வரலாறு முக்கியம்; ஆனால்...
சென்ற ஒன்பது ஆண்டுகளாக நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் நரேந்திர மோதி அரசு மேற்கொண்டு வரும் மீட்புவாத நடவடிக்கைகளில் வரலாற்றைத் திருத்துவதும் உட்படும். ‘நமது வரலாறு பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் காலனியாதிக்க மனநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. நமது நாட்டின் புராதனமான பண்பாட்டையோ மக்களின் பழக்கவழக்கங்களையோ கருத்தில் கொள்ளாமல் எழுதப்பட்டது. அதைத் திருத்துவது அரசின் பொறுப்பு’ என்ற நியாயமும் கற்பிக்கப்படுகிறது. இடப்பெயர்களை மாற்றுவது, வரலாற்றில் இதுவரை இடம்பெற்றிருக்கும் மூத்த தலைவர்களின் பங்கை மறைப்பது, சில ஆளுமைகளின் தினையளவு பங்களிப்பைப் பனையளவு ஊதிப் பெருக்குவது, பாடநூல்களில் பொய்க் கதைகளைத் திணிப்பது, பொருளற்ற சடங்குகளுக்குப் புது விளக்கம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக வரலாற்றை மீட்க எத்தனிக்கிறது.
எந்த வரலாறும் பக்கச் சார்பின்றி உருவாக்கப்பட்டதல்ல. அதிகாரப் பீடத்தில் இருப்பவர்களின் நோக்கத்துக்கும் விருப்பத்துக்கும் இசைய கட்டமைக்கப்பட்டதுதான். ஒரு காலகட்டம்வரை கட்டமைக்கப்பட்ட வரலாற்றையே உண்மையானது என்று மக்கள் நம்புகிறார்கள். அதன்மீதான விவாதங்களும் மறு பார்வைகளும் உருவாகும்போது அதை மாற்றுவதற்கான தேவையையும் உணர்கிறார்கள். வரலாற்றை உருவாக்கும்போது கடைப்பிடிக்கும் எச்சரிக்கையைக் காட்டிலும் பல மடங்கான கவனம் அதைத் திருத்தும்போது தேவைப்படுகிறது. ஏனெனில் அதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றை நம்பி வந்த பெருவாரியான மக்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே ஜனநாயக நெறியுமாகும். மோதி அரசின் மீட்புவாத நடவடிக்கைகள் மக்களைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டவையல்ல என்பதால் அவை ஜனநாயகத்துக்குப் புறம்பானவையாய் இருக்கின்றன. மதச் சார்பற்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தல்களும் மாற்றங்களும் மறைமுகமாக மதச் சார்பு கொண்டவையாகவே நிறைவேற்றப்படுகின்றன.
வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் சுட்டிக்காட்டுவதுபோல, இந்த அரசைப் பொறுத்தவரையில் இந்திய வரலாறானது இந்துத்துவ வரலாறாகவே கட்டமைக்கப்படுகிறது. இதன் சான்றாகவே புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாச் சடங்கைக் காணலாம். மதச் சார்பற்ற ஓர் அரசின் நிகழ்ச்சி இந்து மதச் சடங்குகளுடனேயே நடத்தப்பட்டது. மதச் சடங்குகளுக்கு இணையாக ஒரே நிகழ்வில் முடியாட்சிக் கால நடவடிக்கைகளும் நிலவுடைமைக் கால அடையாளங்களும் மீட்டெடுக்கப் பட்டன.
பாஜக அரசின் மீட்புவாதத்தில் பின்வரும் உரிமை கோரல்கள் அடங்கியிருக்கின்றன. இது இந்துக்களின் தேசம் என்று வலியுறுத்துவது, சனாதன மதிப்பீடுகளை மீண்டும் கொண்டு வருவது, ஒரே மொழிக்குக் கீழே அனைவரையும் நிறுத்துவது ஆகியன. இந்த மூன்று நடவடிக்கைகளும் வெளிப்பட்ட நிகழ்வாகவே புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைக் காணலாம்.
பல்வேறு மதத்தினர் வாழும் நாட்டில் ஒரு மதத்தின் சடங்கு முறைகள் மட்டுமே நடத்தப்பட்டது அரசியல் அமைப்பு விதிகளுக்கே பொருந்தாத ஒன்று. இந்தியக் குடியரசின் தலைமை குடியரசுத் தலைவருக்குரியது. ஆனால் அவரை அழைக்காமல் நடந்த இந்த விழா ஜனநாயக மரபையும் குடியரசுத் தலைவரையும் கேலிக்குள்ளாக்கியது. அதுமட்டுமல்லாமல், திரௌபதி முர்மு போன்று அவர்களாலேயே முன்னிலைப்படுத்தப்பட்ட பழங்குடித் தலைவர் ஆச்சாரமான சடங்குகளில் பங்கெடுக்கத் தகுதியற்றவர் என்ற சனாதன மதிப்பீட்டையும் வெளிக் காட்டியது. இவற்றையெல்லாம் நியாயப் படுத்தவும் வரலாற்றில் இவற்றுக்கெல்லாம் முன்னுதாரணம் இருக்கிறது என்று மக்களை நம்ப வைக்கவுமே செங்கோல் ஓச்சுகிற நாடகம் அரங்கேறியது.
நாடாளுமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வு அண்மைக் காலத்து அரசியலின் பெரும் அபத்தம். பிரதமர் மோதியும் அவரது அரசும் இறந்த காலத்தையே எதிர்காலமாக மாற்ற விரும்புவதன் சான்று அது. அதற்கு அவர்கள் துணைக்கு அழைத்தது வரலாற்றை. 1947ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற தருணத்தில் அதிகார மாற்றத்துக்கு அடையாளமாக கடைசி கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன், முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவுக்குச் சோழர் காலத்துச் செங்கோலை ஒப்படைத்தார் என்ற தகவல் பரப்புரை செய்யப்பட்டது. அதை நிறுவ தமிழகத்திலுள்ள பல்வேறு ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டனர். செங்கோல் வழங்கும் சடங்கும் சுப முகூர்த்தத்தில் நிறைவேறியது.
விடுதலையடைந்த நாட்டின் முதல் பிரதமருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப் பொருள்களில் ஒன்றே செங்கோல் என்றும் அது அதிகார மாற்றத்தின் குறியீடு அல்லவென்றும் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டப்பட்டது. எனினும் முடியாட்சிக் கனவிலும் நில உடைமைக் கால கருத்துக் கவசமணிந்தும் நின்றிருந்த மோதியாலும் அவரது கூட்டத்தினராலும் அந்த ஆதாரங்களை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மாறாக செங்கோல் கற்பனைக்குப் பொய்யான வரலாற்றுச் சான்றுகளை மக்கள் முன் வைக்கவே வியர்வை சிந்தினர். நேருவுக்குச் செங்கோலை அளித்ததாகச் சொல்லப்பட்ட திருவாவடுதுறை ஆதீனகர்த்தரே அதிகாரப் பகிர்வு சம்பவத்தை மறுத்திருக்கிறார்; எனினும் மோதியின் ஆதரவாளர்கள் அந்தப் பொய்யையே ஒப்பித்து வருகிறார்கள்.
வரலாற்றை அணுகுவதற்கு ஆதாரமான ஒரு கோட்பாடோ கருத்தியலோ தேவை. அவை மூலமே வரலாறு விளக்கப்படுகிறது.அந்த விளக்கத்துக்கு வலுவான தரவுகளும் மெய்யான சான்றுகளும் தேவைப்படுகின்றன. அவற்றை அடிப்படையாகக்கொண்டே வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்படுகின்றன. இந்துத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய இவையெதுவும் தேவைப்படுவதில்லை. அது கற்பனையின் மீது கட்டமைக்கப்படுகிறது. வெறும் நம்பிக்கைகளின் துணையுடன் நிறுவப்படுகிறது. புராணப் பாத்திரங்களை வரலாற்று மாந்தர்களாக உலவ விடுவதும் அதீத நிகழ்வுகளை உண்மையானவை என்று கற்பிப்பதும் நவீன வரலாற்று நோக்கத்துக்கு எதிரானவை. அவை எதிர்காலத்தைப் பலியிட்டு மீண்டும் இறந்த காலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டு வருகின்றன. இந்தப் போக்கையே மோதியும் அவரது ஆதரவாளர்களும் கையாளுவதை நாம் அண்மைக் காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுவருகிறோம். அதன் உச்சகட்டமே நாடாளுமன்றத்தில் செங்கோல் நாட்டிய நிகழ்ச்சி.
வரலாற்றை மீட்கவும் திருத்தவும் இன்று தேவைப்படுபவை நம்பிக்கையோ வெறும் அடையாளங்களோ அல்ல; அறிவியல்பூர்வமான சான்றுகள் மூலமே திருத்தவும் முடியும். அப்படி இல்லாத நிலையில் எல்லா வரலாறும் தலைகீழாகப் புரட்டப்படும். அதன் விளைவாகப் பொய்ம்மைக்கே அதிகாரம் வழங்கப்பட்டுவிடும். கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அண்மையில் நடந்து கொண்டமுறை வரலாற்றை அணுகும் முறைக்கான படிப்பினையைக் காட்டுகிறது.
மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதிப் பேரவையினர் தமது அன்பளிப்பாகப் பெரியார் முகம் பதித்த செங்கோலைக் கொண்டு சென்றிருக்கின்றனர். அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்தார். ‘செங்கோல் கலாச்சாரம், ஜனநாயக மரபுக்கு எதிரானது. முடியாட்சி மரபைப் போற்றுவது.எனவே அதை ஏற்பதற்கு இல்லை’ என்றார். இந்தக் கூற்றில் வரலாற்றைத் திருத்த முனைபவர்களுக்கான பாடம் இருக்கிறது. சரியான வரலாற்றை நிலைப்படுத்த விரும்புபவர்களுக்குமான பாடம்.