அறவழிப்பட்ட லட்சிய வாழ்வு
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் ஒருவர் வாழ்கின்ற வாழ்க்கையே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகிறது. அண்மையில் மறைந்த பௌத்தப் பெரியார் எக்ஸ்ரே மாணிக்கம் அத்தகையவர். மாணிக்கம் அடிப்படையில் அம்பேத்கரியர். பாபாசாகேப் அம்பேத்கர் காட்டிய பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியில் வாழ்ந்து தன்னுடைய 86ஆவது வயதில் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடிக்கு அருகிலுள்ள குருகாடிப்பட்டியில் 13. 6. 1937இல் பிறந்தவர் மாணிக்கம். 1970களின் மத்தியில் ரயில்வே துறையில் பணியில் சேர்ந்தார். திருச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். சென்னையில்தான் அவரது சமூகச் செயல்பாடு பெரிய அளவில் சூடுபிடித்தது. பத்திரிகைகள் நடத்துதல், தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடுதல் எனச் செயல்பட்டார். அவற்றில் தன்னுடைய சிறு வயது முதலே போராடி வந்த இழிதொழில் மறுப்பில் ஈடுபட்டுப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பவராக இருந்தார். தமது ஊருக்கு அருகில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் தலித்துகள் நுழையக் கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறிக் கோவில் நுழைவினை நடத்தியவர். மேலும் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட ஹரிஜன் சேவா சங்க மதுரை மண்டலப் பொறுப்பாளரான சுவாமி ஆனந்தத் தீர்த்தரைச் சந்தித்துத் தங்கள் ஊரில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாகுபாடுகளைக் கவனத்திற்குக் கொண்டுசென்றார். அவரோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தவர் எக்ஸ்ரே மாணிக்கம்.
இழிதொழில்களுக்கு எதிராகப் பல போராட்டங்களைத் தனியாகவும் நண்பர்களுடன் இணைந்தும் நூதன முறையில் முன்னெடுத்தார். குறிப்பாக பறையடித்தல், சவக்குழி தோண்டுதல், இறந்த பிணங்களைப் புதைத்தல், எரித்தல், செத்த மாடுகளைத் தூக்குதல் உள்ளிட்ட இழி தொழிலுக்கு எதிராகவும் பொதுப்பாதை, சுடுகாடு ஆகியவற்றிற்காகவும் போராடினார்.
இதேபோல மனித மலத்தைக் கையால் அள்ளுவதற்கு எதிராகப் பல்வேறு கோரிக்கைகளை ஆளும் அரசிடமும் அதிகாரிகளிடமும் முன்வைத்தும் பயனில்லாததால் ஆளுநர் பவனை நோக்கி மலக் கூடைகளைச் சுமந்து சென்று கோரிக்கை மனு கொடுத்த போராட்டத்தையும் நடத்தினார்.
80களின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் ஆகியோரிடம் மாணிக்கமும் அவர் நண்பர்களும் மனு கொடுத்தார்கள். பிறகு என்.டி. ராமராவ் இதற்கெனச் சட்டம் ஒன்றை இயற்றினார்.
தமிழகக் கிராமங்களில் நடைமுறையிலிருந்த இரட்டைக் குவளை முறையை ஒழிக்கக் கோரிக் கோட்டையில் ஒரே நேரத்தில் அனைவரும் டம்ளர்களைத் தூக்கியெறிந்து தங்களுடைய எதிர்ப்பினையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். அத்துடன் தங்களுடைய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டி எம்எல்ஏக்களுக்குத் தனிக் கோப்பையில் தேநீர் கொடுக்க வேண்டும், நாற்காலிகள் இல்லாமல் தரையில் அமர வைக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொழிப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகியான நடராசன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பெயர் வரிசையில் அவர் பெயர் இரண்டாவதாக வந்தது. இந்தத் தவறான வரிசை வைப்பு முறை தவறான வரலாற்றுக்கு இட்டுச் செல்லும் என்று பேசிவந்த எக்ஸ்ரே மாணிக்கம் போன்றோர் இந்தி ஏற்போர் மாநாடு என்று சுவரொட்டி அச்சிட்டு ஒட்டினர். இது அன்றைக்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; மாநாடும் நடந்தது. மாநாட்டு மேடையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துப் பேசிய பின்பு மேடையில் இருப்போர் நடராஜன் தாளமுத்துவின் பெயரை மூன்று முறை சொல்ல மாநாட்டுக்கு வந்திருப்போர் அனைவரும் அவ்வாறே திரும்பிச் சொல்லினர். இம்மாநாட்டுக்குத் தலைமை எக்ஸ்ரே மாணிக்கம்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற படம் வெளிவந்தபோது திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடர்ந்தார் எரிமலை ரத்தினம். மேலும் இதனை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கன்சிராம் கவனத்திற்கும் கொண்டுசென்றார்.படத்திற்குத் தடை விதிக்கும் கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று கன்சிராம் ஏராளமான வாகனங்கள் அணிவகுக்கப் பெருந்திரளோடு சென்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார். எக்ஸ்ரே மாணிக்கம் சென்னையில் இந்து என். ராமுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைச் செய்தார். இதன் விளைவாக அத்திரைப்படத்தின் இறுதிக் காட்சி மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
தனது சமூகச் செயல்பாட்டின் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அறியப்படுபவரான எரிமலை ரத்தினத்தோடு இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாகத் தலித் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டு எரிமலையாய் வெடிப்பதுபோல எரிமலை எனும் பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிகையை 1984இல் தொடங்கி 1988வரையில் நான்காண்டுகள் நடத்தினார். அதே பெயரில் இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் ஒரு பத்திரிகை நடத்துவதை அறிந்து தங்களது பத்திரிகையின் பெயரை சிவில் உரிமை என்று மாற்றி 1992 வரையில் வெளியிட்டார். பத்திரிகையில் கவிதை, கட்டுரைகளுடன் போராட்டங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் இடம்பெற்றன. தவிர அம்பேத்கரின் கருத்துக்களையும் அதில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக அம்பேத்கரின் இறுதி நூலான ‘The Buddha and his Dhamma’ நூலை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். பெரியார்தாசன் என்று அழைக்கப்பட்ட சித்தார்த்தன், எரிமலை ரத்தினம் ஆகியோருடன் இணைந்து மொழிபெயர்த்தார். பெரும் முயற்சிக்குப் பிறகு ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற பெயரில் அந்த நூலைத் தமிழில் வெளியிட்டனர். இது எக்ஸ்ரே மாணிக்கத்தின் வாழ்வில் பெரும் சாதனையாகும். நூலின் வெளியீட்டு விழாவினைச் சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்தினார்.
இன்றைக்குத் தமிழகத்திலிருந்து நாக்பூர் தீட்சை பூமிக்குச் சென்று வரக்கூடியவர்கள் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. ஆனால் இத்தகைய செயலினைத் தொடக்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் எக்ஸ்ரே மாணிக்கம். தான் மட்டுமல்லாது, தனது குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பலரையும் அழைத்துச் சென்றார். தனது உடல் நலிவுற்று நடை தளரும்வரையிலும் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தீட்சை பூமிக்குச் சென்று வந்தார். அது மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பௌத்தச் சிலைகள், பெளத்தத் தலங்கள், விகாரங்கள், பௌத்தச் சின்னங்கள் போன்றவற்றைக் கண்டு வந்தார். அதனைத் தனது பத்திரிகையின் வாயிலாகத் தொடராக எழுதினார். இந்தத் தொடரினைத் தொகுத்துப் ‘பௌத்த தடங்களை வலம் வந்த வரலாறு’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். இது தவிர சிந்தனை புதிது என்னும் பெயரில் புதிய பத்திரிகையை நடத்தி வந்தார். இந்தப் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துப் ‘புதிய சிந்தனை மலர்கள்’ என்னும் நூலாக வெளியிட்டார். ‘இழிதொழிலை ஒழித்து அத்தகைய வேலைகளை அரசு வேலையாக ஆக்க வேண்டும்; அவ்வாறு ஆக்கும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்களும் சம்பளமும் வழங்க வேண்டும். மேலும் அனைத்துச் சாதியினரும் அவ்வேலையைச் செய்ய முன்வருவர், என்று ஒரு பெரும் திட்டத்தை அறிக்கையாக அரசுக்கு அனுப்பினார். இதனை அச்சிட்டு ‘எனது கடைசி முயற்சி வெல்லட்டும்’ என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.
மரண சாசனம்
எக்ஸ்ரே மாணிக்கம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே தனது மரண சாசனத்தை வெளியிட்டார். இதனைக் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினார். அதில் தனக்கு இறப்பு நேர்கையில் தனது அடக்கத்தினை இந்து முறைப்படி செய்யக் கூடாது, திருநீறு பூசக் கூடாது, தப்பு அடிக்கக் கூடாது, வெடி வெடிக்கக் கூடாது, நீர் மாலை எடுத்தல் - தீச்சட்டி எடுத்தல் - கொள்ளி உடைத்தல் போன்ற எவ்விதச் சடங்குகளும் செய்யக் கூடாது, தனது உடலை எரியூட்ட வேண்டும் என்று எழுதிவைத்து அதனைத் தனது குடும்பத்தினர், தனது நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்த அவர் 09.06.2023 அன்று பரிநிர்வாணம் அடைந்தார். அவரது இறுதி நிகழ்வு பெளத்த குருமார்களால் பஞ்சசீலம், திரிசரணங்கள் கூறி மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டன.
மின்னஞ்சல்: radhamuruganmaya@gmail.com