திருச்சூரில் நல்ல மழை
என் மனம் அன்றன்றைக்குப் பிறந்து சாகும் பூஞ்சை போன்றது. ஒருநாள் விடியலில் பொங்கிப் பெருகி ஆனந்தமாய்ச் சுழலும். அது நிலைக்காது. மறுநாள் அப்படியே வெறுமைக்குள் அமிழ்ந்து சேற்றெருமை போலக் கிடக்கும். அதை அசைத்துப்பார்ப்பது எளிதல்ல. கரையில் நின்று கல்லெறிய வேண்டும். எனக்குக் கல்; அதற்கோ பூ. ஏதேனும் ஆசை காட்டி மேலிழுக்கலாம். அப்போது ‘ஆசையே அழிவுக்குக் காரணம்’ என்று தத்துவம் பேசும். வடக்கயிற்றைச் சுருட்டி வீசிக் கழுத்தில் மாட்டி இழுத்தால் கொஞ்சம் அசையும். அதற்கேற்ற வடக்கயிறு கிடைக்க வேண்டுமே. கிடைக்கும்; ஆம், கேரளத்திலிருந்து கிடைக்கும்.
கேரளத்து இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும் அழைப்புகளை எல்லாம் ஏற்றால் என் வசிப்பிடத்தைக் கேரளத்திற்கு மாற்றிக்கொள்ள நேரும். முடிந்தவரைக்கும் தவிர்ப்பதே வழக்கம். பேருந்து, ரயில் என மாறிமாறிப் பயணம் செய்யும் அலுப்பே அதற்குக் காரணம். நான் வசிக்கும் நாமக்கல்லிலிருந