் கடவுள்களைக் கொலை செய்துவருகிறார்கள். கடவுள் பக்தி, தெய்வ நம்பிக்கை என்பதையெல்லாம் ‘நிழற்பட வேகத்திலே’ விரட்டியடிக்கிறார்கள் என்று கூறலாம். கடவுட் தத்துவத்தைச் சந்தேகிப்பதன் மூலம் அறிவுலகத்துக்கு அபார சேவை செய்கிற ஒரு சில சிந்தனையாளர்களை உலகம் பழிக்கிறது. ஆனால் ஒவ்வோர் இரவிலும் கடவுளையும் கடவுள் நினைவையும் நையாண்டி செய்கிற கலைக் கொலைஞர்களின் பணப்பெட்டியை நிறையச் செய்து, மேலும் மேலும் கடவுள்களைச் சித்திரவதை செய்ய அருள்புரிகிறது.
இந்த நிலை சிவனையும் விஷ்ணுவையும் அவர்களது பரிவாரங்களையும் பொறுத்தவரைதான்! இவர்களது நாயன்மார்களும் ஆழ்வார்களும்தான் படவுலகில் படாதபாடு படுகிறார்கள். இதற்காகத் தமிழ்நாடு வருத்தப்பட வேண்டுமா, அனுதாபப்பட வேண்டுமா என்பதை அந்தக் கடவுள்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
சினிமாவில் கடவுள் தலைகாட்டாத ‘சூன்ய நிலை’ தோன்ற வேண்டும். தமிழ்ப் பட உலகில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். இலக்கியாசிரியர்கள் சிலர் ஸ்டுடியோ பூமியில் நுழைந்துள்ள போதிலும், தமிழ் சினிமாவுக்கு விமோசனம் ஏற்படவில்லை. தமிழ் சினிமாவைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்த விமர்சகர்கள் ‘இந்த இலக்கியாசிரியர்களையும் கடவுள் காப்பற்றட்டும்’ என்று கடவுள் தலையில் பாரத்தைப் போட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. வேறு பலன் இல்லை.
சினிமாவில் கடவுளர்களையும் அவர்கள் லீலா விநோதங்களையும் அவர்களது பக்த கோடிகளின் புரவோலங்களையும் சித்திரிப்பதை இன்னும் சில வருஷங்களுக்காவது ஒதுக்கி விட்டு – கடவுளர்களை அவர்களது இருப்பிடத்திலேயே யோக நித்திரை பயில அனுமதித்து விட்டு – சமூக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்ல நல்ல படங்கள் தயாரிக்கட்டும் தமிழ்ப்பட முதலாளிகள்; அவர்களுக்குப் புண்ணியமுண்டு.
கடவுள்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்றால், தெய்வீக உணர்ச்சியைப் பரப்பும் முறையிலாவது, உயரிய கலாநயத்துடன் படங்கள் பிடிக்கட்டும். கடவுள் பாத்திரங்களுக்கு வதகப் புடலங் காய்களையோ பொத்தப் பூசணிக் காய்களையோ ஒதுக்காமல் நல்ல தோற்றமுள்ள பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கட்டும். ஆங்கிலம் பேசும் படங்கள் எத்தகைய திறமை ஒலியுடன், எவ்வளவு கலைமெருகுடன், எவ்வித இலக்கிய எதிரொலியாகத் திகழ்கின்றன? ஆனால் தமிழ்ப் படமோ தாழ்ந்து தாழ்ந்து போகிறது. அதற்குப் பட முதலாளிகள்தான் காரணம். மற்றுமுள்ளவர்களும் – ஓரளவுக்கு நாட்டு மக்களும் – துணைக் கருவிகள்.
இந்நிலை மாறும்வரை கலா ரசிகர்கள் முனங்கியும் வயிற்றெரிச்சல் தீர, பாடியும் திருப்தியடைவது தவிர வேறு வழியில்லை.
படக்கலைதான் வாராதா
என நினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி
வர்க்கத்தின் செயலால்
படக்கலையாம் சனி யொழிந்
தால் போதுமென எண்ணும்!
இது கவிஞரின் வாக்கு; கலா ரசிகர்களின் இதய ஒலி.
இப்படி அதிகம் எண்ணவேண்டிய அவசியம் தலைதூக்கிவிட்டது பதினோராயிரம் அடிக் கட்டுப்பாடு நீங்கிப் போனதால்! இனி கடவுளர்களுக்கும் அதிக ஆபத்து. படம் பார்ப்பவர்களுக்கும் ரொம்பவும் தலைவலிதான் ! இந்தக் கடவுள்களைக் கடவுளர்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
கடவுள்கள் வாழ்க !