கடிதங்கள்
ஜூன் இதழில் செந்தூரனின் கண்ணோட்டம் ‘தடைகோருதல் என்னும் நோய்க்கூறு’ கண்டேன். ஒரு படைப்பில் வெளிப்படும் கருத்தைக் கருத்துரீதியாகவோ மாற்றுப் படைப்பின் வாயிலாகவோ எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்து ஏற்புடையது. எனினும் இந்தக் கண்ணோட்டத்தில் அலசப்படும் இரு படைப்புகளும் இறுமாப்புடன் வெறுப்பை உமிழும் விபரீதம் விளைவிக்கும் அபரிமித ஆபத்தை உண்டாக்கும் அதீதமான அநியாயமான பொய்கள், புரட்டுகள், புளுகுகள்.
மத்திய அரசின் மகோன்னத ஆதரவோடு வெளியிடப்பட்ட காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி முதலிய பொய்ப் புரட்டுகளை எதிர்த்தோர், எதிர்க்கருத்து உரைத்தோர் அப்படைப்புகளில் புரையோடிய புளுகுகளைத் தகர்த்திடும் தக்க கருத்துகளை மிக்க கவனமாகச் சுட்டிக்காட்டியோர் குட்டப்பட்டனர். அவர்கள்மீது பொய் வழக்குகள் போட்டு சித்திரவதை செய்ய தடா, பொடா சட்டங்கள் தடாலடியாகப் பயன்படுத்தப்பட்டன. இப்படி முறையாகக் கருத்துக் கூறியோர் முறையற்று முடக்கப்பட்டதை மறக்க
முடியாது. காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்க அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு சிறுவிடுப்பு அளித்தல் உள்ளிட்ட வகைகளில் பாஜக அரசுகள் ஆதரவை அள்ளி வழங்கியபொழுது
அரசு அமைப்புகளில் சட்டரீதியான எதிர்ப்பு எதுவும் எடுபடாது என்பது கட்டுரையாளருக்குத் தெரியாதா?
மு.அ. அபுல் அமீன்
நாகூர் 611002
ஜூன் மாத இதழில் அரவிந்தன் எழுதிய
‘யாவர்க்குமாம்’ என்ற சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. ஆபாசப் படங்களைச் சந்தர்ப்பவசத்தால் இணையத்தில் பார்த்துப் பரவசம் அடைந்த வீட்டு வேலை செய்யும் பெண்மணி, தான் பார்த்த காட்சிகளைத் தன் சக தோழியிடம் தத்ரூபமாக விவரிக்கும் உரையாடல் கதையில் வருகிறது. செக்ஸ் வலைதளங்களைத் தங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் சர்வ சாதாரணமாகப் பார்த்து மகிழ்வதை இன்றைய சமூகம் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் மன இயல்பை இக்கதை பிரதிபலிக்கிறது. சமூகத்தின் இன்றைய மனநிலையைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டும் ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.
ஹபிபுல்லாஹ்
நாகர்கோவில்