இலக்கிய ஊழியன்
‘எழுதுவது, படிப்பது, ஊர் சுற்றுவது - இதுவே என் வாழ்க்கையின் குறிக்கோள்’ என்று தன் பன்நெடுங்கால இலக்கிய வாழ்வை முன்னெடுத்தவர் வல்லிக்கண்ணன். இவர், நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர வர்க்கக் குடும்பமொன்றில் 12.11.1920ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தையார் சுப்பிரமணியன் சுங்கத்துறையில் பணிபுரிந்த காலத்தில், அவரோடு பணியாற்றிய நாவலாசிரியர் அ. மாதவையா அக்காலகட்டத்தில் நடத்திவந்த ‘பஞ்சாமிர்தம்’ இதழ்கள் பற்றிச் சொல்ல, அதுவே வல்லிக்கண்ணனுக்கு எழுத்தின் மீதான தாக்கத்தைத் தந்திருக்கிறது. பத்தாவது வயதில் தந்தை இயற்கை எய்திட, தாயின் அரவணைப்பில் வளர்ந்த வல்லிக்கண்ணனின் பள்ளிப்பருவம் கோவில்பட்டியில் தொடங்கி, பெருங்குளம் தொடக்கப்பள்ளி, நெல்லை மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியெனத் தொடர்ந்து, பாளையங்கோட்டை புனித சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்போடு நிறைவுபெற்றுவிட்டது.
1936இல் எழுதத் தொடங்கிவிட்ட அவரது முதல் சிறுகதை ‘சந்திர காந்தக் கல்’, 1937, டிசம்பர், 15 தேதியிட்ட பிரசண்ட விகடன் இதழில் ஆர்.எஸ். கிருஷ்ணசாமி என்கிற அவரது இயற்பெயரில் பிரசுரமானது. தன் வரலாற்று நூலில் இக்கதைப் பற்றிச் சொல்லும்போது “அதீதமான கற்பனை கொண்ட சுமாரான கதை இது” எனக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின் இறுதி யுத்த காலமான 1941இல் தணியாத இலக்கிய தாகத்தால், மூன்றாண்டு காலமாகத் தான் பார்த்துவந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர எழுத்தாளரானார். இதன் நீட்சியாகவும் ரசிகமணி டி.கே.சி.யின் ‘இதய ஒலி’ நூலின்மீது ஏற்பட்ட ஈடுபாட்டினாலும் அந்தப் பெயரிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கி நடத்தினார். பின்தொடர்ந்த நாட்களில், ‘மறுமலர்ச்சி இலக்கிய இரட்டையர்கள்’ ந. பிச்சமூர்த்தியும் கு.ப. ராஜகோபாலனும் ஆரம்பித்து வைத்த கவிதை இயக்க அடிச்சுவட்டில் தன்னை இணைத்துக்கொண்டு, 1942ஆம் ஆண்டு முதல் வசன கவிதைகளை எழுதினார். வாழ்வனுபவத்தின் கசப்பு அவரது அடிநாக்குவரையில் ஏறிவிட்டிருந்தபடியால் நம்பிக்கை, வறட்சி, ஏக்கம், வேதனை ஆகியவையே அவரது கவிதைகளின் அடிநாதமாக ஒலித்தன. ஆழ்ந்த தீர்க்கமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியிடும் அவரது கவிதைகளின் நடை எளிய, சாதாரணப் பேச்சுப் பாங்கானவை.
இடைப்பட்ட காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, டி.கே.எஸ் நாடகக் குழுவில் இணைய விரும்பி அது ஈடேறாதுபோக, 1943 பிப்ரவரியில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த திருமகள் மாத இதழ் பணியில் இணைந்தார். ஒரு மாத காலம் மட்டுமே அங்கு பணியாற்றியவர், பின்பு கோவையிலிருந்து வெளிவந்த சினிமா உலகம் பத்திரிகையிலும் அதனைத் தொடர்ந்து நவசக்தி, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றத் திட்டமிட்டு முயற்சி மேற்கொள்ள, திருச்சி துறையூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த கிராம ஊழியன் பத்திரிகையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கு.ப.ரா.வைக் கௌரவ ஆசிரியராகவும் கவிஞர் திருலோக சீதாராமை ஆசிரியராகவும் கொண்டு வெளியான கிராம ஊழியன் இதழில் துணை ஆசிரியராக 1944 பிப்ரவரியில் இணைந்தார்.
27-04-1944இல் கு.ப.ரா. காலமாகிவிட, 1944 நவம்பரில் இதழாசிரியர் திருலோக சீதாராமும் விலகிக்கொள்ள, 1944, டிசம்பர் 1 இதழிலிருந்து கிராம ஊழியன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். ‘பாரதி காட்டிய வழியைப் பின்பற்றி மறுமலர்ச்சி இலக்கியத்திற்குத் தொண்டு செய்வோம்’ என்ற அறிவிப்போடு ஆசிரியர் பணியைத் தொடங்கியவர், இளம் எழுத்தாளர்கள் பலரை அவ்விதழில் எழுத அழைத்துவந்தார். மானிட வாழ்வின் அவலநிலையைக் கண்டு வெதும்பிய தனது உள்ளத்தைப் படைப்பாற்றலாக வெளிப்படுத்தும் பொருட்டு, இவ்விதழிலில், சொனா.முனா சொக்கலிங்கம், கெண்டையன் பிள்ளை, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம், இளவல், நையாண்டி பாரதி’ ஆகிய புனைப்பெயர்களைப் சூடிக்கொண்டு தனது பன்முகப் படைப்புகளைப் படைக்கலாயினார். ‘சொனா.முனா’ என்ற புனைபெயரில் மனித வாழ்வு குறித்த தன்னுடைய தத்துவ தரிசனங்களையும் ‘இளவல்’, ‘வேதாந்தி’ பெயர்களில் கவிதைகளையும் ‘மிவாஸ்கி’, ‘சொக்கலிங்கம்’ ‘ரா.சு. கிருஷ்ணசாமி’, ‘வல்லிக்கண்ணன்’ பெயர்களில் நாடகங்களையும் சிறுகதைகளையும் ‘பிள்ளையார், கோரநாதன், தத்துவதரிசி, அவதாரம், நையாண்டி பாரதி’ பெயர்களில் இலக்கியக் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதி வெளியிட்டார்.
கிராம ஊழியன் பணிக்காலத்திலேயே, வல்லிக்கண்ணனின் சிறுகதைத் தொகுதிகளான ‘கல்யாணி முதலிய கதைகள்’ (1944), ‘நாட்டியக்காரி’யும் (1946), ‘கோயில்களை மூடுங்கள்’ (1946), ‘படவுலகில் கடவுள்கள்’ (1946), ‘அடியுங்கள் சாவுமணி’ (1947), ‘ஈட்டிமுனை’ (1947) ஆகிய சிறு கட்டுரை வெளியீடுகளும் ‘குஞ்சாலாடு’ குறுநாவலும் ‘இதய ஒலி’ கையெழுத்துப் பிரதியின் அச்சு வடிவமும் வெளிவந்தன. புதுமைப்பித்தன் படைப்புகள்மீது கொண்ட பற்றுதல் காரணமாக, தனது ‘குஞ்சாலாடு’ குறுநாவலை, ‘எழுத்தில் தனி வேகமும் சிந்தனையில் புதுமையும் அடைய எனக்கு, தமது தனிரக இலக்கிய முயற்சிகள் மூலம், வழிகாட்டிய ஆசிரியர் புதுமைப்பித்தன் அவர்களுக்கு.’ என்கிற வரிகளோடு சமர்ப்பணம் செய்திருந்தார். ‘குரு-சீடர்’ பரம்பரை என்னும் அணுகுமுறையை ஏற்காத புதுமைப்பித்தன், “அப்படியானால் கட்டை விரலைக் கேட்க வேண்டியதுதான்” என இதுகுறித்துத் தனக்கே உரிய விதத்தில் நையாண்டி செய்தாலும், வல்லிக்கண்ணன் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, ‘புதுமைப்பித்தனுக்குத் தமது சிருஷ்டித் திறனில் எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றதோ, அதற்கு எள்ளளவும் குறைந்ததில்லை எனது ரசிகத் தன்மையைப் பற்றிய நம்பிக்கை.’ என்றுரைத்து வாசகபர்வ நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் குறித்த விமர்சனக் கட்டுரையொன்றை எழுதினார்.
கிராம ஊழியன் இதழ்களில் வெளியான படைப்புகளைச் சம்பந்தப்பட்ட படைப்பாளர், பத்திரிகையின் அனுமதி பெறாமல் சில பத்திரிகைகள் மறுபிரசுரம் செய்ய, அவைகளை ‘இலக்கியத் திருட்டு’ எனக் குறிப்பிட்டதோடு, அதனைக் கண்டித்து ‘டம்பாச்சாரிப் பத்திரிகைகள்’ என்ற தலைப்பில் கண்டனக் கட்டுரையொன்றை கிராம ஊழியன் 01-07-1946 இதழில் அவரெழுதினார். படைப்பாளிகளின் படைப்புகளுக்குக் கிடைக்கின்ற மதிப்பும் வரவேற்பும் அந்தப் படைப்பாளியைச் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் சற்றுக் கறாராகவே இருந்தார். 16-05-1947 தேதியிட்ட இதழோடு கிராம ஊழியன் நின்று போன பிறகு, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த திராவிட கழக அன்பர் நடத்திய தீப்பொறி வார இதழில் சில காலம் பணியாற்றியவர் 1948, ஜனவரி, 1 இல் அவ்விதழிலிருந்து விலகினார்.
சிறந்த இதழியலாளராகவும் படைப்பாளராகவும் மட்டுமன்றி, சிறுபத்திரிகைகளின் மூலவிசையாகத் திகழ்ந்த அவர் 1948இல் மல்லிகை எனும் சிற்றிதழைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். அது நிறைவேறாமல் போக, முத்து என்கிற பெயரில் சிறுபத்திரிகையை 1948, ஜுன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்காகப் படைப்புகள் வேண்டியும் எழுத்தாள நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளார். பொருளாதாரக் காரணங்களால் அவ்விதழும் வெளிவராமலேயே போய்விட்டது. 1950இல் ஹனுமான் பத்திரிகையில் இணைந்தார். இரண்டு ஆண்டுகள் அவ்விதழில் பணியாற்றியதே அவரது நிறைவு இதழியல் பணி. அவ்விதழுக்குப் பிறகு தன்னுடைய இறுதி வாழ்நாள் வரையிலும் வேறெந்த இதழிலும் அவர் பணியாற்றவில்லை.
‘டால்ஸ்டாய் கதைகள்’ (1956), ‘கடலில் நடந்தது’ (கார்க்கி கட்டுரைகள் -1956), ‘சின்னஞ்சிறுபெண்’ (கார்க்கி கட்டுரைகள் -1957), ‘கார்க்கி கட்டுரைகள்’ (1957). ‘தாத்தாவும் பேரனும்’ (1959), ‘ராகுல் சாங்கிருத்யாயன்’ (1986), ‘ஆர்மேனியன் சிறுகதைகள்’ (1991), ‘சிறந்த பதின்மூன்று சிறுகதைகள்’ (1995), ‘நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா’ (2005) ஆகிய நூல்கள் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரளித்த பங்களிப்புகள். இவற்றுள் அவரது ‘பெரியமனுஷி’ எனும் சிறுகதை உலகத்துச் சிறுகதைகள் ஆங்கில மொழித்தொகுப்பிற்காக இந்திய மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ‘Stories from Asia Today’ எனும் ஆங்கிலத் தொகுப்பிலும் இக்கதை இடம் பெற்றுள்ளது.
இதழியல் பணிகளிலிருந்து விலகி வந்த பிறகு, தொடர்ந்து தனது படைப்புகளை விடிவெள்ளி, சரஸ்வதி, சாந்தி, சமரன், எழுத்து, தாமரை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தார். தீபம் இதழ் தொடங்கப்பட்டபோது, நா. பார்த்த சாரதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்விதழின் தலையங்கங்களையும் ‘எனது குறிப்பேடு’, ‘மணிக்கொடி காலம்’, ‘சரஸ்வதி காலம்’, புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘தமிழில் சிறு பத்திரிகைகள்’ ‘ஆகிய கட்டுரைத் தொடர்களையும் நூல் விமர்சனங்களையும் எழுதினார். இவற்றுள், புதுக்கவிதைகள் குறித்து வரலாற்று விமர்சன நோக்கில் எழுதப்பட்ட ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரைத் தொடரை 1977இல் தனது ‘எழுத்து’ப் பிரசுர வெளியீடாக சி.சு. செல்லப்பா வெளிக்கொணர, அந்நூலே 1978ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதை வல்லிக்கண்ணனுக்குப் பெற்றுத் தந்தது.
1965 ஏப்ரலில் தொடங்கப்பட்டு, 1988 ஏப்ரலில் நிறைவுற்ற (23 ஆண்டுகள்) தீபம் இதழ் குறித்து ‘தீபம் யுகம்’ என்ற நூலையும் நா.பா. குறித்து ‘எழுத்துலக நட்சத்திரம்’ எனும் நூலையும் அவர் பின்னாட்களில் எழுதினார். தனது எண்பதாவது வயது (2000இல்) நிறைவிற்குப் பிறகு, தன் கலை, இலக்கிய அனுபவங்கள் குறித்த மனப்பதிவுகளை ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற தலைப்பில் எழுத, 2001இல் அவை நூல்வடிவம் பெற்றது. ஒருமுறை ஜெயகாந்தன் வல்லிக்கண்ணனைப் பார்த்து, “நீங்கள் உங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள். அது உங்கள் வரலாறாக மட்டும் அல்லாமல், தமிழகத்தின் பண்பாட்டுக் கலாச்சார இலக்கியப் பதிவாகவும் அமையும்” என்று கூறியுள்ளார். ஜெயகாந்தனைத் தொடர்ந்து, நண்பர்கள் சிலரின் வற்புறுத்தலின் பேரில், தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். ‘நிலை பெற்ற நினைவுகள்’ எனும் தலைப்பிலான இந்தச் சுயசரிதை நூலின் முதல் பாகம் 2005, நவம்பரிலும், இரண்டாம் பாகம் அவரது மறைவிற்குப் பின்னர் 2007யிலும் வெளிவந்தது. இதுவே இவரது நிறைவு நூலாகும்.
“நான் ஒரு சாதாரணன். எனது வாழ்க்கையும் சாதாரணமானதுதான். பலரையும் வசீகரிக்கக் கூடிய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு எதிர்ப்பட்டதும் இல்லை; அத்தகைய சுவாரசியமான அனுபவங்களை நான் தேடிச் சென்றதுமில்லை; ஆக்கிக்கொள்ளவும் இல்லை. வாழ்க்கை ஓட்டத்தில் கலந்து, வகைவகையான நிகழ்வுகளை எதிர்கொண்டு, சுவையாக விவரிப்பதற்கு ஏற்ற பல்வேறு அனுபவங்களை நான் சுவைத்ததுமில்லை; சுவைக்க ஆசைப்பட்டதும் இல்லை. வாழ்க்கை நதியின் ஓரத்தில் ஒதுங்கி நின்று அனைத்தையும் அனைவரையும் சும்மா வேடிக்கையாகப் பார்த்துத் திருப்தி அடைந்த எளியவன் நான்...” என்று சொல்லிவந்த வல்லிக்கண்ணன், 2006, நவம்பர், 9 அன்று காலமானார்.
கதை, கவிதை, குறுநாவல், நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, வரலாறு, விமர்சனம் என சுமார் 70 ஆண்டு காலத்துக்கும் மேலாக எழுதிவந்த வல்லிக்கண்ணனின் இலக்கியப் பங்களிப்புகள் 86க்கும் மேற்பட்ட நூல்களாகத் தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 17 சிறுகதைத் தொகுப்புகள், 2 நாடகங்கள், 29 கட்டுரைத் தொகுதிகள், 7 மொழிபெயர்ப்புகள், 19 நாவல்கள், 13 இன்னபிற நூல்கள் அடக்கம். இருப்பினும் ஆரம்ப காலங்களில் அவர் எழுதிக் குவித்த பல்வேறு படைப்புகள் இன்னும் நூல்களாகத் தொகுக்கப்படாமல் உள்ளன.
எழுதுவதுபோல வாழ வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த வல்லிக்கண்ணன், எவ்விடத்திலும் தன்னை ஒரு படைப்பாளியாக முன்னிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, தான் ஓர் இலக்கிய ஊழியனாக அடையாளம் காணப்பட வேண்டுமெனவே விரும்பினார். 1962இல் அவரெழுதிய ‘விதி’ என்கிற தலைப்பிலான கவிதையில் ஓர் இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
‘நடந்தே கழியணும் வழி
கொடுத்தே தீரணும் கடன்
செய்தே அழியணும் வேலை
வாழ்ந்தே முடியணும் வாழ்வு
இதுவே உலகின் நியதி...’