அடையாளம் அழியாப் புகழ்
சென்னை கவின்கலைக் கல்லூரி தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 2026, அக்டோபர் 3 அன்று அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் முயற்சியில் இந்நாள் மாணவர்களும் ஒன்றிணைந்து, ஓவியக் கல்லூரியின் வளாகத்திலேயே ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்; நிகழ்வு மாநாடுபோலக் கோலாகலமாக நடந்தேறியது.
நிகழ்வில் அகவை நூறைத் தொட இருக்கும் மூத்த ஓவியரான ராமன் தொடங்கிப் பத்மஸ்ரீ தோட்டா தரணி, நடிகர் சிவகுமார், மணியம் செல்வன், ஜெயக்குமார், ட்ராட்ஸ்கி மருது, மகி, சாபு சிறில், விஜயவேலு, பாலசுப்பிரமணியன் குப்புசாமி, சோழமண்டல கலைக் கிராமத்தின் மூத்த ஓவியர் கோபிநாத், ஓவியகக் காட்சிக்கூட ஒருங்கிணைப்பாளர்கள், கலை விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றார்கள்.
கல்லூரியின் முதல்வரும் பேராசிரியர்களும் மாணவர்களும் நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றன. செம்மையான இந்திய நுண்கலை மரபு, ஆங்கிலேயர்களின் வருகை, காலனியாதிக்கப் பாரதக் கண்டம், சுதந்திரத்திற்கு முன், பின் என நவீன நுண்கலை இயக்க நகர்வுகளை இந்நேரத்தில் நினைவுகூர்வது மிக அவசியம். ஏனெனில் சமூக, அரசியல் மாற்றங்களில் கலையும் கலைஞர்களும் ஆற்றிய பங்கு அளப்பரியது. அதற்கு வித்திட்ட வெளிகளில் இக்கல்லூரிக்குப் பிரதான இடமுண்டு.
ஒரு மரபின் தொடர்ச்சியில், இந்தியப் பண்பாட்டிற்கும், சமூக வளர்ச்சிக்கும் இந்தக் கல்லூரி ஆற்றிய பங்கு என்ன, இந்தச் சமூகமும் சூழலும் அரசும் தொன்மையான இந்தியக் கலை அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இக்கல்லூரிக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்கிற இருமுனைக் கேள்வி பல வாசல்களைத் திறக்க உதவும்.
ஐரோப்பிய நாடுகளில் கைத்தொழில் புரட்சிகளால் உண்டான சமூக மாற்றமும், அவர்களின் கட்டுப்பாட்டில் விரிவு கண்ட அரசியல் அடிமைத்தனமும் சிதறுண்டு கிடந்த இந்தியத் தேசத்தையும் ஊடுருவித் தாக்கின. அதன் போக்கில் ஆங்கிலேயரான அலெக்ஸாண்டர் ஹண்டர் கைத்தொழில் பள்ளியை 1850ஆம் ஆண்டில் நிறுவுகிறார். பொருள் உற்பத்தி, பொருள் நுகர்வு என்பதுதான் இதன் ஆதார நோக்கம். அவ்வாறே முதல் இந்தியராக 1929இல் தேவி பிரசாத் ராய் சௌத்ரி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்கும் வரையிலும் தொடர்கிறது. அதைத் தொடர்ந்து சுதந்திரத்திற்கு முன், பின் என இந்திய நவீனக் கலை நகர்வுகளின் வீச்சு உலகளவில் பிரதிபலிக்கிறது. கைவினைப் பொருட்களின் செய்நேர்த்திக்காகப் பிரசித்திபெற்ற வெளியாகத் திகழ்ந்த கல்லூரி கலையின் உள்ளடுக்குகளைத் தேடும் வெளியாக மாற்றம் பெறுகிறது. ‘மெட்ராஸ் ஆர்ட் மூவ்மென்ட்’, ‘சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம்’, ‘லலித் கலா அகாடமி’ எனப் பல முயற்சிகளும் அதன் பயனாக முன்னெடுக்கப்பட்டன.
கலை வெளிப்பாட்டுக்கான வெளியையும் சூழலையும் டி.பி. ராய் சௌத்ரி தொடங்கி கே.சி.எஸ். பணிக்கர், கிருஷ்ணாராவ், எஸ். தனபால் என அடுத்தடுத்து முதல்வர் பொறுப்புக்கு வந்தவர்கள் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். கே. சீனிவாசலு, எல். முனுசாமி, சுரேந்திரநாத், சந்தானராஜ், அல்போன்ஸோ, ஆர்.பி. பாஸ்கரன் எனப் பின்வந்த ஆளுமைகளும் இவ்வாறான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். மத்திய, மாநில அரசுகளும், சமூகச் சூழலும் கலை வளர உரமிட்டன. தமிழ்நாடு கவின்கலைக் கல்லூரியில் பயின்று இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்ற பல ஓவியர்கள், சிற்பிகள், கலை ஆளுமைகள் அடையாளமும் அழியாப் புகழும் பெற்றிருக்கிறார்கள்.
கடந்த 25 வருடங்களில் இந்நிலை மாறிக் கல்லூரியும், ஓவிய இயக்கச் சூழலும் சிதிலப் பாதையில் பயணிக்கின்றன. அதன் பின்னணியும் அவதானிக்கத்தக்கது.
1892ஆம் ஆண்டில் அரசு பொதுத்துறை இப்பள்ளியைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. 1927இல் தொழில் வணிகத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் கல்லூரி செயல்படத் தொடங்கியது. 1973இல் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு அரசு 1991இல் கலை பண்பாட்டுத் துறையைத் தொடங்கியபோது அதன்கீழ் கொண்டுவந்தார்கள். இன்று வரையிலும் அதன்கீழ் இயங்கிவருகிறது. இதுபோல பல்வேறு அரசுத் துறைகளின்கீழ் பந்தாடப்பட்ட வேறொரு கல்லூரி இருக்குமா?
இக்கேள்வி கனமான பதிலுக்குத்தான் இட்டுச்செல்லும் என்றாலும், இன்றுள்ள அரசுத் துறைகளின் மாற்ற அலைகளுக்கு முக்கியப் பங்காற்றிய கல்லூரி இது. பொது நிர்வாகம், மருத்துவம், கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும். இது சார்ந்த பிரக்ஞை அரசுத்துறைகளுக்கோ சமூகத்திற்கோ இல்லை.
இன்னொருபுறம் பதிப்பு, சிற்றிதழ் உள்ளிட்ட இலக்கிய வெளியிலும், சினிமா, இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நுண்கலைத் துறைகளிலும் ஓவியக் கலைஞர்களின் பங்கு மெச்சத்தக்கது. இத்துறைகளில் நவீன நகர்வுக்கு ஓவியக் கலைஞர்களின் பங்கு நன்றியுடன் போற்றத்தக்கது. அதன் தொடர்ச்சியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இணையவெளி எண்ணிமத் துறைகளிலும், திறன்பேசி, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியிலும்கூடக் கவின்கலை ஆளுமைகளின் பங்களிப்பு இருக்கிறது. எல்லாத் துறைகளின் நவீனப் போக்கிலும் இணைத் தண்டவாளமாகப் பயணித்தாலும், அத்துறைகளின் சார்புத்துறை என்கின்ற அளவிலேயே ஓவியக் கலைஞர்களின் இடம் தேங்கியிருக்கிறது. இது நம், பண்பாட்டுக் கீழ்மையின் அடையாளம். இப்போக்கில் மாற்றம் ஏற்படுவது சூழலுக்கு அவசியம்.
ஓவியம், சிற்பம், காட்சித் தொடர்பியல், ஆடை வடிவமைப்பு, அச்சுக் கலை, பீங்கான் வடிவமைப்பு என இயங்கும் கல்லூரியின் முழுநேரப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 36 என இருக்க வேண்டிய இடத்தில் ஒற்றை இலக்கத்தில்தான் ஆசிரியர்கள் உள்ளனர். நுண்கலைக் கல்வி என்பதால் எல்லாத் துறைகளுக்குமான தொழில்நுட்ப வல்லுநர்களின் பணியிடங்களும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன என்கிறார்கள். 175வது ஆண்டுவிழாவையொட்டி கல்லூரிக்கோ, கலைக்கோ இந்தத் திருப்புமுனையான நிகழ்வில் ஒரு புதிய இணைப்பை அல்லது தொடக்கத்தைப் பற்றிச் சிந்திக்கக் கலைப் பண்பாட்டுத்துறை முன்வர வேண்டும்.
1850ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்லூரிக்கு 2025ஆம் ஆண்டிலேயே ‘கவின்கலைக் கல்லூரி-175’ நிகழ்வை முன்னெடுத்திருக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகள் கழித்து முன்னாள், இந்நாள் மாணவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். உண்மையில் இந்நிகழ்வை கடந்த ஆட்சியிலோ, இந்த ஆட்சியிலோ தமிழ்நாடு அரசும், கலைப்பண்பாட்டுத்துறையும்தானே முன்னெடுத்திருக்க வேண்டும்.
சென்னையிலுள்ள நூறாண்டுகள் பழமையான கட்டடங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் அடித்தளமிட்டது இக்கல்லூரி. அதனை நினைவுகூரவும், தொடர்புடைய ஆளுமைகளைக் கௌரவப்படுத்தவும் இதுபோன்ற மைல்கல் நிகழ்வுகளைப் பயன்படுத்தி யிருக்க வேண்டும். ஏதோ ஒன்றை மையப்படுத்திப் பிம்பமாக்குவதும், இதர எல்லாவற்றையும் புறந்தள்ளிக் காணாமலாக்குவதும் எந்தச் செழுமையான கலாச்சாரத்தையும் மழுங்கடிக்கச் செய்பவை. கலைப் பண்பாட்டுத் துறை தொடக்கம் கண்ட 35ஆம் ஆண்டு இது. இனியாவது இந்தத் துறை விழித்துக்கொண்டால் சரி.
மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com
