கெட்டிக்கார மருமகள்
எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதைசொல்லிகள் இருந்தார்கள்; ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்.
அம்மா, பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்லி மகிழ்ந்தாள்; அவர்களையும் மகிழ்வித்தாள். பிள்ளைகள் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக ரசமான கதைகள் சொல்லி, சாதத்தை ஊட்டினாள். தூங்குவதற்காகவும் கதை சொன்னாள்.
அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என எல்லோருமே அலுக்காமல் கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சும்மா பொழுது போகாமல் தெருச் சந்தியில் குந்தியிருந்தவர்கள்கூடத் தங்களுக்குள் கதைகள் சொல்லி இன்புற்றார்கள்.
அக்காலத்தில் கதைகள் எழுதுவோர் இருக்கவில்லை. பலரும் எழுதுகிற கதைகளைப் பரப்புவதற்கான பத்திரிகைகள் இருந்ததில்லை. ரேடியோ வரவில்லை, தொலைக்காட்சி என ஒன்று வரும், வீட்டுக்குள்ளேயே வந்து அது பேயாய் ஒட்டிக்கொள்ளும் என்று எவரும் கனவில்கூட நினைத்திராத காலம் அது.
ஆகவே அவரவர் அரவரவருக்குத் தோன்றியபடியெல்லாம் கதைகள் சொன்னார்கள். மக்களைப் பற்றிய கதைகள், மனிதர்களின் பலங்கள், பலவீனங்கள், பேராசை, பொறாமை, கொடூரங்கள் பற்றிய கதைகள், பெருமைகள், சிறுமைகள் பற்றிக் கதைகள் எதையும் அவர்கள் விரசம், ஆபாசம், பேசத் தகாதவை என்று எண்ணியதில்லை. வாழ்க்கையில் ஊரில் உலகத்தில் உள்ளவை, இல்லாதவை, கண்டவை, காணாதவை அனைத்தையும் அவர்கள் கதைப் பொருளாக்கிப் பேசிச் சிரித்து மகிழ்ந்தார்கள்.
எனவே அவை மக்கள் கலையாக மலர்ச்சி பெற்றிருந்தது. மக்கள் பக்திசெய்து கும்பிட்டு வணங்கிய கடவுளரைக்கூடப் பரிகாசத்துக்கும் எள்ளலுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய கதாபாத்திரம் ஆக்கத் தயங்கியதில்லை.
அப்படியொரு கதை, புத்திசாலியான ஒரு மருமகள் பற்றியது.
ஒரு ஊரிலே ஒரு மருமகள் இருந்தா. அவளுடைய மாமியார்க்காரி பொல்லாதவ. மருமகளைக் கொடுமைப்படுத்த அஞ்சாதவ.
மாமியா வாய்க்கு ருசியா, வகை வகையாக் கறிவகைகள் எல்லாம் செய்து சாப்பிடுவா. மருமகளுக்கு வெறும் சோறும் பழைய கறியும் நீத்தண்ணியும்தான் கொடுப்பா.
புருசன்காரன் அம்மா சொல்றபடி கேட்கிற பையன். அதனாலே அவன் வீட்டிலே நடக்கிறதை கண்டுகிடறதே இல்லை. பொண்டாட்டிக்காரி அவன்கிட்டே எவ்வளவோ சொல்லிப்பாத்தா. எங்க அம்மா நல்லவ, நல்லதுதான் அவ செய்வா என்று சொல்லிப்போட்டான் அவன்.
இவருகிட்டே இனி சொல்லிப் பிரயோசனமில்லே என்று மருமக கம்முனு இருந்துட்டா. காலம் வரும், பாத்துக்கிடலாமின்னு அவளுக்கு நெனப்பு.
மாமியாளுக்கு சுண்டல்னா ரொம்பப் பிரியம். கடலைச் சுண்டல், பாசிப்பயத்தம் சுண்டல், மொச்சைப் பயறுச் சுண்டல்னு நாளுக்கு ஒண்ணு செய்வா. நல்லா மசாலா அரைச்சுப்போட்டு, தாளிச்சு இறக்குனான்னா, வீடெல்லாம் கமகமன்னு வாசம் தூக்கிட்டுப் போகும். பாதகத்தி எல்லாத்தையும் தானேதான் தின்பா. மருமகளுக்கு ஒரு கைப்பிடி அளவுகூடக் கொடுக்கமாட்டா.
ஒரு நா அவ மொச்சைப் பயறை வேகவச்சு மணக்க மணக்க தாளிச்சு இறக்கி வச்சா. மருமகளைப் பார்க்க வச்சு, தானே வாயிலே அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டா. ஐயோ பாவம்னு சொல்லி ரெண்டு மொச்சைப் பருப்பு கொடுக்கப்படாது? ஊகூம். சண்டாளி தானே மொக்கினா.
மருமக என்னத்தை சொல்லுவா? சரி வேளை வரும், பார்த்துக்கிடலாம்னு தன் மனசைத் தேத்திக்கிட்டா.
அந்த வேளையும் வந்து சேர்ந்தது. ஒருநா மாமியாக்காரி பக்கத்து ஊருக்குப் போயிட்டா. வர ரெண்டு நாள் ஆகும்னு சொல்லிட்டுப் போனா. அதுதான் சமயம்னு மருமக மொச்சைப் பயறை அவிச்சு சுண்டல் செய்தா. அருமையா மசால்பண்ணிக் கலந்தா. நெய்யிலே தாளிதம் பண்ணினா. அந்த வாசனை வீட்டை என்ன வீட்டிலே இருக்கக்கூடிய ஆளுகளையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போயிரும்னு சொல்லும்படியாக இருந்தது.
இதுதான் சுண்டல் சாப்பிட சரியான இடம்னு நினைச்சு அவ கோயிலுக்குள்ளே போனா. மொச்சைப் பருப்பு சுண்டலை எடுத்து வாயிலே போட்டா. ஆ, அருமைன்னு சொல்லி, சப்புக்கொட்டி சாப்பிட்டா. சுண்டல் வாசமும் அவ ரசிச்சுச் சாப்பிட்ட தோரணையும் பிரமாதமா இருந்தது.
அது பிள்ளையாருக்கே வாயிலே எச்சி ஊறும்படி செய்தது. அவ சாப்பிடச் சாப்பிட அவருக்குத் தாங்க முடியலே. பிள்ளையாருக்குத்தான் சுண்டல்னா ரொம்பப் பிரியமாச்சே! அவரு வெட்கத்தை விட்டு, எனக்குக் கொஞ்சம் சுண்டல்தான்னு கேட்டு, கையை நீட்டினாரு.
மருமக பார்த்தா, உமக்கு சுண்டலா வேணுமின்னு கேட்டபடி, அவரு கையிலே படாருனு ஒரு குசு விட்டா. இதுதான் உமக்குன்னு கேலியாகச் சொல்லிப்போட்டு, கிண்ணத்தை வழிச்சி நக்கிட்டு, தன் வழியே போனா.
அவமானம் அடைந்த பிள்ளையார், கோபம் கொண்டு, சுவத்தைப் பார்க்கத் திரும்பி உட்கார்ந்திட்டாரு. செய்தி மெதுமெதுவா பரவிச்சுது. பிள்ளையாரு ஏனோ கோவிச்சுக்கிட்டே சுவரைப் பாக்கத் திரும்பி உட்காந்திருக்காரு, நம்ம ஊருக்கு ஏதோ கேடு வரப் போகுதுன்னு சனங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க. பக்தர்கள் வந்து விழுந்து கும்பிட்டு வேண்டிக்கிட்டாங்க. பெரிய பூசை பண்றோம், அதைச் செய்றோம், இதைச் செய்றோம் என்று எவ்வளவோ சொன்னாங்க. பிள்ளையாரு கேட்கவே இல்லை. திரும்பி உட்கார்ந்தவரு உட்காந்தவருதான்.
நேரம் போச்சு. ஊர்க்காரங்க பயந்தபடி, என்ன செய்ய ஏது செய்யன்னு விளங்காம பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு நின்னாங்க.
மருமக காதிலேயும் இது விழுந்தது. அவ கோயிலுக்கு வந்தா. நான் பிள்ளையாரை சரியா உட்கார வைக்கிறேன்னு சொன்னா. நீங்க எல்லாரும் தூரமா தள்ளிப்போய் நில்லுங்கன்னு கேட்டுக்கிட்டா.
சனங்க அப்படியே செய்தாங்க. மருமக கோயிலுக்குள்ளே பிள்ளையாருகிட்டப் போனா. “வே பிள்ளையாரே, உமக்கு என்ன கேட்கு? ஏன்வே இப்டி அடம்புடிக்கீரு? ஒழுங்கா மரியாதையா எப்பவும் போல திரும்பி உட்காரும். இல்லைன்னா, நான் அப்பதே உம்ம கையிலே குசுவினேன். இப்ப உம்ம மூஞ்சிலே, வாயிலேயே குசுவுவேன். ஆமா” என்று மிரட்டினாள்.
பிள்ளையார் பயந்து போனார். இவ அப்படியும் செய்துபோடுவா செய்யக்கூடியவதான்னு மிரண்டு போயி, சட்டுப்புட்டுனு திரும்பி, ஒழுங்கா வழக்கம்போல உட்கார்ந்து காட்சி தந்தாரு.
‘வே பிள்ளையாரே, ஞாபகம் வச்சுக்கிடும். திரும்பவும் இது மாதிரி கோணங்கித்தனம் எதுவும் பண்ணாம இரியும். ஆமா’ என்று சொல்லிவிட்டு, வெளியே வந்தாள். எல்லாரையும் கூப்பிட்டு, “பிள்ளையாரு சாமி எப்பவும் போல இருக்காரு; கும்பிடுங்க”ன்னு சொல்லி நகர்ந்தாள்.
“நீ என்னம்மா செய்தே? பிள்ளையாரு எப்படி இவ்வளவு சீக்கிரமா திரும்பினாரு” என்று பலரும் கேட்டார்கள்.
அதைப் பத்தி என்ன! பிள்ளையாரு இனி இப்படியே இருப்பாருன்னு சொல்லிப்போட்டு மருமக தன் வீட்டுக்குப் போனா.
இதுக்குள்ளே மாமியாக்காரி திரும்பி வந்திருந்தா. ஊரே அல்லோலப்பட்டதை அறிஞ்சு என்ன விசயம்னு கேட்டா. மருமக புரவோலத்தை எல்லாரும் பெரிசாப் பேச ஆரம்பிச்சிட்டாங்க.
மாமியாருக்கு உள்ளுக்குள்ளே உதறல் எடுத்தது. ஆத்தாடி! பிள்ளையாரையே தன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்கிற திறமை இவளுக்கு இருக்குதுன்னு சொன்னா, இவ நம்மை என்னதான் செய்யமாட்டா? நாமதான் புத்தியாப் பிழைக்கணும்னு அவ நெனச்சா.
அதிலேருந்து அந்த வீட்டிலே மருமகளுக்கு ராஜ உபசாரம்தான். இதனாலே மகனுக்கும் திருப்தி ஏற்பட்டது.
வரம் கேட்டவன் கதை
அந்தக் காலத்திலே, அதாகப்பட்டது, 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை இங்கு தருகிறேன்.
ஒரு ஊரிலே அப்பாயி (அப்பாவி மனிதன்) ஒருத்தன் இருந்தான். அவனுக்கு அடங்காத ஆசை ஒன்று இருந்தது. தனக்கு அடர்த்தியா தாடி வளரணுமின்னு. அவன் பார்வையில்பட்ட பல பேருக தாடி அப்படி ஒரு ஆசையை அவனுக்கு ஏற்படுத்தியது.
ஆனா அவனோட உடல்வாகு, அவன் தாடையிலே மயிரு அடர்த்தியா வளரலே. ஏதோ கட்டாந்தரையிலே புல்லு முளைச்ச மாதிரி தாடி மயிர் தென்பட்டது. இதிலே அவனுக்கு ரொம்ப வருத்தம்.
அவனும் படாதபாடு பட்டான். தைலங்கள் தடவினான். யார் யாரோ சொன்ன பண்டுவம், பக்குவம் எல்லாம் செய்து பார்த்தான். ஊகூட். தாடி மயிர் அடர்த்தியா வளருவேனான்னு களுருவஞ்சாதனை சாதிச்சுப் போட்டுது. பையன் யோசிச்சான். அந்த ஊருக்கு வெளியே அய்யனாரு கோயிலு இருந்தது. சொல்லி வரம் கொடுக்கும் சாமின்னு சனங்க நம்பினாங்க. நேர்ந்துகிட்டு அய்யனாரைக் கும்பிட்டாங்க. அப்புறம் அது பலிச்சிட்டுதுன்னு சொல்லி மறுபடியும் சாமிக்குப் பூசை பண்ணிப் பொங்கல் வச்சி வயிறாரச் சாப்பிட்டு சந்தோசப்பட்டாக.
அதனால் இந்த அப்பாயியும் தனக்குத் தாடி முளைக்க அய்யனாரிடம் வரம் கேட்பதுன்னு முடிவு செஞ்சான். அதிகாலையிலே எழுந்திருச்சு குளிச்சுப்போட்டு, நெத்திலேயும் உடம்பிலேயும் பட்டை பட்டையா திருநீறு பூசிக்கிட்டு, பக்தி சிரத்தையா கோயிலுக்குப் போயிக் கும்பிட்டான்.
அய்யனாரு கோயில் ஊரை ஒட்டிய சிறு மலை மேலே இருந்தது. சனங்க அதை மலையின்னு சொல்லிக்கிட்டாங்களே தவிர, உண்மையிலே அது மலையில்லை. பொத்தை (பொற்றை - சிறுகுன்று) தான்.
அப்பாயி தினசரி காலை நேரத்திலே பக்திமான்போல மலைக்குப் போயி சாமி கும்பிடுதானே; ரொம்ப நேரம் கும்பிடுற மாதிரித் தெரியுது; அப்படி என்னதான் வேண்டிக்கிடுதான் அய்யனாருகிட்டேயின்னு ஒரு ஆசாமிக்குச் சந்தேகம் உண்டாயிட்டுது குறும்புக்கார மனிதன் அவன்.
அதனாலே, ஒரு நாள் அப்பாயி கோயிலுக்குப் போனதும் குறும்பனும் போனான். மறைஞ்சு நின்னு கவனிச்சான். கோயிலுக்குள்ளே அய்யனார் உருவத்துக்கு முன்னாடி நின்னு அப்பாயி கண்ணை மூடிக்கிட்டு, கும்பிட்டபடி, உருப்போடுத மாதிரி, இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருந்தான்.
“மண்ணாலே கோட்டை கட்டி
மலை மேலே இருக்கும் அய்யனாரே
எனக்கு தாடி மயிர் முளைக்க
வரம் தாருமய்யா”
அவனுக்கே போதும்னு தோணுதவரை இதை நீட்டி இழுத்துப் பாட்டு மாதிரிக் கத்திக்கிட்டு இருந்தான் அப்பாயி. பதுங்கி நின்னு பார்த்த குறும்பன், ஓகோ இப்படியா சமாச்சாரம்னு எண்ணினான். நாளைக்கு இவன்கிட்டே ஒரு வேடிக்கை பண்ணணுமின்னும் நெனச்சான். குறும்பாகச் சிரிச்சுக்கிட்டே விறுவிறுன்னு முந்திக்கிட்டு ஊருக்குத் திரும்பிட்டான் அந்த ஆசாமி.
மறுநாள் அவன் அப்பாயி கோயிலுக்குப் போறதுக்கு முன்னாடியே போனான். அய்யனார் உருவத்துக்குப் பக்கத்திலே சிங்க வாகனம் ஒண்ணு இருந்தது. பெரிசா, மரத்தினாலே செய்யப்பட்டு, வர்ணம் பூசியது. அது பழசாகிப்போனதனாலே, வர்ணம் மங்கிப் போயிட்டுது. வாகனத்திலே ஒரு பொந்து (ஓட்டை) ஏற்பட்டிருந்தது.
சேட்டைக்கார ஆசாமி ஒல்லிதான். அதனாலே பொந்து வழியா சிங்க வாகனத்துக்குள்ளே புகுந்து அது வயிற்றுக்குள்ளே ஒடுங்கி இருக்க முடியும். இதைச் சோதித்துப் பார்த்த குறும்பன் உள்ளே நுழைஞ்சு பதுங்கிக்கிட்டான்.
பக்தன் வந்தான். வழக்கம் போலே சாமி முன்னே நின்னு கண்ணை மூடிக்கிட்டு, அய்யனாரை வேண்டி வரம் கேட்கும் பாட்டைத் திரும்பத் திரும்ப உச்சரித்தான்.
திடீர்னு அவனை உலுக்கியது ஒரு சத்தம்.
“ஏய் கவனி!
முன்னோர் செய்த தவப் பயனால்
மூன்று மயிர் முளைக்க அருள் புரிந்தோம்.
இன்னும் அதிகமாய் கேட்டதனால்
இருந்ததையும் எடுத்துவிட்டோம்!”
சிங்க வாகனத்துக்கு உள்ளேயிருந்த ஆசாமிதான் வித்தியாசமான குரலில் இதைக் கத்தினான். மர வாகனத்துக்குள்ளே இருந்து வந்த குரல், கல்கட்டிடத்திலே எதிரொலித்து, கனத்த ஓசையாக முழங்கியது.
தாடி வரம் கேட்ட பக்தன் பயந்தேபோனான். அய்யனாருக்குக் கோபம் வரும்படியா நடந்துக்கிட்டோம்னு தெரியுது. அதுனாலேதான் சாமி இப்படி சொல்லுது என்று அவன் உள்ளம் பதறி, மிரண்டு அடிச்சு வெளியே ஓடலானான்.
அய்யனாரு தோணி (தோன்றி) அடிச்சுப்போடும்கிற கிலி வேறே. கண்ணு மண்ணு தெரியாம ஓடவும், வாசல்படி தடுக்கித் தொபுக்கடீர்னு விழுந்தான். கீழே துருத்திக்கிட்டிருந்த ஒரு கல்லுலே அவன் முகம் இடித்தது. தாடையிலே பட்டுக் காயம் ஏற்பட்டது. தோல் பிஞ்சு (பெயர்ந்து) ரத்தம் வந்தது. தோலோடு தாடி மயிர் சிலவும் போய்விட்டன.
அய்யனார் சாபம் பலித்துவிட்டது என்று எண்ணிய அப்பாயி அப்புறம் கோயில் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. பக்தன் விழுந்து எழுந்து போன பிறகு, கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்த ஆசாமி தன்னுடைய வேலைத் தனத்தை மெச்சி விழுந்து விழுந்து சிரித்தான். அப்புறம் இதை ஊராரிடம் சொல்லாமல் இருப்பானா? சொன்னான்.
அப்பாயியின் ஆசை பலிக்காமல் போனதைச் சொல்லிச் சொல்லி ஊர்ச் சனங்க மகிழ்ந்துபோனாக.
மனைவியின் இயல்பு
ஒரு பனை மரத்திலே இரண்டு குருவிக கூடுகட்டிக் குடும்பம் நடத்திக்கிட்டு இருந்ததுக.
பக்கத்திலே நின்ன பனைக சிலதிலே. பாளை சீவி, கலயம் கட்டி வச்சிருந்தாக பனையேறிக. கலயத்துள்ளே சுண்ணாம்பு தடவி பதநி வடிய வைப்பாங்க. சில கலயத்துலே சுண்ணாம்பு தடவாம கள்ளு வடியச் செய்வாங்க.
ஒரு நா, ஆண் குருவிக்குப் பதநி குடிக்கணுமின்னு ஆசை ஏற்பட்டுது. கலயம் கட்டியிருந்த பனை மரத்துக்குப் போச்சு. கலயத்து மேலே வசதியா உட்கார்ந்து, உள்ளே தலையைப் புகுத்தி பதநி குடிச்சுக்கிட்டிருந்தது.
அந்த நேரம் பார்த்துப் பனையேறி வந்துட்டான். ஏ திருட்டுப்பய குருவியின்னு கருவிக்கிட்டு, பாளை சீவுற அரிவாளை வீசினான். குருவியின் சிறகுலே சரியான வெட்டு.
குருவி பயந்து போயி, அலறி அடிச்சு, தப்பிச்சோம் பிழைச்சோமின்னு, ரத்தம் சிந்தச் சிந்தக் கூட்டை நோக்கிப் பறந்து வந்தது. கூட்டுக்குள்ளே பெண் குருவி சுகமாயிருந்தது. தன் சோடியின் கூச்சல் கேட்டும் அது எட்டிப் பார்க்கலே.
ஆண் குருவி அழுகிற குரலில்,
“சாணான் களமுடிவான்
சிறகை அரிந்துவிட்டான்
கதவைத் திறயேன்டி
காரணத்தைக் கேளேன்டி”
என்று ஒப்பாரி வைத்தது. பெட்டைக் குருவி உள்ளே இருந்தபடியே பதில் குரல் கொடுத்தது.
“ஓலை சலசலங்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
பாளை படபடங்கையில
பறந்து வந்தால் ஆகாதோ?
கள்ளு குடிச்ச மயக்கத்திலே
ஆள் அரவம் கேட்கலியோ?”
என்று புருசன் குருவியைக் குறை கூறியது அது.
கதை அவ்வளவுதான். புருசனைக் குறை கூறுவதும், சதா விமர்சிப்பதும் பெண்டாட்டியின் இயல்பாக அமைந்துவிடுகிறது என்பதைச் சுட்டுவதற்காக எழுந்த கதை இது. பெரும்பாலும் இதைப் பெண்கள் பேசி மகிழ்வது வழக்கம். அது ஒரு முரண்பாடு தான்!
இந்நாட்டார் கதைகளில் கடைசி இரண்டு கதைகள் தன் வாழ்நாளில் வல்லிக்கண்ணன் இறுதியாக எழுதிய நாட்டார் கதைகள்.
நன்றி: கதைசொல்லி - பிப்ரவரி - ஏப்ரல் 2007