சந்திர காந்தக் கல்
எங்கும் இருள் வியாபித்துக் கன்னங்கரேலென்றிருந்தது. அத்துடன் கரிய மேகங்களுஞ் சேர்ந்து, குடியானவன் வீட்டு விளக்கென மங்கலாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த சில சிறு நட்சத்திரங்களையும் மறைத்து ஆகாயத்தில் சஞ்சாரஞ் செய்தன. சிற்சில சமயங்களில் அங்கொரு மின்னலும் இங்கொரு மின்னலுமாகத் தோன்றிக் கண்களைப் பறித்தது. ஆந்தை, கோட்டான் முதலிய இராப் பறவைகளின் அலறல் ஒருபுறமிருக்க, நள்ளிருளில் மாமிசப் பிண்டங்களை உண்டு களித்த கூளிகள்தாம் கூத்தாடுகின்றனவோ என்று ஐயுறும் வண்ணம், காற்று ‘ஹோ’ என்று அகோரமாக இரைந்தது.
திடநெஞ்சமுள்ளவனும் வெளிவர அஞ்சும் அக்கொடிய நள்ளிருளில் ரஸ்தாவின் வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபன் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தான். அவன் தனது காதலி விரும்பிய சந்திர காந்தக் கற்களை அவளிடம் கொடுத்து, தனது காதலை உண்மையானது என்று நிலைநாட்டப் போகிறோம் என்ற எண்ணமே, அவனது மனதில் நிறைந்து, மற்றப் பீதிகளை எல்லாம் வெருட்டி அடித்தது.
காதைக் கிழிக்கும்படியாகக் கதறும் தவளை முதலிய பிராணிகளின் சப்தத்தோடு மோட்டார் சைக்கிளின் ‘பட், பட்’ என்ற சப்தமும் சேர்ந்து ஒலித்தது. திடீரென அச்சப்தம் நின்றது. அவ்வாலிபன் தனது டார்ச் லைட்டின் உதவியால் ரஸ்தாவின் குறுக்கே ஒரு மனித உருவம் கிடப்பதைப் பார்த்து, சைக்கிளின்று கீழேயிறங்கிக் கவனிக்கவே அது ஒரு உயிருள்ள மனிதன் என அறிந்தான். அவன் தனது பயணம் தடைப்பட்டதே என்ற கோபத்தினால், அங்கு கிடந்த மனிதனை நோக்கி, “ஏன்டா, மடையா! உன்னைக் கிடத்த வேறு இடம் அகப்படவில்லையா? ரோட்டில் படுத்திருக்கிறான் பார் மடையன்” என்று கூறவே, அம்மனிதன் எழுந்து, “ஓய் நிறுத்தும்! டா-புடா என்றெல்லாம் பேச வேண்டாம். பிறகு நீர் மரியாதை கெட்டுப் போவீர்” என்றான்.
வாலிபன் “நீ யார்?” என்று கோபமாக வினவ, அம்மனிதன் “நானா... என்னய்யா கேட்கிறாய்? நான்..ன்..நா” என்று உளறினான். “அடே, சொல்கிறாயா? இல்லையா?” என்று கேட்கவும், “நான்தான் நான்” என்று பதிலளித்தான் அந்த அந்நியன். “கழுதை! நீதான் நீயா? சரியாகச் சொல்!” என்று கர்ஜித்தான் வாலிபன்.
“ஐயோ! சொல்கிறேன். நான்தான் எங்க அப்பாவுக்குப் பிள்ளை” என்றான். இதைக் கேட்டதும் வாலிபன் கோபங் கொண்டான். “அயோக்ய நாய்! இதோ உன்னை என்ன செய்கிறேன் பார்!” என்று கூறி அவ்வாலிபன் தன் கைகளை ஓங்கி அவனை அடிப்பதற்காக அவன் சமீபத்தில் சென்றான். திடீரென்று பின்னால் நோக்கவே அவன் திடுக்கிட்டான். அவனது கரங்கள் அவனையறியாமலே கீழே சென்றன. அவன் முகத்தில் கோபம், கவலை, பயம், வியப்பு முதலிய குறிகள் தோன்றி மறைந்தன. அவன் அவ்வாறு திடுக்கிடுவானேன்? அவன் பின்னால் கண்டதென்ன? அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அவனது மோட்டார் சைக்கிளைக் காணோம். முன்னால் திரும்பினான். அந்த அந்நியனையுங் காணவில்லை.
அவன் என்ன செய்வதென்று தோன்றாமல், திகைப்புடன் அந்த இடத்திலேயே நின்றான். திடீரென நான்கு முரடர்கள் அவனைத் தாக்கினர். நால்வரிடையில் அவன் ஒருவன் என்ன செய்யக்கூடும்? அம்முரடர்கள் அவனைக் கட்டித் தூக்கிச் சென்றனர்.
“பச்சைக் கல்லு! பவளக் கல்லு! சிகப்புக் கல்லு! நீலம், புஷ்பராகம்” என்று கூவிக்கொண்டே தலையில் ஒரு பெட்டியுடன் ஒருவன் தெருவில் அலைந்தான். ஒரு பெரிய வீட்டினின்றும் ஓர் சிறுமி ஓடிவந்து, “ஏ, இங்கே வா! எங்கப்பா கூப்பிட்றா” என்று கூறினாள். அக்கல் வியாபாரியும் உள்ளே நுழைந்தான். அங்கிருந்த ஒருவர் “என்னதெல்லாம் இருக்கிறது?” என வினவினார்.
அவ்வியாபாரி “பச்சேயிருக்கு. பவளமிருக்கு, முத்திருக்கு, நீலம், சிகப்பு புஷ்பராகம், கோமேதகம், வைரம், வைடூரியம் செவ்வந்திக்கல்...” என்று அடுக்கினான். அப்பெரியவர் “எங்கே பார்ப்போம்?” என்று கூற, அவனும் தன் பெட்டியைத் திறந்து கூறலுற்றான்.
“இதுதான் புஷ்பராகம். என்ன வெட்டு வெட்டுது பார்த்தீர்களா! இந்தக் கோமேதகத்தைப்போல வேறே கிடைக்காது. இது அசல் புதுச்சிவப்பு” என்று சொல்லி நிறுத்தினான். “இந்த புஷ்பராகம் என்ன விலை?” என்று கேட்க. அவன் “இது நல்ல ரகம், நன்றாக ‘பாஷன்’ செய்யப்படாது. விலை ஐம்பது ரூபாய்” என்றான்.
“ஐம்பது ரூபாயா!” என்று கூறினார் அவ்வீட்டின் பெரியவர் கேசவராவ் என்றவர். “உம், உங்களுக்குக் கல்விலை ஒன்றுந் தெரியாது. நான் போகிறேன்” என்று கூறிப் புறப்பட்டான் அவ்வியாபாரி.
“ஓய், என்ன? எனக்கா தெரியாது? நான் நேற்று ஒரு ஜதைக் கற்கள் வாங்கியிருக்கிறேன். அவை என்ன விலை பெறும் என்று கூறும்” என்று சொல்லி, “கனகம், அந்த சந்திர காந்தக் கற்களை இங்கே எடுத்துவா” என்றார்.
அதைக் கேட்ட வியாபாரி “என்ன கல் அது! காந்தக் கல்லா! இரும்போடே சண்டை போடும் அந்தக் கல்லா? அந்தப் பரிஷை நமக்குத் தெரியாது” என்றான். அவர் மிக்க வியப்புடன், “நல்ல கல் வியாபாரி வந்தாய்! சந்திர காந்தக் கல் தெரியாதவனா ரத்தினங்கள் விற்க வந்துவிட்டாய்” என்று கூறிச் சிரித்தார்.
“போதும், உங்கள் சிரிப்பு! சந்திரக் காந்தக் கற்களைக் காணோமே” என்று உள்ளே இருந்து கூறினாள் கனகம்மாள். “என்ன! சந்திர காந்தக் கற்களையா காணவில்லை? இரண்டையும் தொலைத்துவிட்டாயல்லவா? உம். நூறு ரூபாய் போய்விட்டது! அதை எங்கே வைத்தாய்” என்று கேட்டார்.
“நான் பீரோல்லே வெள்ளி டப்பியிலே வைத்திருந்தேன்.”
“வெள்ளி டப்பியாவது! மண்ணாவது! அந்த டப்பியாவது இருக்கிறதா?”
“அந்த டப்பியும் இல்லை” என்று கூறினாள் அவள்.
அதைக் கேட்டதும் கேசவ ராவ் அப்படியே உட்கார்ந்து விட்டார். அந்தச் சமயத்தில் ஒரு வேலைக்காரன் வந்து, “எஜமான், எஜமான்!” என்றான். அவர் கோபமாக, “எஜமான்! இப்பொழுது என்ன வந்துவிட்டது” என்று கேட்டார். அவன், “இல்லைங்க எஜமான்! சின்ன எஜமானைக் காணவில்லை! மோட்டார் சைக்கிளும் இல்லை” என்றான்.
“என்ன சேகரனையா காணவில்லை! அப்பவே சொல்வதற்கென்ன?”
“அவர் அந்த அறையிலே படுத்திருப்பார் என்று நினைத்தேன். இராத்திரியிலேயே அவர் அங்கே இல்லையென்று தெரிகிறது” என்று கூறினான் அந்த வேலைக்காரன்.
“அயோக்கிய நாய்! அவன்தான் அந்தக் கல்லை எடுத்திருக்க வேண்டும்” என்று கர்ஜித்தார் கேசவ ராவ். அதைக் கேட்ட அந்த வேலைக்காரன், “போனாப் போகுது! அந்தக் கல்லை வேணும்னா தருகிறேன்” என்றான்.
“என்ன நீ ஒரு கல் வியாபாரியா?”
“ஆமாங்க! எங்க வீட்டிலே பெருத்துக் கிடக்குதுங்க கழுதைகள்! அரை ரூபாய் கல்லுபோனா ஒரு ரூபாய் கல்லு இருக்குது!”
“என்ன, அரை ரூபாய்க்கும் ஒரு ரூபாய்க்கும் கல்லா?” என்று அதிசயத்துடன் கேட்டார் அவர். “ஆமாங்க, ஷவரக்கத்தி தீட்ற கல்லுத்தானே!” என மொழிந்தான் அவ்வேலைக்காரன்.
“சீ அம்பட்டப் பயலே! குலம், கோத்திரம் விசாரியாமல், நான் உன்னை வேலைக்கு வைத்தேனே! போடா நாயே” என்று கூறி அவனைத் துரத்திவிட்டார். கல் வியாபாரியும் நழுவிவிட்டான்.
அந்தகாரமே நிரம்பிய ஓர் அறையின் நடுவில் கைகளும் கால்களும் கட்டுண்டு கிடந்த ஓர் வாலிபன், “ஐயோ! என்னை ஏன் வதை செய்கிறீர்கள், நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று புலம்பியவண்ணம் கிடந்தான். அவனைச் சுற்றிலும் எமகிங்கரர்கள்போல ஐந்து முரடர்கள் நின்றனர்.
திடீரென ஏதோ சப்தங் கேட்கவே அம்முரடர்கள் விலகி நின்றனர். இவன்தான் ‘எமன்’ என்று மதிக்கும்படி, கருத்த மேனியும் தடித்த உருவமும் ‘கிர்தா’ மீசையும் நீண்ட பற்களும் குடிவெறியால் சிவந்த கண்களையுமுடைய ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன்தான் அக்கள்வர்களின் தலைவன். அவன் நடுவில் கிடந்த வாலிபனைக் கண்டதும் “இவன் யார்?” எனக் கேட்டான்.
அம்முரடர்கள் வணக்கமாக “எசமான்! இவன் நடுரோட்டிலே போனான். நாங்க புடிச்சிக்கிட்டு வந்தோம்” என்றனர். தலைவன், அவனைச் சோதிக்கும்படி கட்டளையிடவே, அவர்கள் அவ்வாலிபனை அணுகி, அவனது சட்டை முதலியவற்றைப் பார்த்துவிட்டு, “ஒன்றும் இல்லை” என்றனர். “வெறும் நாடோடிக் கழுதை” என்று கூறிய வண்ணம் அவர்களது தலைவன் வெளியே சென்றான்.
அவ்வாலிபன் அக்கள்வர்களிடமிருந்து தப்பிச் செல்ல யாதேனும் வழி உண்டா என்று ஆராயத் தொடங்கினான். தனது மோட்டர் சைக்கிள் அங்கு நிற்பதைக் கண்டான். அவர்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காகத் தன்னிடமுள்ள வஸ்துவை, தான் விசேஷமாகக் கருதிய பொருளை, தன் காதலியைச் சந்தோஷிக்க வைத்திருந்த அந்தச் சந்திர காந்தக் கற்களை, இதுவரை, ஏன் இன்னமும், தான் திறந்து பாராத அந்தக் கற்களை, டப்பியோடு கொடுத்துவிட்டுச் செல்வது என்று எண்ணினான். ஒருவேளை அதை வாங்கிக்கொண்டு, விட மறுத்துவிட்டால்? அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தான்.
அவன் அம்முரடர்களை நோக்கி, “நீங்கள் என் கட்டை அவிழ்த்துவிடுங்கள்! உங்களுக்கு ஒரு சாமான் தருகிறேன்” என்று கூறினான். “ஜாமானா? எங்களுக்கா?” என்று அவர்கள் ஆச்சரியத்துடன் வினவ, “ஆம், உங்களுக்குத்தான்” என்று கூறினான். உடனே அவர்கள் அவசரமாக அவனது கட்டுகளை அவிழ்த்தெறிந்தனர்.
அவ்வாலிபன் எழுந்து நின்று தன் மடியிலுள்ள ஒரு வெள்ளி டப்பியை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, தனது மோட்டார் சைக்கிளின் சமீபத்தில் சென்று, “இதனுள் விலையுயர்ந்த மோதிரக் கற்கள் இரண்டு இருக்கின்றன” என்று கூறி, ஒரு மூலையில் வீசினான். அம்முரடர்கள் அதை எடுக்க ஓடவே, அவ்வாலிபன் தனது மோட்டார் சைக்கிளில் ஏறி, விரைவாக ஓட்டித் தப்பிச் சென்றான். அவ்வாலிபன் சேகரன் என்று சொல்லாமலே விளங்கும். நிற்க.
அம்முரடர்கள் அந்த டப்பியை எடுத்துத் திறக்க முயன்றனர். அவர்களில் ஒருவன், “அண்ணே, எனக்குத்தான் அந்த டப்பி வேணும். பொடி வச்சிக்கிட” என்றான். மற்றவன் “போடா உனக்கா வேணும்! எனக்கில்லாங்க அது” என்றான். மூன்றாமவன், “நீங்க எப்படியும் போங்க. எனக்கு உள்ளே இருக்கிற கற்கள்தான் வேண்டும்” என்றான். “ஏன் வேண்டாம். எனக்குத்தான் அது” என்றான் நான்காமவன். “எனக்கு ஒன்று உனக்கு ஒன்று” என்று பேரம் பேசினான் மூன்றாமவன்.
முடிவில் பெட்டியும் திறக்கப்பட்டது. அதைத் திறந்தவன் ஏமாற்றத்துடன் இருக்க, கைநழுவிப் பெட்டி கீழே விழுந்தது. ஆ! அதில் ஒன்றுமில்லை! வெறும் டப்பி! இதற்குள் இவ்வளவு நேரமும் பேசாமலிருந்த ஐந்தாமவன் டப்பியை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனைப் பிடிக்க மற்ற நால்வரும் ஓடினர்.
கேசவ ராவ் வீட்டில் ஏக பரபரப்பு. சந்திர காந்தக் கற்களைத் தேடாத இடம் பாக்கியில்லை. எங்கும் தேடியாய்விட்டது. கற்கள் அகப்படவில்லை. அவற்றின் பலனாக இவ்வளவு காலமும் செளகரியமாக – தலைமுறை தலைமுறையாக – வசித்து வந்த பல்லிகளும் பாச்சைகளும் வெளிக் கிளம்பின. கேசவ ராவ் போலீசுக்கு ‘போன்’ பண்ணவே, இன்ஸ்பெக்டரும் வந்துசேர்ந்தார்.
கேசவ ராவ் இன்ஸ்பெக்டரிடம் தம் வீட்டில் நூறு ரூபாய்க்கு வாங்கப்பட்ட சந்திர காந்தக் கற்கள் காணாமல் போய்விட்டதைப் பற்றிக் கூறினார். இன்ஸ்பெக்டர் எல்லா விஷயங்களையும் தமது டயரியில் குறித்துக்கொண்டு, சேகரனின் அறையைச் சோதிக்க வேண்டும் என்றும் சொன்னார்.
சேகரனது அறை சோதனை போடப்பட்டது. அப்பொழுது அவரிடம் ஒரு காகிதம் சிக்கியது. அதை வாசித்தறிந்த அவர் ஆத்திரமடைந்தார். மீசை துடிக்க, “அவன் எங்கே? அந்தக் கள்ளன் எங்கே?” என்று கூவினார். எல்லோரும் விழித்தனர். “என்ன விழிக்கிறீர்கள்! உமது மகன் சேகரன் எங்கே? அவன்தான் திருடன்” என்றார். “அவனைக் காணவில்லை” என்று கூறினார் கேசவ ராவ். “சரிதான். அப்பொருளை அந்த இடத்தில் சேர்க்கப் போயிருக்கிறான். வரட்டும்” எனக் கூறினார் இன்ஸ்பெக்டர்.
அந்தச் சமயத்தில் ஓர் வாலிபன் உள்ளே நுழைந்தான். அவன் வெகுதூரம் பிரயாணஞ் செய்திருக்கிறான் என்பது அவனைப் பார்த்த எவருக்கும் எளிதில் விளங்கும். அவன் அங்குள்ள குழப்பத்தைக் கண்டான். அவனைக் கண்ட கேசவ ராவ், “ஏ.. சேகரா, நீ...” என்று பேச ஆரம்பித்தார். அதற்குள் இன்ஸ்பெக்டர், “ஓஹோ, இவன்தான் உங்கள் மகன் சேகரனோ” என்று கூறி, அவன் பக்கஞ் சென்று, “சேகர ராவ்! உம்மை நான் ‘அரெஸ்ட்’ செய்கிறேன்” என்றார்.
சேகரன் திடுக்கிட்டு “எதற்காக?” என்று வினவினான். “திருடியதற்காக” என்று இன்ஸ்பெக்டர் கூறவும், “நான் எங்கே திருடினேன்?” என்றான் அவன். “நீ சந்திர காந்தக் கல்லைத் திருடவில்லையா?” என்று கேட்கவும், அவன் “சந்திர காந்தக் கற்களையா” என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தான். போலீஸ் இன்ஸ்பெக்டர், “ஓஹோ, அது உமது காதலியிடந்தான் சேர்ந்துவிட்டதே என்று எண்ணிச் சிரிக்கிறீரோ” என்று கூறினார். ‘காதலி’ என்று கூறக்கேட்ட சேகரன் திடுக்கிட்டான். அந்த விசேஷத்தை எண்ணுந்தோறும் அவனது மனம் பதறியது.
கேசவ ராவ் கோபமாக “காதலியா? யாரது?” என்று கேட்டார். இன்ஸ்பெக்டர் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கவே, அவர் அதை வாசித்துப் பார்த்தார். முக்கியமாக அவர் மனதைக் கவர்ந்தது, “நீர் உமது வீட்டில், பீரோவில் வெள்ளி டப்பியில் இருக்கும் சந்திர காந்தக் கற்களை எடுத்து வந்தால்தான் உமது காதல் உண்மையென விளங்கும்” என்ற வார்த்தைகளே. அக்கடிதம் லக்ஷ்மி என்றவளால் வரையப்பட்டிருந்தது.
கேசவ ராவிற்கும் கோபம் உண்டாயிற்று. இருந்தாலும் அவனை ‘அரெஸ்ட்’ செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொண்டார். அந்தச் சமயத்தில் சேகரன் தம்பி ராமு அங்கு வந்தான். அவன் சேகரனைப் பார்த்து “அண்ணா, நான் பப்பரமிண்ட் வச்சிருக்கேன், உனக்குத் தர மாட்டேன்” என்று சொல்லித் தன் கையை நீட்டினான். அதைப் பார்த்ததும் சேகரனது கண்கள் பிரகாசமடைந்தன. அவன் ஆச்சரியமடைந்தான். ராமு கையில் இரு சந்திர காந்தக் கற்கள் மிளிர்வதைக் கண்டான். அவன் தான் ஏமாற்றமடைந்ததாக எண்ணினான். “இதோ இருக்கிறதே சந்திர காந்தக் கற்கள். எங்கேடா அகப்பட்டது” என்று கூச்சலிட்டார் கேசவ ராவ். ராமு ஓர் இடத்தைக் காட்டினான்.
அப்பொழுது அங்கு வந்த கனகம்மாள், “ஓஹோ! இதை நான் வந்திருந்தவர்களுக்குக் காட்டினேன். அதை மறுபடியும் பீரோல்லே வைக்க மறந்துவிட்டேன். அதுதான் இது, அங்கே கீழே விழுந்து கிடந்திருக்கிறது” என்றாள்.
சேகரன் தான் ஏமாற்றமடைந்ததைப் பற்றிச் சொன்னான். கேசவ ராவ் “எல்லாம் நன்மைக்கே!” என்று சொல்லிச் சந்திர காந்தக் கற்களை, அவனது காதலிக்குக் கொடுக்கும்படி சேகரனிடம் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் தலைகுனிந்த வண்ணம் வெளியே சென்றார்.
பிரசண்ட விகடன் - 1937 டிசம்பர் 15,