வரலாற்றின் அரிய பதிவுகள்
தமிழ் ஹரிஜன்
(மகாத்மா காந்தியடிகள் நடத்திய
வார இதழ்களின் தொகுப்பு)
தொகுப்பும் பதிப்பும்:
கிருங்கை சேதுபதி,
அருணன் கபிலன்
வெளியீடு:
முல்லைப் பதிப்பகம்
323/10 கதிரவன் காலனி,
அண்ணாநகர், சென்னை-40
செல்: 98403 58301
email: Mullaipathipagam@gmail.com
பக். 944
ரூ. 1500
காந்தி தீண்டாமைக்கு எதிரான தமது கருத்துகளைத் தொடக்கம் முதலே வலியுறுத்திவந்தவர். தம் சொந்த வாழ்வில் தீண்டாமைக்கு எதிராக அவர் தீவிரமாகச் செயல்பட்டார். 1915இல் இந்தியா திரும்பியதும் அவர் இணைந்து செயல்படத் தொடங்கிய அமைப்புகள் தீண்டாமைக்கு எதிரானவைகளாகவே இருந்தன. ஆயினும் செயல்பாட்டளவில் தீண்டாமை ஒழிப்பைத் தனி இயக்கமாக வளர்த்தெடுப்பதற்கான தருணம் அவருக்கு 1933இல்தான் வாய்த்தது. காந்தி தொகுப்பு நூல்களில் பதிவாகியிருக்கும் கடிதங்களைப் பார்த்தால், அவர் தீண்டாமை குறித்துத் தொடர்ந்து உரையாடலை மேற்கொண்ட வண்ணம் இருந்திருப்பது புலனாகும்.
தமது அரசியல், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்காகப் பத்திரிகை நடத்துவதைக் காந்தி தென்னாப்பிரிக்காவிலேயே தொடங்கிவிட்டார். இப்போது தீண்டாமைக்கு எதிரான கருத்துகளையும் ஒடுக்கப்பட்டோரின் பிரச்சினைகளை நாடறியப் பேசவும் அறிவிக்கவும் பத்திரிகை ஒன்று நிச்சயம் தேவை என்ற எண்ணம் தோன்றியதும் ஹரிஜன் பத்திரிகையைத் தொடங்குகிறார். முதல் கட்டமாக ஆங்கிலம், இந்தி, குஜராத்தியில் பத்திரிகைகள் வெளியாகின்றன. 1933, பிப்ரவரி பதினோராம் தேதி எரவாடா சிறையிலிருந்தபடியே காந்தி ஹரிஜன் பத்திரிகையைத் தொடங்குகிறார். கல்கத்தாவில் பணிபுரிந்துவந்த ராமசந்திர சாஸ்திரியை அதன் ஆசிரியராக நியமிக்கிறார்.
தொடக்கத்தில் பூனாவிலிருந்து வெளிவந்த அந்தப் பத்திரிகை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து மதராஸிலிருந்து வெளியாகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இதழ் வெளிவந்தது. இதன் குஜராத்தி வடிவமான ஹரிஜன்பந்து 1933ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பன்னிரெண்டாம் தேதியிலிருந்து வெளியானது. ஹரிஜன் சேவக் இந்திப் பதிப்பும் இதே காலகட்டத்தில் வியோகி ஹரியை ஆசிரியராகக் கொண்டு வெளியாகத் தொடங்கியது. வங்காளப் பதிப்பைத் தொடங்கும் நடவடிக்கைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
வினோபா பாவேயின் உரைகளை ஹரிஜனில் வெளியிட பிரிட்டிஷ் அரசு தடை விதித்ததால் 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதிப் பதிப்போடு பத்திரிகைக்கு ஓர் இடைவெளி ஏற்பட்டது. பத்திரிகை வெளியாகவில்லை.1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி பத்திரிகை மீதான தடையை நீக்க விண்ணப்பிக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தடை விலக்கிக்கொள்ளப்பட, அதே ஆண்டு பிப்ரவரி பத்தாம் தேதியிலிருந்து மீண்டும் வரத் தொடங்கியபோது, காந்தி சேவாகிராமில் இருந்தார்.
காந்தியின் மறைவையடுத்து மீண்டும் இடைவெளி. இரண்டு மாதங்கள் வெளிவரவில்லை. எனினும், காந்தியின் நிர்மாணத் திட்டங்களைப் பேசவும் அவரது மனத்துக்கு மிக நெருக்கமான தீண்டாமை ஒழிப்பு குறித்துப் பேசவும் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என முடிவுசெய்து மீண்டும் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதழ் வெளிவரத் தொடங்குகிறது. அப்போது அதன் ஆசிரியர் கிஷோரிலால் மஷ்ருவாலா.
நிறைவாக 1956ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தோடு ஹரிஜன் (ஆங்கிலம்), ஹரிஜன் சேவக் (இந்தி), ஹரிஜன்பந்து (குஜராத்தி) மூன்று இதழ்களும் மூடுவிழா காண்கின்றன. மொத்தம் பத்தொன்பது தொகுப்புகளாக ஹரிஜன் ஆங்கில இதழ்கள் இணையத்தில் கிடைக்கின்றன. பிற இதழ்களும் அந்த அளவே இருக்கக்கூடும். அனைத்தும் முக்கியமான ஆவணங்கள். இந்த வகையில் தமிழ் ஹரிஜன் இதழ்த் தொகுப்பும் முக்கிய இடம் பெறுகிறது. ஆங்கில ஹரிஜன் தொகுப்பின் மொழிமாற்றம் செய்யப்பட்ட இதழே தமிழ் ஹரிஜன்.
1946ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதராஸ் வந்திருந்த மகாத்மா காந்தியிடம் இராஜாஜி, சின்ன அண்ணாமலையை அறிமுகப்படுத்தியதோடு, ஹரிஜன் இதழைத் தமிழில் கொண்டுவர அவருக்கிருக்கும் தணியாத ஆர்வத்தையும் தெரிவித்து, அதற்கு அனுமதி வழங்குமாறு பரிந்துரைக்கிறார். நிதி உதவி எதையும் எதிர்பார்க்கலாகாது என்ற நிபந்தனையுடன் காந்தி அதற்கு அனுமதி அளிப்பதோடு, அந்த நேரம் பத்து நிமிட ஓய்வில் இருப்பதால் உடனே ஒப்புதலும் தந்துவிடுவதாகக் கூறித் தம் கைப்பட தமிழ் ஹரிஜன் என ஒரு துண்டுச் சீட்டில் எழுதித்தந்து தொடக்கிவைத்துவிடுகிறார். ஆங்கில பத்திரிகையின் மொழிபெயர்ப்பே எனினும் காந்தியே தம் கைப்பட தமிழ் ஹரிஜன் என எழுதியதால் சின்ன அண்ணாமலை அந்தப் பெயரிலேயே பத்திரிகையை நடத்துகிறார்.
முதல் தமிழ் ஹரிஜன் இதழ், உடனடியாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. தமிழ்ப் பண்ணை வெளியீடு. ஆசிரியர் நாமக்கல் கவிஞர். விலை இரண்டணா. அச்சமயம் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் பியாரிலால். தமிழ்ப் பத்திரிகை, முகப்புப் பக்கத்திலேயே ஸ்ரீபியாரிலால்ஜியால் நடத்தப்படும் காந்தியடிகளின் ஆங்கிலப் பத்திரிகையின் தமிழாக்கம் எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
பத்திரிகை நடத்தத் தேவையான தாள்களுக்குக் கட்டுப்பாடுகளும் ரேஷனும் நிலவிய காலகட்டம்; எனவே ஓரளவிற்கு மேல் பிரதிகளை அச்சடிப்பது சாத்தியமில்லை. அதனால் சின்ன அண்ணாமலை தமிழ் ஹரிஜனில் வேண்டுகோள் விடுக்கிறார். ஒரு கிராமத்திற்குக் குடிநீர் எந்த அளவு அவசியமோ அதே அளவு காந்தியின் போதனைகளும் அவசியம்; எனவே பத்திரிகையைப் பலரோடு பகிர்ந்தும், வாசகசாலைகளுக்குத் தந்துதவியும் வாசிக்கும்படி கோரிக்கை வைக்கிறார். எத்தனை படிகள் அச்சிடப்பட்டன என்ற தகவல் தெரியவில்லை. அரிதின் முயன்று ஓராண்டு இதழ்களின் அதாவது, ஐம்பத்து இரண்டு இதழ்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு அதாவது 1947, ஏப்ரல் மாத இதழின் அட்டையின் புகைப்படம் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது; அடுத்தடுத்த இதழ்களும் கிடைத்தால் அது நல்லூழ்.
காந்தியின் மறைவுவரை தமிழ் ஹரிஜனும் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது. எனவே இந்த முதல் தொகுப்பைப்போல ஐம்பத்திரண்டு இதழ்கள் அச்சாகியிருக்க வாய்ப்பில்லை. ஆங்கில ஹரிஜன் இதழ்களின் பத்தாவது தொகுதியிலிருந்து தமிழில் இதழ் வெளியாகிறது. 1946 ஏப்ரல் 14ஆம் தேதியிட்ட ஆங்கில இதழில் பதினெட்டுத் தலைப்புகளில் சிறிதும் பெரிதுமான கட்டுரைகள் உள்ளன. தமிழில் அவை அத்தனையும் வெளியாகவில்லை. அவை அடுத்த இதழிலும் தொடர்கின்றன; பக்க எண்ணிக்கையின் அளவு காரணமாகலாம். முதல் பதினோரு இதழ்வரை நாமக்கல் கவிஞரும், பதினோராவது இதழிலிருந்து பொ. திரிகூடசுந்தரமும் ஆசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். ஆங்கில இதழிலிருந்து மாறுதல் எதுவும் செய்யாமல் அப்படியே மொழிமாற்றம் மட்டும் செய்யப்பட்டு இதழ் வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகுப்பிலுள்ள அம்சங்கள், சிறப்பு விவரங்கள் குறித்த விரிவான கட்டுரை ஒன்றை காந்தியவாதிகளின் கைவிளக்கு என்ற தலைப்பில் இத்தொகுப்பின் தொகுப்பு - பதிப்பாசிரியர்களான கிருங்கை சேதுபதியும் அருணன் கபிலனும் எழுதி இணைத்துள்ளனர். அக்கட்டுரை இத்தொகுப்பு குறித்து விவரமாக அறிந்துகொள்ள உதவுகிறது.
இதழின் பொருண்மை
1933இல் இதழ் தொடக்கப்பட்டபோது இருந்த பேசுபொருள் 1946இல் சற்றே மாற்றமடைந்திருப்பதைக் காண முடிகிறது. தலைப்புகள் பொருளடக்க அட்டவணையைப் பார்த்தாலே இதழின் பொருண்மை நமக்கு விளங்கிவிடும். 1933இல் பத்திரிகையின் குவிமையம் தீண்டாமை எதிர்ப்பு மட்டுமானதாகவே இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் தீண்டாமை குறித்த விரிவான சித்திரத்தைத் தொடக்க இதழ்கள் வழங்குகின்றன. அரசியல் களத்திலும் சமூகக் களத்திலும் தீண்டாமைக்கு எதிராக ஒலிக்கும் குரல்கள், நடவடிக்கைகள், ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டிற்காக ஹரிஜன் சேவக் சங் மேற்கொண்ட முன்னெடுப்புகளின் விவரங்கள் ஆகியவற்றோடு தீண்டாமை குறித்த காந்தியின் தீவிரமான, தெளிவான நிலைப்பாடுகளையும் பலரோடு அவர் முன்னெடுத்த விவாதங்களும் அதன் பேசுபொருளாக இருந்தன. 1931இல் எடுக்கப்பட்டிருந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒட்டி ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த ஒடுக்கப்பட்ட சாதிகள் குறித்த விவரங்கள், அதனுள் நிலவிய படிநிலை ஏற்றத்தாழ்வுகள், பிரதேச அரசுகள் முன்னெடுத்த நிர்மாணத் திட்டங்கள் எனப் பலவற்றையும் தொடக்க இதழ்கள் பேசின. நாடெங்கிலுமிருந்து பலரும் காந்திக்கு எழுதிய கடிதங்கள், அதிலும் ஒடுக்கப்பட்டோர் தரப்பிடமிருந்து வந்த கடிதங்கள் நிலைமையின் உண்மைத் தன்மையை எடுத்தியம்பின. காந்தியையும் காந்தியர்களின் செயல்பாடுகளையும் விமர்சித்துவந்த கடிதங்களுக்கும் அதில் இடமிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்த அரசியல் மாற்றங்களும் விடுதலைப் போராட்டத்தின் திசையும் ஹரிஜன் இதழ்களின் பேசுபொருளிலும் சிற்சில மாற்றத்தைக் கொண்டுவந்தன; எனினும் மையச்சரடாகத் தீண்டாமையே விளங்கியது.
தமிழ் இதழின் தொகுப்பின் பேசுபொருள் குறித்த விவரங்களை அறிமுகக் கட்டுரை குறிப்பிட்டுச் சொல்கிறது:
“தமிழ் ஹரிஜன் இதழில் தீண்டாமை எதிர்ப்பு, தீண்டத்தகாதோர் படும் இன்னல்கள், அவர்களின் தூய்மை, நலவாழ்வு குறித்து மிகுதியான ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. என்றாலும், அவற்றோடு தொடர்புடையதும் சமூகம் சார்ந்ததுமான பிற செய்திகளும் சிறப்பிடம் பெற்றிருக்கின்றன. அரசியல், ஆன்மிகம், இதழியல், இராணுவம், இலக்கியம், இனம், உணவு, ஊடகவியல், கணிதம், கல்வி, காவல்துறை, சட்டம்-ஒழுங்கு, சமயம், சமூகம், சாதி, சிறைச் சீர்திருத்தம், சுற்றுச்சூழலியல், நிலவியல், பொருளாதாரம், மருத்துவம், வரலாறு, வரதட்சிணைப் பிரச்சினை, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார் தகவல்கள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.” (பக்.XXXI)
அந்த வகையில் இத்தொகுப்பு ஒரு தகவல் களஞ்சியம். நாடு விடுதலையை நெருங்கிக்கொண்டிருந்த தருணம். அரசியல், அதிகார மட்டத்தில் கடும் சூறாவளித் தருணங்கள். நாட்டின் பல்வேறு இடங்களில் சாமானியர்களின் வாழ்வைச் சீர்குலைத்த வன்முறை வெறியாட்டங்கள், செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சம், மனிதர்களின் அதிகாரப் பசி, மதங்களின் பேரால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் எனப் பலவற்றையும் இத்தொகுப்பு பதிவு செய்திருக்கிறது. அறுநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம்பெற்றிருப்பனவற்றில் காந்தியின் எழுத்துகள் நூற்று ஐம்பத்துநான்கு. அவை பல்வேறு பொருண்மைகளைப் பேசுவன.
“அரசியல் விஷயத்தை நான் பிரமாதமாகக் கருதவில்லை. அது சம்பந்தமாக எனக்கு எவ்விதக் குழப்பமும் உண்டாவதில்லை. பற்றற்ற தன்மை எனும் கூரிய கோடாரியைக் கொண்டு அரசியல் காட்டினூடே நான் எளிதில் வழிசெய்துகொள்ள முடியும். என்ன காரணமென்று தெரியவில்லை. எந்த ஸ்தாபனத்தை நான் தொட்டாலும் அதை இறுதியில் ஒரு ஆசிரமமாகவே மாற்றிவிடுகிறேன். எனக்கு அதைத் தவிர வேறொன்றும் தெரியாது போலிருக்கிறது” என காந்தி பிரார்த்தனைக் கூட்டமொன்றில் குறிப்பிடுகிறார். ஒரு ஆசிரமத்தைச் செம்மையாக நடத்த உதவும் நெறிமுறைகளே விடுதலை இந்தியாவின் சிறந்த குடிமக்களை உண்டாக்கவும் பயன்படும் என காந்தி நம்பியவற்றின் வெளிப்பாடுகளே அவரது எழுத்தில் துலங்குகின்றன.
இத்தொகுப்பே முக்கிய ஆவணமாய் இருப்பதோடு, சிறப்பான பிற முக்கிய ஆவணங்களையும் இது தன்னுள்ளே கொண்டுள்ளது. காந்தியின் நவகாளி பயணம், பிகார் பயணம் ஆகியவற்றில் மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட வன்முறைச் சூழல்களை அவர் எதிர்கொண்டதிறம் மூச்சடைக்கச் செய்வது. அங்கு அவர் ஆற்றிய உரைகளும் பிரார்த்தனைக் கூட்டங்களில் உரைத்தவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் காந்தி ஏராளமானவற்றைப் பற்றிப் பேசுகிறார்; எந்த ஒரு தேசத் தலைவரும் இதுபோன்ற கருத்துகளில் கவனத்தைச் செலுத்தியிருப்பார்களா என்ற ஆச்சரியமான ஐயம் எழுகிறது.
ஜே.சி. குமரப்பாவின் எழுத்துகளில் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகள் உள்ளன. கிராமக் கைத்தொழில்கள் சார்ந்து மட்டுமின்றிப் பல அரசியல் கருத்துகளையும் குமரப்பா எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்கள், இராணுவத்தில் தமக்கென ஒரு தனி பட்டாலியன் உண்டாக்கப்பட வேண்டுமென வைசிராயிடம் கோரிக்கை வைத்ததைத் குறிப்பிட்டு அதை வன்மையாகக் கண்டிப்பதாக குமரப்பா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கதர்க் கண்காட்சிகள் நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டுவன குறித்து அவர் சுட்டிக்காட்டும் கருத்துகள் என்றும் கவனத்தில் கொள்ளத்தக்கன.
மொழிபெயர்ப்பு இதழே எனினும் ஒரு சில தனித்த கூறுகள் இதில் உண்டு. ஒவ்வொரு பக்கத்தின் நிறைவிலும் ஒரு பொன்மொழி தரப்பட்டுள்ளது. வாசிப்போரின் வசதிக்காக அப்பொன்மொழிகள் ஒவ்வோர் இதழின் நிறைவிலும் நிரல்படத் தரப்பட்டுள்ளன. பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்ததில் உள்ளூர் வாசம் உண்டு. பாரதி, இராஜாஜி, நாமக்கல் கவிஞர் வரிகள் இவற்றில் இடம்பெறுகின்றன. 1946 நவம்பர் பத்தாம் தேதி, 31ஆவது இதழில் பொன்மொழி வரிசையில் முதலாவதாக, ‘18 வ.உ.சிதம்பரம் பிள்ளை தினம். தமிழ்நாட்டார் சிறப்புடன் கொண்டாட வேண்டிய திருநாள் – ஆசிரியர்’ என்ற தனித்துவமான குறிப்பு இடம் பெறுகிறது. இதைக் கண்ணுறுகையில் காந்தியிடம் அனுமதிபெற்றுத் தமிழ்நாட்டுக்கே உரித்தான பல செயல்பாடுகளையும் செய்திகளையும் நேரடியான தமிழ்க் கட்டுரைகளாகவே ஆக்கி அளித்திருக்கலாமே என்ற எண்ணம் எழுகிறது.
தமிழில் வெளிவந்திருக்கும் தொகுப்பு நூல்களில் முக்கிய இடம் தமிழ் ஹரிஜன் தொகுப்புக்கு உண்டு. இதைச் செவ்வனே பதிப்பித்திருக்கும் முல்லைப் பதிப்பகமும் அரிதின் முயன்று தொகுப்பு-பதிப்புப் பணி ஆற்றியிருக்கும் கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன் இருவரும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.
மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com